Monday, November 15, 2010

ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி

rajiv-sonia-marriage

மூலம்: ஜான் மெக்லிதான் (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 12/11/10)
தமிழில்: எஸ். ராமன்

சோனியா காந்தியைப் போலவே நானும் மேலை நாட்டைச் சேர்ந்தவன், ஒரு கிறிஸ்தவன். சோனியாவைப் போலவே நானும் இந்தியாவில் பல வருடங்களாக வாழ்பவன். மேலும் இந்நாட்டை எனது நாடாகத் தழுவியுள்ளவன். ஆனால் எங்களுக்குள் உள்ள ஒற்றுமை இத்துடன் முடிவடைகிறது.

உண்மைக்கு மாறுபட்ட பல விதமான எண்ணத் தாக்கங்களுடன் தான் நான் இந்தியாவை வந்தடைந்தேன். எனது இளம் பிராயத்துக்கே உண்டான முதிர்ச்சியின்மையின் காரணத்தால் இங்கு வாழும் மக்களை பொய்யான மதத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி, உண்மைக் கடவுளிடம் சேர்ப்பிக்கும் இறைதூதன் நான் என்றே என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் இந்தியா வந்தடைந்ததுமே நான் இந்தியர்களுக்கு கொடுப்பதற்கு ஒன்றுமில்லை, மாறாக நான் கற்றுக் கொள்ளுவதற்குத் தான் இந்தியாவிடம் நிறைய இருப்பதோடு மட்டுமல்லாது, அதை எனக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறது என்றும் புரிந்து கொண்டேன். எனது தொழிலிலோ, ஆன்மீகத்திலோ, மனித உணர்வுகளிலோ நான் இந்தியாவிடம் பெற்றது ஏராளம், ஏராளம். இங்கு வரும் மேல்நாட்டினர்களில் பலபேருக்கு இந்தியா தங்கள் நாடுகளை விடத் தாழ்ந்தது என்றும், தாங்கள் அதை ஈடு செய்து இந்நாட்டை கடைத்தேற்றத்தான் வந்திருப்பதாகவும் ஆழ் மனத்திலாவது ஒரு எண்ணம் உண்டு. ஆங்கிலேயர்களுக்கும் அப்படிப்பட்ட உள்ளுணர்வு உண்டு, அன்னை தெரசாவுக்கும் அப்படியே, சோனியாவுக்கும் அப்படியேதான்.

சோனியா காந்தி காங்கிரஸ் கட்சிக்குள் ஒழுக்கம், கட்டுப்பாடு, ஒற்றுமை எல்லாம் கொண்டு வந்திருப்பதை எவரும் மறுக்க முடியாது. மற்ற நூற்றுக்கணக்கான பாராளு மன்ற உறுப்பினர்கள் போல் அவரும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றாலும், ஒரு வெளி நாட்டவரான அவருக்கு இருக்கும் அதிகாரம் அவருக்கே அவரிடம் பயம் கொள்ளுவதாகத் தான் இருக்கிறது. மராட்டிய முதல்வர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவரைப் பார்க்க டெல்லிக்கு ஓடுவதை அனைத்துத் தொலைகாட்சிகளும் கண்ணின் இமை கொட்டாதது போல் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. உண்மையில் சவான் ஒரு மாநில முதல்வராக பிரதமரிடம் அல்லவோ முதலில் சென்றிருக்க வேண்டும்?

மத்திய புலனாய்வுத் துறையான CBI, வெளி நாட்டவரான ஆட்டாவியோ குவாத்ரோச்சி சம்பந்தப்பட்ட வழக்கில் வெட்கம், மானம் ஏதுமின்றி வெளிப்படியாகவே தனது குற்றப்பட்டியலையும், விசாரணையையும் நீர்த்துப் போகச் செய்ததுமல்லாமல், ஏதோ அவருக்கு சீர் வரிசை செய்வது தனது கடமை என்பது போல, அந்தக் குற்றவாளியே கொள்ளை அடித்த இந்திய மக்களின் கோடானு கோடி பணத்தையும் லாவகமாக எடுத்துப் போகவும் அனுமதித்தது. அந்தக் கொள்ளையைப் பற்றி சற்றும் கண்டு கொள்ளாமல், நமது ஊடகங்களோ ஊழல் என்று பெரிதும் இல்லாது, நன்கு நிர்வகிக்கப்படும் ஒரு மாநிலத்தின் முதல்வரை கடுமையாகச் சாடுகிறது. சோனியாவின் அனுமதி பெற்றோ பெறாமலோ, தனது பண பலத்தால் காங்கிரஸ் கட்சியோ பல மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி காங்கிரஸ் அல்லாத கட்சி ஆளும் மாநில ஆட்சிகளை கவிழ்கின்றது. அவரது கைப்பாவைகளாக மாநிலத்தின் ஆளுநர்கள், சட்டத்தின் ஓட்டைகளைக் கொண்டு ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.

