Sunday, July 25, 2010

Throw out your Pride

பக்தி கதைகள்
கர்வத்தை விடு

பீமனுக்கு தன் பலம் குறித்து எப்போதுமே அலாதி கர்வம். அவன் மனைவி திரவுபதிக்கு கண்ணனின் மீது கொண்ட பக்தியில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்று நினைப்பு. வெற்றிக்கு தடை கர்வம். பாண்டவர்கள் துரியோதனாதி களை எதிர்த்து ஜெயிக்க வேண்டியவர்கள். இவர்களிடம் கர்வம் இருந்தால், அந்த கர்வமே இவர்களின் தோல்விக்கு வழி வகுத்து விடும் என கருதிய கண்ணன், பாண்டவர்களின் வனவாசத்தின் போது காட்டுக்கு வந்தான். திரவுபதிக்கு அண்ணனைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சி. மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தால், பாண்டவர்களும் கொண்டாட்டத்தில் மூழ்கி விடுவார்கள். மைத்துனர் என்ற முறையில் அவரைக் கிண்டலடித்து மகிழ்வார்கள். அப்போது தான் திரவுபதி கண்ணனிடம், அண்ணா! துவாரகாபுரியில் இருந்து எப்படி வந்தீர்கள். தேர், குதிரை, குறைந்தபட்சம் பல்லக்கு எதையும் காணவில்லையே, என்றாள். தங்கையே! உன்னைப் பார்க்கும் ஆவல் உந்தித் தள்ளியது.

தங்கை காட்டுக்கு போனாளே! என்ன ஆனாள் என்று என் அண்ணன் கொஞ்சமாவது என்னைப் பற்றி அக்கறைப்பட்டானா என்று நீ குற்றம் சொல்வாய். மைத்துனன் இருந்தால் மலையேறி பிழைக்கலாம் என்பது உலக வழக்கு. எங்களுக்கும் ஒரு மைத்துனன் வாய்த்தானே என்று என் மைத்துனர்கள் என்னைக் கடிந்து கொள்ளவார்கள். அதனால், திடீரென எழுந்தேன். நடந்தேன்... நடந்தேன்... நடந்தே காட்டுக்கு வந்து விட்டேன், என்றார். திரவுபதியின் கண்களில் கண்ணீர் அரும்பியது. அண்ணா! வேதங்களும் காண முடியாத திருப்பாதங்கள் உங்களுடையவை. யோகிகளும், ஞானிகளும் தங்கள் திருவடி காண காத்திருக்க, அந்தக் கால்கள் நடந்தே வந்தன என்றால் எந்தளவுக்கு வலிக்கும். சரி.. சரி... நான் வெந்நீர் போட்டுத் தருகிறேன். நீராடுங்கள். உடல் களைப்பு நீங்கும். கால்களுக்கும் இதமாக இருக்கும், என்றாள். கண்ணனும் தலையாட்டினார். பீமன் தன் பலத்தையெல்லாம் காட்டி, ஒரு பெரிய கொப்பரையை தூக்கி வந்தான். அதில் வெந்நீர் போட்டால் நூறு பேராவது குளிக்கலாம். அதை ஆற்றில் ஒரே அழுத்தாக அழுத்தி, மூன்று பெரிய பாறைகளை உருட்டி வந்தான். அதை அடுப்பாக்கி, கொப்பரையை தூக்கி வைத்தான்.

ஒரு மரத்தையே ஒடித்தான். அடுப்பில் வைத்தான். தீப்பற்ற வைத்தாள். மதியமாகியும் தண்ணீர் சுட வில்லை. கண்ணன் தங்கையிடம், அம்மாடி வெந்நீர் என்னாச்சு? என்றார். திரவுபதி கண்கலங்க, அண்ணா! ஏனோ இது கொதிக்க வில்லை. மாறாக ரொம்ப வும் குளிர்ந்திருக்கிறது, என்றாள்.கண்ணன் பீமனிடம், பீமா! அந்த தண்ணீரை கீழே கொட்டு, என்றான். பீமனும் கொப்பரையை கவிழ்க்க, உள்ளிருந்து ஒரு தவளை ஓடியது. திரவுபதி, விஷயம் இதுதான். அந்த தவளை சுடுநீரில் சிக்கி மாண்டு விடாமல் இருக்க என்னை வேண்டிக் கொண்டே இருந்தது. அதைக் காப்பற்றவே இப்படி செய்தேன். இப்போது புரிகிறதா? உன் பக்தியை விட இந்த சாதாரண தவளையின் சக்தி எவ்வளவு பெரியதென்று. உன் கணவன் பீமன், தன் பலத்தின் மீது கொண்ட மமதையால் மரத்தை ஒடித்து, பெரிய அண்டாவில் வெந்நீர் போட்டான். ஆனால், அது பயனில்லாமல் போய்விட்டதே! இனியாவது ஆணவம் நீங்கி வாழுங்கள், என அருள்பாலித்து புறப்பட்டார் அந்த கருணைக்கடல்.


Source: http://temple.dinamalar.com/StoryDetail.aspx?id=29121

You can read more moral stories from the above link.





No comments:

Post a Comment