Monday, August 16, 2010

சந்திரயான், பாரம்பரிய அறிவியல் மற்றும் அரைகுறை ‘பகுத்தறிவு’…

பாரத பாரம்பரியத்தில் மட்டுமல்ல உலகின் அனைத்து இயற்கை வழிபாட்டு (pagan)பாரம்பரியங்களிலும் சந்திரன் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டிருக்கிறது. இந்திய இலக்கியம் மற்றும் அழகியலில் சந்திரனின் கலைகள் மானுட மனத்தின் நீங்காததோர் தொன்மச் சின்னமாகவே அறியப் படுகின்றன.


மிகப்பண்டைய காலத்தைச் சேர்ந்த பெண் தெய்வ வழிபாடுகளில் தொடங்கி இன்றைக்கு நாம் காணும் பல தெய்வீக சின்னங்களிலும் சந்திரன் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. சந்திரன் பொதுவாக மனதோடு தொடர்பு படுத்தி பேசப்படுகிறது. ”பரம்பொருளின் மனத்தினின்று சந்திரன் தோன்றினான்” (சந்த்ரமா மனஸோ ஜாத:) என்று ஆகத் தொன்மையான ரிக்வேதப் பாடலான புருஷசூக்தம் கூறுகிறது. மனம் சுயபிரகாசம் இல்லாதது, ஆத்ம சூரியனால் பிரகாசிப்பது என்பதாக பேசும் உபநிடதங்கள். புராணங்கள் என்பது ஒருவித மொழியாடல். அக உண்மைகளை புறப்பிரபஞ்சத்துடன் இணைத்து பேசும் அந்த முறையை பாரத மரபும் சரி, பொதுவாகவே பாரத மக்களும் சரி சரியாகவே புரிந்திருக்கிறார்கள். இதனால்தான் இந்த தேசத்தில் அறிவியலுக்கும் ஆன்மிகத்துக்கும் அமைப்பு ரீதியான மோதல் என்றுமே வந்தது கிடையாது.

மேற்கிலோ இன்றைக்கும் படைப்புவாதம் பேசும் அடிப்படைவாதிகளுக்கும் அறிவியலாளர்களுக்கும் மோதல் இருந்தபடியேதான் இருக்கிறது. ஆனால் போலி பகுத்தறிவாளர்களால் இந்த அறிவியல் ஆன்மிக இணைப்பு பாரத கலாச்சாரத்தில் நிலவுவதை தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை. எனவே போலி பகுத்தறிவு பேசி அரசியல் நடத்தி இன்றைக்கு பெரும் பொறுப்பில் இருக்கும் தமிழகத் தலைவர் ஒருவர் சந்திரயான் விண்கலம் குறித்து கவிதை என்கிற பெயரில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் தெரியும் இந்து எதிர்ப்பு வக்கிரம் அந்த தலைவரது பகுத்தறிவின்மைக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்திருப்பதுதான் இதில் வேடிக்கை. இதோ அந்த ‘கவிதை’யின் சிலவரிகள்:

புராணத்தில் வரும் சந்திரனோ, குருவின் மனைவி தாரைக்கு புதியதோர் காதலன் என்று புராணமே கூறி வணங்கும்! பாம்புகள் இரண்டு ராகுவும் கேதுவும் சந்திரனை விழுங்குமாம்; பஞ்சாங்கம் அதனை கிரகணம் என விளம்புமாம்!
அனைத்தும் பொய், புளுகு, கற்பனையெனத் தூக்கி அடித்து; அமெரிக்க, ரஷ்ய, அய்ரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் அணி வகுப்பில் இணைந்து அருஞ்சாதனை புரிந்து விஞ்ஞானம்; அசோக சக்கரக் கொடியை அம்புலியில் நாட்டியது; அறிவியக்க வரலாற்றில் ஓர் அற்புதமாம்; அதுவும் நம் நாட்டில் என்பதிலோர் பெருமிதமாம்!

உண்மையில் ராகு, கேது என்றால் என்ன என்பதனை பாரதிய வானவியல் சாஸ்திரங்கள் மிகத் தெளிவாகவே கூறுகின்றன. உதாரணமாக சூரிய சித்தாந்தத்தின் நாலாவது அத்தியாயம் சந்திரகணம் என்பதுதான். கணிதப்பேராசிரியர் எஸ்.பாலச்சந்திர ராவ் விளக்குகிறார்:

In Surya Siddanta) the parameters required for the computation of a lunar eclipse are:

(i) True longitudes of the Sun, the Moon and the Moon’s node (Raahu)
(ii) The true daily motions of these three bodies
(iii) The lattitude of the moon and
(iv) The angular diameters of the Earth’s shadow (Bhoo-chaayaa) and of the moon

இந்த அடிப்படையில் செய்யப்படும் கணக்கீடுகளின் மூலம் சந்திர கிரகணத்தின் தொடக்க நேரம், முடியும் நேரம், முழு கிரகணத்தின் காலம் ஆகியவற்றைத் தெளிவாகக் கணக்கிடலாம்.

