Tuesday, February 15, 2011

நாசகாரர்கள் கும்பல்

நாட்டின் வளங்களைச் சுரண்டும் நாசகாரர்கள் கும்பல் – “எஸ்”பாண்ட் பற்றிய விவரங்கள் !

2ஜி அலைக்கற்றைகளைப் பற்றிய விவரங்கள் நமக்கு இப்போது தான் ஆண்டிமுத்து ராஜாவின் அருளால் விளங்கத் தொடங்கின.
செல்போன் உபயோகத்திற்கு தேவையான அலைவரிசைகள் இவை.

இதற்கு அடுத்து 3ஜி அலைக்கற்றைகளும் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகத்திற்கு வந்து கொண்டிருக்கும் வீடியோ இணந்த செல்போன் வசதிகள் இயங்கத் தேவையான அலைவரிசைகள் தான் 3ஜி.

இதற்கு அடுத்த கட்டமாக இன்னும் சில ஆண்டுகளில் வர உள்ள 4ஜி அலைக்கற்றைகள் தான் இப்போது அடிபட்டுக் கொண்டிருக்கும்
“எஸ்”பாண்டு அலைவரிசை.

இதன் முக்கிய பயன் - செல்போன் டவர் இல்லாமலே எங்கு வேண்டுமானலும் தொலைபேசி வசதியைப் பெறலாம். நாட்டின் வளர்ச்சியில் பெரும் புரட்சியை உண்டு பண்ணக்கூடியது இந்த “எஸ்”பாண்டு அலைவரிசை.இதை 4ஜி என்றும் கூறுவார்கள்.

இந்த் அலைவரிசையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவே அடுத்து இரண்டு செயற்கைக்கோள்களை ஜிசாட்-6 மற்றும் ஜிசாட்-6ஏ என்கிற பெயர்களில் விண்வெளியில் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ.

இவ்வாறு விண்வெளியில் ஏவப்படும் செயற்கைக்கோள்களை வியாபார நோக்கில் பயன்படுத்துவது தொடர்பான விஷயங்களை கவனிக்கும் பொருட்டு, இஸ்ரோவின் துணைப்பிரிவாக “ஆண்ட்ரிக்ஸ்” என்கிற நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறது மத்திய அரசு.

செயல்களைப் பொறுத்த வரை இரண்டும் தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கக்ப்பட்டிருந்தாலும் - இஸ்ரோவின் தலைவர் தான் ஆண்ட்ரிக்ஸ் க்கும் தலைவர். எனவே இரண்டையும் ஒரே நிர்வாகி தான் கவனிக்கிறார் எனலாம்.

இந்த ஜிசாட்-6 மற்றும் ஜிசாட்-6ஏ செயற்கைகோள்களை செலுத்துவதற்கான திட்டப்பணிகள் 2003 ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டன. இந்த அலைக்கற்றைகளின் மதிப்பு நம்மைப் போன்ற வெளிமனிதர்களுக்கு தெரியாத காலம் அது.

ஆனால் - இஸ்ரோவில் பணி புரிந்து வந்த மூத்த அதிகாரிகளுக்கு இது ஒரு பொன் முட்டை இடும் வாத்து என்பது அப்போதே தெரியும்.

எனவே இந்த “எஸ்”பாண்டு அலைக்கற்றையின் பயனாக இந்த நாட்டிற்கு கிடைக்க இருக்கும் அளவில்லாத, விலை மதிப்பு மிக்க வளங்களை அப்படியே சுருட்டத் தீர்மானித்தனர் அங்கு பெருத்த எண்ணிக்கையில் பணி புரியும் விஞ்ஞானிகளான நாயர்களும்,

மேனன்களும், பிள்ளைகளும். (இஸ்ரோ அமைப்பு துவக்கத்தில் திருவனந்தபுரத்திலிருந்தே செயல்பட்டதால் – இந்த நிறுவனத்தில்
பணிபுரியும் அதிகாரிகளில் பெரும்பாலானோர் மலையாளிகளே).

