Wednesday, July 21, 2010

Politics of R.S.S. and BJP - an analysis

ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க அரசியல்: ஒரு அலசல்

B.R.ஹரன்

பா.ஜ.க – தற்போதைய நிலைமை

2004-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலை விட 2009-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க அடைந்த தோல்வி கடுமையானது. இந்தத் தோல்விக்கு ஒரு முக்கியமான காரணம், 2004-ம் ஆண்டு பெற்ற தோல்விக்கான காரணங்களை பா.ஜ.க சரியாக அலசவில்லை என்று சொல்லலாம். மாநிலம் வாரியாக, தொகுதி வாரியாக, என்ன பிரச்சனைகள் என்பதையும் கவனிக்கத் தவறிவிட்டது. 1999 தேர்தலில் மக்கள் தங்களுக்கு எதற்காக ஆதரவு அளித்தனர், அவர்கள் முன்னிலையில் என்னென்ன வாக்குறுதிகள் அளித்தோம், அவர்களின் எதிர்பார்ர்ப்புகளுக்கிணங்க நாம் ஆட்சி செய்தோமா, நம்மால் நிறைவேற்றமுடியாத சில வாக்குறுதிகளுக்கு சரியான காரணங்களை மக்களிடத்தில் எடுத்துச் சென்றோமா, என்றெல்லாம் சிந்திக்கத் தவறிவிட்டது.

2004 முதல் 2009 வரை தாம் பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் கட்சியை வளர்க்க எந்த நடவடிக்கையையும் பா.ஜ.க சரிவர எடுக்கவில்லை. அந்த ஐந்து வருட காலத்தில் நடந்த சட்ட சபைத் தேர்தல்களில், தங்களுக்கு அபரிமிதமான ஆதரவு உள்ள மாநிலங்களில் மட்டுமே (குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர்) மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அபரிமிதமான ஆதரவு இருந்தும் உட்கட்சிப் பிரச்சனைகளால் ஆட்சியைத் தக்க வைக்க முடியாமல் தோல்வி கண்ட மாநிலம் ராஜஸ்தான். மற்ற சில மாநிலங்களில் (ஹிமாசலப் பிரதேசம், பஞ்ஜாப்) பெற்ற வெற்றி, பா.ஜ.க ஆதரவு ஓரளவிற்கும், அங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மீதான வெறுப்பும், கோவமும் சேர்ந்ததாலும் ஏற்பட்ட வெற்றி என்று சொல்லலாம். உள்ளாட்சி தேர்தல்களில் பெருவாரியாக வெற்றி பெற்றும் சட்டசபை தேர்தலில் மாபெரும் தோல்வி பெற்ற மாநிலம் தில்லி. கட்சியை நன்றாக வளர்த்து, நல்ல முறையில் வெற்றி கண்ட மாநிலமாக கர்நாடகத்தை மட்டும் சொல்லலாம்.

2004 முதல் 2009 வரை ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது என்பதில் மாற்றுக் கருத்திற்கே இடமில்லை. கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, பொருளாதாரம், விலைவாசி, உள்-வெளி பாதுகாப்பு, விவசாயம், உள்துறை, வெளியுறவு, என்று அனைத்துத் துறைகளிலும் மன்மோகன் அரசின் செயல்பாடுகளில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றுமில்லை. மன்மோகன் அரசு ஆட்சி செய்த லட்சணத்தையோ, அவ்வரசின் செயல்பாட்டினால் நாட்டிற்கு ஏற்பட்ட நஷ்டங்களையோ, ஒரு பிரதான எதிர்கட்சி தன் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அருமையான முறையில் பயன்படுத்தியிருக்க முடியும், பயன்படுத்தியிருக்க வேண்டும். பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் மத்திய அரசை சரியானபடி எதிர்கொண்டு, அதன் யோக்கியதை மக்களுக்கு தெரியுமாறு முனைந்து செயல்பட்டிருக்க வேண்டும். இவ்விஷயத்தில் பா.ஜ.க. பரிதாபமாகத் தவறிவிட்டது. சுலபமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டிய பா.ஜ.க நல்ல வாய்ப்பை இழந்து நிற்கிறது. 2004 தோல்விக்குப் பிறகு, அத்தோல்வியின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் என்னெவெல்லாம் தவறுகள் செய்ததோ, அதை விட அதிகமான தவறுகளை இப்போது செய்து கொண்டிருக்கிறது.

பொதுவான கட்சி வகைகள்

நம் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல்வகை, குடும்ப வாரிசு அரசியல் செய்யும் கட்சிகள். இதில் காங்கிரஸ், தி.மு.க, சிவசேனை, ராஷ்ட்ரீய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், அகாலி தளம், தேசிய காங்கிரஸ், பா.ம.க போன்றவை சேரும். இரண்டாவதாக, தனி மனித சர்வாதிகார கட்சிகள். இதில் அ.இ.அ.தி.மு.க, பஹுஜன் சமாஜ், திரிணமுல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, போன்றவை சேரும். மூன்றாவதாக, உட்கட்சி ஜனநாயகத்துடன் செயல் படும் கட்சிகள். இதில் பா.ஜ.க, கம்யூனிசக் கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. ஐக்கிய ஜனதா தளத்தை ஓரளவிற்கு சேர்த்துக் கொள்ளலாம்.

