புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு மக்கள் சூட்டிய பட்டங்கள் ஒன்றல்ல இரண்டல்ல… நாடறியும் இந்த உண்மையை. இன்றைய தலைமுறையினர் ரொம்பப் பேருக்கு தெரியாத ஒரு விஷயம்.. மத்திய அரசு கொடுக்க விரும்பிய ஒரு உயர்ந்த விருதை மக்கள் திலகம் மறுத்துவிட்டது.
1960-ம் ஆண்டு எம்ஜிஆருக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க முடிவு செய்து, அவரிடம் தெரிவித்தது மத்திய அரசு.
ஆனால் பொன்மனச் செம்மல் அதை மறுத்துவிட்டார்.
காரணம் கேட்டபோது அவர் இப்படிச் சொன்னார்:
‘நான் ஒரு தமிழன். தமிழ் மொழியின் உரிமைக்காக குரல் கொடுப்பவன். ஆனால் இந்தி மொழியில் தரப்படும் பத்மஸ்ரீ என்ற விருது எனக்கு வேண்டாம்’ என்றார். மீண்டும் மத்திய அரசு அதிகாரிகள் எம்ஜிஆரிடம் தொடர்பு கொண்டபோதும், தன் நிலையிலிருந்து பின்வாங்கவில்லை அவர்.
திரைப்படத் துறையில் தான் இருந்த காலம் வரை பிறமொழிப் படங்களில் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார் எம்ஜிஆர். எத்தனையோ பிற மொழிப் பட வாய்ப்புகள் வந்தும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
இன்னொரு பக்கம், அவர் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக ஆதிக்கம் செலுத்தி வந்த நேரத்தில், இந்தி மொழிக்கு எதிரான போராட்டங்களில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
அதே நேரம் அவரது படங்களுக்கு அண்டை மாநிலங்களிலும், ஜப்பான், மலேஷியா, சிங்கப்பூர், முக்கியமாக இலங்கையில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. தமிழகத்துக்கு இணையாக, இலங்கையிலும் அவரது படங்கள் 100வது நாள் விழா கொண்டாடின.
தனக்கு அறிமுகமில்லாத மனிதர்களிடம் பழக நேரும் போதெல்லாம், சட்டென்று கையை நீட்டி, “நான் எம்ஜி ராமச்சந்திரன், சினிமா நடிகர்” என்று ஆரம்ப காலங்களில் அறிமுகம் செய்து கொள்வாராம்.
ஆனால் அதன் பிறகு நடந்தது வரலாறு. அவர் பெயரைக் கூட சொல்ல வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று.
புரட்சித் தலைவர் என்றால் தெரியாதவர்களே இல்லை என்ற நிலை உருவானது.
தாய் சொல்லைத் தட்டாதவர் என்ற வார்த்தைக்கு சரியான இலக்கணம் மக்கள் திலகம்தான். தன் தாய் சொன்ன ஒரே காரணத்துக்காக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளவில்லை அவர். அம்மா சொன்னால் அர்த்தமிருக்கும் என்ற அதீத அன்பு அவருக்கு.
அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே என்பதை அன்றே தனது செயலால் காட்டியவர் பொன்மனச் செம்மல். தாய்க்காக கோயில் கட்டி, தினமும் கோட்டைக்கு கிளம்புமுன் அம்மாவின் கோயிலில் விளக்கேற்றி வழிபட்டுவிட்டுத்தான் கிளம்புவார்.
தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களில் மாணவர்களுக்கும், முதியோர் – தாய்மார்களுக்கும் எப்போதும் முதலிடம் தருவார் மக்கள் திலகம். கோட்டையில் அவர் இருந்தாரென்றால் எந்த நேரத்திலும் தாமதமின்றி அவரைப் பார்த்து உதவி பெற முடியும். பாதுகாப்பு கெடுபிடி எதுவும் இருக்காது. நமக்கும் அப்படி இரண்டு நேரடி அனுபவங்கள் உண்டு!
தினமும் காலையில் எட்டு மணிக்கெல்லாம் ராமாவரம் தோட்டத்துக்குப் போய் அவரைப் பார்ப்பதற்கென்றே எப்போதும் பெரும் கூட்டம் காத்திருக்கும். இவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டி கட்டாயம் உண்டு, தோட்டத்தில்.
இசைஞானி இளையராஜா பொதுவாக யார் காலிலும் விழுந்து ஆசி பெற்றதில்லை. “என் அம்மாவுக்குப் பிறகு நான் காலில் விழுந்து ஆசி பெற்றது மக்கள் திலகம் எம்ஜிஆரிடம்தான். அதுவும் இரண்டு முறை” என்கிறார் இளையராஜா.
தான் போகிற இடமெல்லாம் மக்களுக்கு தன் சொந்த பணத்தை கணக்கு பார்க்காமல் அள்ளித் தருவது எம்ஜிஆர் வழக்கம். இதற்கு எம்ஜிஆர் அளித்துள்ள விளக்கம்: “என்னை தங்கள் சொந்தக்காரனாக இந்த மக்கள் பார்க்கிறார்கள். சொந்தக்காரன் வீட்டுக்கு வரும்போது வெறுங்கையோடு வருவது நன்றாக இருக்குமா… இருக்காதே..!” என்று பதில் கூறியுள்ளார் ஒரு பேட்டியில்.
http://www.envazhi.com/?p=14736
No comments:
Post a Comment