Thursday, February 17, 2011

தலையங்கம்: பிரதமரின் சப்பைக்கட்டு!



தொலைக்காட்சி செய்திச் சேனல்களின் ஆசிரியர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் நடத்திய 70 நிமிடப் பேட்டியின்போது, தனக்கு இருக்கும் கூட்டணி நிர்பந்தங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டதற்குப் பாராட்டுகள். பல்வேறு ஊழல்களும், முறைகேடுகளும் தனது ஆட்சியைச் செயலிழக்கச் செய்திருக்கும் நிலையில் ஒரு பிரதமர் பத்திரிகைகளிடமிருந்து விலகி ஓடுவதுதான் இயல்பு. அதனால் மக்கள் மத்தியில் ஆட்சியாளர்களைப் பற்றிய சந்தேகம் மேலும் வலுக்கும் என்பதை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு, புத்திசாலித்தனமாகப் பிரச்னையை எதிர்கொள்ள முயற்சி செய்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

எந்தவித விசாரணைக்கும் தான் தயாராக இருப்பதாகவும், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தனக்கு எந்தவிதத் தொடர்பும் கிடையாது என்றும் அது முழுக்க முழுக்க முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் முடிவுதான் என்பதையும் திட்டவட்டமாக உறுதிப்படுத்தி இருக்கிறார் பிரதமர். அதுவரைக்கும் சரி.

பிரதமரின் தன்னிலை விளக்கத்தில், பல முரண்பாடுகளும், தனது அரசின் செயல்பாடுகளை நியாயப்படுத்த அவர் முன்வைக்கும் சப்பைக் கட்டுகளும் காணப்படுகின்றன. பிரதமரின் பேட்டிக்குப் பிறகு, மக்கள் மன்றத்தின் முன் அரசின் செயல்பாடுகள் பற்றிய தெளிவும் நல்லெண்ணமும் எழுவதற்குப் பதிலாக, மேலும் பல சந்தேகங்கள் வலுப்பதுடன், பிரதமரின் திறமை குறித்த சந்தேகமும் அதிகரிக்கிறது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றி சில கேள்விகளைத் தான் எழுப்பியதாகப் பிரதமர் கூறுகிறார். அதற்கு அன்றைய அமைச்சர் ஆ. ராசா தந்த விளக்கமும், நிதியமைச்சகமும், தொலைத்தொடர்பு ஆணையமும் ராசாவின் முடிவை ஏற்றுக் கொண்டதும் தன்னை அதைப்பற்றி அதிகமாகக் கவலைப்படத் தூண்டவில்லை என்றும் விளக்கம் தருகிறார் பிரதமர். இதனால் பாதிக்கப்பட்ட பலரின் கருத்துகள் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் ஒத்துக்கொள்கிறார். ஒரு தேசத்தின் பிரதமர், தனது அரசு எடுக்கும் முடிவுகளைப் பற்றி எடுத்துக்கொள்ளும் அக்கறை இவ்வளவுதானா?

கூட்டணி தர்மம் எனது கைகளைக் கட்டிப்போட்டு விட்டது என்கிறார். கூட்டணி தர்மம் என்கிற பெயரில் தேசமே கொள்ளைபோவதை வேடிக்கை பார்க்கவா மன்மோகன் சிங் பிரதமராக இருக்கிறார்? அமைச்சரவை வேண்டுமானால் கூட்டணி அமைச்சரவையாக இருக்கலாம். ஆனால், அரசியல் சட்டப்படி ஆட்சி பிரதமருடையது, அமைச்சர்களுடையதல்ல. இதுகூடவா பிரதமருக்குத் தெரியாது?

