Wednesday, February 16, 2011

பெரம்பலூர் டூ டெல்லி 8

ஸ்பெக்ட்ரம் ராஜா
அன்று டவுன் பஸ், இன்று ஸ்பெக்ட்ரம்...

ஊழ்வினை பேசிய ராசா’ தலைப்பை தாங்கிய பகுதி வெளியான தருணத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முக்கியமான திருப்புமுனை நிகழ்ந்து விட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக எதிர்க்கட்சிகள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் கைது நடந்தேறிவிட்டது. ராசாவுடன் இணைந்த கைகளாய் செயல்பட்ட ராசாவின் தனிச்செயலர் ஆர்.கே.சந்தோலியாவும், தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுராவும் இணைந்தே சி.பி.ஐ.யால் வளைக்கப்பட்டிருக்கின்றனர்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சிறு தீப்பொறியாக கிளம்பிய ஸ்பெக்ட்ரம் பூதம், இந்தளவிற்கு விஸ்வரூபமெடுத்து ராசாவின் கைது வரை வளர்ந்து நிற்பதற்கு கடமை தவறாத நீதிமன்றத்தின் கண்டிப்பும், எதிர்க்கட்சிகளின் இடைவிடாத போராட்டமும்தான் காரணம். கடந்த காலங்களில் நீதிமன்றங்களை பற்றியெல்லாம் கிளம்பிய பல்வேறு அவதூறு செய்திகளையும் துடைத்தெறியும் விதமாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒரு கண்டிப்பான அணுகுமுறையை கடைபிடித்து, நீதிமன்றங்கள் உயிர்ப்புடன்தான் இருக்கிறது என்பதை அழுந்தந்திருத்தமாக நிரூபித்திருக்கிறார்கள் நீதிபதிகள்.

இன்னொரு பக்கம் கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதையுமே ஸ்தம்பிக்க வைத்த எதிர்க்கட்சிகள், அதன் பின்னும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசாவின் கைதையும், கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்க வலியுறுத்தியும் இடைவிடாமல் களத்தில் போராடிக் கொண்டே இருந்தன. ஒரு பக்கம் நீதிமன்றம் தன் கடமையைச் செய்ய, இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகளும் தங்களின் உண்மையான பங்களிப்பை உணர்ந்து கடமையை சரியாக செய்ததன் பலன்தான் இந்த கைது நடவடிக்கை.

கடந்த காலங்களில் இதுபோன்று எத்தனையோ ஊழல் விவகாரங்களில் சிக்கிய பெருந்தலைகள் எந்த பயமோ, பிரச்னையோ இல்லாமல் சர்வ சாதாரணமாக சுற்றி வந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசாவின் கைது அத்தனை ஊழல்வாதிகளையுமே உள்ளுக்குள் உதறலெடுக்க வைத்திருக்கும். வெறும் கைது என்பதோடு நின்றுவிடாமல், அடுத்தடுத்த கட்டமாய் விரைந்து ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒளிந்திருக்கும் விஷயங்களை நீதிக்கு முன் நிறுத்துவதோடு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையும் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நாடு முழுவதும் மக்களின் மனங்களில் கிளம்பியிருக்கிறது.

காங்கிரஸ் & தி.மு.க. கூட்டணி நிலைத்தாலும், நிலைக்காவிட்டாலும் கூட ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸ் கடமையை சரியாகவே(?) செய்யும் என இந்திய மகாஜனங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். எப்படியோ பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கங்களைப் போல் இல்லாமல், ஒரே ஏற்றமாய் ஏறிக் கொண்டிருந்த ராசாவின் கிராப் ஒருவழியாய் மிகப் பெரிய சரிவைச் சந்தித்திருக்கிறது. சரி...சரி... தற்போது நிகழ்ந்த விஷயங்களை தள்ளி வைத்து ராசாவின் கடந்த காலத்திற்குள் நுழைவோம்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நாட்டிற்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டு, தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்தார் என்பதுதான் ராசா மீதான தற்போதைய குற்றச்சாட்டு. இப்போது அல்ல, சுமார் 27 வருடங்களுக்கு முன்பாகவே அடுத்தவர்களுக்கு இழப்பு ஏற்பட்டாலும் தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் பயனடைந்தால் போதும் என்ற அற்புத(?) சித்தாந்தம் ராசாவின் மனதிற்குள் தோன்றியதை என்னவென்று சொல்ல?

