திராவிட இயக்கத்தின் பெரும் தலைவர்களுள் ஒருவர் கே. ஏ. மதியழகன். அவர் அப்பொழுது (1972) தமிழக சட்டசபையில் சபாநாயகராக இருந்தார். “தி.மு.க.வில் கருணாநிதியின் கை ஓங்குவதையும் தி.மு.க ஆட்சியில் தவறுகள் பெருகிக் கொண்டிருப்பதையும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

சபாநாயகர் பதவி வகிக்கும் மதியழகனும் புரட்சித் தலைவரின் இயக்கத்தை ஆதரிக்கத் தொடங்கினால், தம் நிலைமை மிகவும் பலவீனமாகிவிடும் என்று முதல்வர் கருணாநிதி அஞ்சினார். ஆகவே அவர், தி. மு. க. வில் இருந்த எஸ். டி. சோமசுந்தரம் எம். பி. யை சபாநாயகர் மதியழகனிடம் அனுப்பி அவரைச் சரிக்கட்டும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால், எஸ். டி. எஸ். அவர்களையே சரிக்கட்டி புரட்சித்தலைவரோடு சேரும்படி செய்துவிட்டார், மதியழகன்.

இதை தனதுநூல் ஒன்றில் கருணாநிதி வருத்தத்தோடு குறிப்பிட்டிருக்கிறார்.

ஊழல் ஒழிப்புப் பேரணி

இந்நிலையில், 1974-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதியன்று புரட்சித்தலைவரும், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களும் இணைந்து ‘ஊழல் ஒழிப்புப் பேரணி’ நடத்தினர்.

அந்த ஊர்வலத்தை சபாநாயகர் மதியழகன் அண்ணாசாலையில் ஓரிடத்திலிருந்து பார்வையிட்டார்.

அதை அறிந்து பதை பதைப்புற்றார், முதல்வர் கருணாநிதி, நவம்பர் 13 ஆம் தேதியன்று கூட இருக்கும் தமிழக சட்டமன்றத்தில், சபாநாயகர் மதியழகன் எப்படி நடந்து கொள்வாரோ என்று கவலைப் பட்டார்.

நவம்பர் 13 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றம் கூடியது.

சபாநாயகர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்

ஆளுங்கட்சியான தி. மு. கழகம் சபாநாயகர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை 30-10-72 அன்று அளித்திருந்தது. ஆனால், அதைச் சட்டசபைச் செயலாளர் 7-11-72 அன்றுதான் தமக்குத் தெரிவித்தார் என்றும், அது முறைகேடான ஒரு செயல் என்றும், சபாநாயகர் கூறினார். பின்பு எதிர்க்கட்சியினர் அமைச்சரவைமீது நம்பிக்கை இல்லை என்று கூறி, சட்டசபையைக் கலைத்துவிட்டுத் தேர்தலுக்கு நிற்கத் தயாரா என்று ஆளுங்கட்சி முதல்வருக்குச் சவால் விட்டனர். அச்சவாலை ஏற்கலாம் என்று சபாநாயகரே முதல்வருக்கு யோசனை கூறினார்; அடுத்து அவர் அதைப்பற்றி யோசிக்க அவகாசம் அளித்து, 22 நாட்களுக்குச் சபையை ஒத்திவைத்தார்.

ஆனால், அன்று (13-11-72) மாலையில் தி. மு. க. தன் கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, சபாநாயகரின் மேல் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்னும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதை ஒரு கடிதம் மூலம் ஆளுநருக்குத் தெரிவித்தது.

இவ்வாறு சபாநாயகர்மீது நம்பிக்கை இல்லையென்று சபைக்கு வெளியில் கூட்டம் நடத்தி ஆளுநருக்கு மனுக் கொடுத்தது, இந்திய வரலாற்றிலே முதல் முறையாகும்.

மரபுக்கு மாறாகக் கூட்டப்பட்ட சட்டசபை

சட்டமன்றத்தை ஒத்தி வைத்தால் அதனை மீண்டும் கூட்டுகின்ற அதிகாரம் சபாநாயகரிடமே இருக்கும்.

அம்மரபிற்கு மாறாக, முதல்வர் கருணாநிதியின் ஆலோசனைப்படி 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதியன்று தமிழகச சட்டமன்றத்தை ஆளுநர் கூட்டினார்.

