Saturday, August 21, 2010

Rival Meeting of DMK in Coimbatore - a laughing-sotck கான மயிலாட… : திமுக கோவை பொதுக்கூட்டம்

“புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல’ என்ற ஓர் உவமை உண்டு. தி.மு.க தலைவர் கருணாநிதி கோவையில் நடத்திய (ஆக.2) பொதுக்கூட்டத்தைப் பார்த்தபோது மேற்கண்ட உவமைதான் நினைவில் வந்தது.

kovai-admk-rally

செம்மொழி மாநாட்டுக்கு பதிலடியாக, ஜூலை13 அன்று, கோவையில் அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க வை நன்றாகக் கலங்கடித்துவிட்டது தெரிகிறது. அதற்கு பதிலடியாக, அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்திய அதே வ.உ.சி திடலில் தி.மு.கவும் பொதுக்கூட்டத்தை நடத்தி இருக்கிறது.

கோவையில் “டைடல் பார்க்’ தகவல் தொழில் நுட்பப் பூங்காவைத் திறந்து வைக்க முதல்வர் கருணாநிதி வந்ததைப் பயன்படுத்திக் கொண்டு, அவசர அவசரமாக பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜெயலலிதாவின் கோவை பொதுக்கூட்டப் பேச்சுக்கு பதிலளிக்கவே இந்த பொதுக்கூட்டம் என்று கிளைகள் வாரியாக தீவிர பிரசாரம் செய்யப்பட்டது.

பொதுக்கூட்டம் நிகழ்ந்த நாளில், அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் பெரும்பாலானவை பொதுக்கூட்டத்துக்குத் தொண்டர்களை அழைத்துவர திருப்பிவிடப்பட்டன. இதனால் பயணிகள் அடைந்த தொல்லைக்கு அளவில்லை. கோவை மாவட்டம் மட்டுமல்லாது மதுரை, தேனி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, உதகை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களிலிருந்தும் அμசுப் பேருந்துகள் வாயிலாகத் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர்.

அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகப்படுத்துவது தி.மு.க வுக்குப் புதிதல்ல. மக்களும் வழக்கம் போல தங்களைத் தாங்களே நொந்தபடி அமைதி காத்தனர். இத்தனை ஏற்பாடுகள் செய்திருந்தும், கோவை வ.உ.சி. பூங்காத் திடல் மட்டுமே நிரம்பியது. முன்பு, ஜெயலலிதா நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது திடல் மட்டுமின்றி பக்கவாட்டுச் சாலைகளும் நிரம்பி வழிந்தன; அன்று கோவை மாநகரம் ஸ்தம்பித்துவிட்டது. அத்தகைய மக்கள் கூட்டத்தை தி.மு.க நிகழ்வில் காண முடியவில்லை. அ.தி.மு.க போல வடக்கு நோக்கி மேடை அமைத்தும், தி.மு.கவுக்கு “வாஸ்து’ வேலை செய்யவில்லை. இந்த அதிர்ச்சி, தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர்களின் வசைபாடலில் எதிரொலித்தது.

சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர், நோக்கத்துக்கு மாறாக ஜெயலலிதாவையே வசைபாடினார். இதன்மூலம், தி.மு.கவின் மாற்று சக்தி, அ.தி.மு.க மட்டுமே என்பதை அவர் காட்டிவிட்டார். அவரது பேச்சில் வழக்கமாகக் காணப்படும் “தெளிவு’ குறைந்து, பிதற்றல் அதிகமாகக் காணப்பட்டது.

தி.மு.க கொடி தான் சொத்து:

எனக்கென்று சொத்தாக இருப்பது தி.மு.க கொடி மட்டுமே என்று கருணாநிதி பேசினார். இதை அப்படியே நம்பி கைதட்டினார்கள் கழக உடன்பிறப்புகள். தனது சொத்துக்களை வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுத்தது போக, கோபாலபுரத்து வீட்டையும் மறைவுக்குப் பின் தானமாக எழுதி வைத்துவிட்டேன் என்று உருக்கமாகப் பேசினார் கருணாநிதி.