குடும்ப வாரிசு அரசியல் செய்யும் கட்சிகளைப் பொறுத்தவரை, வெற்றிகளின் பாராட்டுதல்கள் அக்குடும்பத்திற்கும், தோல்விகளின் பழிகள் கட்சிக்கும் (மற்ற தலைவர்களுக்கும்) சென்று விடும். குடும்பத்தின் காலடியில் விழுந்து கிடந்து அக்குடும்பத்தைத் துதி பாடும் தலைவர்களும் தொண்டர்களும் இருக்கும் வரை, அக்கட்சிகளுக்கு தோல்விக்குப் பின்னர் பெரிதாக உட்கட்சிப் பிரச்சனைகள் வருவதில்லை. தனி மனித சர்வாதிகாரக் கட்சிகளும் அதே போல் தான். வெற்றியின் பாராட்டுக்கள் அந்த சர்வாதிகாரத் தலைவருக்கும், தோல்வியின் பழிகள் மற்ற தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் தான். இங்கும் தொண்டர்களும் மற்ற தலைவர்களும் தங்கள் சர்வாதிகாரத் தலைவரின் காலடியில் கிடந்து அவர் புகழ் பாடிக் கொண்டிருப்பதால் தோல்வியினால் பிரச்சனைகள் ஏற்படாது. ஆனால், மூன்றாவது வகையாகச் சொல்லப்பட்ட, ஒரளவிற்கு உட்கட்சி ஜனநாயகம் இருக்கக் கூடிய பா.ஜ.க போன்ற கட்சிகளில், வெற்றி பெற்றால் பிரச்சனை கிடையாது. அனைவரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்று கொண்டாடிவிட்டுப் போகலாம். தோல்வியுற்றாலோ, ஒரே குழப்பம் தான். பழியையும் கூட்டாக எல்லோரும் ஏற்றுக் கொண்டால் பிரச்சனையில்லை. ஆனால் பழியை யார் தலை மேல் போடுவது என்று ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தால், கட்சியின் கட்டுப்பாடு போய், ஆங்காங்கே பிளவு ஏற்பட ஏதுவாகிறது. தற்போது பா.ஜ.க-வின் நிலை இது தான்.

தி.மு.க, காங்கிரஸ், போன்ற குடும்ப வாரிசு அரசியல் செய்யும் கட்சிகளாகட்டும், அ.இ.அ.தி.மு.க, பஹுஜன் சமாஜ் போன்ற தனி மனித சர்வாதிகாரிகளின் கட்சிகளாகட்டும், தோல்விக்குப் பிறகு நல்லமுறையில் சமாளித்து தலை நிமிர்ந்து நின்றதையும், நிற்பதையும் பார்க்கிறோம். அதற்கு முக்கிய காரணம், அந்தக் குடும்பங்களும், தலைவர்களும், தங்கள் கீழ் உள்ள மற்ற தலைவர்களையும், தொண்டர்களையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தார்கள். எனவே அவர்கள் மீண்டும் தலை நிமிர்வது ஓரளவிற்கு சாத்தியமானது. ஆனால் தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத் தேர்தலில் தோற்ற பிறகு பா.ஜ.க. நிலைகுலைந்து போனது மிகவும் வருந்தத்தக்கது. இது நம் நாட்டின் ஜனநாயகத்திற்கும், முன்னேற்றத்திற்கும் நல்லதல்ல.

பா.ஜ.க – தலைவர்களின் இயலாமை, கட்சியின் சறுக்கல்

2009 பொதுத் தேர்தல் நிறைவுற்று 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்து, பாராளுமன்றம் ஒரு முறை கூடியும் முடிந்து விட்டது. இன்னும் பா.ஜ.க தோல்வியின் பாதிப்பிலிருந்து வெளிவந்தபாடில்லை. தன்னை வித்தியாசமான கட்சி என்றும், கட்டுப்பாடுள்ள, உட்கட்சி ஜனநாயகம் உள்ள கட்சியென்றும் கூறிக் கொள்ளும் ஒரு கட்சி, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் உடனே இறங்கியிருக்க வேண்டும். தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, சிறந்த பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயலாற்ற என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து, கட்சி பலவீனமாக உள்ள மாநிலங்களில் எப்படி கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று விவாதித்து, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஒரு செயல் திட்டத்தைத் தயார் செய்திருக்கவேண்டும். தேர்தல் முடிந்து 100 நாட்கள் ஆகியும் அவ்வாறு செய்யாமல் இருப்பது பா.ஜ.க போன்று திறமையான தலைவர்கள் உள்ள கட்சிக்கு அழகல்ல.

பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் பல ஆண்டுகள் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள். பல தேர்தல் களங்களைச் சந்தித்தவர்கள். அவர்கள் இவ்வாறு நிலைகுலைந்து போய் கோஷ்டிச் சண்டையிட்டுக் கொள்வது தான் வருத்தமளிக்கிறது. தோல்விக்கான காரணங்களை அலசி ஆராயாமல், அருண் ஜெய்ட்லி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றோருக்கு ராஜ்ய சபையிலும், லோக் சபையிலும் தலைவர் பதவிகள் தரப் பட்டது, ஜஸ்வந்த் சிங், யெஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி போன்றோருக்குப் பிடிக்கவில்லை. உத்தர்கண்ட் மாநிலத்தின் முதல்வரான கந்தூரி அவர்களை அம்மாநிலத்தில் பொதுத் தேர்தல் தோல்விக்குக் காரணமாக்கி அவரை முதல்வர் பதவியிலிருந்து இறக்கியதும், ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்விக்கு அம்மாநில முதல்வராக இருந்த வசுந்தராவை தற்போது சட்டசபை எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து கீழே இறக்காததும் பிரச்சனையாகிப்போனது. இதிலே மற்றொரு பிரச்சனை என்னவென்றால், வசுந்தரா அத்வானிக்கு வேண்டப்பட்டவர் என்றும் சொல்லப் படுவதால், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களின் கட்டளைகளை அவர் மதிப்பதில்லை என்றும் சொல்லப் படுகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில், அத்வானிக்கும் ராஜ்நாத்திற்கும் பனிப்போர் என்றும் வதந்திகள் வந்தவண்ணம் உள்ளன.