இதில் மற்றொரு விஷயமும் உண்டு. கிரகணங்களைக் குறித்த தொன்மக் கதைகள் உலகமெங்கிலும் ஒரு பூதநாகம் (dragon) சூரியனையோ சந்திரனையோ விழுங்குவதாகவே கூறின. இந்த கிரகண-பூத நாகத்தை (Eclipse-Dragon) ஒரு தெய்வீக வீரன் அழிப்பான். இந்தக் கதை பண்டைய இஸ்லாமிய மரபிலும், கிறிஸ்தவ மரபுகளிலும் உண்டு. ஆனால் இந்து மரபில் மட்டுமே இந்த ராகு-கேது தொன்ம மரபு பூமி-சந்திரன் ஆகியவற்றின் இயக்கத்துடனும் நிழல்களுடனும் தொடர்பு கொள்ளச் செய்யப்பட்டு அவை சாயாகிரகங்கள் என அழைக்கப்பட்டன. வானியல் கணித்தல்களில் ஒரு கணிதச்சமன்பாட்டின் அங்கமாக மாற்றப்பட்டன.

இன்னும் இவ்விதத்தில் விவிலிய தொன்மத்தை எதிர்த்தமைக்காக வானியல் அறிஞர்களை தீயில் எரித்தும், கலிலியோவை கைது செய்தும் மதத்தைக் காப்பாற்ற முயன்ற பண்பாடுகளிலிருந்தும் பாரதப் பண்பாடு தனித்து தலை நிமிர்ந்து நிற்கிறது.

நம் தேசத்தின் திருவிழாக்கள் சடங்குகள் பிரபஞ்ச சுழல்களுடன் தொடர்புப்படுத்தப்பட்டவை என்பதால் ஜோதிட காலக் கணக்குகள் - கிரகங்களின் இயக்கங்கள் முக்கியமானவையாக உள்ளன. பஞ்சாங்கங்கள் அவ்விதத்தில் பாரம்பரிய அறிவியக்கத்தின் முக்கியமான அங்கமாகும். இவை அரசியல்வாதிகளின் அரைகுறை கவிதைக் கிறுக்கல்களை போல தம்முடைய பொருளை இழந்திடுபவை அல்ல மாறாக இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பல இயற்கை நிகழ்வுகளை கணித்து சொல்லும் திறம் கொண்டவை. குறிப்பாக மழையை நாடி நிற்கும் பாரத விவசாயிகளுக்கு பஞ்சாங்கம் முக்கியமான ஒரு கருவியாகும். மட்டுமல்ல இன்றைய மானுட நடவடிக்கைகளால் எந்த அளவு தட்பவெப்ப சூழல் நம்முடைய இயற்கையான மழைக் காலங்களை பாதித்துள்ளது என்பதையும் நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 2003 இல் இந்திய பாரம்பரிய் அறிவியல் சஞ்சிகையில் (Indian Journal of Traditional Knowledge) பஞ்சாங்கங்களின் மழைக்கணிப்பு குறித்து ஒரு ஆராய்ச்சி வெளிவந்தது. அந்த ஆராய்ச்சி 13 ஆண்டுகள் (1986-99) விவசாய அறிவியல் துறை தட்பவெப்ப ஆராய்ச்சி மையங்களில் பதிவு செய்யப்பட்ட மழை நாட்களின் தரவுகளையும் மழை நாட்கள் குறித்த பஞ்சாங்க முன்கணிப்புகளையும் ஆராய்ந்தது. உத்தர பிரதேசத்தின் அஸாம்கார்க்கில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இக்காலகட்டத்தில் 13 முறை 100 சதவிகிதம் சரியான கணிப்புகள் கிடைத்தன. பஞ்சாங்கம் மூலமாக மழைநாட்கள் குறித்த சரியான முன்னறிவிப்புகளின் சதவிகிதம்: மாத அடிப்படையில்- 16.67 முதல் 100 சதவிகிதம். ஆண்டு அடிப்படையில்: 66.20 முதல் 96.88 சதவிகிதம். 13 ஆண்டு காலகட்டத்துக்குமாக 82.10 சதவிகிதம், என்பதாக அமைந்தது. மழை நாட்களில் மழையின் அளவு எவ்வளவாக இருக்கக் கூடும் என்பதையும் பஞ்சாங்கம் கணிக்கிறது. 79 தடவைகளில் மழை விழுந்ததைக் காட்டிலும் அதிகமாகவும், 18 தடவை குறைவாகவும், 12 தடவைகள் மழை அளவை நூறு சதவிகிதம் சரியாகவும் இருந்தன. 34 சதவிகிதம் மழை அளவு கணிப்பு ஏற்கப்படமுடிந்த அளவே கிடைத்த மழை அளவிலிருந்து வேறுபட்டிருந்தது. ஆக, பஞ்சாங்க கணிப்பு முறைகள் ‘பொய் புளுகு கற்பனை’ என எழுதுவது அரைகுறை அறிவு அல்லது போலி பகுத்தறிவின் விளைவே என்பது தெளிவு.