அவரே, தமிழகத்தை வளர்க்க வேண்டுமானால் அழகிரியையும் ஸ்டாலினையும் பலிகொடுக்கத் தயாராக இருப்பதாக முழங்கியதுதான் உச்சகட்ட நகைச்சுவை; மனுநீதிச் சோழன் பிறந்த திருவாரூரில் பிறந்தவராம்! மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் வெந்து பலியான சகோதரர்கள் கதை கருணாநிதிக்கு மறந்துவிட்டது போலும்!

செம்மொழி மாநாட்டில் கட்சிக்கொடி கட்டக் கூடாது என்ற உத்தரவால் தொண்டர்கள் பட்ட மனப்புண்ணுக்கு மருந்தாக, இனிவரும் காலங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தி.மு.க கொடிகளை நடுங்கள் என்று முழங்கினார் தலைவர். ஏற்கனவே உடன்பிறப்புகளின் சாலையோர ஆக்கிரமிப்பு விளம்பரங்களைத் தாள முடியவில்லை. தி.மு.கவுக்குப் போட்டியாக அ.தி.மு.கவும் களமிறங்கினால், தமிழகத்தின் கதி அதோகதிதான்!

“கலைஞர்’ புராணம்

பொதுக்கூட்டத்தில் பேசிய பலர், கருணாநிதியை ஜெயலலிதா “கருணாநிதி’ என்றே அழைப்பதாக ஆதங்கப்பட்டனர். பத்திரிகைகள் கூட (விலை போனவை தான்) கலைஞர் என்று எழுதி மகிழ்கையில், ஜெயலலிதா நிமிடத்துக்கு 60 முறை கருணாநிதி என்று சொன்னால் பகுத்தறிவு வாதிகளுக்கு கோபம் வரத்தானே செய்யும்?

kovai-dmk-rally-stage

இதையும் கருணாநிதி விடவில்லை. இது குறித்த கருணாநிதியின் பேச்சு மரியாதைக் குறைவாக, மட்டரகமாக இருந்தது. ஜெயலலிதாவை ஒருமையில் விளித்த அவர், “”நீ, நான் என்று பேசிக் கொள்வதாக கருதிக் கொள்ளாதே. ஏனென்றால் உன் வயது என்ன? என் வயது என்ன? சிறு வயதிலிருந்தே உன்னைத் தெரியும் என்ற காμணத்தால், அந்த மரியாதையுடன் நீ, நான் என்று பேசுவதாக எண்ணிக்கொள். உன் வயதுக்கு 87 வயதான ஒரு முதியவரைப் பார்த்து நான் அதிகம் படிக்காதவனாக இருக்கலாம், உன்னைப் போல் அறிவாளியாக இல்லாமல் இருக்கலாம் அந்த வயதுக்காவது மரியாதை கொடுக் வேண்டாமா? நான் மரியாதை யைத் தேடி அலைகிறேன் என்று யாராவது தயவுசெய்து எண்ணிக் கொள்ளா -தீர்கள்” என்று புலம்பினார் ‘கலைஞர்’.

கருணாநிதியைக் கலைஞர் என்று அழைத்துவிட்டால், சர்க்காரியா கமிஷன் அறிக்கையும் ஸ்பெக்ட்ரம் ஊழலும் நள்ளிரவு கைதும் வாக்காளர்களுக்கு மறந்து போகுமா என்ன? இருந்தாலும் “பெரியவரின்’ வருத்தம் அறிந்து “அம்மா’வாவது மரியாதை கொடுக்கலாம்.

“மைனாரிட்டி’ பெருமிதம்!

அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா, தி.மு.க அரசை மைனாரிட்டி அரசு என்று தொடர்ந்து விமரிச்சித்து வருவது தி.மு.கவினருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மை கசக்கத்தானே செய்யும்? இதற்கும் கோவை பொதுக்கூட்டத்தில் பதில் அளித்தார், செம்மொழி மாநாட்டுத் திலகம் கருணாநிதி.