பிரச்சனையாக மாறிய ஜஸ்வந்த் சிங் விவகாரம்

இதனிடையே, ஜஸ்வந்த், யெஷ்வந்த் மற்றும் அருண் ஷௌரி ஆகியோர் கட்சித் தலமைக்கு எழுதிய கடிதங்களுக்கு தலைமை சரியான மதிப்பளிக்கவில்லை. அவர்களை அழைத்து குறைகளைக் கேட்கவும் இல்லை. அவமானமுற்ற அவர்கள் ஊடகங்கள் வாயிலாகத் தங்கள் ஆற்றாமையை வெளியிடத் தொடங்கினார்கள். இது மக்களிடையே கட்சியின் பெயருக்குப் பாதகமாக அமைந்தது. யெஷ்வந்த் சின்ஹா கட்சிப் பதவிகளிலிருந்து வெளியேறினார். ஜஸ்வந்த் சிங், சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் பிரிவினைக்குக் காரணமாயிருந்த பாகிஸ்தானின் முதல் அதிபர் முகம்மது அலி ஜின்னாவைப் பற்றிய ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதை வெளியிட்டால் தேர்தல் நேரத்தில் கட்சியின் வெற்றிக்குப் பாதகமாக அமையும் என்கிற சந்தேகத்தின் பேரில், கட்சித் தலைமை, ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தலின் போதும், பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போதும், புத்தகத்தை வெளியிடவேண்டாம் என்று கூறிவிட்டது. தேர்தல் முடிந்தபடியால் தற்போது புத்தகத்தின் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்தார் ஜஸ்வந்த் சிங்.

விழாவிற்கு ஓரிரு தினங்கள் முன்பே, அவர் புத்தகத்தில் இந்தியாவின் பிரிவினைக்கு சர்தார் வல்லபாய் படேலும், ஜவஹர்லால் நேருவும் தான் காரணம் என்றும், ஜின்னாவை மிகவும் பாராட்டியும் எழுதியிருந்தது, ஊடகங்களில் வெளியானது. இதனால் கோபத்திற்கும் அதிருப்திக்கும் ஆளான பா.ஜ.கவினர் யாரும் புத்தக வெளியீட்டு விழாவிற்குப் போகாமல் அதனைப் புறக்கணித்தனர். இதனிடையே, பா.ஜ.கவின் “சிந்தனைக் கூட்டம்” சிம்லாவில் நடைபெற ஏற்பாடு நடந்தது. அக்கூட்டத்திற்கு யெஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஷோரி ஆகியோருக்கு அழைப்பு இல்லை. ஜஸ்வந்த்திற்கு மட்டும் இருந்தது. அவரும் சிம்லா சென்றடைந்தார். அவரின் புத்தக வெளியீட்டினால் தர்மசங்கடத்துக்கு உள்ளாகியிருந்த பா.ஜ.க தலைமை, சிந்தனைக் கூட்டம் நடக்கவிருந்த அன்று காலை ஒரு அவசரக் கூட்டம் நடத்தி, ஜஸ்வந்த் சிங்கை கட்சியிலிருந்து வெளியேற்ற முடிவு செய்து, அம்முடிவை அவர் தங்கியிருந்த அறைக்குத் தொலைபேசி மூலம் அழைத்து அவரிடம் தெரிவித்தது.

கட்சி தொடங்கிய காலத்திலிருந்து முப்பது வருடங்களுக்கும் மேலாக கட்சிப்பணியாற்றியவர், 1998 முதல் 2004 வரை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் பொருளாதார, வெளியுறவு போன்ற துறைகளின் அமைச்சராக இருந்தவர், கட்சியிலும் பல பொறுப்புகள் வகித்தவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர், ஆகிய சிறப்புகள் பெற்ற ஒரு மூத்த தலைவரை, மரியாதை நிமித்தமாகக் கூட ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்யாமல், அவரின் தரப்பு நியாயங்களைக்கூட கேட்காமல், சிந்தனைக் கூட்டத்திற்கு வந்தவரை, சற்றும் எதிர்பாராமல், தொலை பேசி மூலம் கட்சியிலிருந்து வெளியேற்றம் செய்தது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தந்தனென்னவோ உண்மை தான். கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக, கட்சியினர் தங்கள் ஆதர்ச தலைவராகப் போற்றும் சர்தார் வல்லபாய் படேலைப் பற்றி அவருக்குக் கெட்ட பெயர் ஏற்படும் வகையில் எழுதியது மாபெரும் தவறு தான். ஆனால் இத்தனை ஆண்டுகள் கட்சியில் உழைத்த ஒரு மூத்த தலைவரான அவரை நீக்கம் செய்த முறை கட்சியிலேயே பலருக்கு அதிருப்தி தருவதாக இருந்துள்ளது. எனினும் ஜஸ்வந்தை நீக்கம் செய்ததன் மூலம் மற்ற அதிருப்தியாளர்களுக்கு, கட்சிக் கொள்கைக்கு மாறாக கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்பவர்களுக்கு இந்த கதி தான் ஏற்படும், என்கிற ஒரு பலமான தகவலை கட்சித் தலைமை அனுப்பியது. இதன் மூலம், ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு வசுந்தராவைக் கட்சித் தலைமை வற்புறுத்த ஆரம்பித்தது.