தனது கரங்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், கூட்டணிக் கட்சியான தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று, தொலைத்தொடர்புத் துறையையும், அவர்களது பரிந்துரைப்படி ஆ. ராசாவுக்கு அந்தத் துறையின் அமைச்சர் பதவியையும் அளிக்க வேண்டி வந்தது என்பது பிரதமரின் வாக்குமூலம். அதாவது, தனது பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, தவறானவரின் கையில் தொலைத்தொடர்புத் துறையை ஒப்படைத்து, தேசத்தின் சொத்தை சூறையாடத் துணைபோயிருக்கும் பிரதமரின் செய்கையைத் தேசத் துரோகம் என்று வர்ணித்தால்கூட தவறில்லை போலிருக்கிறதே.

"தங்களது வியாபாரத்தை நிலைநிறுத்தவும், செயல்பாடுகளைத் தொடரவும் அந்த நிறுவனங்கள் ஒன்று வங்கியில் கடன் பெறவேண்டும் அல்லது தங்களது பங்குகளின் ஒரு பகுதியை விற்று முதலீட்டை அதிகரிக்க வேண்டும். இதிலென்ன தவறு?' என்பது பிரதமரின் வாதம்.

அதாவது தொழில் நடத்த முதலீடுகூட இல்லாதவர்களுக்கு உரிமம் வழங்கி, உரிமம் பெற்றதால் வாழ்வு பெற்றுத் தங்களது பங்குகளைக் கொள்ளை லாபத்துக்கு இன்னொருவரிடம் விற்று, மறைமுகமாக உரிமத்தையே விற்று, ஒரு சிலர் பல்லாயிரம் கோடிகள் சம்பாதிப்பதை நியாயப்படுத்த முயல்கிறார் பிரதமர். இந்த விளக்கத்துக்குப் பிறகும் பிரதமர் மன்மோகன் சிங் 2ஜி உரிம முறைகேடுப் பிரச்னையில் தொடர்பே இல்லாதவர் என்று எப்படி ஏற்றுக்கொள்வது?

அடுத்ததாக, 2ஜி அலைக்கற்றை உரிம விற்பனையில் ஏற்பட்டிருப்பதாகக் கருதும் உத்தேச இழப்பை, விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்குச் செலவிடப்படும் மானியங்களுடன் ஒப்பிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. ஒரு சில நிழல் மனிதர்களும், வர்த்தக நிறுவனங்களும் தேசத்தின் வருவாயை முறையற்ற வழியில் கொள்ளையடித்துக் கொழித்ததால் ஏற்பட்ட இழப்பும், ஏழை எளியவர்களின் நல்வாழ்வுக்கு அரசு செலவிடும் மானியங்களும் ஒன்றா? இப்படி ஒரு விளக்கம் கூற உங்களுக்கு வெட்கமாக இல்லையா மன்மோகன் சிங்?

உண்மையிலேயே ஊழலை எதிர்கொள்வதில் பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையாளராக இருந்திருந்தால், தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்வரை காத்திருக்காமல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நிலைமை கைவிட்டுப் போனபிறகு நியாயம் பேச முனைகிறார் பிரதமர்.

இதெல்லாம் போகட்டும். இப்போது விசாரணைக்குத் தயார் என்று கூறும் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பியதும், இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் கூறுவதற்குப் பதிலாக, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அறிவித்து விசாரணையை முடுக்கிவிட்டிருந்தால், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் முடங்கியிருக்காது. மக்கள் மன்றத்தில் இது ஓர் ஊழல் நாற்றமெடுத்த அரசு என்கிற அவப்பெயர் ஏற்பட்டிருக்காது. பிரதமர் பதவி இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து கேவலப்பட்டிருக்காது.

"உலக அரங்கில் இந்தியா ஓர் ஊழல் நாடாக சித்திரிக்கப்படுவது நல்லதல்ல' என்கிற பிரதமரின் கூற்றை நூற்றுக்கு நூறு சதவிகிதம் வழிமொழிகிறோம். அதேநேரத்தில், ஒன்றன்பின் ஒன்றாக "மெகா' ஊழல்கள் வெளிவருவதற்குக் காரணம் உங்களது தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் என்பதையும் பிரதமருக்கு நினைவுபடுத்துகிறோம்!

No comments:

Post a Comment