சபாநாயகர் மதியழகன் சபையை டிசம்பர் 5 – ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். முதல்வர் கருணாநிதியோ கவர்னரிடம் எடுத்துக்கூறி மெத்த சிரம்ப்பட்டு அதை டிசம்பர் 2 – ஆம் தேதிக்கு மாற்றினார்.!

டிசம்பர் 2 ஆம் தேதிக்கும் 5 ஆம் தேதிக்கும் இடையில் இருந்தது இரண்டே தினங்கள்தாம். அந்த இரண்டு நாள்கள் பொறத்திருப்பதால் எந்தப் பிரளயமும் நடந்து விடப்போவதில்லை! இருந்தாலும் முதல்வர் கருணாநிதி ஏன் இப்படி நடந்து கொண்டார்? சபாநாயகரை மட்டம் தட்டவா? அது இன்று வரை யாருக்கும் புரியாத விஷயம்!

முடமான சட்டசபை

சபாநாயகர் மதியழகன் அந்த விஷயத்தை அத்துடன் விட்டுவிடவில்லை,

”சட்டசபையைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் சபாநாயகருக்கே பூரண உரிமையுண்டு. தம் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் கவர்னர் கூட்டத் தொடரையே இரத்து செய்த்து (Prorogue) செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ரிட்மனு’ தாக்கல் செய்தார், சபாநாயகர் மதியழகன்.

ஆனால், உயர்நீதிமன்றம் அந்தப் பிரச்சனையில் ஒரு முடிவு சொல்வதற்கு முன்பாகவே, 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்ற ஆளுநரின் உத்தரவுப்படி கூடியது. சபாநாயகர் மதியழகன் அந்தக் கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார்.

சபை கூடியதும் தி.மு.க. அரசு மீது நம்பிக்கயில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த சபாநாயகர், தீர்மானத்தின் மீது பேசும்படி புரட்சித்தலைவரை அழைத்தார்.

புரட்சித் தலைவரும் எழுந்து நின்று பேசத் தொடங்கியதும் அவரைப் பேச விடாமல் தி.மு.க. உறுப்பினர்கள் பலர் கூட்டலிட்டுத் தடுத்தனர்.

அப்போது அவை முன்னாள் நாவலர் எழுந்து நின்று, ”சபாநாயகர் மீது கொடுகப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானமந்தான் முதலில் விவாத்த்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அதற்கு சபாநாயகர் மதியழகன், ”அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்கெனவே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது” என்று கூறிப் புரட்சித் தலைவரைத் தொடர்ந்து பேச அனுமதித்தார்.

ஏக காலத்தில் இரு சபாநாயகர்கள்!

அப்பொழுது கல்வி அமைச்சரும் அவை முன்னவருமான நாவலர் எழுந்து. ”துணைச் சபாநாயகர் பெ. சீனிவாசன் தலைமை வகித்து தொடர்ந்து சபையை நடத்த வேண்டும்” என்று ஒரு திடீர்த் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆளுங்கட்சிக் கூட்டணி உறுப்பினர்கள் அனைவரும் அதை ஆதரிப்பதாகக் குரல் எழுப்பினார்கள். உடனே துணை சபாநாயகர் பெ.சீனிவாசன் சபாநாயகர் இருக்கையை நோக்கிப்பாய்ந்து சென்றார். சபாநாயகர் மதியழகனோ தம் இருக்கையை விட்டுச் சற்றும் அசையாமல் அமர்ந்திருந்தார்.

உடனே தி.மு.க. உறுப்பினர் ஒருவர் ஒரு நாற்காலியைத் தூக்கி வந்து, சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் வைத்தார். துணைச் சபாநாயகர் பெ. சீனிவாசன் அதில் அமர்ந்து கொண்டு அவர் ஒரு பக்க சபையை நடத்தத் தொடங்கினார்.

இவ்வாறு, ஆளுங்கட்சி சபாநாயகராகத் துணை சபாநாயகரான பெ.சீனிவாசன் இருந்துகொண்டும், எதிர்க்கட்சி சபாநாயகராக மதியழகன் இருந்து கொண்டும் போட்டி சட்டசபை நடத்தினர். அதனால் கூச்சலும் குழப்பமும் எழுந்தன.

