Tuesday, November 16, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம்: பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

First Published : 17 Nov 2010 12:55:56 AM IST


புதுதில்லி, நவ. 16: 2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் புகார் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பாக தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராசா மீது வழக்கு தொடர அனுமதி உண்டா, இல்லையா என்பதை முடிவு செய்வதில் பிரதமர் மன்மோகன் மிகவும் காலதாமதம் செய்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் பிரதமரின் செயலில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. முறையாக ஒதுக்கீடு செய்யப்படாததால் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா மீது வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகார் மனு அளித்திருந்தார். இந்த மனு 2008-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி அளிக்கப்பட்டது. இந்த மனுவுக்கு இந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் அனுப்பப்பட்டது.

இந்தப் பதில் கடிதத்தில் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராசா மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கப்படாததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சுப்பிரமணியன் சுவாமி.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆ. ராசா மீது வழக்கு தொடர அனுமதி உண்டா, இல்லையா என்பதை முடிவு செய்வதில் பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் காலதாமதம் செய்துவிட்டதாகக் கூறி நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

வழக்கு தொடர அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய நல்ல அரசுக்கு மூன்று மாதங்கள் போதுமானது. இதை ஏற்கெனவே விநீத் நாராயணன் ஹவாலா வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. அமைச்சர் மீது வழக்கு தொடர அனுமதி அளிப்பதற்கான காலவரையறையை விநீத் நாராயணன் வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.

தேவைப்பட்டால் இது தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞரை ஆலோசித்து முடிவு எடுத்திருக்கலாம்.

ஆனால் அலைக்கற்றை ஊழல் புகாரில் அரசு 16 மாதங்களுக்கு மேலாக பதில் அளிக்காமல் இருந்துள்ளது. அமைச்சர் மீது வழக்கு தொடர அனுமதி தர முடியாது என்று சொல்ல பிரதமருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் 16 மாதங்களுக்கும் மேலாக எந்த முடிவு எடுக்காமல் இருந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் வருதத்துக்கு உரியது என்று சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியத்திடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடிதத்தில் உள்ள வார்த்தைகள்:

மேலும் சுப்பிரமணியன் சுவாமிக்கு பிரதமர் எழுதிய கடிதத்தில் பயன்படுத்திய வார்த்தைகள் அரசியல் சட்டத்துக்கு ஏற்புடையதா என்று ஆராய வேண்டி உள்ளது.

பிரதமர் அலுவலகம் போன்ற உயர்ந்த இடத்தில் இருந்து வரும் கடிதங்களில் வார்த்தைகள் மிகவும் கவனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தப் பதில் நகராட்சி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படவில்லை. மிக்க அதிகாரம் கொண்ட பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. சுப்பிரமணியன் சுவாமிக்கு அனுப்பப்பட்ட பதிலில் "விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர அனுமதி கோருவதற்கு சுப்பிரமணியன் சுவாமிக்கு உரிமை உள்ளது. அதுபோல் அனுமதி அளிக்க முடியாது என்று சொல்ல பிரதமருக்கும் அதிகாரமும் உரிமையும் உள்ளது. ஆனால் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றால் உங்களுக்கு அனுமதி கோருவதற்கு உரிமை இப்போது இல்லை என்று அர்த்தமாகிவிடும். இப்படி பதில் கூறுவதற்கு அரசியல் சட்ட ரீதியிலும் சட்டப்படியும் இடம் உள்ளதா என்று ஆராய வேண்டி உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகார் மனு தெளிவாக உள்ளது. அந்த புகார் மனு பிரதமரின் பார்வைக்கு எப்போதாவது வைக்கப்பட்டதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சுப்பிரமணியன் சுவாமி 2008-ம் ஆண்டு நவம்பர் 29-ல் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதிதான் சிபிஐ வழக்குப் பதிவு செய்கிறது. இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன என்பது தெரிய வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

எனவே இந்த விசாரணைக்குரிய ஆவணங்களை நீங்கள் (சொலிசிட்டர் ஜெனரல்) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வரும் வியாழக்கிழமை (நவம்பர் 18) தள்ளி வைக்க உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Courtesy: www.dinamani.com

No comments:

Post a Comment