Wednesday, July 21, 2010

July Agitation - BJP

வறுமைக்கும் உண்டோ மதம்? பா.ஜ.கவின் ஜூலைப் போராட்டம்

tamilnadu_poor_govt_school”என்னா கண்ணு, என்னா ஆச்சு உனக்கு? பசிக்குதா?” வாடிய முகத்துடன் சோகமாகப் பள்ளியிலிருந்து வந்த தன் மகள் மகேஸ்வரியைப் பார்த்து கண்ணம்மா கேட்டாள். அந்தக் குடிசைப் பகுதிக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளியில் தான் மகேஸ்வரி 4-ஆம் வகுப்பு படிக்கிறாள்.

“அம்மா அம்மா.. இன்னிக்கு, ஸ்கூல்ல சில பிள்ளைங்கள மட்டும் பேர் சொல்லித் தனியாக் கூப்பிட்டாங்கம்மா. ரோஸ்மேரி, அப்துல்லா, ஸ்டீபன், அப்றம் சரவணன், சீனிவாசன்… ம்ம்ம்.. ஞாயித்துக் கிழமை காலைல கருப்பு புஸ்தகத்தை கையில் வெச்சுக்கிட்டு கூட்டத்தோட சர்ச் போவானுங்களே அந்தப் பசங்க.. அப்றம் அருள்ராஜ், ரஃபீக், ஸ்டெல்லா… ” என்று அடுக்கத் தொடங்கியது குழந்தை.

“சரி சொல்லு, எதுக்கு?” - இடைமறித்து கேள்விக் குறியுடன் தன் மகளின் முகத்தைப் பார்த்தாள் கண்ணம்மா.

”இவங்களை எல்லாம் தனியாக் கூட்டிக்கிட்டுப் போனாங்க.. கூட்டிட்டுப்போயி அவங்க கைல எல்லாம் ஆளுக்கு ஒரு கவர்ல நிறைய பணம் போட்டுக் குடுத்தாங்க. அப்பா அம்மா படிக்கவெக்க எவ்ளோ கஷ்டப்படறாங்க. கவனமா எடுத்துப்போய் வீட்ல குடுங்க”ன்னு சொன்னாங்க.

நம்மளையும் கூப்பிடுவாங்கன்னு நானு, செல்வி, அர்ஜுன், காமாட்சி, குமாரு எல்லாரும் காத்துக்கிட்டே இருந்தோம்.. ஆனா எங்களைக் கூப்பிடவே இல்லம்மா. ஏமாத்தமா இருந்திச்சு. “அதெல்லாம் யேசு சாமி கும்பிட்டாதான் தருவாங்க, என்ன தெர்தா” அப்டீன்னு ஸ்டீபனும், அருள்ராஜும் பழிப்பு காட்டிட்டுப் போறானுங்கம்மா.. நம்ப அவங்களை விட ரொம்ப ஏழைங்க தான? பின்ன ஏம்மா எனக்குப் பணம் தரல?”

அப்பாவியாக மகள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாள் கண்ணம்மா. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதாவது கிறித்தவ நிறுவனம் பணம் வழங்குகிறதோ என்று நினைத்தாள். எதற்கும் பக்கத்து வீட்டு பானு அக்காவிடம் சாயங்காலம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

*************

இப்படிப் பட்ட சம்பவங்கள் தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. வெள்ளை உள்ளம் படைத்த சிறு குழந்தைகளின் உள்ளங்களிலும் சிறுபான்மைவாத அரசியலின் விஷம் தீண்டி அவநம்பிக்கைகளையும், பரஸ்பர சந்தேகங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

மிஸ்ரா கமிஷன், சச்சார் கமிட்டி என்று கமிஷன்களின் பரிந்துரைகளைக் காரணம் காட்டி “இந்தியாவின் வளங்கள் மீது முதல் உரிமை சிறுபான்மையினருக்குத் தான், குறிப்பாக முஸ்லீம்களுக்கு.. அதை மத்திய அரசு வலியுறுத்தும்; நடைமுறைப் படுத்த ஆவன செய்யும்” என்று மிகுந்த நடுநிலையோடும், மதச்சார்பற்ற தன்மையோடும் இரண்டு வருடம் முன்பு பிரதமர் மனமோகன சிங்கர் அறிவித்தது ஞாபகம் இருக்கலாம். அதைத் தொடர்ந்து 2007ம் ஆண்டு முதல் பொருளாதார ரீதியாக நலிவுற்ற சிறுபான்மையினருக்கு (சிறுபான்மையினருக்கு *மட்டும்*) தனிக் கவனிப்பு, சலுகைகள் உண்டு என்று காங்கிரஸ் அரசு பச்சைக் கொடி காட்டியது. மத்திய அரசு எள் என்று சொன்னவுடனேயே, மற்ற மாநில அரசுகள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, எண்ணையாக மாறி வழிந்தோட ஆரம்பித்து விட்டது சிறுபான்மை சேவக தி.மு.க. அரசு. அந்த விசேஷ சலுகைகளின் ஒரு பரிணாமம் தான் மேலே சொன்னது போன்ற சம்பவங்கள்.

