Friday, December 17, 2010

நெற்றிக்கண் திறப்பினும் ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரமே!

குற்றவாளிகள் பிறப்பது கிடையாது. அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்னும் சப்பைக்கட்டோடு, ஆட்டோ சங்கர் என்னும் அயோக்கியனுக்கு அன்று வக்காலத்து வாங்கியவர்கள் - காட்டுக்கொள்ளையன் வீரப்பனையே விடுதலைப்போராட்ட வீரர்களுக்கு சமமாக சித்தரித்தவர்கள் - மேலும் அவன் கடத்திச் செல்லும் பிரமுகர்களை காப்பாற்றுவதாய் தூது நாடகம் ஆடி, கோடிகளால் கல்லா கட்டியவர்கள், புலனாய்வுப் புலிகளென்று சொல்லிக்கொண்டு ஊர்-உலகத்தையே ஏமாற்றுவது, மிரட்டி பணம் பறிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, கருணாநிதி அரசுக்கு தரகு வேலை பார்ப்பது என கயமைகளின் உச்சம் தொட்ட அவர்கள் விரைவில் சமூகத்தின் முன் தலைகுனிந்தும், சட்டத்தின் முன் கைவிலங்கோடும் நிற்கும் காலம் விரைவில் வருகிறது என்பதை 28.11.2010 டாக்டர் நமது எம்.ஜி.ஆர். இதழில் “தமிழ்நாட்டிலும் ஓர் ஆண் நீராராடியா” என்னும் தலைப்பிலும், 14.12.2010 அன்று “பெயரையாவது மாத்துங்க... ப்ளீஸ்...!” என்ற தலைப்பிலும் நமது உளவுத் துறை உலகுக்கு அறிவித்தது.

அன்று நாம் சொன்னது இன்று உண்மையாகியிருக்கிறது. ஆம். தமிழகத்தில் வாரம் இருமுறை இதழாக வெளிவரும் ‘நக்கீரன்’ பத்திரிகையின் இணையாசிரியர் காமராஜின் திரைமறைவு அட்டூழியங்களையும் - திகில் நடவடிக்கைகளையும் - ஸ்பெக்ட்ரம் திருடன் ராசாவுக்கு அவர் வால்பிடித்த கதையையும் - அந்த ராசா கொள்ளையடித்த அலைவரிசை பணத்தை உலகெங்கும் கொண்டு சென்று பதுக்குவதற்கு ஆள் பிடித்த கதைகளையும் அம்பலமாக்கி இருந்தோம். நாம் சொன்ன அனைத்தும் உண்மை என்பது நேற்று (15.12.2010) அதிகாலை நடுவண் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) பெசன்ட் நகரிலுள்ள காமராஜின் பங்களாவில் புகுந்து அதிரடி சோதனையை மேற்கொண்டது உறுதிப்படுத்தியது. அப்போது திகிலூட்டும் திரைமறைவு விஷயங்கள் ஆவணங்களாகவும், கோப்புகளாகவும் சி.பி.ஐ.யால் அள்ளிச் செல்லப்-பட்டனவாம்.

ஒரு குழந்தைக்கு அனைத்துப் பயிற்சிகளும் கொடுத்து, வளர்த்து ஆளாக்கி, பின்னாளில் பெரும் கொள்ளைக்காரனாய் அவனை உருவாக்கும் சினிமா கதைபோலவே, காமராஜும் ஆ.ராசாவை தி.மு.க.வில் சேர்த்தது தொடங்கி, நாடாளுமன்ற தேர்தலில் சீட்டு வாங்கியது வரையிலும், அவரை அமைச்சராக்கியது, கொள்கைபரப்புச் செயலாளராக்கியது, அதிலும் குறிப்பாக மத்திய அரசில் தகவல் தொழில்நுட்பத் துறையை லாவகமாய் ராசா பெறுவதற்காக கருணாநிதியின் மகள் கனிமொழியை வளைப்பதற்கும், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் ராசாவுக்கு சிறப்புப் பயிற்சிகள் கொடுத்தது வரை அனைத்து சூழ்ச்சிகளையும் கற்றுக்கொடுத்த துரோனாச்சாரியாகவே நக்கீரன் காமராஜ் செயல்பட்டு வந்திருக்கிறார் என்பதும் சி.பி.ஐ.யின் புலனாய்வு அதிகாரிகளுக்கு தெளிவாகியதாம். மேலும், தன்னை அரசியலில் உருவாக்கி, கோடிகளில் புரள வைத்ததற்கு நன்றிக் கடனாகவே ஸ்பெக்ட்ரம் திருடன் ராசா தனது கிரீன்ஹவுஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்திலும், மாடர்ன் ஹைடெக் நிறுவனத்திலும் நக்கீரன் காமராஜையும் இயக்குநராக அமர வைத்து அழகுபார்த்திருக்கிறார்.

