Saturday, February 19, 2011

பிராடு தாத்தா கருன்ஸ்

இந்தியாவில் இதுவரை நடைபெறாத வரலாறு காணாத ஊழல்'' என்று அனைத்துத் தரப்பு ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. ""இதனை நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்'' என்று அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஒன்றுகூடி, முழக்கமிட்டு, தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கையையே முடக்கிவிட்டனர்.

அரசுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ள நிகழ்வில், தமிழக முதல்வரின் துணைவி ராஜாத்தியம்மாள், மகள் கனிமொழி ஆகியோரின் பங்களிப்பும் உண்டு என்கிற செய்தி காட்டுத் தீயாய் பரவி வருகிறது. பிரபலமான கார்பரேட் தரகர் நீரா ராடியாவின் ரகசிய தொலைபேசிப் பரிவர்த்தனைகளில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் பெயரும் அடிபட்டு பரபரப்புக்குத் தீனி போட்டு வருகிறது. போதாக்குறைக்கு நாடு தழுவிய அளவில் புலனாய்வுத்துறையின் சோதனைகள் வேறு. இத்தனை களேபரத்துக்கும் ஆ. ராசா ஒரு "தலித்' என்பதுதான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறி வருவது கேலிக்குரியது மட்டுமல்ல, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழும் 25 கோடிக்கும் மேற்பட்ட "தலித்' மக்களைத் திட்டமிட்டுக் கேவலப்படுத்துவதாகவும் அல்லவா இருக்கிறது. இது தன்னையும், தன் குடும்பம், கட்சி, ஆட்சி அனைத்தையும் அவமானத்திலிருந்து தப்பிக்கவைக்கக் கையாண்ட கடைந்தெடுத்த சுயநலத்தனம்.

தனது கட்சியைச் சார்ந்த ஓர் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்படும்போது, அந்தப் பிரச்னைக்கு அப்பாற்பட்ட, இன்னும் சொல்லப்போனால் தேவையேயில்லாத "சாதி'யை ஒரு போர்வையாக்கி பதிலளிப்பது என்பது எந்த வகை நியாயம்?

இது ஒரு தனிமனிதனின் தவறை, ஒரு சமூகத்தின் மீதே திணிக்கின்ற ஈவு இரக்கமற்ற கொடுமையல்லவா? சொல்லப்போனால், இதுவும் ஒரு வன்கொடுமைதான். இப்படி ஆ. ராசா ஒரு "தலித்' என்பதால்தான் இந்தக் குற்றச்சாட்டு எழுகிறது என்று முதலைக் கண்ணீர் வடிக்கும் கருணாநிதி, அப்படி என்ன "தலித்' மக்கள் மீது தீராத பாசம் கொண்டவரா, இல்லை தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தியாகியா? அவரது தலித் விரோத நடவடிக்கைகளை அவரது கடந்த காலச் சரித்திரம் தோலுரித்துக் காட்டி விடுகிறதே..

1969-ல் அண்ணா மறைந்தவுடன், அடுத்த முதலமைச்சராக இந்தக் கருணாநிதி தான் வரவேண்டும் என்று வழி மொழிந்தவர் சத்தியவாணிமுத்து அம்மையார். தி.மு.க.வின் எழுபெரும் தலைவர்களில் ஒருவரான இவர், தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்பது உலகறிந்த உண்மை. ஆனால், இவரைத் தனது அமைச்சரவையிலிருந்து திடீரென தூக்கி எறிந்தவர்தானே கருணாநிதி? காரணம் தனது தலைமைக்குப் போட்டியாக வந்துவிடக் கூடாதென்ற உள் பயம்தானே காரணம்? முதலமைச்சரின் இவ்வஞ்சகச் சூழ்ச்சியை சத்தியவாணிமுத்து அம்மையார் "எனது போராட்டம்' என்ற நூலில் விவரமாகவே எழுதியிருக்கிறார்.

இந்தியாவையே அதிர்ச்சியில் உறைய வைத்த வெண்மணிச் சம்பவத்தில் 44 தலித் மக்களை துடிக்கத் துடிக்க உயிரோடு கொளுத்திய கொலைக் குற்றவாளிகள் அனைவரும் இவரது ஆட்சியில் தானே விடுதலையானார்கள்? இப்போது தலித் என்று பரிந்து பேசும் கருணாநிதி, அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்?