ஜஸ்வந்தின் ஜின்னா விவகாரத்தில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் 2005-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற, அப்போதைய துணைப் பிரதமாரகவும் உள்துறை மந்திரியாகவும் இருந்த அத்வானி அவர்கள், அங்கே பாகிஸ்தான் மக்களிடையே ஜின்னாவை ”மதச்சார்பற்றவர்” என்று அவருடைய பழைய மாநாட்டுப் பேச்சு ஒன்றை குறிப்பிட்டு, பாராட்டிப் பேசினார். அதன் பிறகு அவருக்கு ஆர்.எஸ்.எஸ் கண்டனம் தெரிவித்து கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறங்கவேண்டி வந்தது. ஜஸ்வந்த், அத்வானி இருவரும் ஜின்னாவைப் பாராட்டிப் பேசிய பேச்சுகளில் பெருமளவு வேறுபாடுகள் இருந்தாலும், அத்வானிக்கு ஒரு சட்டம் ஜஸ்வந்துக்கு ஒரு சட்டமா என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். ஜஸ்வந்த்தை கட்சியை விட்டு நீக்கிய விதம் மிகவும் அநாகரீகமாக இருந்தது என்றாலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அவர் நடந்து கொள்ளும் விதமும், ஏதோ முப்பது ஆண்டுகள் பா.ஜ.க வின் எதிர்க்கட்சியில் இருந்து செயல்பட்டது போலவும் அவர் பேசுகின்ற பேச்சுக்களும், அவர் தன் புத்தகம் பாகிஸ்தானில் பிரமாதமாக வியாபாரம் ஆகவேண்டும் என்கிற நோக்கத்தோடு அங்கு சென்று அந்நாட்டு ஊடகங்களில் நம் தேசத் தலைவர்களை விமரிசனம் செய்ததும், அவர் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச பரிதாபமும் போய், அவரை கட்சியிலிருந்து நீக்கியது சரிதான் என்கிற முடிவிற்கு நம்மை வரவழைத்து விட்டன.

ஜஸ்வந்த் நடவடிகையின் விளைவுகள்

ஜஸ்வந்த் சிங்கின் மீது தலைமை எடுத்த நடவடிக்கை மூலம், ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு வசுந்தராவைக் கட்சித் தலைமை வற்புறுத்த ஆரம்பித்தது.

இந்நடவடிக்கையினால் யெஷ்வந்த் சின்ஹா போன்றவர்கள் சற்று பின்வாங்கினாலும், வசுந்தரா இப்படியும் அப்படியுமாக ஆட்டம் காண்பித்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு தலைவரான அருண் ஷோரி சற்றும் தயங்காமல் தன்னுடைய அதிருப்தியையும், நிலைப்பாடையும், ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெளிவாகக் கூறினார். கட்சித் தலைமையையும் சற்று காட்டமாக விமரிசனம் செய்தார். கூடவே மிகவும் உஷாராக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைக் கவரும் வகையில், அதைப் பாராட்டும் வகையில், பா.ஜ.க-வை ஆர்.எஸ்.எஸ். கையகப்படுத்த வேண்டும் என்றும், அவ்வியக்கத்தின் தலைமையின் கீழ் தான் பா.ஜ.க செயல் படவேண்டும் என்றும் அந்தப் பேட்டியில் சொல்லி வைத்தார். பா.ஜ.க மீதான ஆர்.எஸ்.எஸ்ஸின் பிடிப்பு வெளியில் தெரியாவிட்டாலும், உள்ளுக்குள் அதுவே உண்மையாதலால், ஜஸ்வந்த் சிங்கின் மேல் அதிரடியாக நடவடிக்கை எடுத்த பா.ஜ.க தலைமையினால் அருண் ஷோரியின் மேல் எடுக்க இயலவில்லை. மேலும் உத்தர்கண்ட் மாநில முதல்வர் பதவியிலிருந்து இறக்கப்பட்ட கந்தூரி அவர்களும், மற்றவர்கள் கட்சியின் தோல்விக்காகத் தண்டிக்கப் படாதபோது தான் மட்டும் ஏன் தண்டிக்கப் படவேண்டும், என கேட்டு கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் சென்னை வருகை

bhagavatஜஸ்வந்த் சிங், யெஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகியோர் அதிருப்தியாளர்களாக மாறியிருந்த சமயத்தில், சென்னைக்கு முதல் பயணமாக வந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு மோகன்ஜி பாக்வத் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பா.ஜ.க பற்றி கேட்கப்பட்ட சரமாரியான கேள்விகளுக்கு நிதானமாகவும் தெளிவாகவும் பதிலளித்தார். “ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகர்கள் பலர் பா.ஜ.க வில் இருந்தாலும் அது தனியான சுதந்திரமான கட்சி, அதன் பிரச்சனைகளை அதுவே தீர்த்துக் கொள்ளக்கூடிய சக்தி படைத்தது. தற்போது அக்கட்சிக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் பூசல்கள் மனதுக்கு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், அவற்றிலிருந்து விரைவில் மீண்டு வரும். ஆர்.எஸ்.எஸ். என்பது சமூக மற்றும் கலாசார இயக்கமேயன்றி, அரசியல் இயக்கம் அல்ல. எங்களுக்கு அரசியல் செய்யவும் விருப்பமில்லை. பா.ஜ.க விற்கு நாங்களாக எந்த அறிவுரையும், ஆலோசனையும் வழங்கமாட்டோம். அவர்களாக எங்களிடம் வந்து அறிவுரையோ ஆலோசனையோ கேட்டால் வழங்கத் தயாராக இருக்கிறோம்” என்று மிகத் தெளிவாகத் தெரிவித்தார் மோகன்ஜி.

