Saturday, March 26, 2011

Mar 26 எம்.ஜி.ஆரும்,ஜெயலலிதாவும் மீட்டுக் கொடுத்த வீடுதான் கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு.

அ.தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளராக, தமிழகம் முழுக்க சூறாவளி பிரசாரத்துக்குத் தயாராகிக்கொண்டு இருந்தார் ராதாரவி. பத்தே பத்து தகவல்கள் சொல்கிறேன் என்று மடமடவென கொட்டத் தொடங்கினார். ''தமிழ்நாட்டு மக்களிடம் நான் சொல்லப்போகும் விஷயங்கள் இவைதான்'' என்கிறார்!

ஐம்பெரும் தலைவர்கள்

''ராபின்சன் பூங்காவில் தி.மு.க-வை ஆரம்பித்தபோது, அறிஞர் அண்ணாவால் சுட்டிக்காட்டப்பட்ட ஐம்பெரும் தலைவர்கள்... நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், ஈ.வே.கி.சம்பத், கே.ஏ.மதியழகன், அன்பழகன் ஆகியோர்​தான். இவர்களில் நெடுஞ்செழியன் மனைவி விசாலாட்சி, நடராசன் மகன் என்.வி.என்.செல்வம், மதியழகன் தம்பி கிருஷ்ணசாமி, மகன் முகிலன், சம்பத் மனைவி சுலோசனா என்று நான்கு பேரின் வாரிசுகளும் இப்போது அ.தி.மு.க-வில் அம்மாவுடன்தான் இருக்கிறார்கள்!

கோபாலபுரத்து வீடு

'மக்களுக்கு தானமாகக் கொடுத்துவிட்டேன்’ என்று கோபாலபுரத்து வீட்டைப் பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்கிறார், கருணாநிதி. தனது மேகலா பிக்சர்ஸ் சினிமா கம்பெனிக்காக கருணாநிதி, அந்த வீட்டை அடகுவைத்தார். வெளிவந்த படங்கள் தோற்றன. அதனால், வீடு ஏலத்துக்கு வந்தது. அப்போது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மா ஜெயலலிதாவும் சம்பளமே வாங்காமல் வெறும் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 'எங்கள் தங்கம்’ படத்தில் நடித்துக் கொடுத்தார்கள். படம் பிரமாதமாக வியாபாரம் ஆனது. அந்தப் பணத்தில்தான் ஏலத்துக்குப் போன வீட்டைத் திரும்பப் பெற்றார். எம்.ஜி.ஆரும், அம்மாவும் மீட்டுக்கொடுத்த கோபாலபுர வீட்டைத்தான், இப்போது பொது மக்களுக்கு தானமாகத் தருவதாகச் சொல்லி ஏமாற்றுகிறார் கருணாநிதி!

கருணாநிதி கமென்ட்

கோடானுகோடி ரூபாய்களை விழுங்கி, திகார் சிறையில் இருக்கும் ஆ.ராசாவை, 'குற்றவாளி இல்லை...’ என்று பிதற்றும் கருணாநிதி, பொய் வழக்குப் போடப்பட்ட அம்மாவை வாய் கூசாமல் 'குற்றவாளி’ என்பது எந்த விதத்தில் நியாயம்? டெல்லியில் சோனியாவை சந்தித்தபோது, 'எதிரியை நம்பலாம். ஆனால், துரோகியை நம்பக் கூடாது!’ என்று ராமதாஸ்பற்றி தன்னிடம் சோனியா சொன்னதாக கருணாநிதி கூறினார். இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவரோடு சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்?

சினிமா விளம்பரம்

நான், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், டப்பிங் கலைஞர்கள் அமைப்பின் தலைவர், தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கமிட்டி உறுப்பினர். தினசரிப் பத்திரிகைகளில் கால் பக்கத்துக்கு மேல் சினிமா விளம்பரம் தரக் கூடாது என்பது சட்ட விதி. திடீர் என்று ஆளும் கட்சி ஆட்கள் தயாரிக்கும் படங்களுக்கு ஒரு பக்கம் விளம்பரம் கொடுத்தால், என்ன அர்த்தம்? தங்களைத் தட்டிக்கேட்க ஆள் இல்லை என்கிற கர்வம்தானே காரணம்?

