Friday, August 20, 2010

Teachings of Lord Krishna to Women

ஸ்ரீ கிருஷ்ணர் பெண்களுக்கு அருளிய உபதேசங்கள்



ஸ்ரீ கிருஷ்ணர் பெண்களுக்கு நேரடியாக உபதேசம் செய்ததற்கான சம்பவங்கள் அங்குமிங்கும் இருந்தாலும் நமக்கு மிகவும் பரிச்சயமான, அவருக்கு மிகவும¢ பிடித்த மகாபாரத பாத்திரங்களான குந்திதேவி, திரௌபதி, சத்யபாமா, ருக்மணி, உத்திரா போன்றவர்களின் வாயிலாக இன்றைக்கும் தேவைப்படும் உபதேசங்களை நமக்கு உபதேசிக்கிறார்.

பொதுவாகவே, மகாபாரத பெண் பாத்திரங்களை மேலோட்டமாக பார்க்கும்போது, அவர்கள் வாழ்க்கை துன்பமும், சோகமும் நிறைந்ததாகவே நமக்கு புலப்படும். ஆனால் ஸ்ரீமத் பாகவதத்துக்கு வியாக்யானம் எழுதிய டோங்ரே மகாராஜ் அவர்கள் ``மகாபாரதப் பெண் பாத்திரங்கள் எல்லோருமே சகிப்புத்தன்மையையும், எதையும் தாங்கும் இருதயத்துடன், வருவதை எதிர்கொள்ளும் மனோபலம் கொண்டவர்கள். பூர்வ ஜென்ம கர்ம வினையால் ஏற்படும் பலன்களை ஸ்ரீ கிருஷ்ணரின் அருளினால் தைரியமாக ஏற்றுக்கொண்டார்கள்'' என்று சொல்கிறார்.

1. வேறொன்றிலும் கருத்தை செலுத்தாமல், என்னைத் தவிர வேறு சிந்தனையற்றவர்களுக்கு நான் எளிதில் கிடைப்பேன். அவர்களின் இம்மை மறுமைக்கான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன்.

2. என்னிடம் சரணடைந்த பிறகு. உங்களது மனநிலை எண்ணங்களின் ஓட்டம், நடத்தை, இவற்றின் தூய்மைக் குறைவை நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம். அதில் நான் அக்கரை செலுத்தி உங்கள் எண்ணங்களை சரி செய்வேன். (ஸ்ரீமத் பாகவத்தில் 11/5/42 இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. ``எம்பெருமானை தூய அன்புடன் போற்றும் தன்மை கொண்ட பக்தை ஒருவேளை பாவம் செய்ய நேரிட்டாலும், அவரது இருதயத்திலேயே குடியிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் அப்பாவத்தை முழுவதும் நீக்கி விடுகிறார்.'')

3. கிருஷ்ண பக்தியின் இலக்கணமே அது கணம்தோறும் வளர்ந்து கொண்டிருப்பதுதான். ஆகவே இந்த பக்தியின் வளர்ச்சிக்கு தடை ஏதும் இருக்குமானால் அதை உடனே களைய வேண்டும்.

4. ஸ்ரீ கிருஷ்ணரை சரணாகதி அடைவதற்கு உயர்ந்த ஜாதி, படிப்பாளி, செல்வந்தன் இப்படியெல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. தூய பக்தியும் நல்லோரின் தொடர்பும் இருந்தாலே போதும். இது பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு சொல்கிறார். ``படிப்பறிவில்லாத குப்ஜா, கோபிகள் மற்றும் சுக்ரீவன், அனுமான், ஜாம்பவான், கஜேந்திரன், ஐடாயூ இவர்களெல்லாம் வேதம் கற்கவில்லை. விரதங்கள் இருக்கவில்லை.. தவம் செய்யவில்லை. இவர்களுக்கு என்மீது கொண்ட அனன்ய பக்தியும், நல்லோர்களின் சகவாசமும், இவர்களுக்கு முக்தி கிடைக்க வழி காட்டியது'' ஆக மொத்தம் தன்னை சரணடைந்த பெண்களின் சுமையை ஸ்ரீகிருஷ்ணர் தானே ஏற்றுக்கொண்டு விடுகிறார். ``இம்மாதிரி கிருபையால் உண்டாகும் பரிபூர்ண மகிழ்ச்சியை நாம் அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.'' என்கிறார் ஸ்வாமி ராம் சுகதாஸ் அவர்கள்.

5. தீய நடத்தையுள்ள ஒருவன், வேறிடம் செல்லாத மனத்தோடு, என்னிடம் பக்தி கொண்டு, என்னை தொழுவானாகில், அவனும்கூட சான்றோனாக மதிக்கத்தக்கவன். ஏனென்றால் அவன் உண்மையை உறுதியாகத் தெரிந்து கொண்டு விட்டான்... என்னுடைய பக்தன் அழிந்து போவதில்லை.

6. எவனொருவன், கடைசிக் காலத்திலும் என்னையே நினைத்துக் கொண்டு, உடலை உதறி விடுகிறானோ. அவன் என்னையே அடைந்து விடுகிறான். இதில் கொஞ்சம் கூட சந்தேகப்பட வேண்டாம்.

7. நான் எல்லா உயிர்களிடத்தும் சமநோக்குடன் இருந்திருக்கிறேன். எனக்குப் பிரியமானவன், பிரியமில்லாதவன் என்று யாருமில்லை. ஆனால் பிரேமையோடு என்னை வழிபடுபவர்களிடத்தே. நான் உறுதியாக வெளிப்படுகிறேன்.