பத்திரிகையாளர் கூட்டத்தைத் தொடர்ந்து ஒரு மாபெரும் பொதுக் கூட்டமும் திருவான்மியூரில் நடந்தேறியது. ஐய்யாயிரத்திற்கு மேற்பட்ட ஸ்வயம் சேவகர்களும், அதற்கு சமமான பொது மக்களுமாக மொத்தம் பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட அந்த மாபெரும் கூட்டத்தில் உரையாற்றிய திரு மோகன்ஜி பாக்வத் அவர்கள், “ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தேசத்தின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து சேவை செய்து கொண்டு வருகின்றது. இந்த இயக்கத்தின் ஸ்வயம் சேவகர்கள் நல்ல முறையில் பண்படுத்தப் பட்டு, சுதந்திரமாக, சுயமாக, பல தளங்களில் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் விஞ்ஞானம் முன்னேறினாலும், கூடவே சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது; அதே போல் தான் ஒரு பக்கம் மதப் பற்றும் ஆன்மீகமும் வளர்ந்தாலும், சண்டை சச்சரவுகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன. உடல், மனம், அறிவு ஆகியவற்றை அறிந்துகொணட உலகு, தர்மத்தை அறியத் தவறிவிட்டது. அந்த “தர்மம்” என்பது நம் தேசத்தில் தான் உள்ளது. மனிதத்தையும், சகோதரத்துவத்தையும் போதிக்கும் அந்த தர்மமே ஹிந்துத்துவம். உலக நாடுகளுக்கிடையே சகோதரத்துவத்தையும், சரிசமமான பாவனையையும், ஏற்படுத்த ஹிந்துத்துவம் உள்ள நம் நாட்டினால் மட்டுமே முடியும். அதைத்தான் உலகும் எதிர்பார்க்கிறது. தேவைக்கேற்ற திருப்தியுடன் கூடிய எளிமையான வாழ்வு எப்படி வாழவேண்டும் என்று நாம் தான் உலக நாடுகளுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும்”.

”ஒரே மாதிரியான சமூகம் இருந்தால் தான் ஒற்றுமை ஏற்படும் என்று நம்பிக்கொண்டிருக்கும் உலக நாடுகளுக்கு, பல்வேறு விதமான மக்கள் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்க முடியும் என்று நிரூபித்திருப்பவர்கள் நாம். நம்மிடையே உள்ள ஹிந்துத் தன்மையினால் தான் அந்த ஒற்றுமை சாத்தியமானது. நாம் எல்லா தனியடையாளங்களையும் அறிந்து மதிப்பு கொடுத்து, அனைத்தையும் ஒன்றுபடுத்தி, நமக்கென்று ஒரு பெரிய அடையாளத்தை ஏற்படுத்திவிட்டோம். ஹிந்துத் தன்மை என்ற உணர்வே அந்த அடையாளத்தை ஏற்படுத்த உதவியுள்ளது. நம் நாட்டிற்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது. ஹிந்துத்தன்மையே அந்த பாரம்பரியம். இந்த ஹிந்துத் தன்மையை விட்டு, நம் பாரமபரியத்திலிருந்து விலகிப் போன ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காள தேசம், போன்ற நிலப் பரப்புகளெல்லாம் அமைதியை இழந்து கலவர பூமியாக இருக்கின்றன. சனாதன தர்மமே நம் தேசத்தின், சமூகத்தின் தாரக மந்திரம். தர்மம் நிலைத்துள்ள ஒரு சமூகத்தை அமைக்க தலைவர்களும், கோஷங்களும் போதாது. நாட்டில் உள்ள ஒவ்வொரு பாமரனும், நற்குணங்களும், எப்போதும் தயார் நிலயிலும், உள்ளவனாக ஆக வேண்டும்”.

“அந்தக் குறிக்கோளை முன்வைத்துதான் ஆர்.எஸ்.எஸ். இயங்கிக்கொண்டிருக்கிறது. எங்களுக்கு அரசியல் தேவையில்லை. அதிகாரம் வேண்டி தினந்தினம் நடந்து கொண்டிருக்கும் மலிவான அரசியல் விளையாட்டுகளில் நாங்கள் பங்குபெற விரும்பவில்லை. ஜாதி, மத, மொழி வேறுபாடுகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. அந்த வேறுபாடுகள் மறைய வேண்டும். ஹிந்துஸ்தானம், இந்தியா, பாரதம், என்பவை அனைத்தும் “ஹிந்து” என்பதையே குறிக்கின்றன. இது தான் நம் தேசத்தின் அடையாளம், ஹிந்து என்கிற அடையாளம், என்பதே மறுக்கமுடியாத உண்மை. இந்த ஹிந்து அடையாளமே நம்மை இந்த உலகத்தின் தலைசிறந்த நாடாக ஆக்கி தலைமைப் பீடத்தில் இருக்கச்செய்யப் போகிறது” என்று பேசி, நாட்டின் இளைஞர்களை, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து, அதன் உள்ளே வந்து அதன் குணநலன்களை அனுபவித்து, அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, தேச சேவையில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்தார்.

ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையும் பா.ஜ.க சிக்கல்களும்

சென்னைப் பயணத்தை முடித்துக் கொண்டு புது தில்லி திரும்பிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ஜி பாக்வத் அவர்கள் “டைம்ஸ் நௌ” தொலைக்காட்சிக்கு ஒரு அருமையான பேட்டி அளித்தார். அதில், “பா.ஜ.க சுயமான சுதந்திரமான அமைப்பு. அதன் தினசரி காரியங்களில் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) தலையிடாது. தற்போது பா.ஜ.கவில் உட்கட்சிப் பூசல் அதிகரித்திருக்கிறது கவலையை அளிக்கிறது. இருந்தாலும் இந்தப் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் சக்தியும், திறமையும அக்கட்சித் தலைவர்களிடம் உண்டு. சஙத்தைப் பொறுத்தவரை தலைவர் பதவிக்கு 55 முதல் 65 வயது வரை நிர்ணயம் செய்திருக்கிறோம். பா.ஜ.க அதன் தலைமையில் மாற்றம் கொண்டு வருமா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களாக சங்கத்திடம் ஆலோசனையோ அறிவுரையோ கேட்டால் கண்டிப்பாக வழங்குவோம். சஙத்தைப் பொறுத்த வரை தலைமை ஏற்று நடத்துவதற்கு தேவைப்பட்ட நபர்கள் இருக்கின்றார்கள். நினைத்த மாத்திரத்தில் 75 தலைவர்கள் கூட சங்கத்தால் தேர்ந்தெடுக்க முடியும். சிம்லாவில் நடக்க இருக்கும் சிந்தனைக் கூட்டத்தில் பா.ஜ.க அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து ஒருமைப்பாட்டுடன், கட்டுப்பாட்டுடன், பழைய சக்தியுடன் மீண்டும் திரும்பும் என்று எதிர்பார்ர்க்கிறோம்” என்று கூறினார். பா.ஜ.கவிடம் சங்கம் என்ன எதிர்பார்ர்க்கிறது என்பதைத் தெளிவாகப் புரிய வைத்தார்.