முடிவில், பிற்பகல் 2 மணிக்குச் சபாநாயகர் மதியழகன் சபையை டிசம்பர் 4 – ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்துவிட்டு சபையை விட்டு வெளியேறினார். அவரோடு அண்ணா தி.மு.க. காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் மற்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் வெளியேறினார்கள்.

ஆனால், போட்டி சட்டமன்ற சபாநாயகராகச் செயல்பட்ட பெ.சீனிவாசன் தம் சட்டசபையை மேலும் அரைமணிநேரம் தொடர்ந்து நடத்தினார்.

சபையை விட்டு வெளியேறிய சபாநாயகர் மதியழகன், அவர் தம்பி கே.ஏ.கே மற்றும் புரட்சித்தலைவர் ஆகிய மூவரும் ஒரு காரில் புறப்பட்டனர். அப்போது வெளியே கூடியிருந்த உறுப்பினர்கள் அவர்களை எதிர்த்துக் கோஷமிட்டதோடு செருப்பகளையும் எடுத்து வீசினர்.

”இந்த சட்டமன்றம் முடமாகிவிட்டது. தி.மு.க. ஆட்சி நீடிக்கும் வரை இந்தச் சட்டசபைக்குள் நான் நுழையமாட்டேன்” என்று அன்றுதான் அறிவித்தார், புரட்சித் தலைவர்.

அதற்குப் பின்னர் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நீடித்த மூன்றாண்டு காலமும் புரட்சித்தலைவர் தமிழ சட்டமன்றக் கூட்டங்களுக்குச் செல்லாமல் புறக்கணித்தார்.

விசாரணைக் கமிஷன் கோரிக்கை!

தமிழக அமைச்சரவை மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றம் சாட்டி புரட்சித் தலைவரும், எம். கல்யாணசுந்தரமும் நவம்பர் முதல் வாரத்தில் ஜனாதிபதியிடம் கொடுத்த ஊழல் புகார்ப் பட்டியலை, ஜனாதிபதி அவர்கள் பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பிரதமர் இந்திரா காந்தி அதைப் படித்துவிட்டு, அதற்கு முதல்வர் கருணாநிதியின் பதிலைக் கோரி, அதன் நகலை முதல்வருக்கு அனுப்பி வைத்தார். அதைப்பற்றி முதல்வர் கருணாநிதியிடம் சில பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது, ”பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்” என்று சாதாரணமாகப் பதில் சொன்னார். ஆனால், மத்திய அரசுக்கு அந்தப் பதிலையே கூற முடியுமா? அதனால், ஊழல் பட்டியலில் உள்ள ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் மிக விளக்கமான பதில் அறிக்கையை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பினார், கருணாநிதி. 286 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை 1972- ஆம் ஆண்டு டிசம்பர் 14- ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்திலும் சமர்ப்பித்தார்.

டிசம்பர் 7 ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கருணாநிதி அமைச்சரவையின் மீது சாட்டப்பட்ட ஊழல் புகார்களைப் பிட்டுப் பிட்டு வைத்தனர். முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு அனுப்பிய பதில் அறிக்கையின் சாராம்சத்தை சபையில் சமர்ப்பித்ததோடு, தம் அமைச்சரவை மீது நம்பிக்கைக் கோரும் தீர்மானம் ஒன்றையும் தாமே முன்மொழிந்து நிறைவேற்றச் செய்தார்.

அவர் அமைத்த விசாரணைக் கமிஷன்

தமிழக அமைச்சரவை மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் புகார்களை விசாரிக்க விசாரணை கமிஷனை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என்றும், சட்டமன்றத்தில் முதல்வர் வாதிட்டார்.

ஆனால் அனைத்து எதிர்கட்சிகளும் விசாரணைக் கமிஷன் அமைத்தே தீரவேண்டுமென்று வலியுறுத்தின.

ஆனால், அதை அலட்சியம் செய்வது போலத் தி.மு.க. அரசு ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களை விசாரிக்க ஒரு விசாரணைக் கமிஷனை நியமிக்க ஒரு மசோதா கொண்டு வந்தது.

ஊழல் செய்தவர்களைப் பாதுகாக்கவும், ஊழல் புகார் கூறவோரை அச்சுறுத்தும் நோக்கிலும் கொண்டு வரப்பட்ட அந்த மசோதாவை கொண்டு வந்த தி.மு.க. அரசைப் புரட்சித் தலைவரும், இதர எதிர்க்கட்சித் தலைவர்களும் மூதறிஞர் ராஜாஜியும், முன்னாள் முதல்வர் பக்தவத்சலமும் கடுமையாக்க கண்டித்தனர். பத்திரிகைகள் அனைத்தும் இந்த மசோதாவை சூழ்ச்சி வலை’ என்று வருணித்தன. ஆனால், தி.மு.க. அரசு எதைப் பற்றயும் கவலைப்படாமல் முறையற்ற முறையில் மசோதாவை நிறைவேற்றியது.

இந்நிலையில் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில், 1971 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்ற ராஜாங்கம் என்னும் தி.மு.க. எம்.பி. மரணமடைந்தார். அதனால் அங்கே இடைத்தேர்தல் நடைபெற இருந்தது.

அப்பொழுது தமிழக அரசியல் களத்தில் அரசியல் கட்சிகள் புதிய அணிகளாகச் சேர்ந்திருந்தன. அதற்கு முக்கிய காரணம், 1972 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உதயமாகியிருந்ததுதான். 1971 – இல் தி.மு.க.வோடு அணி சேர்ந்திருந்த கம்யூனிஸ்டு இந்திரா காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அதை விட்டு விலகின; புரட்சித் தலைவரின் ஊழல் ஒழிப்பு இயக்கத்தை உற்சாகமாக ஆதரித்தன.

பொய்ப் பிரச்சாரம்

அக் கூட்டணியை – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை – ‘குட்டி காங்கிரஸ்’ என்றும் , இந்திரா காங்கிரஸின் எடுபிடி என்று தி.மு.க. சாடியது.

பெருந்தலைவர் காமராஜரும், தந்தைப் பெரியாரும் புரட்சித்தலைவரின் அரசியல் திறமையைச் சரிவர எடையிடாமல் அவரை வெறும் நடிகர் என்னும் கண்ணோட்டத்திலேயே கணித்தனர்.

ஆனால், மூதறிஞர் இராஜாஜியும், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சினரும் புரட்சித் தலைவரின் சக்தியை மிகவும் சரியாகக் கணித்து அதற்கு நிபந்தனையற்ற ஆதரவை நல்கினர்.

தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பார்வர்ட்பிளாக், முஸ்லிம் லீக் தமிழரசுக் கழகம் ஆகிய கட்சிகள் ஓரணியில் இருந்தன.

பொதுவாக இந்திரா காங்கிரஸ் புரட்சித தலைவரை ஆதரித்தாலும், அதில் ஒரு பகுதியினர் புரட்சித்தலைவரின் அரசியல் சக்தியைப் புரிந்து கொள்ளாமல் இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் திண்டுக்கல் இடைத் தேர்தல் நடைப்பெற்றது. அதில் இந்திரா காங்கிரஸ் போட்டியிட விரும்பியது. மேலும் அக் கட்சியின் மேலிடம் அ.தி.மு.க.வும், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் தம் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென்று விரும்பியது.

ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அப்பொழுது அரசியலில் ஏழு மாதக் குழந்தையாகவே இருந்தாலும், தமிழக அரசியலில் தன் முத்திரையைப் பதிக்க விரும்பும் ஓர் இயக்கமாக இருந்தது.

ஆனால், இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைமை திண்டுக்கல் தொகுதியைத் தங்களுக்கே விட்டுக் கொடுக்கும்படி வலியுறுத்தியது.

திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதும் அதன் கூட்டணிக்கட்சிகள் அதை ஆதரிப்பதும் உறுதியாகி விட்டது.

ஸ்தாபன காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதும் உறுதியாகிவிட்டது. அதைச் சுதந்திரக்கட்சி ஆதரித்தது.

இந்த நிலையில் புரட்சித்தலைவர் என்ன செய்யவிருக்கிறார் என்பதை நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.

”அண்ணா தி.மு.க. என்பது திராவிட இயக்கத்தைப் பிளவுபடுத்துவதற்காக இந்திரா காங்கிரஸ் தூண்டிவிட்டுத் தொடங்கி வைத்த ஓர் அமைப்புத்தான். தி.மு.க. வைப் பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி முடித்ததும் எம்.ஜி.ஆர். தம் கட்சியை இந்திரா காங்கிரஸ் கட்சியோடு இணைத்துவிட்டு சினிமாவில் நடிக்கப் போய்விடுவார்” என்று முதல்வர் கருணாநிதி அடிக்கடி அப்போது கூறிக்கொண்டிருந்தார். அதனால், மக்களுள் ஒரு சாரார் புரட்சித்தலைவரின் இயக்கம் நீடித்து நடக்குமா என்று சந்தேகப்பட்டனர்.