சாவைத் தேடிய சாதிக் பாட்சா

சாதாரண ஜவுளி வியாபாரம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்தார், சாதிக் பாட்சா. அவர் செய்த ஒரே பாவம்... ராசாவுக்கு நண்பராக இருந்ததுதான். சகவாசம் சரியில்லேன்னா சாவுகூட வீடு தேடி வரும் என்பதற்கு சாதிக் பாட்சாவின் மரணமே சாட்சி!

விஜயகாந்த் வளர்ச்சி

நான் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே என்னுடைய நெருங்கிய நண்பன் விஜயகாந்த். கட்சி தொடங்கிய அஞ்சு வருஷத்தில் நல்ல வளர்ச்சி. இது வரை விஜயகாந்த் இரண்டு படிக்கட்டுகள்தான் ஏறி இருக்கிறார். எப்போது எங்கள் அம்மாவுடன் கூட்டணி சேர்ந்தாரோ, இனிமேல்தான் 98 படி உசரத்துக்கு அசுர வளர்ச்சி காணப்போவது உறுதி!

கருணாநிதி மாளிகை

ராணி மேரி கல்லூரியில் தலைமைச் செயலகம் அமைக்க ஆசைப்பட்டார், அம்மா. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி வாசலில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராட்டத்தில் இறங்கினார் ஸ்டாலின். இப்போது அந்தக் கல்லூரிக்குள் கருணாநிதி மாளிகை என்று பெரிய வளாகத்தை யாரைக் கேட்டு கட்டி இருக்கிறார்கள்? பொதுவான மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் இருக்கும் கட்டடத்துக்கு கருணாநிதி பெயரை எப்படிப் பயன்படுத்தலாம்?

ரிஜிஸ்டர் ஆபீஸ் வில்லன்கள்

சென்னை மட்டும் அல்ல... தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஆளும் கட்சி ஆட்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்குக் கல்யாணம் செய்யக் காசு இல்லாமல், உறவினர்களுக்கு ஆபரேஷன் செய்யப் பணம் இல்லாமல் பரம்பரையாக வாழ்ந்த வீட்டை விற்கிறார்கள், அப்பாவி மக்கள். அந்த வீட்டுக்குத் துளிகூட சம்பந்தமே இல்லாத ஆளும் கட்சி ஆட்கள் பத்திரப் பதிவு அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு, ''எங்களுக்கு இரண்டு பெர்சன்ட் கொடு!'' என்று மிரட்டி வாங்கும் கொடூரம் தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டுவிட்டு பல லட்சத்தை மிரட்டிப் பிடுங்குகிறார்கள்!

கான்கிரீட் வீடு டோக்கன்

அவசரத்துக்கு ஆயிரம் இரண்டாயிரம் கொண்டுபோகிறவர்கள் காரை மறித்து, சோதனை போடும் தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் கேட்கிறேன்? 'கான்கிரீட் வீடு கட்டித் தருகிறேன்’ என்று இப்போது டோக்கன்களைக் கொடுக்கிறார்களே. இது லஞ்சம் இல்லையா, உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?

பிராணிகளுக்கும் பாதுகாப்பு இல்லை

சென்னை நந்தனத்தில் 'வெட்னரி அண்ட் அனிமல் சயின்ஸ் யுனிவர்சிட்டி’ உள்ளது. 30 ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்தக் கல்லூரியில் நிறைய மாணவர்கள் படிக்கிறார்கள். வெளிநாட்டுக் கோழிகள், அபூர்வ வகை மான்கள், விசித்திரமான பிராணிகள் ஆகியவற்றை வளர்க்கிறார்கள். இந்த இடத்தை தமிழக அரசு பறக்கும் ரயில் திட்டத்துக்குத் தாரை வார்த்துக் கொடுத்து இருக்கிறது. உண்மையில் ரயில்வே நிர்வாகம் தேவர் சிலைக்கு எதிரில் இருக்கும் இடத்தையே கேட்டது. ஆனால், வம்படியாக இந்த இடத்தை வாரி வழங்கி இருக்கிறார்கள். இங்கு வாழும் வாயில்லா ஜீவன்களை வேறு இடத்துக்கு மாற்றினால், இறந்துவிடும் என்று எடுத்துச் சொல்லியும் பிடிவாதம் பிடிக்கிறது, தமிழக அரசு. ஏன் இத்தனை பிடிவாதம்?''

http://www.thedipaar.com/news/news.php?id=26075

No comments:

Post a Comment