வருடந்தோறும் ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்காக சில சேவை அமைப்புகளுக்கு நன்கொடை தருவதை நான் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அத்தகைய ஒரு சேவை அமைப்பின் தொடர்பில் உள்ள கண்ணம்மா போன்ற ஏழைத் தாய்மார்கள் பலர் அரசே முன்னின்று நடத்தும் இந்த அப்பட்டமான பாரபட்ச நடவடிக்கை பற்றி அந்த அமைப்பிடம் முறையிட்டிருக்கிறார்கள். அதன் வாயிலாகவே தமிழக அரசின் இந்த அதிகாரபூர்வ அநீதி பற்றி நான் அறிய நேர்ந்தது.

எல்லா ’சமத்துவ, ஜனநாயக, செக்யுலர்’ கட்சிகளும் கைகட்டி, வாய்பொத்தி இந்த அநீதிக்கு ஒத்து ஊதுகின்றனர். தங்களுக்கு வாக்களித்த ஏழை இந்துக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கின்றனர். ஏழை மற்றும் நடுத்தட்டு இந்துக்களின் வயிற்றில் அடித்து, அவர்கள் கல்வியையும், வாழ்வுரிமையும் கீழே போட்டு மிதித்து நசுக்கும் இந்தத் திட்டத்திற்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி மட்டுமே குரல் எழுப்பியுள்ளது.

உதவித் தொகை சலுகைகள் பற்றிய விவரங்கள்:

tn_govt_education_assistance_to_minorities_table

இதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் - இந்த உதவித் தொகை பெறுவதற்குத் தகுதியான “பொருளாதார ரீதியாக நலிவுற்ற” என்பதற்கான வரையறை வருட வருமானம் ஒரு லட்சத்திற்குக் குறைவாக உள்ள குடும்பங்கள் என்று கூறப் படுகிறது. மேலும், தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையை விட இந்தத் தொகை அதிகமாக இருக்கிறதாம். அதோடு, இடஒதுக்கீடால் பயன்பெறும் முஸ்லீம், கிறிஸ்தவர்கள் போக மீதமுள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களும் அரசு உதவி பெறுவதற்கு இந்தத் திட்டம் வழிசெய்து விட்டது. ஆனால் அதே அளவில் “பொருளாதார ரீதியாக நலிவுற்ற” ஏழை இந்துக்கள் திட்டமிட்டு வஞ்சிக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஜூலை மாதம் முழுவதும் இந்தப் பிரசினையை வலியுறுத்தி தமிழகம் எங்கும் போராட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவித்து, போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பாஜகவின் கோரிக்கை சிறுபான்மையினருக் -கு உதவித் தொகை தரக்கூடாது என்பது அல்ல; இந்த உதவித் தொகை பாரபட்சமின்றி ஏழை இந்துக்கள் உட்பட அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பது தான் - இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாணவர் சக்தி மூலம் திமுக ஆட்சியை அகற்றுவோம்: பாஜக

திங்கள்கிழமை, ஜூலை 12, 201

கோவை: எந்த மாணவர் சமுதாயத்தை வைத்து தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததோ, அதே மாணவர் சமுதாய சக்தியை வைத்து திமுக ஆட்சியை அகற்றுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

pon_radhakrishnan_tn_bjpசிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுவது போல இந்துக்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரி கோவை கவுண்டம்பாளையத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் ராதாகிருஷ்ணன் பேசுகையில் பின்வருமாறு கூறினார்:

மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி [^] அரசு பொறுப்பேற்றதும், மீண்டும் ஆட்சியை பிடிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதற்கு கிறிஸ்தவ, முஸ்லிம் சமுதாயத்தினரும் ஒட்டுமொத்த ஓட்டு வங்கிகளாக உள்ளனர் என்று கண்டறியப்பட்டு, அந்த ஓட்டுகளை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது என முடிவு செய்தனர்.

அதனால் சிறுபான்மையினரின் முன்னேற்றம் என்று 15 அம்ச திட்டத்தைக் கொண்டு வந்தனர். அதில் ஒன்றுதான் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம். சிறுபான்மை என்பதன் கீழ் முஸ்லிம், கிறிஸ்துவ மக்களே மிகவும் பெரும்பான்மையாக உள்ளனர். அதனால் அவர்களுடைய ஒட்டுமொத்த ஓட்டுகளை பெறுவதற்காக கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2007ம் ஆண்டு முதல் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன.

நாடு முழுவதும் கடந்த 2008-09ம் கல்வியாண்டில் 5 லட்சத்து 12 ஆயிரத்து 657 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதுவே 2009-2010ம் கல்வியாண்டில் 17 லட்சத்து 29 ஆயிரத்து 76 பேருக்கு வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 364 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதன்மூலம் ஏற்கனவே திட்டமிட்ட இலக்கைவிட அதிகமாக உதவித்தொகை வழங்கியுள்ளனர். தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் [^] 57,000 பேருக்கு உதவித்தொகை வழங்கத் திட்டமிட்டுவிட்டு, இறுதியில் 84,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படுவதில்லை.