தங்கள் திட்டத்திற்கு விரைவாகச் செயல்வடிவம் கொடுத்தனர்.முக்கியமான அதிகாரிகள் சிலர் சேர்ந்து தேவாஸ் மல்டி மீடியா என்கிற தனியார் நிறுவனம் ஒன்றினை உருவாக்கினர்.இஸ்ரோவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சந்திரசேகர் என்கிற அதிகாரி இதன் நிர்வாகத்தை ஏற்றார். இந்த நிறுவனம் இஸ்ரோவின் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை போட்டது. சம்பந்தப்பட்ட எல்லாருமே இஸ்ரோவின் முன்னாள், இந்நாள் அதிகாரிகள் தான் என்பதால் இது மிகவும் சுலபமாக நடந்தேறியது.அவர்களுக்கு சாதகமான எல்லா சங்கதிகளையும் ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.

ஜிசாட்-6 மற்றும் ஜிசாட்-6ஏ செயற்கைகோள்களை தயாரிப்பதில்/உருவாக்குவதில் தேவாஸ் நிறுவனம் இஸ்ரோவிற்கு உதவுவது என்றும், அதற்கு பிரதியாக - இரண்டு செயற்கைக்கோள்களும் உருவாக்கும் “எஸ்”பாண்டு அலைக்கற்றையில் 70 மெகா ஹர்ட்ஸ் அளவிற்கு தேவாஸ் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள இஸ்ரோ அனுமதிக்கும் என்றும்,

அதற்கான கட்டணமாக தேவாஸ் நிறுவனம் 20 ஆண்டுக்காலத்திற்கு 1000 கோடி ரூபாய் கொடுப்பது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.
அதாவது ஆண்டிற்கு 50 கோடி மட்டுமே.

சுமார் இரண்டு லட்சம் கோடி பெறுமான அலைக்கற்றைகளை சர்வசகஜமாக வெறும் 50 கோடிக்கு அள்ளிக்கொண்டு போக சதி வலை பின்னினர் அங்கிருந்த கூட்டுக்களவாணிகளான சில அதிகாரிகள்.

வெளியார் யாருக்கும் இது பற்றிய விவரம் தெரியாது – புரியாது !

இந்த ஒப்பந்தம் போடப்பட்டது ஜனவரி 28, 2005-ல். போட்டது தேவாஸ் நிறுவனமும் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனமும். ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கு - வர்த்தகம் செய்வதற்கான அதிகாரம் அரசாங்கத்தால் அளிக்கப்பட்டிருப்பது உண்மை தான் என்றாலும், இந்த ஒப்பந்தத்தைப் போடும் முன்னர், இஸ்ரோ மத்திய அரசுக்கு முழு விவரங்களையும் தெரிவித்து அதன் ஒப்புதலைப் பெற்ற பின்னரே ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும் – அது தான் நடைமுறை.

உண்மையில் இஸ்ரோ இரண்டு செயற்கைக்கோள்களையும் தயாரிக்கவும், விண்ணில் செலுத்தவும் மத்திய அரசிடம் முறையான அனுமதியைப் பெற்றாலும், அந்த செயற்கைக் கோள்களை பயன்படுத்திக்கொள்ள தேவாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும்
விஷயத்தை மட்டும் ஏனோ மறைத்து விட்டது.

செயற்கைக் கோள்கள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், விண்ணில் செலுத்தப்படும் நாள் - பல காரணங்களால் தாமதமாகிக் கொண்டே வந்தது.

இதற்குள்ளாக, தேவாஸ் நிறுவனம் தங்களுடன் பல அந்நிய நாட்டு நிறுவனங்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டு விட்டது.
ஜூலை 2008 லேயே தனது 17 சதவீத பங்குகளை டாயிட்ஸ் டெலிகாம் என்கிற ஜெர்மன் நிறுவனத்திற்கு 318 கோடி ரூபாய்க்கு விற்று செயற்கைக்கோள் பறக்கும் முன்னரே லாபம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டது.

இஸ்ரோ மத்திய அரசின் விண்வெளி கமிஷன் மற்றும் பிரதமரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வருகிறது. பிரதமர் தான் இந்த துறைக்கான அமைச்சரும் கூட.

இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருப்பது பிரதமருக்குத் தெரியுமா தெரியாதா என்றால் - தாடி வைத்திருக்கும் அந்த சிங் முறைக்கிறாரா -
சிரிக்கிறாரா என்பதே யாருக்கும் தெரியவில்லை என்கிறார்கள்.

பிரதமருக்கு இதைப் பற்றிச் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை என்று முந்தாநாள் பேட்டியில் சொல்கிறார் - இஸ்ரோவின் தற்போதைய தலைவர் ராதாகிருஷ்ணன்.

முன்னர் தெரிந்ததோ இல்லையோ - குறைந்த பட்சம் டிசம்பர் 2009 லிருந்து இந்த விஷயம் லேசாக பேச ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

மே 2010 -ல் இது குறித்து இஸ்ரோவில் விரிவாக விவாதிக்கப்பட்டு, இந்தியாவின் தலைசிறந்த சட்ட நிபுணர்களில் ஒருவரான மோகன் பராசரன்- இந்த ஒப்பந்தம் நாட்டுக்கு பெருத்த கேட்டை விளைவிக்கும் எனவே உடனடியாக இதை ரத்து செய்ய வேண்டும் என்று
மத்திய அரசுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

இதன் பின்னரும் விழித்துக் கொள்ளாத அல்லது வேண்டுமென்றே கண்ணை மூடிக்கொண்டுள்ள மன்மோகன் சிங் எந்த வித நடவடிக்கையையும் எடுக்காமல் கிடப்பில் போட்டார்.

இப்போது திடீரென்று CAG தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினா எழுப்பியதுடன், 2ஜி அலைக்கற்றை அனுபவம் காரணமாக,
நாடு முழுதும் ஏற்பட்ட கொந்தளிப்பைக் கண்டு ஒன்றுமே நடக்கவில்லை இது ஓவர் ரீ ஆக் ஷன் – என்று மழுப்புகிறார்கள்.

வழக்கம் போல், கபில் சிபல் - சாட்டிலைட்டே இன்னும் மேலே போகவில்லை. அதற்குள் அலைக்கற்றையை எப்படி கொடுக்க முடியும் -நஷ்டம் எப்படி ஏற்பட முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்.

2005 ஆம் ஆண்டு முதல் 2010 வரை இஸ்ரோ தலைவராகப் பணியாற்றியவர் மாதவன் நாயர். அவர் ஒத்துழைப்பும், பங்களிப்பும் இல்லாமல் இவை எல்லாம் நடந்தேறி இருக்க வாய்ப்பே இல்லை.

இருந்தும் முந்தாநாள் தொலைக்காட்சி நிருபர்கள் அவரை விமான நிலையத்தில் மடக்கி வினா எழுப்பியபோது அப்படி ஒப்பந்தம் ஏதும் போடப்பட்டதாகவே எனக்கு நினைவில்லை என்று கூறிக்கொண்டே வழுக்கிக்கொண்டு ஓடுகிறார்.

அரசியல்வாதிகள் முன் நின்று நடத்தியது 2 ஜி. அதிகாரிகள் முன் நின்று நடத்தி இருப்பது 4 ஜி.(எஸ் பாண்டு)

இன்னும் முழு விவரங்கள் வெளிவரவில்லை. இதில் தொடர்புடையவர்கள் யார் யார் என்பது தெளிவாகவில்லை. யார் யாருக்கு பங்கு போகிறது என்றும் தெரியவில்லை. தொடர்பு டில்லியோடு சரியா இல்லை இத்தாலி வரை போகுமா என்பதும் தெரியவில்லை !

பிரதமர் விசாரணை கமிட்டி அமைத்து விட்டார் - எனவே இனி யாரும் இதைப்பற்றி அநாவசியமாகப் பேச வேண்டிய தேவை இல்லை என்று காங்கிரசின் மணீஷ் திவாரி டிவி பேட்டியில் கூறினார்.

டிவியில் அவர் பேசுவதைப் பார்க்கும்போது - அவர் மூஞ்சியிலேயே ஓங்கிக் குத்த வேண்டும் போல் இருந்தது.

என்ன செய்வது – முகம் அவருடையதாக இருந்தாலும் டிவி நம்முடையதாயிற்றே !

No comments:

Post a Comment