Tuesday, November 16, 2010

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரிலையன்ஸ் பினாமி நிறுவனம்: சிஏஜி அறிக்கை

First Published : 17 Nov 2010 03:55:03 AM IST

புது தில்லி, நவ. 16: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் நிறுவனம், ரிலையன்ஸ் டெலிகாமின் பினாமி நிறுவனமாக செயல்பட்டு வருவதாக தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடைபெற்ற மேலும் சில முறைகேடுகள் குறித்து குறிப்பிடப்பட்டு உள்ளது.

விதிகளுக்கு எதிராக ஸ்வான் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் விண்ணப்பத்தில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. பல்வேறு போலி தகவல்கள் தெரிவிக்ப்பட்டுள்ளன.

ஜம்மு- காஷ்மீர் பகுதிக்கான ஒதுக்கீட்டை ஸ்வான் நிறுவனம் பெற்றுள்ளது. நிறுவன விண்ணப்பத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொடர்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், விசாரணையில் அந்த நிறுவனம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாமின் பினாமி நிறுவனமாக செயல்படுவது தெரிகிறது.

ஸ்வான் நிறுவனத்தின் செயலர் ஹரி நாயரின் இ-மெயில் முகவரியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

டைகர் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு ஸ்வான் நிறுவனத்தில் அதிக பங்குகள் இருப்பதாக விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. டைகர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 98.22 கோடி. ஆனால், ஸ்வான் நிறுவனத்தில் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்துக்கு 1002 கோடிக்கு பங்குகள் உள்ளன.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்கு ஸ்வான் நிறுவனம் தகுதியானது அல்ல. ஆனால், விதிகளுக்கு மாறாக அந்த நிறுவனத்துக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் டெலிகாம் மறுப்பு: இந்த விவகாரம் குறித்து ரிலையன்ஸ் டெலிகாம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சிஏஜியின் அறிக்கை விவரத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

2008-ல் ஸ்வான் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்றது. அப்போது, ரிலையன்ஸ் டெலிகாமுக்கு ஸ்வான் நிறுவனத்தில் எந்தப் பங்கும் கிடையாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 2008-ம் ஆண்டுமுதல் புற்றீசல் போல் ஊழல் விவகாரங்கள் முளைத்து வந்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Courtesy: www.dinamani.com

No comments:

Post a Comment