புதுடில்லி: பா.ஜ., தலைவராக பொறுப்பேற்று எட்டு மாதங்களுக்குப் பின், கட்சியின் முக்கிய பதவிகள் மற்றும் பொறுப்புகளை நேற்று அறிவித்தார் அக்கட்சித் தலைவர் நிதின் கட்காரி. தமிழக தேர்தல் பொறுப்புகளை பங்காரு லட்சுமணனும், கட்சி விஷயங்களை கந்தூரியும் கவனிப்பர். நிதின் கட்காரி, பா.ஜ.,வின் தலைவராகப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களிலேயே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார். ஆனால், அப்போது அவர்களுக்கான பதவிகளை அறிவிக்கவில்லை. கட்சியின் பொதுச் செயலர் ஆனந்த் குமாருக்கு மட்டும், பீகார் தேர்தல் பொறுப்பு பதவி அறிவிக்கப்பட்டது. தற்போது அவர், மத்திய பிரதேச மாநிலத்துக்கும் பொறுப்பாளராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது, கட்காரி அறிவித்துள்ள நிர்வாகிகளுக்கான பதவிப் பட்டியலின் படி, பா.ஜ., முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளராகவும், தமிழக பா.ஜ., விவகாரங்களுக்கான பொறுப்பாளராக உத்தரகண்டின் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரியும் கவனிப்பர். முன்னாள் தமிழக பொதுச் செயலர் இல.கணேசன் இனி அந்தமான், நிகோபர் கட்சிப் பொறுப்புகளை கவனிப்பார். மகாராஷ்டிரா மற்றும் டில்லி மாநிலங்களுக்கு வெங்கையா நாயுடு, கட்சியின் அனைத்திந்திய சுற்றுப் பயணம் மற்றும் நிகழ்ச்சிகள் திட்டமிடலுக்குப் பொறுப்பாளராக கட்சியின் துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளரான ரவிசங்கர் பிரசாத், கட்சியின் ஊடகத் துறையின் தலைவராக செயல்படுவார். அதேபோல், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, பக்கத்து மாநிலமான அரியானாவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தேர்தல் பிரசாரப் பொறுப்பாளராகப் பணியாற்ற வருண் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சி துணைத் தலைவர் ஹேமமாலினி, கலாசாரத்துறைத் தலைவராகிறார். கல்வித் துறைக்கு, பேராசிரியர் சுகாதா பாண்டே பொறுப்பேற்பார்.
No comments:
Post a Comment