sonia_gandhi_caricature.jpg

10 ஜன்பத் இல்லத்தை கோட்டையாகக் கொண்டு, காவலர்களையும் பாதுகாப்பாகக் கொண்டு, ஒரே ஒரு ஆளாக நாட்டிற்கு மிக முக்கியமான தீர்வுகள் பலவற்றையும் தானே செய்துகொண்டு இந்த முடிசூடா மகாராணி இந்தியாவை கிட்டத்தட்ட ஒரு முடியரசாக கோலோச்சிக்கொண்டு ஆள்வதை இந்தியர்கள் அறிவார்களா? டில்லியில் 2G, CWG, மற்றும் மும்பையில் ஆதர்ஷ் என்று பல தரப்பட்ட ராக்ஷச அளவில் நடைபெறும் ஊழல்களின் வழியே கொள்ளை அடிக்கப்படும் செல்வம் எல்லாம் அவைகளில் ஈடுபடும் பற்பல அரசியல்வாதிகளின் கைகளுக்கு வெகுவாகச் செல்லாது, சோனியாவைத் திருப்திபடுத்தும் முகமாக அடுத்து வரும் தேர்தல்களுக்காக காங்கிரசின் பொக்கிஷத்திற்கே போய்ச் சேர்கிறது என்று இந்தியக் குடிமக்களுக்குத் தெரியுமா? சோனியாவின் இந்த மறைமுக ஆட்சியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பலரும் கவனிக்கத் தவறுகிறார்கள் என்றே தெரிகிறது.

எழுத்தாளர் அருந்ததி ராய் பிரிவினை வாதத்தைத் தூண்டுகிறார் என்று மணிக்கணக்கில் கூச்சல் போடுகிறார்கள். அதையும் விட முக்கியமாக காங்கிரஸ் அரசே நுனி மரத்தில் உட்கார்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டும் வேலை ஒன்றைச் செய்துகொண்டிருப்பதை மக்கள் அறிவார்களா? இந்த தேசத்திற்கு ஒரு மரியாதையுடனும், பக்தியுடனும் சேவை செய்து கொண்டிருக்கும் தேசிய ராணுவம் ஒன்றுதான் முந்தைய காலத்து உண்மையான க்ஷத்ரியர்கள் போல் தற்காலத்தில் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு ஸ்தாபனம். ஏனென்றால் அரசியல், நிர்வாகம், நீதி, பத்திரிகை என்று பல துறைகளும் புரையோடிப் போயிருப்பது கண்கூடு. நிர்வாகங்கள் அனைத்திலுமே ராணுவம் ஒன்றுதான் தங்களது ஊதியம் அதற்கு ஏற்றாற்போல் இல்லாவிட்டாலும், தங்கள் உயிரினைக் கொடுத்து தேசத்தைக் காப்பாற்றும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது. மேலும் ராணுவம் ஒன்றுதான் இப்போது சாதி, சமயங்கள் அற்ற நிர்வாகமாக இருக்கின்றது. ஒரு சிப்பாயோ, அதிகாரியோ இந்துவாகவோ, முஸ்லீமாகவோ எப்படி இருந்தாலும் எவருக்கும் எந்த சிறப்பு சலுகையும் மத அடிப்படையில் கிடையாது. அந்தக் கட்டுக்கோப்பை கலைக்கும் முகமாக, முதலில் காங்கிரஸ் அரசு சாதி அடிப்படையில் இராணுவத்தினரைப் பற்றி ஒரு ஜனத்தொகை கணக்கு எடுத்தது. அது அவர்களிடையே ஒரு பிரிவினை உண்டாக்கவா, அல்லது தான் என்ன செய்கிறோம் என்பதை அறியும் திறமை இந்த அரசுக்கு இல்லையா?

அடுத்த படியாக காஷ்மீரில் ராணுவத்தின் வலிமையைக் குறைக்கும் செயல்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறது. இது பாகிஸ்தானுக்கு வலு சேர்க்குமா, இல்லையா?

இப்போது ஆதர்ஷ் ஊழலில் ராணுவ அதிகாரிகளை விவரம் புரிந்தோ, புரியாமலோ மாட்டி வைக்குமா என்பது தெரியவில்லை. நாம் இப்போது அறிந்த அளவில் காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதிகளே அதில் பயனடைந்துள்ளனர் என்று தெரிகிறது.