1,76,645 கோடி ரூபாய் ஊழலில் தொடர்புடைய ஆ. ராசா, கருணாநிதிக்கு தலித்தாகத் தெரிகிறார். வெண்மணியில் உயிரோடு கொளுத்தப்பட்ட அப்பாவிகள் "தலித்'துகளாகத் தெரியவில்லையே, ஏன்?

எவர் ஒருவர் ஐந்து லட்ச ரூபாய் நன்கொடை தந்தாலும் அவரது பெயரையே ஓர் அரசுக் கல்லூரிக்குச் சூட்டலாம் என்ற அரசாணையின் அடிப்படையில், மறைந்த முன்னாள் அமைச்சர் தலித் வீராங்கனை சத்தியவாணிமுத்து அம்மையார் முன் முயற்சி எடுத்து நன்கொடை திரட்டி, மும்பையில் அண்ணல் அம்பேத்கர் நிறுவிய சித்தார்த்தா கல்வி அறக்கட்டளையிடம்கூட பதினேழாயிரம் ரூபாய் நன்கொடை பெற்று, நட்சத்திர கிரிக்கெட் நடத்தியும், சிறுகச்சிறுக வசூலித்தும் ஐந்து லட்ச ரூபாயை அரசுக்குச் செலுத்தி, அதன்படி பொறிக்கப்பட்டதுதான் வியாசர்பாடி கலைக்கல்லூரிக்கு அம்பேத்கரின் பெயர். ஆனால் கருணாநிதியோ, பாபா சாகேபின் பெயரை இவர் சூட்டியதாகத் தற்பெருமை பேசி வருவது எவ்வளவு கடைந்தெடுத்த ஏமாற்றுத்தனம்.

சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த அந்தியூர் செல்வராஜ், தனது குடும்ப நிகழ்வாக பன்னாரியம்மன் கோயில் தீ மிதி திருவிழாவுக்குப் போனார் என்ற ஒரே காரணத்துக்காக கண்டன அறிக்கை விட்டு அவரைக் கேவலப்படுத்தியவர் கருணாநிதி. ஆனால், துணை முதல்வரான இவரது மகன் ஸ்டாலினின் குடும்பம் மட்டும் மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்குப் போய் கூழ் ஊற்றி சாமி கும்பிடலாம். மகன் அழகிரியின் மனைவி திருப்பரங்குன்றத்தில் தங்கத்தேர் இழுக்கலாம். இவர் மஞ்சள் துண்டுடன் பவனி வரலாம். இவரது மனைவி தயாளு அம்மாள் சாய்பாபா காலில் விழுந்து வணங்கலாம். இதெல்லாம் எந்த ஊர் பகுத்தறிவுப் பண்பாடோ, பெரியாருக்குத்தான் வெளிச்சம்.

இவர் முதலமைச்சரானவுடன் செய்த முதல் வேலையே அன்றைக்கு டி.ஐ.ஜி. பதவி வகித்த எஸ். தயா சங்கர் - கே. காளியப்பன் ஆகிய இரு தலித் அதிகாரிகளை திறமையின்மை என்று காரணம் கூறி தாற்காலிகப் பணிநீக்கம் செய்ததுதான். இதில், தயா சங்கர், அண்ணல் அம்பேத்கரின் அடியொற்றி நடைபோட்டு, அவரது இந்தியக் குடியரசுக் கட்சியின் முதல் தலைவராயிருந்த சிவராஜின் மகன் என்பது மிகுந்த வேதனைக்குரிய செய்தியாகும். எஸ். தயாசங்கரின் அன்னை மீனாம்பாள் சிவராஜ், ஆயிரம் விளக்குத் தொகுதியில் திமுகவை எதிர்த்துப் போட்டியிட்டார் என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக கருணாநிதி எடுத்த கீழ்த்தரமான நடவடிக்கைதான் இது என்பதைச் சொல்லித் தெரியவேண்டுமா என்ன?

தலித் அதிகாரிகளைத் தேவையின்றி பந்தாடிய கருணாநிதியின் செயல்பாடுகளின் தொடர்ச்சிதான், சமீபத்தில் தலித் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கரை நடத்திய விதமாகும். நிர்வாகத் திறன்மிக்க நேர்மையான அதிகாரி என்று பலராலும் ஏன் இவராலும் கூட பாராட்டப்பட்ட உமாசங்கர், இவரது குடும்ப வியாபாரத்துக்கு இடையூறாக இயங்கினார் என்றவுடன் அவரைப் பொய்க் காரணம் கூறி தாற்காலிகப் பணிநீக்கம் செய்தபோது தெரியவில்லையா அவர் தலித் என்று????