இவற்றோடு, அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் சில நூறு ஏக்கர் விலைமதிப்பில்லா நிலங்களும், பல கோடி மதிப்பிலான சொத்துக்களும் காமராஜ் பெயரிலும், அவரது தந்தை அண்ணாமலை பெயரிலும் வாங்கிக் குவிக்கப்பட்டிருப்பதும், இவற்றோடு வடமாநிலங்களில் இரண்டு பொறியியல் கல்லூரியும், ஒரு மருத்துவக் கல்லூரியும் காமராஜின் பெயரிலேயே வாங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாம்.

மேலும், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை பணத்தை உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று, அவற்றை பத்திரமாக பதுக்கும் வேலையையும் நக்கீரன் காமராஜ் முன்னின்று செய்திருக்கிறாராம். இவர்தான் ஈ.டி.ஏ. குழுமங்களின் தலைவர் சலாவுதீனையும், பெரம்பலூர் சாதிக்பாட்சாவையும் ராசாவுக்கு அறிமுகப்படுத்தியதோடு, அந்த சலாவுதீனின் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கருணாநிதியின் “கலைஞர் காப்பீட்டுத் திட்டத்”துடனான ஒப்பந்தத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தாராம். இதற்கு மட்டும் இவர் பெற்ற கமிஷன் தொகை சுமார் 25 கோடி ரூபாயாம். மேலும், தமிழகக் காவல்துறையின் உளவு அதிகாரிகளை இயக்கும் சக்தியாகவும் இவர் செயல்பட்டு வந்திருக்கிறார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பாலிடெக்னிக் மட்டுமே படித்த காமராஜின் இன்றைய சொத்து மதிப்பு மட்டும் ஐநூறு கோடிகளையும் தாண்டுமாம். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து முதலமைச்சரிடம் வத்தி வைப்பது, மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வது என சகல பராக்கிரமங்களையும் கடந்த ஐந்து வருடங்களாக நடத்திவந்தாராம். மேலும், வீட்டுவசதி வாரிய இடங்களை தன் மனைவி ஜெயசுதா பெயரிலும், தனது உறவினர்கள் பெயரிலும் வாங்கிக் குவித்திருக்கிறார்.

