விட்டில் பூச்சிகள் பொட்டுப் பொட்டென்று விழுந்து சாவதைப்போல், மனிதப் பூச்சிகள் பொத்துப் பொத்தென்று விழுந்து மடிவதைக் கேள்விப்பட்டிருக்கி -றோமா? அதற்கு என்ன காரணம் என்று அறியப் போனவனும் செத்து மடிந் -தான். சில மணி நேரத்துக்குள் அந்த ஊரே பிணக்காடாகிவிட்டது.
யாரையும் அடக்கம் செய்வதற்கு யாரும் இல்லை. குடும்பங்குடும்பமாக அழிவு நேர்ந்த காரணத்தால், துக்கம் கொண்டாடக்கூட யாரும் எஞ்சி இருக்கவில்லை. பிணங்களைமலைபோல் அடுக்கி, அன்றைய மத்தியப் பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் ஒரே "மூச்சில்' கொளுத்திவிட்டார்.
மூத்தோர், இளையோர், சிறார் என்னும் வேறுபாடு சாவுக்கு இல்லைதான்; வயிற்றிலிருக்கும் பிள்ளையைக் கூடத் தாயை அலற அலற வைத்துப் பிதுக்கிக் கொண்டுபோய்விடும் கொடியவன்தான் கூற்றுவன்.
ஆனால், கூற்றுவன்கூட இப்படிக் கொத்துக் கொத்தாகக் கூட்டம் கூட்டமாக அழிப்பதில்லை. ஓரிருவர் அல்லர்; இருபத்திஐயாயிரம் பேர் சாகடிக்கப்பட்டவர்கள். கண்இழந்தவர்கள்; நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஊனமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து எழுபத்திநான்காயிரம்! அது நடந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் குழந்தைகள் குறைபாடோடுதான் பிறக்கின்றனர்!
போபாலில் எந்தவிதப் பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் கட்டப்பட்டு, நம்முடைய அரசால் அனுமதிக்கப்பட்ட யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கசிந்தநச்சுவாயுதான் ஊரே பிணக்காடாக மாறக் காரணம்!
அந்த நிறுவனத்தின் முதலாளி ஆன்டர்சன் என்னும் அமெரிக்கன்! இந்தக் கயவன் தன்னுடைய நாட்டை விட்டு விட்டு, தொழில் தொடங்க இந்தியாவுக்கு வந்த காரணம், இங்கேதான் மனித உயிர்களுக்கு விலை இல்லை என்பதால்தான். பிழைகள் நேராதவாறும், ஒருவேளை நேர்ந்தால் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன என்பது குறித்தும்இங்கேதான் எந்தக் கேள்வி கேட்பாடுகளும் இல்லை.
ஆட்சியாளர்கள் மேற்சட்டை, உள்சட்டை, காற்சட்டை என்று எல்லாச் சட்டைக -ளிலும் பெரிய பெரிய பையாகத் தைத்து வைத்திருப்பார்கள்; அவற்றை நிரப்பினால் போதும் என்பது ஒன்றுதான் இங்கு எழுதப்படாத அரசியல் சட்டம் என்பதை அறிந்துதான் இந்தியாவுக்கு வந்தான் ஆன்டர்சன். இங்கே தொழிலாளிகளுக்குக் கூலியும் குறைவு என்பது அவனுக்கு ஏற்பட்ட இன்னொரு கவர்ச்சி.
அமெரிக்காவில் பாதுகாப்புத் தொடர்பான கொள்கைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதால், ஏனோதானோவென்று கட்டப்படுகிற, மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலான தொழிற்சாலைகளெல்லாம் மூன்றாம் உலக நாடுகளுக்குக் குறிப் -பாக இந்தியாவுக்குத் தள்ளிவிடப்படுகின்றன. இளிச்சவாய் நாடு இந்தியாதானே!