மேற்குறித்த சந்தேகங்களையெல்லாம் போக்கும் வகையில் புரட்சித் தலைவர் ”திண்டுக்கல் தேர்தலில் தம் கட்சி போட்டியிடும்; இந்திரா காங்கிரசுக்கு அந்தத் தொகுதியை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று திட்டவட்டமாய் அறிவித்தார். கே. மாயத்தேவர் என்பவரை தம் கட்சி வேட்பாளராகவும் தேர்வு செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.வை ஆதரிப்பதாக அறிவித்தது.

இந்திரா காங்கிரஸ், கரு. சீமைச்சாமி என்பவரை வேட்பாளராக நிறுத்தியது.

தி.மு.க. சார்பில் பொன். முத்துராமலிங்கம் போட்டியிட்டார். ஸ்தாபன காங்கிரஸ் என்.எஸ்.வி. சித்தனைப் போட்டிடச் செய்தது. இந்த நான்கு வேட்பாளர்களுமே முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க மாநிலத்தில் ஆளுங்கட்சி, இந்திரா காங்கிரசோ மத்தியில் ஆளுங்கட்சி, அவ்விரு கட்சிகளும் தங்கள் பலம் முழுவதையும் பிரயோகித்துக் கடுமையாகப் பிரச்சாரம் செய்தன். தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் திண்டுக்கல்லிலேயே முகாமிட்டு கருணாநிதியும் தொகுதி முழுக்க பிரச்சாரம் செய்தார்.

அ.தி.மு.க. விற்கு உள்ள ஒரே பலம் எம்.ஜி.ஆர்.!

இந்திரா காங்கிரஸ் சார்பில் பிரதமர் இந்திராகாந்தியைத் தவிர எஞ்சியுள்ள மத்திய அமைச்சர்களுள் பெரும்பாலோர் திண்டுக்கல் தொகுதிக்கு வந்து பிரச்சார்ம செய்தனர். சி.சுப்பிரமணியம், மோகன் குமாரமங்கலம், ஐ.கே.குஜ்ரால், ஷா நவாஸ்கான், கே. பிரம்மானந்த ரெட்டி, கே.வி. ரகுநாத ரெட்டி, கே.ஆர்.கணேஷ், பகவத் ஜா ஆஸாத், அப்துல் கபூர், உமாசங்கர் தீட்சித் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவராவர். அனைத்து இந்திய காங்கிரஸ் தலைவர் சங்கர் தாயாள் சர்மா, பொதுச்செயலாளர் மரகதம் சந்திரசேகர் முதலியோரும் திண்டுக்கல் பிரசாரத்திற்குச் சென்றனர். திண்டுக்கல் தொகுதியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் இந்திரா காங்கிரஸ் மிகத் தீவிரமாகய் இருந்தது என்பதற்கு இதுவே அத்தாட்சியாகும்.

ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்காகப் பெருந்தலைவர் காமராஜர் மிகவும் தீவிரமாய்ப் பிரச்சாரம் செய்தார். அவரோடு ஸ்தாபன காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர்களான நிஜலிங்கப்பா, மொரார்ஜி தேசாய். அசோக் மேத்தா முதலியோரும் திண்டுக்கல் தொகுதியில் சுற்றுப் பயணம் செய்தனர்.

மேற்சொன்ன அரசியல் ஜாம்பவான்களின் கிடுக்கித் தாக்குதலை எதிர்த்து மாயத்தேரை வெற்றி பெறச் செய்யும் இமாலயப் பணியை ஆறுமாதக் குழந்தையான அண்ணா தி.மு.க. மேற்கொண்டது. அந்தக் கட்சியிலோ புரட்சித்தலைவர்தாம் மக்களை ஈர்க்கும் சக்தி கொண்ட ஒரே தலைவராய் இருந்தார். பொருளாதார பலமோ மிக மிகக் குறைவு. என்றாலும், புரட்சித்தலைவர் அந்த இமாலயப் பணியைத் தம் தோளில் சுமந்துகொண்டு இரவும் பகலும் பாடுபட்டார். அவர், ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்குப் பிரச்சார வேனில், வேட்பாளர் மாயத்தேவரையும் ஏற்றிக்கொண்டு புறப்படுவார்; மறுநாள் காலை 6 மணி வரை விடிய விடியத் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.