நமது முன்னோருக்கு எல்லாமே தெரிந்திருந்தது என்று தமிழ்இந்து.காம் சொல்ல வரவில்லை. மாறாக, நமது பாரம்பரியமே ‘பொய், புளுகு, கற்பனை’ என கூறிவரும் போலி பகுத்தறிவு அரசியல்வாதிகள், சந்தர்ப்ப வாதிகளை நம் மக்கள் நன்றாக இனம் கண்டு கொள்ளவேண்டும். என்பதுடன் இத்தகைய அரைகுறை உளறல்களை நம் பாரத பாரம்பரியத்தின் சிறப்பை மக்களிடம் மீள்-உறுதி செய்ய ஒரு வாய்ப்பாகவும் தமிழ்இந்து.காம் எடுத்துக்கொள்கிறது. ஒன்று நிச்சயம் நமது பாரம்பரிய அறிவியல் பார்வையின் சிறப்பினை இத்தகைய அரசியல்வாதிகள் அறிந்து கொண்டார்களோ இல்லையோ நிச்சயமாக நமது தேசத்தின் அறிவியலாளர்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். எனவேதான் பாரத விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சந்திரனே உன்னை எம் அறிவால் அறிவோம் எனும் வேத கோஷத்தை தனது வாசகமாக கொண்டுள்ளது.

மேலும் இந்த அரசியல்வாதி முன்வைக்கும் போலி பகுத்தறிவை அவரது ‘கவிதை’யின் மீதே வைத்துப் பார்த்தால் என்ன ஆகும்? இந்த ‘கவிதை’ நிலாப்பெண்ணே என ஆரம்பிக்கிறது. ‘வான் முகத்தில் நகக்குறி போல் இருக்கின்ற நிலாப் பெண்ணின் தேன் கிண்ண இதழ்களிலே’ முத்தமிட்டு என எழுதப்பட்டுள்ள இந்த ‘கவிதை’ வரிகள் பொய், புளுகு, கற்பனை என அறிவியல் நிறுவியுள்ளது என்றும் சொல்லலாமே? நிலா நகக்குறியாக தெரியலாம் ஆனால் நகக்குறியாக இருக்கவில்லை அது ஒரு துணைக் கோள். அது பெண்ணுமல்ல அதற்கு தேன் கிண்ண கன்னமும் இல்லை. ஆக இந்த ‘கவிதையே’ இவரது பார்வையிலேயே பொய் புளுகு தான். நல்ல இலக்கியங்களின் இலக்கணமும் அறியாமல் வாழ்க்கை நெறியாம் திருக்குறளை மேடைக்கும் கட்டுரைக்கும் மட்டுமே பயன்படுத்தி வாழ்ந்து வரும் ஒருவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

பாவம் அறிவியலின் அடிப்படையும் தெரியாமல், பாரம்பரிய அறிவியக்கத்தின் ஆழமும் புரியாமல், சமுத்திரத்தை வாலால் ஆழம் பார்த்த நரியாக, அரசியலுக்கு மட்டுமே பயன்படும் மஞ்சள் துண்டு பகுத்தறிவால் அறிவியலையும் பாரம்பரிய அறிவியக்கத்தையும் இரு வேறு மோதும் சக்திகளாக மட்டுமே பார்க்கும் போலி-பகுத்தறிவு அரசியல்வியாதிக்கு இவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அந்த அரசியல்வாதியின் அறிவின்மையை அறிவீனத்தை மன்னிப்போம். தனது அறிவீனத்தை பொதுமக்கள் மத்தியில் தானாகவே வெளிச்சம் போட்டு காட்டும் அந்த முட்டாள்தனம் ஆத்திரத்துக்கு அல்ல பரிதாபத்துக்கு மட்டுமே உரியது.

Source: http://www.tamilhindu.com/2008/11/chandrayan-and-muka-poem/

No comments:

Post a Comment