இத்தனை உயிர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் அமெரிக்க முதலாளி கொடுத்த இழப்பீடு 470 மில்லியன் டாலர்; ஒவ்வொரு தலைக்கும் 200 டாலர்; இந்தியனின் உயிருக்கும் ஊனத்துக்கும் விலை பத்தாயிரம் ரூபாய்; காங்கேயம் மாட்டின் விலையும், இந்தியனின் விலையும் ஒன்றுதான்!
இந்த வழக்கு சாதாரண குற்றவியல் நீதிமன்றத்தில் 26 ஆண்டுகள் நடந்திருக்கிறது. இதற்குள் பல அரசுகள் மாறிவிட்டன; பல மத்தியப் புலனாய்வு அதிகாரிகள் ஓய்வு பெற்று விட்டார்கள்; வழக்கை விசாரித்த நீதிபதிகளில் பலர் செத்தே போய்விட் டார்கள். கடைசியில் நீதியும் செத்துப் போய்விட்டது!
முதலில் இந்த வழக்கு 304(2) என்னும் குற்றப்பிரிவின் கீழ்தான் நடந்தது. அந்தச் சட்டப்படி குற்றவாளிகளை 10 ஆண்டுகள் தண்டிக்கலாம்.
அகமதி என்னும் உச்ச நீதிமன்ற நீதிபதி குறுக்கிட்டு விசாரித்து, அதை 2 ஆண்டுக -ள் மட்டுமே தண்டிக்கக்கூடிய 304 ஏ என்னும் எளிய பிரிவுக்கு மாற்றி உத்தரவிட் -டார்.
கேவலம் மோட்டார் ஓட்டி யாரோ ஒருவரின் மீது ஏற்றி விடுகிற பொறுப்பின்மையும், 25,000 பேர் சாவதற்கும், 5 லட்சம் பேர் ஊனமுறுவதற்கும் காரணமான பொறுப்பின்மையும் ஒன்றுதான் என்று அரசமரத்தடியில் கட்டைப் பஞ்சாயத்துச் செய்கிறவன் கூடத் தீர்ப்புச் சொல்ல மாட்டானே! இதைச் சொல்வதற்கு ஓர் உச்ச நீதிமன்றம்!
அதைவிடக் கொடுமை அந்த உச்ச நீதிமன்ற நீதிபதி அகமதி இதைச் சாதாரணப் பிரிவுக்கு மாற்று என்று உத்தரவிட்டது சரிதான் என்று உச்ச நீதிமன்றத்தின் முன்னாள்தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தாங்கிப் பிடிப்பது!
""குற்றம் செய்யும் நோக்கம் தொழிற்சாலை அதிபர்களுக்குக் கிடையாது. ஆகவே அந்தச் செயல் காரணமாக ஒருவர் இறந்தாலும் ஒன்றுதான்; ஆயிரக்க -ணக்கில் இறந்தாலும்ஒன்றுதான்'' என்று பதற்றமே இல்லாமல் எப்படி கே.ஜி. பாலகிருஷ்ணனால் இதை நியாயப்படுத்த முடிகிறது?
இதுதான் சட்டம் என்றால் சட்டத்தை எவன் மதிப்பான்? இந்தத் தீர்ப்பை நீதிப் பேரழிவு என்றும் நீதிப் பயங்கரவாதம் என்றும் சொல்வது நியாயம்தானே!
இப்படி ஓர் இழிந்த தீர்ப்பைக் கீழ்நீதிமன்றம் வழங்குவதற்கேற்ப அதற்குச் சாலை அமைத்துக் கொடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி அகமதி மக்களின் வயிற்றெரிச்ச -லில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் மகேந்திரா உள்பட ஏழு பேருக்கு வெறும் இரண்டாண்டு சிறைத்தண்டனையை வழங்கிய கீழ்நீதிமன்ற நீதிபதிக்குஅவர்களைச் சிறைக்கு அனுப்புவதற்கு மனமில்லை! அவசரம் அவசரமாகப் பிணையில் விடுவித்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். இந்தக் கொடிய குற்றவாளிகளைத் தண்டித்த பிறகும் ஒருநாள் ஒருபொழுதுகூட அவர்கள் சிறையில் இருக்கவில்லை. அடுத்த நீதிமன்றத்தில் இன்னும் 25 ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கும். இந்த 7 பேரும் அந்த 2 ஆண்டுத்தண்டனையையும் அனுபவிக்கப் போவதில்லை.
