Monday, December 13, 2010

ராஜா விவகாரத்தில் நடந்தது என்ன?

"ராஜினாமா செய்யவே மாட்டேன்' என்று, சொல்லிக் கொண்டிருந்த ராஜா, திடீரென பிரதமரைச் சந்தித்து, ராஜினாமா செய்தது ஏன்? கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது இது தான். ஞாயிறன்று மதியம், கருணாநிதிக்கு பிரணாப் முகர்ஜி போன் செய்தார். "நிலைமை மோசமாகிவிட்டது. ராஜா பதவி விலகவில்லை என்றால், எதிர்க்கட்சிகள் பார்லிமென்டை முடக்கிவிடுவர். தயவு செய்து ராஜாவை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்' என்று, தி.மு.க., தலைவரிடம் சொன்னார் பிரணாப். விஷயத்தைக் கேட்டதுமே அதிச்சியடைந்த முதல்வர், "மறுபடியும் உங்களுக்குப் போன் செய்கிறேன்' என்று சொல்லிவிட்டார். இதற்கிடையே, மாலை விமானத்தில் டில்லி கிளம்பினார் ராஜா. தி.மு.க., தலைவரிடமிருந்து விடைபெறும் போது, "நீ டில்லி போ... நான் சொல்கிறேன்' என்று சொல்லிவிட்டார் கருணாநிதி. டில்லி விமான நிலையத்தில் மீடியாவிடம், "நான் பதவி விலக மாட்டேன்' என்று பேட்டி கொடுத்துவிட்டு, காரில் ஏறியதுமே, தலைவரிடமிருந்து போன். "பிரதமரிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விடு' என்று சொன்னார் தலைவர். வீட்டிற்கு வந்த ராஜா, தன் ராஜினாமா கடிதத்தை டைப் செய்து எடுத்துக் கொண்டு, இரவு 10.30 மணிக்கு பிரதமர் வீட்டிற்குச் சென்றார். கடிதத்தைக் கொடுத்துவிட்டு, 20 நிமிடம் பேசிக் கொண்டிருந்தார் ராஜா. "காங்கிரஸ் அமைச்சர்களுக்கே இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் புரியவில்லை. பார்லிமென்டில் விவாதம் வைத்தால், பா.ஜ.,வை உண்டு, இல்லை என்று ஆக்கி விடுவேன்' என்று சொன்ன ராஜா, "கபில்சிபல் நல்ல வக்கீல், அவர் தான் என் இலாகாவிற்கு சரியான அமைச்சர்' என்று பிரதமரிடம் சொல்லிவிட்டு வந்தார்.

கோபத்தில் பிரதமர்: "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராஜாவிற்கு எதிரான சுப்ரமணிய சுவாமி மனு மீது, 15 மாதங்களாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை' என, சுப்ரீம் கோர்ட், பிரதமரிடம் கேள்வி எழுப்பியது. அதோடு, இது தொடர்பாக பிரதமர் பதில் மனு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இவ்விவகாரம் பிரதமரை பெரிதும் பாதித்துள்ளது. எந்த ஒரு பிரதமரையும், சுப்ரீம் கோர்ட் இப்படி கேள்வி கேட்டதில்லையே. தனக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என்று வருத்தப்பட்டார். பிரதமருக்காக ஆஜரானவர் ஒரு தமிழர். மன்னார்குடியைச் சேர்ந்த கோபால் சுப்ரமணியம். தற்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக உள்ள இவர், பிரதமருக்காக கோர்ட்டில் பேசியதோடு அல்லாமல், பேட்டியும் அளித்துள்ளார். சுப்ரீம் கோர்ட், பிரதமருக்கு எதிராக கேள்விகள் எழுப்பியதும், காங்கிரஸ்காரர்களோ, மத்திய அமைச்சர்களோ, யாருமே பிரதமரின் ஆதரவிற்கு வரவில்லை. மீடியாவைக் கண்டு தூர ஓடிவிட்டனர். தமிழரான கோபால் சுப்ரமணியம் தான், பிரதமரை ஆதரித்து, மீடியாவில் பேட்டியும் கொடுத்தார். கோர்ட்டில் இவ்விவகாரத்தை சரியான முறையில் கையாளவில்லை என்று வருத்தப்பட்டார். இதனால், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மீது, பிரதமர் கோபத்தில் உள்ளார். இதனால், கோபால் சுப்ரமணியம் ஓரம் கட்டப்பட்டு, தற்போது, அட்டர்னி ஜெனரல் குலாம் வானவதி, பிரதமருக்காக கோர்ட்டில் ஆஜராகிறார். ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், சீனியர் வக்கீலும், பிரதமருக்கு நெருக்கமானவர்களான கே.பராசரன் அல்லது நாரிமன் ஆஜராகலாம் என்று சொல்லப்படுகிறது. பராசரனுக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதால், அவரால் ஆஜராக முடியாது. எனவே, நாரிமனுக்கு சான்ஸ் உள்ளது.

கடுப்பில் அம்பிகா சோனி: மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி. காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கு, ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தவர். இவரோடு சோனியாவிற்கு ஆலோசகராகயிருந்த அகமது படேல். சோனியை ஓரம் கட்டி அமைச்சராக்கிவிட்டார். ஆனால், தற்போது நிலைமை இன்னும் மோசம். அம்பிகா சோனியின் சொந்த மாநிலம் பஞ்சாப். அங்கு மாநில காங்கிரஸ் தலைவராக தன்னை நியமிப்பார்கள் என்று எதிர்பார்த்தார் அம்பிகா. ஆனால், முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தலைவராக நியமிக்கப்பட்டுவிட்டார். அதோடு, அம்பிகாவின் ஆட்களும் ஓரம் கட்டப்பட்டனர். இதனால், வெறுத்துப் போன அம்பிகா, மத்திய அமைச்சரவை கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. அதோடு, அலுவலகத்திற்கும் அதிகம் வருவதில்லை.

லோக்சபாவுக்கு இடைத்தேர்தல்? பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் எந்த நேரத்தில் தொடங்கியதோ தெரியவில்லை. ஆரம்பித்த நாளிலிருந்தே பிரச்னை தான். கூச்சல், குழப்பம், ஒத்திவைப்பு என்று எந்த வேலையுமே நடைபெறவில்லை. காமன்வெல்த் விளையாட்டு, ஸ்பெக்ட்ரம் ஆகிய ஊழல்களை விசாரிக்க பார்லிமென்ட் குழு அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. முதலில் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான், பிறகு கல்மாடி என்று எதிர்க்கட்சிகள் கேட்டது போல, அவர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். பிறகு நம்ம ஊர் ராஜாவும் போய் சேர்ந்தார். இப்போது பார்லிமென்ட் குழு என்று கோஷம். இப்படியே எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தால், ஆட்சி நடந்தது போல தான் என்று காங்கிரஸ் நினைக்கிறது. பிரதமரும், பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சித் தலைவர்களிடம், "எதற்கு பிரச்னை பேசாமல் இடைத்தேர்தலுக்கு சென்றுவிடலாம்' என்று சொன்னார்கள். இதெல்லாம் பயமுறுத்தும் விவகாரம், தேர்தலுக்குப் போனால், காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது என்கின்றனர் எதிர்க்கட்சிகள்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=130446

No comments:

Post a Comment