திமுக, காங்கிரஸ் [^] கட்சிகள் ஓட்டு வாங்குவதற்காக சிறுபான்மை சமுதாயத்தினருக்கு சலுகைகளை வாரி வழங்குகின்றன. அதேசமயம் அக் கட்சிகள் இந்து சமுதாயத்தைப் புறக்கணிக்கின்றன.

… இந்து மாணவர் சமுதாயத்திற்கு செய்யப்படும் இதுபோன்ற துரோகத்தை பாஜக ஏற்றுக் கொள்ளாது. எந்த மாணவர் சமுதாயத்தை வைத்து தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததோ, அதே மாணவர் சமுதாய சக்தியை வைத்து திமுக ஆட்சியை அகற்றுவோம்.

நன்றி: தட்ஸ்தமிழ் செய்தி

“காமராஜர் ஆட்சிக் காலத்தில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சமமான கல்வி அளிக்கப்பட்டது. அவரது ஆட்சியின்போது 18 ஆயிரம் பள்ளிகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டபோது, அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவசக் கல்வி வழங்குவதாக அறிவித்து, பள்ளிகள் மூடப்படுவதைத் தடுத்தார்.

மதமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளில் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மதமாற்றத்துக்கு சோனியா காந்தி துணைபோகிறார்; இதற்கு திமுக அரசும் உடந்தையாக இருக்கிறது. மதத்தின் பெயரால் வாக்குகளை அறுவடை செய்ய திமுக தயாராக இருக்கிறது.”

- கோவையில் ஜூலை-18 கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன்

மேலும் பல இடங்களிலும் பாஜகவினரின் போராட்டம் நடந்து வருகிறது.

ஜூலை 25ம் தேதி கன்னியாகுமரியில் ஒரு லட்சம் பேர் திரளும் மிகப் பெரிய போராட்டம்:

இப்போராட்டத்திற்கான தயாரிப்புகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ”இந்து மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க சமநீதி கேட்டு போராட்டம் நடத்தப்படுகிறது. இப் போராட்டத்தில் குடும்பம் குடும்பமாக கலந்து கொள்ளவேண்டும்” என்று பா.ஜ.க.வினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக குமரி மாவட்ட பா.ஜ.க வெளியிட்டுள்ள துண்டு பிரசுரம்:

bjp_hand_out

நான் முன்பு ஒரு சமயம் எழுதிய சிறுபான்மை, பெரும்பான்மை, மனப்பான்மை என்ற கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன் -

…. சிறுபான்மை என்ற சொல் இந்தியா முழுதும் மொத்தமாக மத அளவில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்களைக் குறிப்பதற்காகவே பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் மதம் தவிர, மற்ற பல வகையிலும், ஒவ்வொரு பிரதேசங்களிலும் சாதி மற்றும் வேறு பல காரணங்களால் சிறுபான்மையினராகி அதன் காரணமாகவே அல்லலுறும் எத்தனையோ சமூகக் குழுக்கள் பற்றி தேசிய அளவில் யாருக்கும் அக்கறை இல்லை.. பாரதம் போன்ற பல்வேறு வகைப்பட்ட சமூகச் சூழல்கள் வலைப் பின்னலாக நிலவும் நாட்டில், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பொதுப் படுத்துதலான குழு அடையாளங்கள் பெரும் குழப்பத்தையும், மயக்கத்தையும் தான் ஏற்படுத்துகின்றன …

The smallest minority on earth is the individual. Those who deny individual rights cannot claim to be defenders of minorities - Ayn Rand

“உலகில் எல்லாரையும் விட சிறுபான்மையானவன் தனிமனிதன் தான். தனிமனிதனுக்கான உரிமைகளை மறுப்பவர்கள் தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று ஒருபோதும் அழைத்துக் கொள்ள முடியாது” - அயன் ராண்ட்

இந்திய, தமிழக அரசியல் சூழலில் இந்த ஆதாரமான கருத்தை நாம் மீண்டும் மீண்டும் உரத்துச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய தேவை உள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால், உண்மையில் பா.ஜ.க தமிழகத்தில் நடத்தும் போராட்டம் ஒரு குழுவின், மதத்தவர்களின் நலனுக்கான போராட்டம் அல்ல. அநீதி இழைக்கப் பட்டுள்ள ஒவ்வொரு தனி மனிதனின் கல்வி உரிமையையும் காக்க எழுந்துள்ள மக்கள் இயக்கம்.

இது சமநீதிக்காக எழும் ஜனநாயகரீதியான போர்க் குரல். சலுகைகளை வேண்டி நடத்தும் அரசியல் பேரமோ, அச்சுறுத்தலோ அல்ல.

இந்த உரிமைக் குரல் ஓங்கி ஒலித்திடுக. இந்தப் போராட்டம் வெல்க!

Source: http://www.tamilhindu.com/2010/07/tn-bjp-july-struggle-for-the-rights-of-hindu-poor/


No comments:

Post a Comment