முன்பெல்லாம் சந்தேகக் கேஸ் என்று ஒன்று போடுவார்கள். வீதியில் சும்மா போகிறவனை ஒரு கடையின் பூட்டை இழுத்து ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோதுஐயப்பட்டுப் பிடித்ததாகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து அவனை உள்ளே வைத்து விடுவார்கள்.
சிறைச்சாலைகள் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கட்டப்பட்டவைதானே! அமெரிக்க ஆன்டர்சனுக்காகவா கட்டப்பட்டது?
நச்சுவாயுக் கசிவுக்கு ஆன்டர்சன் முதலில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவரை உடனடியாகப் பிணையில் விடுதலை செய்ய வைத்து மாநில அரசுக்குச் சொந்தமான தனி விமானத்தை அளித்து, தில்லிக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தவர் அன்றைய மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங். தன்னுடைய சொந்த ஊர் சுடுகாடாகிவிட்டது; சாகடித்தவனைக் காப்பாற்றுவதில் அவ்வளவு அவசரம்! அர்ஜுன் சிங்கை மகனாகப் பெற்றதைவிட, அவருடைய தாய் மலடியாகவே இருந்திருக்கலாம்!
அமெரிக்க நெருக்கடி இல்லாமல், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் தூண்டுதல் இல்லாமல், ஒரு கொடிய குற்றவாளியை மாநில அரசே முன்னின்று விடுவித்துப் பாதுகாப்பாகத் தனி விமானத்தில் அனுப்பி வைப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா? ஒரு தனி மனிதன், மத்திய அரசின் துணை இல்லாமல் தில்லி விமான நிலையத்தை விட்டு ஒரு தனி விமானத்தில் அமெரிக்கா சென்றுவிட முடியுமா? முடியும் என்றால், நமக்கு ஓர் அரசுதான் எதற்கு? விமான நிலையத்தில் பாதுகாப்புக் கெடுபிடிகள் எதற்கு?பேருந்து நிலையங்கள்போல் ஆக்கிவிட வேண்டியதுதானே!
ராஜீவ் காந்தியின் யோக்கியதையே இதுதான் என்றால் அவருடைய மனைவி என்ற பேரில் இந்தியாவில் அதிகாரம் செலுத்த முடியுமா? இதுதான் சோனியாவின் அச்சம்! ஆகவே, எல்லாவற்றையும் மூடி மறைக்கும் வேலைகள் மும்முரமாகி இருக்கின்றன!
மத்திய புலனாய்வுத் துறை செயல்பட விடாமல் வெளிவிவகாரத்துறை குறுக்கிட்டது என்று புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் லால் வெளிப்படையாகச் சொன்னபிறகும், முதல்வர் அர்ஜுன் சிங் உத்தரவின் பேரில் தனி விமானத்தில் குற்றவாளியை போபாலை விட்டு அவசரமாகக் கடத்தியதாக அந்த விமானி சொன்ன பிறகும் தானே சாக்குக்குள் இருந்த பூனைக்குட்டி வெளிவந்திருக்கிறது!
நடந்த உண்மையை வெற்றிகரமாக 28 ஆண்டுகள் மக்களிடமிருந்து மறைத்து வைத்திருந்த காங்கிரஸ் மத்திய அரசு, இப்போது அதை ஒத்துக்கொண்டு நியாயப்படுத்தமுயல்கிறது.
மத்திய அரசின் இசைவில்லாமல் தில்லியிலிருந்து தனி விமானத்தில் எப்படி அமெரிக்காவுக்கு ஒரு குற்றவாளி தப்பிச் செல்ல முடிந்தது என்ற கேள்விக்கு விடைசொல்வதைத் தவிர்த்துக் கொண்ட பிரணாப் முகர்ஜி, ஆன்டர்சனைத் தனி விமானத்தில் முதல்வர் அர்ஜுன் சிங் போபாலுக்கு வெளியே கொண்டு போயிருக்காவிட்டால், அங்குசட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.
