Friday, November 19, 2010

ஊழலுக்கு எதிரான போராட்டம்

First Published : 19 Nov 2010 12:09:43 AM IST - www.dinamani.com




2-ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் ஆ.ராசா, ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் விவகாரத்தில் தொடர்புள்ளதான குற்றச்சாட்டின் பேரில் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண், காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்துள்ள முறைகேடு புகார் தொடர்பாக சுரேஷ் கல்மாடி ஆகியோர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றுள்ளன. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஆ.ராசா பதவி விலகியபோதிலும், "இது போதாது; இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புதிய கோரிக்கையை எழுப்பியுள்ளன. உச்ச நீதிமன்றமும், நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவும் இந்த விவகாரத்தை ஏற்கெனவே கையிலெடுத்துக் கொண்டுள்ளன.

1980-களின் நடுவில் ஊழல் தலைதூக்கியபோது அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல இப்போது நடுத்தர வர்க்க மக்கள் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியதை அடுத்து காங்கிரஸ் கட்சி விழித்துக்கொண்டது. ஊழல் விவகாரம் பூதாகரமாக உருவெடுத்தால் கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டு விடுமோ என்று பயந்துபோன காங்கிரஸ் மேலிடம், உடனடியாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அசோக் சவாண், சுரேஷ் கல்மாடி இருவரையும் பதவி விலகக் கட்டளையிட்டது.

எனினும், ஸ்ùóபக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆ.ராசாவை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வாரம் பிடித்தது. தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவை உடனடியாக பதவியிலிருந்து நீக்காவிட்டால் நாடாளுமன்றத்தைச் செயல்பட விட மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுத்தன. மேலும் பத்திரிகைகளும், ஊடகங்களும் தினமும் இந்த ஊழல் விவகாரம் பற்றி எடுத்துரைத்தன. 2-ஜி அலைக்கற்றை ஏல விவகாரத்தில் நடந்த முறைகேடுகளால் நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டன.

இந்நிலையில், ராசா விவகாரத்தால் கடும் நெருக்கடிக்கு ஆளான காங்கிரஸ், வேறு வழியில்லாமல் ஆ. ராசாவை பதவி விலகச் செய்யுமாறு திமுக தலைமையிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, தயாநிதி மாறன், தமிழகத்தின் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஆ.ராசாவை உடனடியாக பதவி விலகச் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று கருணாநிதியிடம் தெரிவித்தனர். இதன் எதிரொலியாக அசோக் சவாண், சுரேஷ் கல்மாடியைத் தொடர்ந்து ஆ.ராசாவும் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ஆ.ராசாவை நீக்கினால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மக்களவையில் 18 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றுத்தருவதாக அஇஅதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா திடீரென அறிவித்தார். அதாவது, ராசா நீக்கம் மூலம் திமுகவுடன் உறவு முறிந்து போகும்பட்சத்தில், திமுக எம்.பி.க்கள் 18 பேரின் ஆதரவுக்குப் பதிலாக தமது கட்சி எம்.பி.க்கள் 9 பேரின் ஆதரவு உள்பட மொத்தம் 18 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றுத் தருவதாக அவர் கூறியிருந்தார். ஜெயலலிதாவின் இந்தத் திடீர் அறிவிப்பு காங்கிரஸôருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எனினும், இது திடீரென ஏற்பட்ட திருப்பம் அல்ல; சில காங்கிரஸ் தலைவர்கள், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சில தொழிலதிபர்கள் மேற்கொண்ட முயற்சியின் வெளிப்பாடே இது என்று பரவலாகப் பேசப்படுகிறது.

ராசாவின் ராஜிநாமாவைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் மு.க. அழகிரியும் தமது பதவியை விரைவில் ராஜிநாமா செய்யக்கூடும் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், மாநில அரசியலில் கவனம் செலுத்த மு.க. அழகிரி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 100 தொகுதிகளில் தேர்தல் பணியாற்றும் பொறுப்பு அவருக்குத் தரப்பட்டுள்ளது.

அஇஅதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஆதரவுக்கரம் நீட்டியுள்ள போதிலும், அதை இப்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. எனினும், தில்லியிலிருந்து அழைப்பு வந்தால், சோனியா காந்தியின் பிறந்த தினமான டிசம்பர் 9-ம் தேதி அவரைச் சந்திக்க ஜெயலலிதா தயாராக இருப்பதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். அப்படியொரு நிலை உருவானால், தமிழக அரசியலில் புதிய மாற்றம் உருவாகும். எனினும், இதை முன்கூட்டியே கணிப்பது கடினமானது.

இப்போதைய அரசியல் சூழ்நிலையில் திமுகவுடன் கூட்டணி தொடர்ந்தாலும் சரி, அல்லது அஇஅதிமுகவுடன் புதிய கூட்டணி அமைந்தாலும் சரி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்கள் கேட்டுப்பெறும் அளவில் காங்கிரஸ் நிலை உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர், திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்று கருதுகின்றனர்.

சமீபகாலமாக தமிழகத்தில் ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக் கூட்டங்களுக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் திரண்டு வந்தாலும், அஇஅதிமுகவைவிட திமுகதான் நம்பகத்தன்மை வாய்ந்த கூட்டணிக் கட்சி என்பது அவர்களின் கருத்தாகும்.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை தமிழகத்தில் அதிக இடங்களைக் கேட்டுப் பெறுவது என்பதைவிட, மத்தியில் கூட்டணி ஆட்சி நிலைக்க வேண்டும், ஆட்சிக் காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கமாகும். மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அதிக இடங்களை வென்று ஆட்சியைப் பிடிக்கும்பட்சத்தில், மம்தா பானர்ஜியைச் சமாளிப்பது கஷ்டமான காரியம் என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது. திடீர் திடீரென்று தனது நிலையை மாற்றிக் கொள்ளும் மம்தா பானர்ஜி, எப்போது என்ன முடிவு எடுப்பார் என்று புரிந்துகொள்ள முடியாத ஜெயலலிதா ஆகியோரிடம் எச்சரிக்கையுடனேயே செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. 1998-ல் வாஜ்பாய் அரசைக் கவிழ்த்து இடைத்தேர்தலுக்கு வழிவகுத்தவர் ஜெயலலிதா என்பதை காங்கிரஸ் நன்கு உணர்ந்து கொண்டுள்ளது.

போஃபர்ஸ் ஊழல் விவகாரம் வெளியானதை அடுத்து 1980-களில் தேர்தல் பிரசாரத்தின்போது அது முக்கியமாகப் பேசப்பட்டு வந்தது. ஊழல் விவகாரத்தை முன்வைத்துப் பிரசாரம் நடந்ததால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தன. இதைத் தொடர்ந்து 1989-ல் ராஜீவ் காந்தி அரசு ஆட்சியை இழந்தது. ஆனால், சமீபகாலமாக ஊழல் விவகாரம் பெரிதாக விசுவரூபம் எடுக்கவில்லை. மக்களும் அதைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை.

கடந்த சில வாரங்களில் காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் எனத் தொடர்ந்து ஊழல் விவகாரம் தலைதூக்கியுள்ளதால் சாதாரண மக்களும், நடுத்தர வர்க்க மக்களும் கொதித்துப் போயுள்ளனர். 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஏல விவகாரத்தில் 1.76 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக பத்திரிகைகளும், ஊடகங்களும் தெரிவித்துள்ளது கண்டு மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

இந்த ஊழல் விவகாரங்கள் மூலம் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளன. பா.ஜ.க., இடதுசாரிகள் மற்றும் பிராந்தியக் கட்சிகள் நாடாளுமன்றம் தொடங்கியதிலிருந்தே ஊழல் பேர்வழிகள் மீது நடவடிக்கை என்ன என்று கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியும் பதில் நடவடிக்கையாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டி வருகிறது.

காங்கிரஸ் கட்சி மிகவும் பழமைவாய்ந்த கட்சி. ஆட்சியில் தவறு நேர்ந்தால் அதைத் திருத்திக்கொண்டு செயல்படுவதுதான் காங்கிரஸ் கட்சிக்கு அழகு. அதைவிடுத்து எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினால் அதற்குப் பதில் குற்றஞ்சாட்டுவது சரியான நடைமுறையாகது. தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால், காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். இதைப் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது.

No comments:

Post a Comment