இப்போது மட்டும் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ராசாவை தலித் என்று காரணம் காட்டி வக்காலத்து வாங்கும் முதல்வர் கருணாநிதி, ஓர் ஊழலை அம்பலப்படுத்த முற்பட்ட உமாசங்கரை "திறமைமிக்க தலித்' என்றல்லவா பாராட்டியிருக்க வேண்டும்?

இதற்கு முன்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்டக் காவல் துறை அதிகாரி ஆகியோர் முன்னிலையிலேயே குமரி மாவட்ட வருவாய் அலுவலர் ஜனார்த்தனம் என்ற தலித் அதிகாரியை ஒரு விழா மேடையில் சாதியைக் கூறித் திட்டி, கன்னத்திலடித்த சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று இன்று வரை போராடி வருகிறோமே, அதற்குக் கருணாநிதி எடுத்த நடவடிக்கை என்ன? இந்த அமைச்சர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்த பின்னரும் கூட அது கைவிடப்பட்டதே, இதுதான் இவரது தலித் பாசமா?

கடந்த இரு மாதங்களுக்கு முன், திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலித் சமூக டாக்டர் எஸ். காளியப்பனை தி.மு.க. எம்.எல்.ஏ. மாலை ராஜா, சாதியைக் கூறி தாக்கிய சம்பவத்துக்கு இவர் எடுத்த நடவடிக்கைதான் என்ன?

"தலித்' அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாதென்ற மண்டல் கமிஷன் தீர்ப்பிலிருந்து விதிவிலக்கு பெறுவதற்காக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்துக்கு இன்னும் அங்கீகாரம் தராத ஒரே ஒரு மாநிலம் இவர் முதலமைச்சராக இருக்கும் தமிழ்நாடு தான் என்கின்றபோது வரும் வேதனை, இவர் "தலித்' பற்றி போலித்தனமாகப் பேசும்போது அதிகரிக்காமல் என்ன செய்யும்?

மத்திய அமைச்சரவையில் உள்ள ஏழு தலித் சமூக அமைச்சர்களில் ஆ. ராசா மீது மட்டும் ஊழல் புகார் வருகிறதென்றால் அதன் உண்மையறிய வேண்டும். அதை விட்டுவிட்டு, அவரை சாதியப் போர்வைக்குள் இழுத்துக் காப்பாற்றப் பார்ப்பது மோசடித்தனம்.

தமிழக அரசியலில் நேர்மைக்கும், தூய்மைக்கும் அடையாளமாகக் கருதப்படுபவர் "தலித்' சமுதாயத்தைச் சேர்ந்த கக்கன்தான். கக்கனின் அடியொற்றி தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குப் பெருமை தேடித் தருவதற்குப் பதிலாக, இழிவைத் தேடித் தந்திருக்கும் ஆ.ராசாவை ஒரு "தலித்' என்று முதல்வர் கருணாநிதி அடையாளம் காட்டுவது, அந்தச் சமுதாயத்தைக் கேவலப்படுத்துவதற்குத் தானே? ஆ. ராசாவைக் காப்பாற்றி அதன் மூலம் "ஸ்பெக்ட்ரம்' முறைகேடுகளால் அரசுக்கு ஏற்பட்ட பல லட்சம் கோடி இழப்பை நியாயப்படுத்துவதற்கு "தலித்' கேடயத்தைத் தூக்கியிருப்பதன் மூலம், ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தையே ஊழல் பேர்வழிகளாகச் சித்திரிக்க முற்படுகிறாரே, இந்த "தலித்' விரோதியின் கபட நாடகத்தைத் தோலுரித்துக் காட்டாமல் இருந்தால் எப்படி?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் காவலர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், கருணாநிதி என்கிற "தலித்' இன விரோதியுடன் கைகோத்து, கூட்டணி தர்மம் என்று நியாயம் பேசி மெüனம் சாதித்தால், அவர்களும்கூட "தலித்' விரோதிகள்தான்!

http://truetamilans.blogspot.com/

No comments:

Post a Comment