அதனுடைய பொருள் என்ன? ஆன்டர்சனை போபால் சிறையில் அடைத்திருந்தால், பிரெஞ்சுப் புரட்சியின்போது மக்கள் கொதித்தெழுந்து பாஸ்டில் சிறையை உடைத்துத்தரைமட்டமாக்கியதுபோல, மக்கள் போபால் சிறையை உடைத்துத் தரைமட்டமாக்கி, ஆன்டர்சனை இழுத்து வந்து உயிரோடு புதைத்திருப்பார்கள் என்பதுதானே!
சட்டம்-ஒழுங்கு என்பது தண்டிக்க வேண்டிய ஒரு குற்றவாளியைப் பாதுகாத்துத் தப்ப வைக்கும்போது குலையுமா? அல்லது சட்டம் சண்டித்தனம் செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், ஒரு குற்றவாளிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும்போது குலையுமா? யோசித்துப் பேச வேண்டாமா மூத்த அரசியல்வாதி!
ஒரு கொடிய குற்றத்தை நியாயப்படுத்திவிட்டால், பிரணாப்பை பிரதமராக்கி விடுவாரா சோனியா காந்தி?
ஆன்டர்சன் மீதுள்ள வழக்குத் திறந்தே இருக்கிறதாம். சொல்லுகிறார் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி. பிடித்த குற்றவாளியைக் காப்பாற்றிப் பூச்செண்டு கொடுத்துத் தனி விமானத்தில் அனுப்பி விட்டு, வழக்கு உயிரோடுதான் இருக்கிறது என்று சொல்ல வெட்கமாக இருக்காதா, வீரப்ப மொய்லிக்கு?
போபால் நச்சுக்கசிவு வழக்கில்தான் என்றில்லை; பொதுவாகக் கொடுங் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் "மனப் பிறழ்ச்சி' மன்மோகன் அரசிடம் காணப்படுகிறது.
ஒரு லட்சம் கோடி கொள்ளையடித்த ஆ. ராசாவிடம் அமைச்சர் பதவியைப் பிடுங்கிவிட்டால், தாழ்த்தப்பட்ட மக்கள் வாக்களிக்க மாட்டார்களோ என்னும் அச்சம்! அப்படிக் கருணாநிதி வேறு பயமுறுத்தி வைத்திருக்கிறார்.
இன்னொரு கொடுமை அண்மையில் சிங்கள மந்திரிசபையில் அங்கம் வகிக்கிற டக்ளஸ் தேவானந்தா, கசாப்புக் கடைக்காரன் ராஜபட்சவோடு தில்லிக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கின் கையைப் பிடித்துக் குலுக்கியிருப்பது!
அச்சுறுத்திப் பணம் பறித்தது; ஆளைக் கடத்தியது; ஒருவரைக் கொலை செய்தது என்று மூன்று கொடிய வழக்குகளில் சென்னை காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டு,தேடுவோர் பட்டியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தா, மன்மோகன் சிங் கையைப் பற்றியபோது, அப்படியே தில்லி காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டாமா?
பிரபாகரனைப் பிடிக்க முடியவில்லை என்பதால், கருணாநிதியின் ஆசீர்வாதத்தோடு, சிங்கள அரசுக்கு உதவி, ஈழத்தையே சுடுகாடாக்கியதே காங்கிரஸ் மத்திய அரசு!
இன்னொரு கொலைக் குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா மன்மோகன் சிங்கின் கைகளில் வந்து சிக்கிய பிறகும் கோட்டைவிட்டது ஏன்?
போபாலையே மயானமாக்கிய ஆன்டர்சன், கொலைகாரன் டக்ளஸ் தேவானந்தா என்று எல்லோரும் மன்மோகன் சிங்கை வாழ்த்திக் கொண்டே வாழ்கிறார்கள்!
குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா!
Source: http://www.naamtamilar.org/textnews_detail.php?id=1662
No comments:
Post a Comment