அரியலூர் : ''ஓர் அரங்கத்தில் நடந்த கூட்டத்தில் பேசியதற்காக, காடுவெட்டி குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைத்த கருணாநிதியும் ஒரு சர்வாதிகாரி தான்,'' என அரியலூரில் நடந்த பொதுக்கூட்டத் தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆவேசமாகப் பேசினார். சிதம்பரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் பொன்னுசாமிக்கு ஓட்டு கேட்டு, அரியலூர் காமராஜர் திடலில் நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: இங்கு பேசிய அ.தி.மு.க., வினர், கருணாநிதியை சர்வாதிகாரி எனக் கூறினர். ஆம், கருணாநிதி ஒரு சர்வாதிகாரி தான்.
அரியலூரில், உள் அரங்கத்தில் நடந்த எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், குரு பேசிய ஒரு பேச்சு குறித்து, சர்வாதிகாரமாக முடிவெடுத்து, குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையிலடைத்தார் கருணாநிதி. அது போன்ற பேச்சுகளுக்காக இவரது கட்சியில் உள்ளவர்களை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையிலடைக்க வேண்டுமென்றால், சிறைச் சாலை தாங்குமா? தி.மு.க., கூட்டணியில் நாங்கள் இருந்த போதும், தி.மு.க.,வினரின் மக்கள் விரோதச் செயல்களை புட்டு, புட்டு வைத்தேன். அதனால் தான் கருணாநிதிக்கு எங்கள் மீது கோபம். இப்போது இலங்கை பிரச்னையில், என் மீது கருணாநிதி குற்றம் சாட்டுகிறார். இலங்கை பிரச்னையில் நீங்கள் செய்த துரோகத்தை பற்றி, ஒரே மேடையில் நேருக்கு நேர் பேசத் தயார். அதற்கு நீங்கள் கூட வர வேண்டாம். உங்களது, 'இனமான' பேராசிரியரை அனுப்புங்கள் எனக் கூறினேன்; இதுவரை அதற்கு பதில் இல்லை.
தமிழகத்தின் அடிப்படை உரிமை பிரச்னைகளான காவிரி, முல்லை, பெரியாறு போன்றவற்றிற்கு கருணாநிதி தான் காரணம். எதை மறந்தாலும், மின்சார தட்டுப்பாட்டை மட்டும் தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். தமிழகத்தில் மின்சாரத்துக்கு விடுமுறை கொடுத்தவர் ஆற்காடு வீராசாமி. 'என்னால் தான் இந்த தேர்தலில் தி.மு.க.,வுக்கு தோல்வி ஏற்படப் போகிறது' என அவரே கூறியுள்ளார். கடந்த 1989 முதல் தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இப்போது, அடுத்தடுத்து இரண்டு ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது. முதலாவது டில்லியில், அடுத்த மூன்று மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம். ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்திற்கு எடுக்கப்படும் விவசாயிகளின் நிலத்துக்கு, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டுமென அப் போது கேட்டோம். இப்போது, 10 லட்சம் கொடுக்க வேண்டுமெனக் கூறுகிறோம். இன்னும் ஒரு மாதத்தில் 15 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறுவோம். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
Source: http://election.dinamalar.com/news/1937/
No comments:
Post a Comment