சலிக்காமல் உழைத்தார்!

புரட்சித்தலைவரைக் காண்பதற்காக ஆண்களும் பெண்களும் ஒவ்வோர் ஊரிலும் சாலை ஓரத்திலேயே காத்துக் கொண்டு நிற்பார்கள். அவர் இரவில் வர நேரிட்டாலுல் அவரைக் காண்பதற்காகப் பகல் முழுக்கச் சாலை ஓரங்களிலேயே மக்கள் காத்துக்கொண்டிருப்பார்கள்! அக்கம் பக்கத்துக் கிராமத்து மக்கள் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்து, நள்ளிரவு வரை காத்திருந்து, புரட்சித்தலைவரின் பேச்சைக் கேட்டார்கள்.

புரட்சித் தலைவரின் சலியாத உழைப்புக்கும் அயராத சுற்றுப்பயணத்த திட்டத்திற்கும் ஈடுகொடுக்க முடியாமல் வேட்பாளர் மாயத்தேவரே திணறினார்.

பல நள்ளிரவுக் கூட்டங்களில் புரட்சித் தலைவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே! அவர் அருகில் நிற்கும் வேட்பாளர் மாயத்தேவர் பசி மயக்கத்தாலும், சோர்வாலும் புரட்சித் தலைவரின் தோளிலேயே சாய்ந்து விடுவார்! அவரைத் தாயன்போடு தாங்கிப் பிடித்து அழைத்துச் செல்வார் புரட்சித் தலைவர்!

திண்டுக்கல் தொகுதிக்குப் பல்லாயிரக்கணக்கான அண்ணா தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து தேர்தல் பணியாற்றினர்.

முதல் களபலி

அண்ணா தி.மு.க. கூட்டங்களில் கல்லெறிந்தனர்; அடி தடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்; அ.தி.மு.க. தொண்டர்களைக் கண்ட இடங்களில் வெட்டினர். கை கால்களை உடைத்தனர்; பிரச்சார வேன்களைக் கவிழ்த்தனர். வாக்காளர்களை அச்சுறுத்தினர்; இந்த வெறியாட்டத்துக்கு திண்டுக்கல் தொகுதியில் முதன்முதலில் களபலியானவர் வத்தலகுண்டு எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரான ஆறுமுகம் ஆவார். இரத்த வெள்ளத்தில் பிணமாகி மிதந்த அவரைக் கண்ட பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள், ”பதிலுக்குப் பதில்!… பழிக்குப் பழி!” என்று கிளம்பிவிட்டனர். அந்தச் செய்தியை அறிந்ததும், எம்.ஜி.ஆர் விரைந்து சென்று, கம்பும் கழிகளும் அரிவாளும் தாங்கிக் கொண்டு ஆயிரக்கணக்கில் திரண்டு விட்ட அ.தி.மு.க. தொண்டர்களை வழிமறித்ததார்.

அறிஞர் அண்ணாவின் தாரகமந்திரமான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை நெஞ்சில் சுமந்து அண்ணாவின் மேல் ஆணையிட்டு, அனைவரையும் அமைதிப் படுத்திக் கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறு அன்று எம்.ஜி.ஆர். செய்திருக்காவிட்டால் திண்டுக்கல் நகரம் போர்க்களமாகியிருக்கும்.!

இமாலய வெற்றி!

1973 ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதியன்று தேர்தல் நடந்தது. மே 22 ஆம் தேதியன்று தேர்தல் முடிவு வெளியாயிற்று.

பொறுமையின் சின்னமாய் அண்ணாவின் இதயக்கனியாய்த் திகழ்ந்த புரட்சித் தலைவரின் பொறுமைக்கே வெற்றிக் கிட்டியது.

ஆம்; அ.தி.மு.க. வேட்பாளர் கே. மாய்த்தேவரே வெற்றி பெற்றார். பெற்ற வெற்றி சாதாரணமானதா? மொத்தம் பதிவான வாக்குகள் 5 இலட்சம். அவற்றுள் மாயத்தேவர் பெற்ற வாக்குகள் 2,60,930 ஆகும்! அதாவது பாதிக்கு மேற்பட்ட வாக்குகள்!

