Wednesday, July 28, 2010

உணவுப் பொருட்களை அழுக விடுவதில் ஊழல் உள்ளது:

உணவுப் பொருட்களை அழுக விடுவதில் ஊழல் உள்ளது: கட்கரி குற்றச்சாற்று

மத்திய அரசின் இந்திய உணவுக் கழகக் கிடங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை திட்டமிட்டே அழுக விட்டு, பிறகு அதனை மதுபான தொழிற்சாலைகளுக்கு குறைந்த விலையில் விற்கிறது மத்திய அரசு என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நித்தின் கட்கரி கூறியுள்ளார்.

டெல்லி மாநில பாரதிய ஜனதா கட்சி புதுடெல்லியில் இன்று வெளியிட்ட ‘பாஜ்பா சந்தேஷ’ என்கட்சியின் மாத இதழை வெளியிட்டுப் பேசிய நித்தின் கட்கரி, “அரசு உணவுக் கிடங்குகளிலும் மற்ற இடங்களிலும் பல இலட்சக்கணக்கான டன் அரிசியும், கோதுமையும் அழுகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதைப் பற்றி அரசு கவலைப்படுவதில்லை, ஏனென்றால் அப்படிப்பட்ட அழுகிய உணவுப் பொருட்களை மதுபான உற்பத்தியாளர்களுக்கு குறைந்த விலையில் அவைகளை விற்று விடுகிறது” என்று கூறியுள்ளார்.

“விவசாயிகளிடமிருந்து மிகக் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது, பிறகு அதனை அழுக விட்டு கிலோ ரூபாய் 2க்கு மதுபான தொழிற்சாலைகளுக்கு விற்கிறது. அரசுக் கிடங்குகளில் 58,000 கோடி உணவுப் பொருட்கள் அழுகிக் கெட்டுக்கிடப்பதாக உணவு அமைச்சர் சரத் பவார் ஒப்புக்கொண்டுள்ளார” என்று கூறிய நித்தின் கட்கரி, பல கோடிக்கணக்கான மக்கள் உணவின்றிப் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பெறுமான உணவுப் பொருட்கள் அரசுக் கிடங்குகளில் அழுகிக்கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

“காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில்தான் மிக அதிகமாக பொருளாதார மேதைகள் இருக்கின்றார்கள், ஆனால் அவர்கள் ஆட்சி செய்யும்போதுதான் எப்போதும் இல்லாத அளவிற்கு உணவுப் பொருட்களின் விலை உயர்கிறது, ரூபாயின் பணவீக்கம் இரட்டை இலக்கத்திற்கு உயர்ந்துள்ளத” என்று கூறிய கட்கரி, “சொகுசுக் கார்களை வாங்க 8 விழுக்காடு வட்டியில் கடன் கிடைக்கிறது, ஆனால் விவசாயத்திற்குப் பயன்படும் டிராக்டர் வாங்க 13 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படுகிறது. அத்வாசியப் பொருட்களுக்கு மிக அதிக விலை கொடுத்தே நகர வாழ் மக்கள் வாங்குகின்றனர், ஆனால், விவசாயிகளிடமிருந்து அந்தப் பொருட்கள் மிகக் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுகிறது” என்றும் குற்றம் சாற்றியுள்ளார்.

Source: http://tamil.webdunia.com/newsworld/news/national/1007/28/1100728049_1.htm

No comments:

Post a Comment