ஆனாலும் பா.ஜ.க திரு மோகன்ஜி அவர்களின் எச்சரிக்கையை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவருடைய ஆலோசனைகளையும் எதிர்பார்ப்புகளையும் புறக்கணித்தது என்றே சொல்லவேண்டும். அவர் தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னதை தீவிரத்துடன் சிந்தித்திருந்தால் அக்கட்சி தோல்விக்கான காரணங்களை அலசியிருந்திருக்கும். மேலும் அதிருப்தியில் இருக்கும் யெஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துப் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கும். ஜஸ்வந்த் சிங்கையும் அநாகரீகமாக வெளியேற்றியிருக்காது. அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் ஒரு செயல் திட்டம் வரைந்திருக்கும். இவை எதுவும் செய்யாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஜஸ்வந்தை மட்டும் அவசரகதியில் கட்சியிலிருந்து நீக்கி விட்டு மற்றபடி உருப்படியாக ஏதும் செய்யாமல் சிந்தனைக் கூட்டத்தை முடித்துக் கொண்டது பா.ஜ.க. சிம்லாவிலிருந்து டில்லி திரும்பியபிறகும் அதிருப்தியாளர்களை கூப்பிட்டு பேசவில்லை தலைமை. வெறுத்துப்போன அருண் ஷோரி என்.டி.டிவி தொலைக்காட்சிக்கு முதலிலேயே சொன்னது போல் பேட்டி கொடுக்க, ஜஸ்வந்த் சிங் மற்ற பல புகார்களை வரிசையாக அடுக்கி அத்வானியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த, 2005 லிருந்து அத்வானியின் சரிவிற்ககுப் பெரிதும் காரணமாயிருந்த சுதீந்த்ர குல்கர்னி (தான் பா.ஜ.க.விற்கு வந்த வேலையை செவ்வனே முடித்த சந்தோஷத்தில்) கட்சியை விட்டு விலக, யெஷ்வந்த் சின்ஹா மீண்டும் பேச ஆரம்பிக்க, இவர்கள் போதாது என்று முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ப்ராஜேஷ் மிஷ்ரா (அத்வானிக்கு சுதீந்த்ர குல்கர்னியை அனுப்பியது போலவே, இவரை வாஜ்பாய்க்கு “செக்” வைக்க எதிர் தரப்பு அனுப்பியது என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு இருக்கின்றது) அவர்களும் காந்தஹார் விமான கடத்தல் விவகாரத்தில் அத்வானியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த, என்று பா.ஜ.க படாத பாடு பட்டது.

mohan_bhagwat-rss1இதனால் மிகவும் வெறுத்துப்போன ஆர்.எஸ்.எஸ். மீண்டும் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. புயலின் நடுவே லாகவமாக படகு செலுத்திப்போகும் படகோட்டி போல, திரு மோகன்ஜி பாக்வத் அவர்கள், ஆழமான பிரச்சனைகளில் பா.ஜ.க சிக்கியிருந்த நேரத்தில், ஊடகங்களின் கேள்விக் கணைகளை லாகவமாக எதிர்கொண்டார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்த இக்கூட்டத்திற்கு வந்திருந்த பத்திரிகையாளர் அனைவரும் கூட்டம் முடிந்த பின்னர் மோகன்ஜியின் திறமையை வியந்தும் பாராட்டியும் பேசினர். இக்கூட்டத்தில் அவர், தான் ஏற்கனவே ”டைம்ஸ் நௌ” தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டியில் சொன்னதை மீண்டும் நினைவுகூர்ந்தார். மேலும், “ஒரே மனப்போக்கும் சிந்தனையும் உள்ள அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து தேசத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபடவேண்டும். நம்முடைய தனிப்பட்ட வேற்றுமைகளும், கருத்து வேறுபாடுகளும், நம் ஒற்றுமையையும் உழைப்பையும் பாதிக்காவண்ணம் பார்த்துக் கொள்ளவேண்டும். சங்கத்தைப் பொறுத்தவரை இப்போது செய்துகொண்டிருக்கும் நற்பணிகளை மேன்மேலும் அதிகப் படுத்தி இந்நாட்டிற்குச் சேவையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும். பா.ஜ.க தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை விரைவில் முடிவிற்குக் கொண்டு வந்து மீண்டும் புத்துணர்வுடன் திகழும். அதற்கான வேலைகளில் பா.ஜ.க முழுமனத்துடன் இறங்கிவிட்டது. அக்கட்சிக்குத் தேவையான சமயத்தில் அறிவுரையும், ஆலோசனையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறி முடித்தார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்த பத்திரிகையாளர் கூட்டத்திற்குப் பிறகு பா.ஜ.க. தலைவர்கள் பலரும் திரு மோகன்ஜியை சந்தித்து ஆலோசனைகள் பெற்றனர். அவரும் அத்வானி அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். தற்போது பா.ஜ.க வில் சற்று அமைதி நிலவுகிறது. எல்லோரும் தற்போதைய நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ளனர் என்பதும், கூடிய விரைவில் உட்கட்சிப் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உணர்ந்திருப்பதும் வெளிப்படையாகவே தெரிகின்றது.