ஒரு உதாரணத்திற்கு, பிரான்ஸ் போன்ற தேசத்தில், கிறிஸ்தவர் அல்லாத ஒருவர் இந்து சமயத்தைச் சார்ந்தவர் ஒருவரை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கும் மேலான அதிகாரங்கள் கொண்ட திரை மறைவு அதிகாரி ஆக்குவது என்பதைக் கனவிலும் காண முடியாது. இப்போது காங்கிரசிலேயே திறமை கொண்ட பல தலைவர்கள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கான இந்தியர்கள், தம் கலாசாரத்தையும் இந்தியரின் பழக்க வழக்கங்களையும் நன்கு அறிந்த இந்தியர் ஒருவரையே தம்மை ஆளும் தலைவராக ஏன் தேர்ந்தெடுக்க முடியாது? அப்படி இல்லாது இப்போது அந்நியராகிய சோனியா தலைமையில் இயங்குவதால் நம் கண்ணுக்கும், புலனுக்கும் தெரியாத நாட்டின் நலனுக்கு பங்கம் விளைவிக்கும் பல சக்திகள் அவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

ஜனநாயகம், தொழில் நுட்பத் திறமைகள், நல்வாழ்வு வசதிகள் என்ற இப்படியான மேலை நாட்டுத் தரவுகளை வரவேற்பதில் எந்த விதமான தவறும் இல்லை. ஆனால் மேலை நாட்டு பிரச்சினைகள் நமக்கு எதற்கு? அங்கு மூன்றில் இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. சிறுவர்கள் துப்பாக்கி ஏந்தி தங்களையோ, மற்றவர்களையோ சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். முதியோர்களை அவர்களின் வாரிசுகளே கவனிப்பதில்லை. கிட்டத்தட்ட அனைவருமே பிடிபடாத ஒரு மனத் தாழ்வினால் ஏதோ ஒரு வகையில் அவதிப்படுகின்றனர். இப்படியான சூழ்நிலையில், அவைகளுக்கு மருந்தாக மேலை நாட்டினரே இந்தியா போன்று ஆன்மிகம் தழைத்த நாடுகள் தரும் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

bharatham03

நிலைமை இப்படி இருக்க, காலத்தால் பண்பட்ட தனது மதிப்புகளைத் துறந்துவிட்டு இந்தியா ஏன் கண்மூடித்தனமாக மேலை நாட்டை பின்பற்ற வேண்டும்? இன்னும் 85 கோடி இந்துக்கள் இந்தியாவில் இருக்கின்றனர், உலகளவில் 100 கோடியாகவும் உள்ளனர், இந்தியாவுக்கு அயல் நாடுகளிலிருந்து என்ன நன்மைகள் வந்த போதிலும் இந்து சமயத்தின் பழமையும், பெருமையும் மிக்க ஆன்மீக உணர்வுகளே உலகளவில் இந்தியாவின் தனித் தன்மைக்கு கைகொடுத்திருக்கிறது என்பவைகள் எல்லாவற்றையும் சோனியா தன் மனத்தில் இருத்திக் கொள்வது நல்லது. அந்தத் தனித் தன்மையே ஒரு இந்தியக் கிறிஸ்துவனையும் ஒரு அமெரிக்கக் கிறிஸ்துவனையும் வேறு படுத்திக் காட்டுகிறது. அதுவே ஒரு இந்திய முஸ்லீமையும் ஒரு சவூதி முஸ்லீமையும் வேறு படுத்திக் காட்டுகிறது.

அதனாலேயே, ஆயிரக்கணக்கில் இந்துக்களைக் கொன்று குவித்தும், பல்லாயிரக் கணக்கான இந்துப் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக நடத்தியும் அராஜகம் செய்த ஹுமாயுனின் சமாதியை, இந்தியா வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு தலைநகர் டில்லியில் முதன் முதல் நிகழ்ச்சியாக அமைத்து, அவரை அழைத்துக் கொண்டு காட்டியது அனைத்து இந்துக்களையும் அவமதிக்கும் செயல் அன்றி வேறென்ன? ஹுமாயூன் தனது அண்ணனின் கண்களை நோண்டி எடுத்து, அதில் எலுமிச்சையைப் பிழிந்து அவனை இம்சை செய்த கொடுங்கோலன்!

அந்நிய ஆதிக்கத்தில் வெகு காலமாக அவதியுற்று இருந்தது இந்தியாவின் சரித்திரத்தின் ஒரு துயரப் பகுதி. அதன் காரணமாகவே, அண்டை நாடான சீனா போல் அல்லாது, தனது தீர்வுகள் அனைத்திற்கும் இந்தியா மேலை நாடுகளின் வழிகளைப் பின்பற்றுகிறது. அந்த வழிமுறையின் பிரதிபலிப்பாகவே, அவருக்கு வேண்டிய தகுதிகள் இருக்கிறதோ இல்லையோ இங்கு சோனியா காந்தியும் மகாராணியாக வீற்றிருக்கிறார்.

(கட்டுரை ஆசிரியர் ஜான் மெக்லிதான் Hindutva, sex & adventures என்ற ஆங்கில நாவலையும் எழுதியிருக்கிறார்).

http://www.tamilhindu.com/2010/11/sonia-empress-in-new-clothes/

No comments:

Post a Comment