இப்படி, பத்திரிகை முகமூடி போட்டுக்கொண்டு, பல்வேறு தில்லாலங்கடி வேலைகளையும் மிகத் திறமையாக செய்துவந்த காமராஜ், நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியரான கோபாலையே தனது கொத்தடிமையாகவே வைத்திருந்தாராம். இதுகுறித்து அவரிடம் கேட்டால், “நக்கீரன் என்று எழுத்துக்கூட்டி வாசிப்பதற்கே அவருக்கு நான்கு நிமிடம் ஆகுமே... அவருக்கு என்ன தெரியும், இந்த காமராஜ் இல்லையென்றால் நக்கீரனும் இருக்காது, நக்கீரன் கோபாலும் இருக்க முடியாது! அடிப்பதில்தான் அவருக்கு போதிய பங்கு போய்விடுகிறதே” என்றும் இறுமாப்போடே காமராஜ் பதிலளிப்பாராம். இப்படி, ஒரு பத்திரிகையின் இணையாசிரியர் இருக்கையில் இருந்துகொண்டு, உத்தமர் வேடமிட்டு ஊர் - உலகத்தை மிரட்டி, காசு பார்த்து வந்த காமராஜ், இப்போது உலகப் பெரும் ஊழல் பேர்வழிக்கு ஊன்றுகோலாக நின்று, உதவி வந்த அசிங்க அத்தியாயங்கள் அரங்கேறத் தொடங்கியதும், தன்னைக் காப்பாற்றுமாறு மறைமுகமாக வேண்டும் நோக்கத்தோடே, கடந்த நக்கீரன் இதழில் கருணாநிதியின் புலம்பல் பேட்டி ஒன்றையும் அச்சிலேற்றி மன்றாடினாராம். கருணாவோ, அடிக்கிற காற்றில் அம்மியே பறக்கிறபோது, பஞ்சை எப்படி பத்திரப் படுத்துவது என்று கைவிட்டுவிடவே, புலனாய்வுத் துறை வரும் வழிபார்த்து வாசலை எதிர்நோக்கியே காத்திருந்தாராம். “சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்... சமயம் பார்த்து பல வகையினில் கொள்ளை அடிக்கிறார்...” என்னும் வரிகள் சுத்தமாய்ப் பொருந்துகின்ற நக்கீரன் காமராஜின் நீண்ட நெடிய நாடகம் ஒருவழியாய் சி.பி.ஐ.யின் அதிரடி நடவடிக்கையால் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

குற்றவாளிகள் பிறப்பது கிடையாது. உருவாக்கப்படுகிறார்கள் என்று சமூக விரோதிகளுக்கு வக்காலத்து வாங்கும் நக்கீரனிடம் நாட்டு மக்கள் கேட்பதெல்லாம் ஒன்றுதான். ஆண்டிமுத்து ராசா என்னும் குற்றவாளி பிறந்தாரா? இல்லை அந்த ஆண்டிமுத்து ராசாவை அலைவரிசை ராசாவாக உருவாக்கிய அயோக்கிய காரியத்தை ‘நக்கீரனி’ன் இணையாசிரியர் காமராஜும் முன்னின்று செய்து முடித்தாரா? என்பதுதான். எதிர் நிற்பது இறைவனே என்றாலும், குற்றம் குற்றமே என்று சொன்ன ‘நக்கீரன்’ பெயர் கொண்ட அந்த பத்திரிக்கை, நாட்டையே திகிலடைய வைத்திருக்கும் தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனது இணையாசிரியரும் பங்கெடுத்ததற்கு பொறுப்பேற்று குறைந்தபட்சம் தன் பெயரை அப்பத்திரிகை மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது, “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று தலைப்பில் முழங்குகிற அந்த முழக்கத்தையாவது மாற்றி, இனி “நெற்றிக்கண் திறப்பினும் ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம்” என்றாவது அச்சிடவேண்டும். அதுவும் முடியாது போனால், “பொன் நாடார் பொருள் நாடார் தன் அன்னையையும் நாடார், நாடொன்றே நாடி, தன் நலமென்றும் நாடாத நாடாரை நாடினேன்” என்று கவியரசு கண்ணதாசனால் போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் பெயரை தான் வைத்துக்கொள்வது தகுமா என்று வெட்கித் தலைகுனிந்து இணையாசிரியர் காமராஜாவது குறைந்தபட்சம் வேறொரு பெயருக்கு தன்னை மாற்றிக்கொண்டாலாவது மறைந்த அந்த மாபெரும் தலைவரின் ஆன்மாவாவது மட்டற்ற மகிழ்ச்சி அடையும்.

புலனாய்வுப் புலிகள் செய்வார்களா... பார்ப்போம் என்னும் மக்களின் காத்திருப்போடு நாமும்.

http://drnamadhumgr.com/mgr/pages/common/ulReport.jsp

No comments:

Post a Comment