மோகன்ஜி தலைமையும் சங்கத்தின் எழுச்சியும்

இந்த பலவீனமான, இக்கட்டான சமயத்தில், சங்க இயக்கங்களின் சேவகர்களுக்கும் பா.ஜ.க தொண்டர்களுக்கும் மற்றும் அவ்வியக்கங்களுக்கு ஆதரவு அளித்து வரும் மக்களுக்கும், ஊக்கமும் உற்சாகமும் அளிக்கக் கூடிய ஒரே விஷயம் திரு மோகன்ஜி பாக்வத் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைமை பொறுப்பு ஏற்றிருப்பது தான். பொதுத் தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் முன்னர் தான் பொறுப்பு ஏற்றுக்கொண்டார் என்றாலும், அவர் கடந்த ஆறு மாதங்களாக பணி புரிகின்ற செயற்பாடு, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. தெளிவாக யோசித்து நன்றாக நிலவரங்கள் அறிந்து பேசுவது, திட்டமிட்டு செயல்படுவது, ஊடகங்களை ஆற்றலுடன் எதிர்கொள்வது, பா.ஜ.க வினரை ஒதுக்கியும் விடாமல் அதே சமயத்தில் மிக அதிகமாகவும் தலையிடாமல் அவர்களுக்கு தக்க சமயத்தில் தேவையான ஆலோசனைகள் வழங்கி கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த விதம், என அனைத்துச் செயல்களும் மிகவும் பாராட்டத் தக்க விதத்தில் அமைந்துள்ளன.

மோகன்ஜி பாக்வத் அவர்களின் செயல்பாட்டினால், பா.ஜ.க வின் தலைமையில் மாற்றங்கள் ஏற்படும் என்றும், இளைய வயதினர்களுக்கு வாய்ப்புகள் கிட்டும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. அதே நேரத்தில், அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களும், அவர்களுக்கு ஏற்ப மற்ற பதவிகள் தரப் படுவார்கள் என்றும் பேசப்படுகிறது. வருகின்ற டிசம்பர் மாதத்துடன் ராஜ்நாத் சிங்கின் பதவிக் காலம் முடிவடைவதால், வேறு ஒரு இளைய வயதுடைய தலைவர் அனைவரின் சம்மதத்துடன் பதவியேற்றப்படுவார் என்றும், மாநிலத் தலைவர்கள் சிலரும் மத்தியப் பணிகளுக்கு அழைக்கப் படுவார்கள் என்றும், பல இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப் படும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தன்னுடைய ஆலோசனைகளுக்கும், அறிவுரைகளுக்கும், செயல்பாட்டிற்கும் தக்க அங்கீகாரம் கிடைக்கும் விதமாக, மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை சென்று மோகன்ஜி சந்தித்தது, அவரின் நற்பண்பைக் காட்டும் விதமாக அமைந்துள்ளது.

மோகன்ஜியின் வருகையும், செயல்பாடுகளும், சங்கத்தில் ஒரு எழுச்சியையும் புத்துணர்ச்சியையும் அளித்துள்ளன என்றால் அது மிகையாகாது. அத்வானியும் லோக்சபையின் எதிர்கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து வேறு ஒரு இளைஞருக்கு வழிவிட்டு பிதாமகர் ஸ்தானத்திலிருந்து கட்சியை வழிநடத்திச் செல்வார் என்ற எதிர்பார்ப்பும் பெரும்பாலும் இருந்தாலும், கிடைக்கின்ற செய்திகளை வைத்துப் பார்க்கின்றபோது அத்வானி இப்போதைக்குக் வெளியேறுவதாகத் தெரியவில்லை. அவருடைய முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி 13-ஆம் தேதியிட்ட இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழில், “Advani will prove his obituary-writers wrong” என்கிற கட்டுரையில், அத்வானி இப்போதைக்கு அரசியலை விட்டு விலகமாட்டார் என்றே எழுதியுள்ளார். இந்த ஒரு விஷயம் மோஹன்ஜி அவர்களுக்குச் சவாலாகவே இருந்தாலும், அவரும் அத்வானியும் கட்சி மற்றும் சங்கத்தின் நலன் கருதி, பெரும்பாலானோர் எதிர்பார்க்கும் படி நல்ல முடிவை எடுப்பார்கள் என்றே தோன்றுகிறது

சங்கம் செய்ய வேண்டியது.

advani_vajpayee2009 தேர்தலின் முடிவுகளில் பா.ஜ.க விற்கு மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் ஒரு முக்கியமான பாடம் உள்ளது. கடந்த காலக் கட்டத்தில், குறிப்பாக சென்ற பத்து ஆண்டுகளில், ஆர்.எஸ்.எஸ் அரசியல் விவகாரங்களை முழுவதுமாகப் பா.ஜ.க விடமே ஒப்படைத்து விட்டு ஒதுங்கியிருந்தது தவறு என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது. வாஜ்பாய், அத்வானி போன்ற மூத்த தலைவர்களின் பிராபல்யமும், கட்சியில் அவர்கள் மேலிருந்த அபரிமிதமான வழிபாடும், அதற்குக் காரணமாக இருக்கலாம். அவ்விரு பெருந்தலைவர்களும் கூட “சர்சங்கசலக்” (ஆர்.எஸ்.எஸ். தலைமை) என்கிற ஸ்தானத்திற்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுக்கத் தவறிவிட்டார்களோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால், சங்கப் பின்னணி இல்லாமல், சங்கத்தின் வெளியிலிருந்து பா.ஜ.கவில் இணைந்த பலர் பல பதவிகளில் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். அவர்கள் சங்கத்தின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் நடந்துகொண்டிருக்க வேண்டும்.