ஒவர் டூ ராசாவின் கல்லூரி நாட்கள்...

முசிறி டூ வேலா-நத்தம் சாலையில் அய்த்தான்பட்டி என்ற இடத்தில்தான் முசிறி அரசுக் கல்லூரி அமைந்திருந்தது. கல்லூரியிலிருந்து எந்த ஒரு தேவைக்கும் பக்கத்திலிருக்கும் முசிறிக்குத்தான் பேருந்தில் வந்து செல்ல வேண்டும். முசிறி டூ வேலாநத்தம் சாலையொன்றும் அவ்வளவு பிரமாதமான சாலை இல்லை. ஆங்காங்கே குண்டும் குழிகளும் நிறைந்திருக்க, அந்தச் சாலையில் பேருந்தில் பயணிப்பதே தாலாட்டு போல்தான் இருக்கும். அந்தக் காலங்களில் அடிக்கடி பேருந்து வசதிகள் இல்லாத நிலையில், மாலை வேளையில் கல்லூரி முடிந்ததும் வரும் ஒரு பேருந்துதான் மாணவர்களுக்கு ஒரே சாய்ஸ். மொத்த மாணவர் கூட்டமும் அந்த பேருந்தில்தான் அடித்துப் பிடித்து ஏறுவார்கள். பேருந்து முழுவதும் நிரம்பி வழிவதோடு, புட்போர்டில் தொங்கிக் கொண்டு வரும் மாணவர்கள் கூட்டத்தோடு தள்ளாடி தள்ளாடிதான் முசிறிக்கு வந்து சேரும்.

ராசா கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த காலம். கல்லூரிக்கு வெளியில் ஓங்கி வளர்ந்த விருட்சமாய் உயர்ந்து நின்ற வேப்பமர நிழலில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர் ராசாவும் அவருடைய நண்பர்களும். தூரத்தில் பேருந்து வருவதைக் கண்டதும் இடம் பிடிப்பதற்காக வேக வேகமாக சாலை ஓரத்தில் வந்து நின்றனர் மாணவர்கள். அடித்துப் பிடித்து பேருந்தில் ஏறிய ராசா அண்ட் கோ, ஒருவழியாய் இடத்தைப் பிடித்து அமர்ந்தது. மாணவர்கள் எல்லோரும் முண்டியடித்து ஏறியதில் கல்லூரி முதல்வர் கருப்பையா, பேராசிரியர்கள் வாசுதேவன், பழனிச்சாமி, நடராஜன் ஆகியோர் பேருந்தில் ஏற முடியாமல் கீழேயே நின்று கொண்டிருந்தனர். கடைசியில் மாணவர்கள் வழி விடவும், பேருந்தில் ஏறிய பேராசிரியர்கள் ஒருவழியாய் மாணவர்களை எழுப்பி விட்டு சீட்டில் இடம் பிடித்து அமர்ந்தனர்.

தாளாத மாணவர் கூட்டத்துடன் ஒரு பக்கமாய் சரிந்து தள்ளாடியபடியே நகரத் தொடங்கியது பேருந்து. கிண்டலும், கேலியும் சிரிப்பும் கொண்டாட்டமுமாய் ஊர்ந்தபடி சென்று கொண்டிருந்தது பேருந்து. ஒரு கிலோமீட்டர் தூரம்கூட கடக்காத நிலையில், நடுவழியில் திடீரென பேருந்தை விசிலடித்து நிறுத்தியிருக்கிறார் கண்டக்டர். பேருந்து நின்றதற்கான காரணம் தெரியாமல் எல்லோரும் முழிக்க, முன் பக்கம் அமர்ந்திருந்த கல்லூரி முதல்வரின் பக்கம் வந்தார் கண்டக்டர்.

‘சார், உங்களுக்கே தெரியும், உங்க காலேஜ் விடற நேரத்துல இந்த பஸ் மட்டும்தான் இருக்குன்னு...’ கண்டக்டர் நிறுத்தவும்,

‘இதைச் சொல்லத்தானா பஸ்ஸை நிறுத்துன?’ என லேசான எரிச்சலோடு கேட்டார் முதல்வர் கருப்பையா.

