Written by editor |
Monday, 19 July 2010 08:48 |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோவையில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தின் போது, மைனாரிட்டி தி.மு.க. அரசு மீது நான் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பகுதி பகுதியாக, சப்பை கட்டும் விதத்தில் கருணாநிதி பல நாட்களாக பதில் அளித்துக் கொண்டே இருப்பதை பார்க்கும் போது, கோவை மட்டும் குலுங்கவில்லை, கருணாநிதியும் குலுங்கிப் போய் இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலதா தெரிவித்துள்ளார். தமிழக முதல்வருக்கும், தமிழக எதிர்கட்சித் தலைவருக்கும் இடையில் நடைபெறும் பத்திரிகை அறிக்கைச் சமரில், முதல்வர் கருணாநிதியின் இறுதியாக விடுத்த அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர்மேலும் ; மேலும், மத்திய கூட்டணி அரசின் அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகிப்பதோடு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்விற்கும் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது. இதை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரே தெரிவித்து இருக்கிறார். இதற்கு மறுப்பையும் கருணாநிதி இது நாள் வரை தெரிவிக்கவில்லை. எனவே தான் விலைவாசி உயர்வு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்விற்கும் மைனாரிட்டி தி.மு.க. அரசும் காரணம் என்று நான் குற்றம் சுமத்தினேன். அதே சமயத்தில் விலைவாசி உயர்வுக்கும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமான மத்திய அரசையும் நாங்கள் கண்டித்து இருக்கிறோம். கோவை பொதுக்கூட்டத்தில் எழுப்பப்பட்ட கண்டன முழக்கங்களை படித்துப் பார்த்தால் நன்கு விளங்கும். ஒரு வேளை, முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் மதுரைக்கு வந்த போது அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது; கருணாநிதியின் மீது சந்தேகத்தின் நிழல் படிந்திருப்பதாகக் ஜெயின் கமிஷன் அறிக்கை குற்றம் சாட்டியது; பெருந்தலைவர் காமராஜருக்கு சுவிஸ் வங்கியில் பணம் இருக்கிறது என்று சொன்னது; விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் கேட்டு இந்திரா காந்தி அவர்கள் விண்ணப்பித்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கிண்டல் அடித்தது ஆகியவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்து, கூட்டணியில் இருக்கின்ற காங்கிரஸ் கட்சியும் தன்னைவிட்டு விலகிவிடுமோ என்ற அச்சத்தில் கருணாநிதி இது போன்று புலம்புகிறார் போலும்! எனது ஆட்சிக் காலத்தில் அதிகபட்சமாக துவரம் பருப்பு ஒரு கிலோ 28 ரூபாய் என்ற அளவில் தான் விற்கப்பட்டது. கருணாநிதியின் தற்போதைய ஆட்சிக் காலத்தில் 99 ரூபாய் என்ற அளவுக்கு விற்கப்படுகிறது. அதாவது மூன்று மடங்கிற்கும் மேலாக உயர்ந்துவிட்டது. நல்லெண்ணெயின் விலை 2001 ஆம் ஆண்டு 34 ரூபாயாக இருந்ததாகவும், எனது ஆட்சிக் காலத்தில் 65 ரூபாயாக உயர்ந்ததாகவும் கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறார். எனது ஆட்சிக் காலத்தில் நல்லெண்ணெயின் விலை அதிகபட்சமாக ஒரு கிலோ 60 ரூபாய் அளவுக்கு தான் விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ நல்லெண்ணெயின் விலை 134 ரூபாய்! அதாவது இரண்டு மடங்குக்கு மேல் உயர்வு! இதே போல் தான் மற்ற பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. எனது ஆட்சிக் காலத்தில் சர்க்கரை விலை கிலோ 12 ரூபாய் 50 காசு என்ற அளவில் இருந்தது. அதாவது, ரேஷன் கடைகளில் விற்கப்பட்டதை விட ஒரு ரூபாய் குறைவாக வெளிச்சந்தைகளில் விற்கப்பட்டது. இதை கருணாநிதி தன்னுடைய புள்ளி விவரத்தில் குறிப்பிடவில்லை. தற்போது சர்க்கரையின் விலை ஒரு கிலோ 35 ரூபாய். கருணாநிதியால் அளிக்கப்பட்ட புள்ளி விவரங்களில் இருந்தே எனது ஆட்சிக் காலத்தில் விலைவாசி கட்டுக்குள் இருந்துள்ளது என்பதை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். இதே போன்று, 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய பொட்டலம் 50 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருவதாக கருணாநிதி தெரிவித்து இருக்கிறார். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு சில கடைகளில், சில நாட்கள் மட்டுமே வழங்கப்பட்ட மளிகைப் பொருட்கள் தரமற்று இருந்ததும், இந்தத் திட்டம் தற்போது நடைமுறையில் இல்லை என்பதும் கருணாநிதிக்கு தெரியாது போலும்! எனது ஆட்சிக் காலத்தில் சாதாரண உணவகங்களில் 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சாப்பாடு தற்போது 50 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளதை வைத்தே, கடந்த நான்கு ஆண்டுகளில் விலைவாசி மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? 50-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள், திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அரண்மனைகள், நிலங்கள், தோட்டங்கள் எல்லாம் கருணாநிதி குடும்பத்திற்கு எப்படி வந்தது? கட்சிப் பணத்தையும், மக்கள் பணத்தையும் கொள்ளையடித்து தன் மக்கள் பெயரில் பல சொத்துக்களை சேர்த்த கருணாநிதிக்கு, என்னைப் பற்றி குறை சொல்ல என்னத் தகுதி இருக்கிறது? அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பல்வேறு பொய் வழக்குகளை புனைந்தவர் கருணாநிதி. இதில் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தின் மூலம் நிரபராதி என அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு விட்டேன். நீதிமன்றத்தில் வழக்குகளை சந்திக்க துணிவில்லாமல், தன் மீதான வழக்குகளில் இருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொண்ட கருணாநிதிக்கு, தைரியமாகப் போராடி வழக்குகளை சந்தித்து, நீதிமன்றத்தால் பல்வேறு பொய் வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட என்னைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 400 கோடி ரூபாய் கமிஷனைப் பொறுத்தவரை, கருணாநிதி குடும்பத்திற்கும், தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கும் உள்ள நேரடித் தொடர்பு. மத்திய அரசுக்கு சொந்தமான காப்பீட்டு நிறுவனங்களை அழைத்து பேசாமல், இந்தத் தனியார் நிறுவனத்தை மட்டும் அழைத்துப் பேசி இந்தத் திட்டத்தை அந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததிலிருந்தே, கருணாநிதி குடும்பத்தினருக்கு இதில் உள்ள மறைமுக ஆதாயத்தினை தமிழக மக்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள். இதைத்தான் விஞ்ஞான ரீதியான ஊழல் என்று சர்க்காரியா விசாரணை ஆணையம் குறிப்பிட்டது என்பதை கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறான அறிக்கைகளினால் பயனேதும் கிடைக்கிறதோ இல்லையோ, இருவர் செய்த தவறுகளும் மீண்டம் பதிவாகின்றன என்பது மட்டும் உண்மை என்கின்றார்கள் செய்தியாளர்கள். |
Sunday, August 15, 2010
இந்திராகாந்தி, விதவை ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தால், பரிசீலிக்கலாம் என்றவர் கருணாநிதி - ஜெயலலிதா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment