Friday, February 18, 2011

கோடீஸ்வர எம்.பி.க்கள் சாப்பிட மானியம். ஏழை மக்கள் சாப்பிட வரி. விலைவாசிகளின் முரண்பாடு


ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையும் தாண்டி, வரும் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது விலைவாசி உயர்வாகத்தான் இருக்கும் என்கின்றனர், மக்கள்.

இம்மாத தொடக்கத்தில் பெட்ரோல் விலை ஏற்றத்தால் காய்கறிகளின் விலையும் கூடியது. வெங்காய விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து தாய்மார்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. கோயம்பேடு மார்க்கெட் ஆலோசகர் சவுந்தர்ராஜன், “உரவிலை ஏற்றம், அரசின் நூறு நாள் வேலைத் திட்டம், மழை மற்றும் டீசல் விலையேற்றம் போன்றவையே விலையேற்றத்தின் காரணங்கள்’’ என்கிறார்.

பெட்ரோல் விலை ஏற்றப்படும்போது, நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்கப்படும். தற்போது பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் எ ண்ணெய் நிறுவனங்களுக்கு அநியாயமாக தாரை வார்க்கப்பட்டது. லாபம் மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் எண்ணெய் நிறுவனங்கள் மக்களின் எதிர்ப்பை மீறி, பெட்ரோல், டீசல் விலையைத் தாறுமாறாக உயர்த்தி வருகிறது.

கடந்த வாரம்கூட முன்னறிவிப்பின்றி பெட்ரோல் விலை மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டது. இதுபோல், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 8 முறை பெ ட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு, லிட்டர் பெட்ரோல் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாய் ஆகிவிட்டது. 32 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீசல் விலையில் 10 ரூபாய் கூடிவிட்டது. இருசக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையில், நடுத்தர வர்க்கமும் பெட்ரோல் விலையேற்றத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. மென்பொருள் நிறுவன ஊழியர்களுக்குக்கூட கடந்த சில ஆண்டுகளாக சம்பள உயர்வில்லாத நிலையில் சாமானியர்களைப் பற்றிக் கேட்க வேண்டியதே இல்லை! இதனாலேயே நாட்டின் உணவுப் பாதுகாப்பு கேள்விக் குறியாகியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்ட அண்ணா பொதுதொழிற்சங்க செயலாளரும், காமராஜர் காய்கறி மார்க்கெட்டின் மொத்த வாழைக்காய் வியாபாரியுமான சி.த.செல்லப்பாண் டியன், “தூத்துக்குடி மக்களைப் பொறுத்தவரை 50 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் வாரத்தில் 5 நாட்கள் வரை மீன்களையே உணவாகப் பயன்படுத்து வார்கள். காய்கறிகள் விலை விண்ணை முட்டி நிற்கிறது என்றால் மீன் விலையோ அதையும் தாண்டி நிற்கிறது. கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட சீலா மீன் 500 ரூபாய்க்கு விற்கிறது. 200 ரூபாய்க்கு விற்கும் ஊளி மீன் தற்போது 300 ரூபாய்’’ என்றார். ஆட்டிறைச்சி, கோழிக்கறி விலைகளும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டன. ஆட்டிறைச்சி கிலோ 320-க்கும், நாட்டுக்கோழி 200-க்கும், ப்ராய்லர் கோழி 140-க்கும் விற்கப்படுகின்றன. காய்கறி விலைகளை ஒப்பிடும்போது இறைச்சிகளின் விலை பரவாயில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

பொருளாதார மந்த நிலையால் கட்டுமானப் பணிகள் பெரிய அளவில் இல்லாத நிலையில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தால் கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இத்திட்டம் அறிவிக்கப்பட்ட பின்பு, 160 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிமெண்ட் மூட்டை 290 ரூபாய் என்றானது. அரசு கேட்டுக் கொண்டதால், சிமெண்ட் உற்பத்தியாளர்கள் ‘பெரிய மனசு வைத்து’ அதை 260 ரூபாயாகக் குறைத்திருக்கிறார்கள். அது போல், செங்கல் ஒரு லோடு (3000 செல்கல்கள்) 24 ஆயிரம் ஆகிவிட்டது. மணல் ஒரு லோடு (4 யூனிட்) 24 ஆயிரம் ரூபாய்!

வரலாறு காணாத காய்கறிப் பொருட்களின் விலையேற்றத்திற்கு கமிஷன் ஏஜெண்டுகள்தான் முக்கியக் காரணம் என்கின்றனர் விஷயமறிந்தவர்கள். காய்கறி லோடுகளை வெளிமாநிலங்களுக்குத் திருப்பி விட்டு செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி விலையே உயர்த்துகிறார்களாம்.

சென்னையில் சில்லறைக் கடைகளில் விற்கப்படும் விலையையொட்டியே, தமிழகம் முழுக்க விற்பனையாகிறது. தக்காளி கிலோ அறுபது ரூபாய், கோஸ் 30 ரூபாய், உருளைக் கிழங்கு 25 ரூபாய், கேரட் அறுபது ரூபாய், பீட்ரூட் 35 ரூபாய், முள்ளங்கி முப்பது ரூபாய், நூல்கோல் 28 ரூபாய், பீன்ஸ் 60 ரூபாய், அவரைக் காய் 60 ரூபாய், பச்சை பட்டாணி 30 ரூபாய், சேனைக் கிழங்கு 25 ரூபாய், சேப்பங்கிழங்கு 25 ரூபாய், வெண்டைக்காய் 52 ரூபாய், முருங்கை 90 ரூபாய் இவையெல்லாம் இந்த வார நிலவரம். பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறிகளின் விலை இன்னமும் எகிறும் என அச்சம் தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

சாதாரணமாக சென்னையில் 15 ரூபாய்க்கு விற்ற வெங்காயம், கடந்த வாரம் கிலோ 100 ரூபாயைத் தொட்டது. மலிவாகக் கிடைக்கும் சத்து உணவான கீரை கூட ஒரு கட்டு 15 ரூபாயைத் தொட்டு விட்டது. மல்லி ஒரு கட்டு 7 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. பூண்டு ரூ. 300க்கும் புளி ரூ.100க்கும் விற்கப்படுகிறது. சாதாரணமாக காய்கறிகளை கிலோ கணக்கில் வாங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர்கள் தற்போது ஒவ்வொன்றிலும் கால்கிலோ மட்டுமே வாங்கிச் செல்கின்றனர்.

உயர்ரக அரிசியின் விலை ரூ.60 ஆகவும் சாதாரண ரக அரிசியின் விலை ரூ. 30 வரையும் விற்கப்படுகிறது. அனைத்து வகையான பருப்புகளின் விலையும் விண்ணைத் தொட்டு வருகிறது.


சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்து பதிலளித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ‘‘நுகர்வோரின் சந்தை வருகை கூடியதால், பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி அதிகரித்துள்ளது’’ என்றார்.


நாடாளுமன்ற வளாகத்திலுள்ள கேண்டீனில் ஒரு டீ விலை ஒரு ரூபாய். தமிழ்நாட்டில் பேருந்துகள் போகாத ஊர்களில் கூட இன்றைக்கு இந்த விலைக்கு டீ கிடைக்குமா? நாடாளுமன்றத்தில் மதியச் சாப்பாடு (4 சப்பாத்தி, சோறு, காய்கறி, தயிர்) ரூ. 12.50. அங்கே மீன் கறியோடு சோறு ரூ.14.


இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? நாடாளுமன்ற கேண்டீனுக்கு அரசின் மானியம் ஆண்டுக்கு ஐந்தரைக் கோடி. எம்.பி.க்கள் ஒரு ரூபாய்க்கு டீ சாப்பிட அரசு இந்த மானியத்தை வழங்குகிறது.


சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விளை நிலங்கள் கார் கம்பெனிகளுக்கும், டயர் கம்பெனிகளுக்கும் தாரை வார்க்கப்படுகின்றன. விமான நிலைய விரிவாக்கத்துக்காக விளைநிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. விவசாயத்துக்கு எதிரான இந்த போக்கால் விளைநிலங்கள் விலை நிலங்களாகிவிட்டன. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு, உற்பத்தி குறைந்துவிட்டது. இதனாலேயே விலையேற்றம் கூடிவிட்டது. வெங்காய உற்பத்தி நிலப்பரப்பு குறைந்ததால் கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்குப் போனதைப் பார்த்தோமே!


கார் உற்பத்தியில் கவனம் செலுத்திய அரசு விவசாயத்தை மறந்துவிட்டது. மக்கள் அனுபவிக்கிறார்கள். தேர்தல் வந்தால் இந்த அரசும் அனுபவிக்கும்!!

நன்றி குமுதம்.காம் மற்றும்

No comments:

Post a Comment