சங்கப் பின்னணியும், சங்க உறவும் இல்லாத நபர்களின் கைகள் கட்சியில் ஓங்கியிருப்பது சங்கத்திற்கும், கட்சிக்கும், நாட்டிற்கும் நல்லதல்ல. 2004, 2009 தேர்தல்களின் முடிவுகள் இந்த உண்மையைத் தெளிவாக நிரூபித்து விட்டன. மேலும் கடந்த பத்து ஆண்டுகளில், பல நல்ல, செயல் திறன் கொண்ட தலைவர்களை (உமா பாரதி, கல்யாண் சிங், மற்றும் சிலர்) சங்கமும், கட்சியும் இழந்திருக்கின்றன. விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களின் அதிருப்தியையும் பா.ஜ.க சம்பாதித்துக் கொண்டுள்ளது. அவர்களும் இவர்களின் இக்கட்டான சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளாமல் சில முறை நடந்து கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் சமயங்களில் கூட ஒற்றுமையில்லாமல் இருந்திருக்கிறார்கள். இவையெல்லாம் பெரிய இழப்புகளுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.

எனவே, கடந்த பத்து ஆண்டுகளின் நிகழ்வுகளையெல்லாம் எண்ணிப் பார்த்து, அவை போன்ற தவறுகள் மீண்டும் ஏற்படாவண்ணம், சஙத்தின் அனைத்து இயக்கங்களும் ஒற்றுமையுடன் செயல் படுமாறு ஒரு மாபெரும் செயல் திட்டம் தயார் செய்யப் படவேண்டும். அந்தந்த இயக்கம் அவரவர்களுக்கு என்றுள்ள தளங்களில் தீவிரமாக செயல் படும் அதே நேரத்தில், தேசத்தின் பிரச்சனை என்று வரும்போது அனைத்து இயக்கங்களும் ஒரே கூறையின் கீழ் கூடி சங்கத்தின் பிரம்மாண்ட சக்தியை காண்பிக்க வேண்டும். சங்க இயக்கங்கள் ஆன்மீக குருமார்களிடத்தும் இடைவெளியில்லாத உறவும் நட்பும் எப்போதும் கொண்டிருக்க வேண்டும். அனைத்து இயக்கங்களும் ஒன்றாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இயக்கங்களின் ஒற்றுமையைப் பார்த்துத்தான் மக்கள் ஒன்று கூடுவார்கள். ஆகவே அவ்வப்போது ஆர்.எஸ்.எஸ் அரசியல் பக்கம் பார்க்க வேண்டும் என்பதும், பா.ஜ.கவை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

எந்த அரசனும் தன்னிச்சையாக ஆட்சி செய்தது கிடையாது. எந்த மன்னனும் மந்திரியின் ஆலோசனைகளைக் கேட்டுத்தான் செயல் படுவான். ஒவ்வொரு சக்ரவர்த்தியின் பின்னாலும் ஒரு ஆச்சாரியர் இருப்பார். சந்த்ரகுப்தனுக்கு சாணக்கியர் போல! ஒவ்வொரு வம்சத்திற்கும் ஒரு குரு இருப்பார். அவர் சொல்படியே அந்த வம்சத்தினர் ஆட்சி செய்வார்கள். ரகு வம்சத்திற்கு வசிஷ்டர் போல! எனவே, இந்த தேசத்தின் இந்து இயக்கங்கள் அரசியல், ஆன்மீக, கலாசார பாதைகளில் தனித்தனியாகப் பயணம் செய்தாலும், அனைவரும் பயணம் மேற்கொண்ட குறிக்கோள் “தேச முன்னேற்றம்” என்ற ஒரே குறிக்கோள் தான். அரசியல், ஆன்மீகம், கலாசாரம் ஆகிய அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்ணைந்து இருப்பது தான் இந்த தேசத்தின் பாரம்பரியம். அதுதான் ”ஹிந்துத்துவம்” என்பது. ஒரே குறிக்கோளுடன் சென்றுகொண்டிருக்கின்ற பயணங்களின் அடிப்படையும் அதே ஹிந்துத்துவம் தான். இந்த உண்மையை மோகன்ஜி பாக்வத் அவர்கள் நன்றாகவே உணர்ந்திருகிறார் என்பது தான் நம்பிக்கை தரும் செய்தி. இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த தேசத்தில் பிறந்து, இம்மண்ணில் வளர்ந்து வரும் அனைவருக்கும் இந்த அடையாளம் பொது என்று அவர் தெளிவு படக் கூறியது தான். அதாவது ஜாதி மத வேறு பாடுகள் எதுவும் இல்லாமல் இந்த பூமியைச் சேர்ந்த அனைவருக்கும் இந்த ஹிந்துத்துவ அடையாளம் பொதுவானது என்பது தான்!

சென்னையில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசிய போது சொன்னது: “எங்கள் இயக்கம் தேசிய கலாசார இயக்கம். சமூகத்தை ஹிந்துத்துவம் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில், ஹிந்து அடையாளத்துடன் முன்னேற்றுவதே எங்கள் பணி. உலகின் தலை சிறந்த நாடாக பாரதம் விளங்குவது இதன் மூலமே தான் சாத்தியம். நாங்கள் அரசியல் இயக்கம் அல்ல. தினசரி அரசியல் செய்ய மாட்டோம். ஆனால் இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கான முக்கியமான முடிவுகளை அரசாங்கமோ, பாராளுமன்றமோ எடுகும்போது, இந்த தேசத்தின் நலன் கருதி, எந்த மாதிரியான முடிவு நல்ல முடிவோ, அம்முடிவை எடுக்குமாறு செய்வதே எங்கள் தலையாய பணியாக இருக்கும்”.

எனவே, ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க வின் நடவடிக்கைகளைக் கண்காணித்து ஆலோசனைகள் வழங்க, அதன்படி பா.ஜ.க நடந்துகொள்வது, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. மட்டுமல்லாமல் இந்த தேசத்திற்கும் நன்மை பயக்கும்.

Source: http://www.tamilhindu.com/2009/09/rss-bjp-politics-an-analysis/

No comments:

Post a Comment