8. என் திருவடிகளை அடைந்து, ஒரு தடவையேனும் ``ஏ.... பிரபு... நான் தாங்களுடையவள்'' என்று சொல்லி என்னிடம் யார் அடைக்கலம் கோருகிறார்களோ, அவர்களை நான் அனைத்துப் இன்னல்களிலிருந்து காப்பாற்றுவேன்.

9. பக்தியோடு எனக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட இழை, புஷ்பம், பழம், தண்ணீர் ஆகிய எதுவாக இருந்தாலும் சரி, அன்போடு அளிக்கப்பட்ட அவைகளை நான், மகிழ்ச்சியோடு உண்ணுகிறேன். குசேலரின் அவல், திரௌபதியின் கீரை, கஜேந்திரனின் புஷ்பம், சபரி அளித்த பழம், நந்திதேவன் அளித்த தீர்த்தம்-இவை உதாரணங்கள்.

10. நீ என்னையே நினைத்துக் கொண்டு, என்னுடைய பக்தையாகி விடு. என்னையே வழிபடு என்னையே வணங்கு, இப்படி செய்தால் நீ என்னையே அடைவாய் என்று நான் உனக்கு வாக்குறுதி அளிக்கிறேன். நீ என்னுடைய அத்தியந்த நண்பனல்லவா.

11. ``நீ வருந்தாதே. நீ சக்ரவர்த்தியாக ஆவாய் என்று நான் பிரதிக்ஞை செய்கிறேன். வானம் இடிந்து விழுந்தாலும், இமயமலை துகள் துகளாகப் போனாலும் மண்ணுலகம் பொடிப் பொடியாகப் போனாலும், சமுத்திரம் வற்றிப்போனாலும், போகலாம். ஆனால் திரௌபதி என் வார்த்தைகள் ஒருபொழுதும் பொய்யாக மாட்டா.'' ஸ்ரீ கிருஷ்ணர் திரௌபதிக்கு கொடுத்த வாக்குறுதி.

12. பல பிறவிகள் எடுத்துவிட்டு, கடைசிப் பிறவியில் தத்துவ ஞானத்தை அடைந்து, எல்லாமே வாசுதேவனே என்றுணர்ந்து கொண்டு, என்னை உபாசிக்கிற மகாத்மா மிகவும் கிடைத்தற்குகரியவர்.

13. செய்ய வேண்டிய கருமம் எனக்கு மூவுலகினும் சிறிதுமில்லை. அடையப்படாதது. அடைவதற்கும் ஏதுவுமில்லை. ஆனாலும் நான் கர்மத்தில் சுழன்று கொண்டிருக்கிறேன்.

14. எவன் எல்லா உயிர்களிலும் உறையும் என்னை தொழுகின்றானோ, அந்த யோகி எந்நிலையில் இருந்தாலும் அத்தொழில் புரிந்தாலும் என்னிடத்தல் இருக்கிறான்.

15. நான் யோக மாயையினால் மூடப்பட்டு எல்லாருக்கும் விளங்குவதில்லை. மதியிழந்த இவ்வுலகத்தைப் பின்பற்றுவனும், மாறுபாடற்றவனும் என்னை அறிவதில்லை.

16. என்னைவிட வேறெதிலும் நாட்டமில்லாதவனும், என்னையே சிந்திப்பவராய், யார் என்னைப் பரிவுடன் உபாசிக்கிறார்களோ. அவர்களுடைய யோக ஷேமத்தை நான் தாங்குகிறேன்.

17. பாய்களை செம்மையாக விரித்து வைத்தவனுடைய படகை. காற்றுதானே தள்ளி செல்வது போல, பக்தனுடைய வாழ்க்கை படகை, என்னுடைய கருணைக் காற்று தள்ளிச் செல்கிறது.

18. என்னிடம் மனத்தை வைத்தவளாகவும், என் பக்தையாகவும், என்னை பூஜிப்பவளாகவும் ஆவாயாக. என்னையே நமஸ்கரிப்பாயாக. இவ்வாறு என்னையே உத்தமகதியாக கருதி, உள்ளத்தில் நிலை நிறுத்தி என்னையே வந்தடைவாய்.

19. என்னுடைய பெருமையை தேவகணங்கள் உணரவில்லை. மகரிஷிகளும் உணரவில்லை. நான் தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும் எல்லா வகையிலும் முதல் காரணமன்றோ!

20. பற்றையும் பயன்களையும் விட்டு செய்யக்கூடிய கர்மமே உத்தமம். யஜ்ஞம், தானம், தவம், மாத்ரு, பித்ரு, குருஸேவை முதலிய நற்கருமங்கூட அஹங்காரம், மமகாரம், பலனில் ஆசை இவற்றுடன் செய்யப்பட்டால், அவை மோஷத்துக்கு வழியாகாமல் மீண்டும் பந்தத்துக்கே வழியாகும்.

21. எல்லா தருமங்களையும் விட்டு விட்டு என்னையே சரணடைவாய். நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன்... வருந்தாதே.

22. என்னிடம் நிலைபெற்ற மனமுடையவர்களுக்கு சாவுடன் கூடிய சம்சாரக் கடலிலிருந்து கரையேற்றுவேன்.

23. என்னைக் காட்டிலும் உயர்ந்தது வேறு எதுவுமில்லை. சரட்டில் மணிகள் கட்டியதுபோல் என்னிடம் எல்லாமே கோர்க்கப்பட்டுள்ளது.

Source: http://www.tamilsigaram.com/Linkpages/aanmigam/disp.php?MessageId=843

No comments:

Post a Comment