கோவை:""புறக்கணிக்கப்படும் மாணவர்களின் கிளர்ச்சியால் தி.மு.க.,வை தோற்கடித்து, தமிழகத்தில் பா.ஜ., கட்சி ஆட்சியைப் பிடிக்கும்,'' என, அதன் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.சிறுபான்மையின மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை, ஏழை இந்து மாணவர்களுக்கும் வழங்கக் கோரி பா.ஜ., சார்பில், கோவை செஞ்சிலுவை சங்க கட்டடம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:கடந்த மூன்றாண்டு களாக மத்திய, மாநில அரசுகள், கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்காக பல நூறு கோடி ரூபாயை கல்வி உதவியாக வழங்கி வருகின்றன. முதல் வகுப்பிலிருந்து ஆராய்ச்சி படிப்பு வரை 1,000 ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை நிபந்தனையின்றி வழங்கப் படுகிறது.நாட்டில், 2008-09ம் ஆண்டில் கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்கள் 5.12 லட்சம் பேருக்கும், 2009-10ல் 17.29 லட்சம் பேருக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.நடப்பு ஆண்டில் 50 லட்சம் சிறுபான்மை இன மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஆனால், இச்சலுகை, ஏழையாக இருந்தாலும் இந்து மாணவர்களுக்கு வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது. தகுதி அடிப்படையில் இந்து மாணவர்களுக்கும் கல்விச் சலுகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
"சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்விச் சலுகை வழங்க வேண்டாம்' என பா.ஜ., ஒரு போதும் கூறியதில்லை; தாராளமாக வழங்குங்கள். அதே வேளையில், தகுதி வாய்ந்த இந்து ஏழை மாணவர்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? என்பதே எங்கள் கேள்வி."அனைவருக்கும் கல்வி' என்ற திட்டத்தை அறிவித்த காமராஜரை, கட்சியை விட்டே நீக்கியது காங்கிரஸ். இன்று, காமராஜருக்கு விழா எடுக்க காங்.,க்கு எந்த தகுதியும் கிடையாது.ஏழை இந்து மாணவர்களை ஏமாற்றும் தி.மு.க., அரசு, ஒரு காலத்தில் மாணவர்களால் தான் ஆட்சியைப் பிடித்தது. எதிர்காலத்தில் மாணவர் சமுதாயத்தில் ஏற்படவுள்ள கிளர்ச்சியால் தி.மு.க., தோற்கடிக்கப்பட்டு, பா.ஜ., ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=42157
No comments:
Post a Comment