‘அதில்லை சார், எப்பப் பார்த்தாலும் பஸ்ஸே நகர முடியாத அளவுக்கு பஸ்ஸுல கூட்டம் இருந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனால், டிக்கெட் கலெக்ஷன் அதுல பாதிகூட வர மாட்டேங்குது. முசிறியில் செக்கிங் இன்ஸ்பெக்டர்ஸ் பஸ்ஸில் வர்ற கூட்டத்தை பாத்துடறாங்க. அதுக்குப் பிறகு கலெக்ஷனை குறைச்சுக் கட்டினால், என்னை தப்பா நினைக்கிறாங்க. இப்பக்கூட பஸ்ஸுல நூறு பேருக்கு மேல ஏறியிருக்காங்க. ஆனால், வெறும் நாற்பது பேர்தான் டிக்கெட் வாங்கியிருக்காங்க. இன்னிக்கு இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு தெரியணும் சார். நீங்கதான் எனக்கு நியாயம் பெற்றுத் தரணும் சார்...’ கெஞ்சலான குரலில் பரிதாபமாய் பேசிய கண்டக்டரின் புகார் முதல்வர் கருப்பையாவிற்கு அதிர்ச்சியைத் தந்தது.

‘‘என்னப்பா இது, அடுத்தவங்களை கஷ்டப்படுத்தறது தப்புப்பா... அவங்கவங்க டிக்கெட்டை ஒழுங்கா எடுக்கணும், பஸ்ஸுல ஏறிட்டு டிக்கெட் எடுக்காமல் இருக்கறது தப்பில்லையா?’’ குரலை உயர்த்தி சற்றே கோபமான குரலில் முதல்வர் கர்ஜிக்க... பேருந்து முழுவதுமே பலமான அமைதி. அந்த அமைதியை கிழித்துக் கொண்டு குபீரென வெளிவந்தது பேருந்தின் பின்பக்கச் சீட்டில் அமர்ந்திருந்த ராசாவின் குரல்.

‘காலேஜ்ல பாஸ் மார்க் என்ன சார்?’ குரலை உயர்த்தி ராசா கேட்கவும், முதல்வரிடமிருந்து பதில் வருவதற்குள் கோரஸாய் கத்தினர் மாணவர்கள்.

‘முப்பத்தைந்து’ மாணவர்களின் கோரஸைத் தொடர்ந்து, ‘ராசா எதுக்கு இப்படியொரு கேள்வியைக் கேட்கறான்’ என பேராசிரியர்கள் அனைவரும் ஆச்சர்யமாய் பேருந்தின் பின் பக்கம் நோக்கியிருக்கின்றனர்.

‘காலேஜ்லேயே பாஸ் மார்க் முப்பத்தைந்துதான். பஸ்ஸுல நாற்பது பேர் டிக்கெட் எடுத்துட்டாங்கன்னு கண்டக்டரே சொல்லிட்டாரு. அப்புறம் என்ன சார்... பஸ்ஸை பாஸாக்கிடலாம் சார்’ என சிரித்துக் கொண்டே ராசா சொல்ல, பஸ் முழுவதுமே சிரிப்பலைதான். முதல்வர், பேராசிரியர், மாணவர்கள் என அனைவரின் சிரிப்பும் அடங்க ஓரிரு நிமிடங்கள் பிடித்தது. ஒரு வழியாய் கண்டக்டரை சமாதானப்படுத்தி, பேருந்தை கிளப்ப வைத்திருக்கிறார்கள்.

ராசாவின் வாழ்வில் நிகழ்ந்த இந்த பேருந்து சம்பவத்தையும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, ஓர் ஒற்றுமை பளீரென வெளிப்படுகிறது. ராசாவும் அவருடைய நண்பர்களும் பேருந்தில் கும்பலாய் பயணிக்கும் போது டிக்கெட் எடுக்காததினால், பேருந்து உரிமையாளருக்கு நஷ்டம் ஏற்பட்டாலும்கூட தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் மட்டும் பயனடைந்தால் போதும் என்ற உயர்ந்த(!) சித்தாந்தம் அப்போதே ராசாவின் மனதில் இருந்திருக்கிறது. நாட்டையே உலுக்கி எடுக்கும் தற்போதைய ஸ்பெக்ட்ரம் முறைகேட்டிலும் கூட நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் மட்டும் பயனடைந்தால் போதும் என்று அதே உயர்ந்த சித்தாந்தத்தை உயர்த்தி பிடித்திருக்கிறார் ராசா!

-அலைக்கற்றை ஒய்வதில்லை

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2341&rid=107

No comments:

Post a Comment