Thursday, February 17, 2011

I don't know anything - Prime Minister - But I know I am the Prime Minster of India


எனக்கு எதுவுமே தெரியாது: பிரதமர் மன்மோகன் சிங்

புதுதில்லி, பிப். 16: 2-ஜி அலைக்கற்றை உரிமம் யாருக்கு வழங்குவது, எந்த அடிப்படையில் வழங்குவது என்பதை முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாதான் முடிவு செய்தார் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

"முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் உரிமம் வழங்க முடிவு எடுத்தது குறித்து எனக்கோ அல்லது மத்திய அமைச்சரவைக்கோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எல்லாம் வெளிப்படையாக நடப்பதாக ராசா கூறியதை நான் நம்பினேன் என்றார் பிரதமர்.

ஆ. ராசா மீது சில புகார்கள் இருந்தும் இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்றபோது அவருக்கு தொலைத்தொடர்பு இலாகா ஒதுக்கப்பட்டதற்கு கூட்டணி கட்சியின் நெருக்குதலே காரணம். கூட்டணி அரசியலால் எனது கைகள் கட்டப்பட்டிருந்தது உண்மைதான். கூட்டணி தர்மத்துக்காக சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளதாக அவர் கூறினார்.

தில்லியில் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களுக்கு புதன்கிழமை அளித்த சிறப்பு பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

கூட்டணி கட்சிகளின் நெருக்கடி,ஊழல் போன்ற காரணங்களுக்கு அஞ்சி பதவியிலிருந்து விலகமாட்டேன். ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எமது அரசு தயங்கியதில்லை என்றார் அவர்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இப்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ள "முதலில் வருபவருக்கே முன்னுரிமை' கொள்கை குறித்து என்னிடமோ அல்லது அமைச்சரவையிடமோ தெரியப்படுத்தவில்லை. இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்று நான் கருதவில்லை. அலைக்கற்றை ஒதுக்கீடு முறையாக நடைபெற வேண்டும் என்று அக்கறை தெரிவித்து 2007 நவம்பர் மாதம் தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அந்த கடிதத்துக்கு பதிலளித்த ராசா, எல்லாம் வெளிப்படையான முறையில் நடப்பதாக கூறினார். உரிமம் ஒதுக்கீடு குறித்து ராசா மட்டுமே முடிவு செய்தார்.

2-ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டுக்கு நிதியமைச்சகம், தொலைத்தொடர்பு அமைச்சகம், தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்), தொலைத்தொடர்பு ஆணையம் ஆகியவை ஒப்புதல் அளித்துவிட்டதால் இந்த விஷயத்தில் மேற்கொண்டு நான் எதுவும் செய்யவில்லை என்றார் பிரதமர்.

சிஏஜி கணக்கு தவறு:

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என்று தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) கணித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தோராயமாக கணிக்கப்பட்டது என்று கணக்கு தணிக்கை அதிகாரி கூறியிருப்பதை மன்மோகன் சுட்டிக்காட்டினார்.

உணவுப் பொருள் மானியத்துக்கு ரூ. 80 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது, உர மானியமாக ரூ. 60 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. இதுபோல் எரிவாயு,மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கும் மானியம் ஒதுக்கப்படுகிறது. இதையெல்லாம் இழப்பு என்று கூற முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விசாரணை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) முன்பு ஆஜராக நீங்கள் தயாரா என்று கேட்டபோது, எந்த குழு முன்பும் ஆஜராக எனக்கு தயக்கமோ, பயமோ இல்லை. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க நான் முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறப்படுவதில் சிறிதும் உண்மை இல்லை. நாடாளுமன்றக் குழு முன்பு ஆஜராக நான் தயங்குவதாக கூறப்படுவது தவறான கருத்து. சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது எனது நிலை என்றார் மன்மோகன்.

எஸ். பாண்ட் ஒதுக்கீடு:

இஸ்ரோவின் துணை நிறுவனமான ஆண்ட்ரிக் எஸ்- பாண்ட் அலைக்கற்றை விற்பது தொடர்பாக தேவாஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் குழு விரைவில் முடிவு எடுக்கும் என்றார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக எனக்கோ அல்லது பிரதமர் அலுவலகத்துக்கோ எந்த தொடர்பும் இல்லை. இதுதொடர்பாக நான் யாருடனும் பேசவிலலை. ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் என்னை சந்தித்தபோது கூட இதுபற்றி ஏதும் பேசவில்லை என்றார்.

பதவி விலகமாட்டேன்:

உங்களைச் சுற்றி ஊழல் நடப்பதால் விரக்தி அடைந்து பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எண்ணியதுண்டா என்று கேட்டபோது, கூட்டணி ஆட்சியில் நாம் நினைப்பதை எல்லாம் செய்ய முடியாது.

நாம் நினைப்பது மாதிரி நடக்காது. விட்டுக் கொடுக்க வேண்டியதுள்ளது. ஏனெனில் 6 மாதத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்த முடியாது. ஆனால் ஒருபோதும் பதவி விலக வேண்டும் என்று எண்ணியதில்லை.

சில விஷயங்களில் நீக்கு போக்குடன் நடந்து எனது பணியை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு என்றார்.

என் கையில் அதிகாரம் இல்லை:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் பொறுப்பேற்றபோது ராசா மீது சில புகார்கள் கூறப்பட்ட நிலையில் அவருக்கு தொலைத்தொடர்புத் துறை ஒதுக்கப்பட்டது ஏன் என்று கேட்டபோது, கூட்டணி ஆட்சியில் எல்லாவற்றையும் நானே தீர்மானிக்க முடியாது. கூட்டணிக் கட்சியிலிருந்து யாரை அமைச்சராக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் என் கையில் இல்லை. அப்போது என்ன நடந்தது என்பதை விரிவாக சொல்ல முடியாது. கூட்டணி ஆட்சியைப் பொறுத்தவரை எங்களது யோசனைகளைத் தெரிவிக்கலாம். ஆனால் கூட்டணி கட்சித் தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படிதான் நடக்க முடியும்.

திமுக சார்பில் ராசாவையும் தயாநிதி மாறனையும் பரிந்துரைத்தனர். அந்த நேரத்தில் இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் எண்ணிப்பார்க்க முடியாது. அவரால் பயனடையாத சில நிறுவனங்கள் கூறும் புகாரைக்கொண்டு ராசாவுக்கு இந்த இலாகா ஒதுக்க வேண்டாம் என்று கருதுவதற்கு வாய்ப்பில்லை என்றார் பிரதமர்.

ஊழல் விஷயங்களையும் மிகவும் ஊதி பெரிதாக்கி நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களை அவர் கேட்டுக்கொண்டார். இந்தியா ஊழல் நாடு என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. அது நாட்டின் நலனை பாதிக்கும் என்றார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது ஆட்சி காலத்தில் உங்களை மிகவும் வருத்தமடையச் செய்த விஷயம் எது என்று கேட்டபோது, ஊழல் குற்றச்சாட்டுகள், என்னை வருத்தமடையச் செய்துள்ளன என்றார்.

மூன்றாவது முறையாக நீங்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவீர்களா என்று கேட்டபோது, தேர்தலுக்கு இன்னும் நீண்ட நாள்கள் இருக்கும்போது பிரதமர் வேட்பாளர் குறித்து இப்போதே பேசுவது பொருத்தமற்றது என்றார்.

மத்திய கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. கூட்டணி உடையும் அபாயம் இல்லை என்றார்.

Source: www.dinamani.com

No comments:

Post a Comment