“மைனாரிட்டி அரசு என்று சொல்வதால் நான் கவலைப்படப் போவதில்லை. சிறுபான்மை சமூகத்தை மைனாரிட்டி என்பார்கள். அதைப் போல தி.மு.க சிறுபான்மையினருக்காக என்றும் பாடுபடக் கூடியது’ என்றார் அவர்.”உலகிலேயே இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக அதிக முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தியா. இங்கு 15 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் 6 சதவீதம் மட்டுமே அரசு பணிகளில் உள்ளனர். இத்தகைய நிலையிலிருக்கும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பது பெருமைதான்” என்று முழங்கினார், கருணாநிதி. வழக்கம்போல “மெஜாரிட்டி’ உடன்பிறப்புகள் கரவொலி எழுப்பி மகிழ்ந்தார்கள்.

மைனாரிட்டி அரசை மெஜாரிட்டி அரசாக்க தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று கூறவும் கருணாநிதி மறக்கவில்லை. வார்த்தை ஜாலங்களால் தமிழகத்தை தொடர்ந்து ஆளலாம் என்ற இவரது தந்திரம் “மெஜாரிட்டி’ மக்களுக்கு எப்போது புரியபோகிறது?

சாமிகள் மயம்:

kovai-dmk-rally

தி.மு.கவுக்குத் தாவிய ஈரோடு முத்துசாமி, கரூர் சின்னசாமி, தாவத் தயாராக உள்ள திருப்பூர் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, ம.தி.மு.கவுக்குத் தாவி பின் தாய்க்கழகத்துக்குத் தாவிய மு.கண்ணப்பன், கோவை மாநகரம் அ.தி.மு.கவுக்குத் தாவக் காரணமான மு.ராமநாதன் போன்றவர்களின் முழக்கங்கள் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டின. கட்சி தாவும் பிரபலங்கள் முந்தைய தாய்க்கட்சிகளை விமர்சிப்பது புதிதல்ல. தி.மு.கவைப் பிளந்த கோபாலசாமி அளித்த அனுபவத்தை “முதியவர்’ மறந்திருக்க மாட்டார். ஆயினும், தனது பங்குக்கு சாமிகளை மேடையேற்றி அழகு பார்த்தார்.

“வருங்கால முதல்வர்’ அய்யாசாமி (மு.க.ஸ்டாலினின் இயற்பெயராமே) மட்டுமே பொதுக்கூட்டத்தின் நோக்கமான சாதனை விளக்கத்தை நினைவில் கொண்டு பேசினார். தமிழக அரசின் சாதனைகளைக் கண்டு பிற மாநில முதல்வர்கள் வியப்படைந்து வருவதாக, தனக்குத் தானே சான்றிதழ் அளித்துக் கொண்டார். தி.மு.க அரசின் இலவச கவர்ச்சித் திட்டங்களை அவர் அடுக்கினார். ஒருவருக்கு மீன் கொடுப்பதைவிட மீன்வலை கொடுப்பதே முக்கியம் என்ற அμசியல் தத்துவத்தை அவருக்கு யாரேனும் எடுத்துச் சொன்னால் நல்லது.

மொத்தத்தில், கோவையில் நிகழ்ந்த தி.மு.க., பொதுக்கூட்டம், அரசின் சாதனைகளை விளக்குவதாகக் கூறிக் கொண்டு, ஜெயலலிதாவை வசைபாடி மகிழ்ந்தது. அ.தி.மு.க நடத்திய ஆர்ப்பாட்டத்துக்குப் போட்டியாக பொதுக்கூட்டம் நடத்திய தி.மு.க., “கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் ஆடியது போல’ தன் பலவீனத்தை தானே வெளிப்படுத்திவிட்டது.

Source: http://www.tamilhindu.com/2010/08/kaana-mayilaada-dmk-kovai-show/

No comments:

Post a Comment