இரண்டாவது இடம் ஸ்தாபன காங்கிரசுக்கு (1,19,000 வாக்குகள்) கிட்டியது. மூன்றாவது இடம்தான் மாநில ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு (93,000வாக்குகள்) கிட்டியது. மத்தியில் ஆளுங்கட்சியான இந்திரா காங்கிரசுக்கோ பொறுப்புத் தொகையை (டிபாசிட்) இழந்த அவல நிலையும், நான்காவது இடமும் (11,000) வாக்குகள் கிடடின.

தி.மு.க. அணியிலிருந்து பிரிந்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஏ. பாலசுப்பிரமணியமும் தம் பொறுப்புத் தொகையை இழந்தார்.

புரட்சித்தலைவரின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் 1,42,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.

அந்த வெற்றி அ.தி.மு.க.வின் முதல் வெற்றி மட்டுமல்ல; தமிழக்த்தின் தலைவிதியையே மாற்றவிருக்கும் வெற்றிகள் பலவற்றுக்கு முன்னோடி என்பதை அதற்குப் பின்னரும் சில அரசியல் தலைவர்கள் உணரவில்லை.!

திண்டுக்கல் வெற்றிச் செய்தி வெளியானபோது தொண்டர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்! பட்டாசு வெடித்தார்கள். ஆனால் அப்பொழுது தியாகராய நகரில் உள்ள தம்முடைய அலுவலகத்தில் இருந்த எம்.ஜி.ஆர். ”மிக்க மகிழ்ச்சி” என்று மட்டும் கூறிவிட்டு அதற்கு மேல் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாகி விட்டார்.

தம் தலைவருக்கு வெற்றி மாலை சூட அ.தி.மு.க. முன்னணி வீர்ர்கள் பலர் வந்தனர். அவர்களிடம், அங்கேயிருந்த ஒரு சிறிய அண்ணா சிலைக்கு மாலைகளை அணிவித்துப் போகும்படி எம்.ஜி.ஆர் கூறினார். வெற்றியைக் கண்டு கூத்தாடாமலும், தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும் இருக்கம் மன்ப்பக்குவத்தைப் புரட்சித்தலைவர் எப்பொழுதோ பெற்றுவிட்டார்!

திண்டுக்கல் தேர்தலின்போது நடந்த மற்றும் ஒரு சம்பவத்தையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

திண்டுக்கல் தேர்தல் வாக்குப் பதிவு நாளன்று ஓச்சம்மாள் என்னும் நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர், வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்துவட்டு, ”எம்.ஜி. ஆருக்கே வெற்றி!” என்று ஆவேசத்தோடு முழங்கினார். மறுவினாடியே மயக்கமுற்று விழுந்தார்; மாரடைப்பால் மரணமடைந்தார்!

புரட்சித் தலைவர்மீது தமிழ்நாட்டுத் தாய்க்குலம் கொண்டிருந்த அன்பும் , பாசமும், நம்பிக்கையும் எந்த அளவுக்கு இருந்தது என்பதை உலகம் முழுவதற்கும் இச்சம்பவம் பறை சாற்றியது.

மாற்றுக் கட்சியினர் கூறியதுபோல புரட்சித் தலைவர் இந்திரா காங்கிரசுக்குக் கட்டுப்பட்டவரல்ல என்பதையும் அந்த வெற்றி பறைசாற்றியது!

http://www.puratchithalaivar.org/tamil/achievement/revolution/

வடிவேலுவுக்கு 50 வயசுக்கு மேல இருக்கும். 1972 ஆம் வருடம் MGR ஐ கட்சியிலேர்ந்து கருணாநிதி வெளிய அனுப்பும்போது வடிவேலு ஒன்னும் சின்ன பிள்ள இல்ல. அதுவும் மதுரை மாநாட்டு முடிவில தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது. நானும் அப்போ மத்ரைல தான் இருந்தேன். இப்போ வடிவேலு தி மு க வுக்கு ஆதரவா பிரசாரம் செய்ய கிளம்பிட்டாரு. வெளிய சொல்றப்போ இவரு MGR ரசிகர்ன்னு சொல்லிகிறாரு. எதுக்கு இந்த ஆளுக்கு வாய் உதாரு...?