Tuesday, November 16, 2010

பிரதமர் ஆலோசனையை மீறி செயல்பட்டார் ராசா: சிஏஜி அறிக்கை கண்டனம்


First Published : 17 Nov 2010 12:00:00 AM IST
Last Updated : 17 Nov 2010 04:55:25 AM IST

புது தில்லி, நவ.16: 2-ஜி அலைக்கற்றை லைசென்ஸ் ஒதுக்கீட்டில் பிரதமரின் ஆலோசனையை மீறி மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா செயல்பட்டுள்ளார் என்று தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சிஏஜி-யின் 77 பக்க அறிக்கை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அனைத்து விதிமுறைகளும், நடைமுறைகளும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு காரணமாக அரசுக்கு 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக அமைச்சர் ராசா செயல்பட்டுள்ளார்.

ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், தொலைத் தொடர்பு அமைச்சகத்துக்கு 2007-ம் ஆண்டு கடிதம் எழுதியுள்ளார். அதில் லைசென்ஸ் வழங்குவதில் ஒளிவு, மறைவற்ற தன்மை பின்பற்றப்பட வேண்டும் என்றும் லைசென்ஸ் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியிருந்தார். அலைக்கற்றை போதுமான அளவுக்கு இல்லாததாலும், அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாலும் இதில் வெளிப்படையான தன்மை பின்பற்றப்பட வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது தவிர, சட்ட அமைச்சகம், அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழுவைக் கூட்டி இது குறித்து விவாதிக்கலாம் என்றும் அதில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கட்டணத்தை நிர்ணயிக்கலாம் என்றும் ஆலோசனை கூறியிருந்தது. இதே கருத்தை நிதி அமைச்சகமும் சுட்டிக் காட்டியிருந்தது.

ஆனால் இவை அனைத்தையும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் புறக்கணித்துவிட்டது. புதிதாக கொள்கை வகுப்பதாயிருந்தால்தான் அமைச்சர்கள் குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டும். ஆனால் இப்போது புதிய கொள்கை ஏதும் வகுக்கப்படவில்லை. எனவே ஒருங்கிணைந்த தொடர்பு சேவை லைசென்ஸ் (யுஏஎஸ்எஸ்) வழங்குவதில் அமைச்சர்கள் குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டியதில்லை என ராசா தெரிவித்துவிட்டார்.

தொலைத் தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வகுத்தளித்த விதிமுறைகளுக்குக் கூட முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. விதிமுறைகள் எதுவும் முறையாகப் பின்பற்றப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.

122 நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 35 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட இரட்டை தொழில்நுட்பம் (சிடிஎம்ஏ-ஜிஎஸ்எம்) லைசென்ஸýம் அடங்கும். இவை அனைத்தும் 2007-08-ம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன. 2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 1,76,645 கோடியாகும்.

லைசென்ஸ் கோரிய நிறுவனங்களின் விண்ணப்பங்களை தொலைத் தொடர்புத் துறை பரிசீலித்ததில் மொத்தம் விண்ணப்பித்த 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்கள் போதுமான நிதி மூலதனத்தை உடையனவாக இருக்கவில்லை. இந்த 85 நிறுவனங்களில் 45 நிறுவனங்கள் மிக முக்கியமான நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலி சர்வீசஸ் நிறுவனங்களுக்கு இரட்டைத் தொழில்நுட்ப லைசென்ஸ் வழங்குவதில் போதிய வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படவில்லை. இதேபோல இரட்டைத் தொழில்நுட்பம் தேவை என மனு செய்த நிறுவனங்களுக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

இந்த விஷயத்தில் 2003 மத்திய அமைச்சரவை எடுத்த முடிவையும் ஆ. ராசா மீறியுள்ளார். அதாவது இரட்டைத் தொழில்நுட்ப லைசென்ஸ் வழங்கும்போது அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அவசியம் என கூறியிருந்தது.

2007-ம் ஆண்டு அக்டோபரில்தான் இரட்டைத் தொழில்நுட்ப முறை அமலுக்கு வந்தது. இதற்கான லைசென்ஸ் வழங்குவது விரைவாகவும், சட்ட விதிமுறைகளையும் மீறி அளிக்கப்பட்டிருந்தது. இந்த தொழில்நுட்ப முறையிலான சேவை குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே மூன்று நிறுவனங்களுக்கு இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும் சிஏஜி சுட்டிக் காட்டியுள்ளது. இது இத்துறையில் மற்ற நிறுவனங்களுக்கு இழைக்கப்பட்ட பாரபட்சமான நடவடிக்கை என்றும் சுட்டிக் காட்டியது.

லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களில் சில, சேவையைத் தொடராமல் அதிக விலைக்கு பிற இந்திய அல்லது வெளிநாட்டு நிறுவனத்துக்கு தங்களது பங்குகளை விற்பனை செய்துள்ளன என்றும் சிஏஜி சுட்டிக் காட்டியுள்ளது.

லைசென்ஸ் கோரி விண்ணப்பித்த நிறுவனங்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து இதற்கென நிர்ணயிக்கப்பட்ட தேதியை முன்னறிவிப்பின்றி மாற்றியுள்ளது. செப்டம்பர் 25,2007-ல் வந்த விண்ணப்பங்களில் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

பல்வேறு பிராந்தியங்களில் தொலைத் தொடர்பு சேவை தொடங்க மொத்தம் 157 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு நியாயமான விலை நிர்ணயித்திருந்தால் 58 ஆயிரம் கோடியிலிருந்து 1,52,038 கோடி வரை வருமானம் கிடைத்திருக்கும். 51 வட்டாரங்களில் 13 நிறுவனங்கள் சேவை தொடங்க 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில் அளித்த தொகை வெறும் 2,561 கோடி மட்டுமே.

இந்த ஆண்டு தொடக்கத்தில் 3-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏல முறை பின்பற்றப்பட்டது. இதனால் அரசுக்கு 67 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இத்தகைய வருவாய் இழப்புக்கு காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Courtesy: www.dinamani.com

No comments:

Post a Comment