சேது சமுத்திரத் திட்டமாகட்டும்,விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கும் விஷயமாகட்டும்...கடைசி நேரத்தில் வந்து பிரச்னையை அப்படியே திருப்பிப் போடுவதில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு நிகர் அவர் மட்டும்தான்.இப்போது அவர் கையில் எடுத்திருப்பது ஸ்பெக்ட்ரம்.அந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் உயிருக்கு ஆபத்து என்று அவர் கிளப்பிய குற்றச்சாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான கேள்விகளுடன் அவரை சந்தித்தோம்...
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
“ஸ்பெக்ட்ரம் விவகாரம் இதுவரை ஒரு ஊழல் விவகாரமாகவே பார்க்கப்பட்டது.ஆனால்,இன்று அது தேசியப் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட பிரச்னையாக உருமாறியிருக்கிறது.இந்தப் பணத்தை வைத்து இந்தியாவின் பாதுகாப்பையே கேலிக்குரியதாக்கலாம்.இப்போதுதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன் தீவிரத்தை உணரத் தொடங்கியுள்ளனர்.தேசியப் பாதுகாப்பு தொடர்பான பிரச்னையில் எந்த இந்தியனும் சமரசம் செய்து கொள்ள முடியாது. நானும் அப்படித்தான்.
‘ஜனக்ஷ்’ என்ற கம்பெனி மூலம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது.அதன்மதிப்பு ரூ.3,800 கோடி. ஆனால் அந்த கம்பெனியின் முதலீடே வெறும் ஒரு லட்சம் ரூபாய்தான். குறிப்பிட்ட முதலீடோ,பங்குகளோ இல்லாத இந்த கம்பெனிக்கு எந்த அடிப்படையில் அலைவரிசை ஒதுக்க முடியும்?இதில் இருந்தே மோசடி நடந்திருக்கிறது தெரியுதா, இல்லியா?
கருணாநிதியோட பினாமிதான் இந்த ‘ஜனக்ஷ்’கம்பெனி.ஆ.ராசா ‘கிரீன்ஹவுஸ்’ அப்படினு ஒரு கம்பெனியை தன் மனைவி, மகள் பெயரில் ஆரம்பிச்சிருக்கார். அவர் கட்டி வரும் வருமான வரியை விட, அவரின் உண்மையான வருமானம் அதிகம்.வருவாய்க்கு அதிமாக சொத்து சேர்த்தது மட்டுமல்லாமல் வரி ஏய்ப்பும் செய்திருக்கார்.
அதனால் அடுத்ததா, அவர் மேல் வருமானத்திற்கு அதிகமா சொத்து சேர்த்ததாக புகார் கொடுக்கப் போறேன்.
டெல்லியில் ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து ஊழல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமையப் போகுது. அதுல முதல் வழக்கே ஆ.ராசாவின் வழக்குதான்.இந்த வழக்கில ராசா மட்டுமில்லாம, கருணாநிதி, சோனியா, அவரோட தங்கச்சிகள் நாடியா,அனுஷ்கா எல்லோரையும் சேர்க்கப் போறேன்.’’
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆ.ராசாவைத் தவிரவும் நிறையப் பேர் ஆதாயம் அடைஞ்சிருக்கிறதா சொல்லியிருக்கீங்க.அவங்க யார்னு சொல்ல முடியுமா?
“மொத்தப் பணத்தில ஆ.ராசாவுக்கு 10 சதவிகிதமும், கருணாநிதி குடும்பத்திற்கு 30 சதவிகிதமும், சோனியா காந்தி மற்றும் அவரோட தங்கச்சிங்க நாடியா, அனுஷ்காவுக்கு 60 சதவிகிதமும் பங்கு இருக்கு. சீனாவில இருக்கிற ஒரு பேங்க் மூலம் அவங்களுக்கு பணப் பரிமாற்றம் நடந்திருக்கு.
‘ஜனக்ஷ்’ கம்பெனியோட எம்.டி. ஆரம்பத்தில் ஒரு சாதாரண சினிமா டிஸ்டிரிபியூட்டர். தலைமைச் செயலகம், பாலம் கட்டுறதுன்னு அரசோட காண்ட்ராக்டுகளை வாங்கித்தான் தொழிலதிபர் ஆனார். இவர் மூலம்தான் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாத்தியிருக்காங்க. இதை வைச்சுட்டு கருணாநிதி, சோனியா இரண்டு பேர் மேலயும் கிரிமினல் வழக்கு தொடரப் போறேன்.’’
‘எனக்கு முன்னால் இருந்த அமைச்சர்கள் என்ன ஃபார்முலாவை கடைப்பிடித்தார்களோ,அதையேதான் நானும் கடைப்பிடித்தேன்,நான் குற்றமற்றவன்’ என்று ராசா திரும்பத் திரும்ப கூறுகிறாரே?
“ராசாவுக்கு முன்பு இருந்த பா.ஜ. அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்பது எனக்குத் தேவையில்லை. ராசா தவறு செய்துள்ளார். அதனால் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன்.’’
நான் அமைச்சராக இருந்தபோது எந்தத் தவறும் நடக்கவில்லை என்று முன்னாள் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதிமாறன் கூறியுள்ளாரே.. அதையாவது ஒப்புக் கொள்வீர்களா?
“நான் அமைச்சராக இருந்த காலத்தில் எந்தத் தவறும் நடக்கவில்லை’ என்று தயாநிதி தனக்குத் தானே சர்டிஃபிகேட் கொடுத்திருக்கார்.அவர் என்னென்ன செய்தார்னு சி.பி.ஐ. விசாரணையிலதான் தெரிய வரும். ஒரு திருடனை பிடித்துக் கொடுத்தாகி விட்டது.அவர் விசாரணையில் கொடுக்கும் தகவல்களை வைத்து மத்தவங்க பிடிபடுவாங்க.’’
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.ஆனால் மத்திய அரசு மறுத்து வருவதற்கு என்ன காரணம்?
“இதுவரை ராசா ஊழல் செய்தார் என்ற விவகாரம் தான் வெளிவந்துள்ளது.கூட்டுக் குழு விசாரணை அமைந்தால் சோனியாவோட தங்கச்சிகளுக்கு எல்லாம் இந்த சம்பவத்தி¢ல் தொடர்பு இருக்கிறது தெரிஞ்சு போயிடும்.அதனாலதான் மத்திய அரசு கூட்டுக்குழு விசாரணையைத் தவிர்க்குது.’’
இதில் பிரதமருக்கு என்ன தொடர்பிருக்கும் என நினைக்கிறீர்கள்?
“கருணாநிதி, சோனியா காந்திக்குத் தெரியாமல் இந்த ஊழல் நடக்கவில்லை என்பது பிரதமருக்குத் தெரியும்.பிரதமர் பல விஷயங்களில் மவுனமாக இருந்துள்ளார்.’’
ராசா உயிருக்கு ஆபத்து இருக்கிறதாக பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறீர்கள். யாரால் ஆபத்து?
“ராசாவினால் ஆதாயம் அடைந்தவர்கள் எல்லாம் அவர்கள் தன் பெயரை ராசா வெளியிட்டு விடுவாரோ என்று பயந்து போய் உள்ளனர். அவர்களால் ராசாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.’’
Thanks to Kumudam reporter
No comments:
Post a Comment