Saturday, March 26, 2011

பட மோசடியில் கருணாநிதி - ஜெயலலிதா குற்றச்சாட்டு !




தவறு என நான் சுட்டியதை மறுக்க, பிழையான படமொன்றைக் காட்டி தமிழக முதல்வர் கருணாநிதி மோசடி செய்துள்ளார் என எதிர்கட்சித்தலைவர் செல்வி: ஜெ.ஜெயலிலதா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

நான் வணக்கம் தெரிவித்தால், கருணாநிதிக்கு அஞ்சி பதில் வணக்கம் தெரிவிக்கக்கூட பேரவைத் தலைவர் மறுக்கிறார் என்று 13.1.2010 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். எனது அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், பேரவைத் தலைவரின் நடவடிக்கையை நியாயப்படுத்தி, சப்பைக்கட்டும் வகையில் ஓர் அறிக்கையை கருணாநிதி வெளியிட்ட கருணாநிதி, தனக்கும், தன் கட்சிக்கும் ஏற்பட்டுள்ள அவப் பெயரை நீக்கும் நோக்கத்தில், நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேரவைத் தலைவருக்கு வணக்கம் தெரிவிப்பது போலவும், அதற்கு பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிப்பது போலவும் ஒரு வண்ணப் புகைப்படத்தை வெளியிட வைத்துள்ளார்.

20.1.2010 தேதியிட்ட 'மாலை மலர்' நாளிதழிலும், 21.1.2010 தேதியிட்ட 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்', 'டெக்கான் கிரானிக்கல்' போன்ற ஆங்கில நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளது. வண்ண புகைப்படத்தில் நான் அணிந்திருக்கும் புடவையின் நிறம் கருஞ் சிவப்பு. ஆனால், 11.1.2010 அன்று நான் சட்டமன்றப் பேரவையில் விவாதத்தில் கலந்து கொள்ளும் போது கருநீல நிறம் கொண்ட புடவை அணிந்திருந்தேன். நான் அன்று சட்டமன்றத்தில் பேசிய காட்சிகள் அனைத்துத் தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டன.

சட்டமன்றப் பேரவையின் மூலம் தான் என்னுடைய பேச்சுக்கள் அடங்கிய உரை தொலைக்காட்சிகளுக்கு அனுப்பப்பட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தால், நான் கருநீலப் புடவை அணிந்திருப்பது தெளிவாகத் தெரியும். அனைத்து நாளிதழ்களிலும் புகைப்படம் வெளியானது. கருணாநிதியால் தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் இதற்கு முன் நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படம். இதிலிருந்து கருணாநிதியின் மிகப் பெரிய மோசடி வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

11.1.2010 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நான் பேரவைக்குள் நுழைந்த போதும், வெளியே வந்த போதும் பேரவைத் தலைவருக்கு வணக்கம் தெரிவித்தேன். அதற்கு அவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை. இது தான் என்னுடைய குற்றச்சாட்டு. இதற்கு முன் நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது பேரவைத் தலைவர் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று நான் கூறவில்லை. அப்பொழுதெல்லாம் நான் வணக்கம் தெரிவித்த போது பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவித்து இருக்கிறார். 8.1.2010 அன்று நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போது கூட பேரவைத் தலைவருக்கு நான் வணக்கம் தெரிவித்த போது, அவர் பதில் வணக்கம் தெரிவித்தார். இவ்வாறு பதில் வணக்கம் தெரிவித்ததற்காக பேரவைத் தலைவரை கருணாநிதி கடுமையாக கடிந்து கொண்டிருக்கிறார். அதனால் தான் 11.1.2010 அன்று நான் வணக்கம் தெரிவித்தபோது பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை.

கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் தற்போது பத்திரிகைகளில் வெளியாகியுள்ள புகைப்படம் இதற்கு முன் நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம். 8.1.2010 அன்று நான் சட்டமன்ற பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படமாகக் கூட இது இருக்கலாம். இது மிகப் பெரிய மோசடி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கிணங்க, அனைத்து விஷயங்களிலும் கருணாநிதி இது போன்று தான் மோசடி செய்கிறார்.

இந்த மோசடியையும் கருணாநிதிக்கு சரியாக செய்யத் தெரியவில்லை. பத்திரிகைகளுக்கு வண்ணப் படத்தைக் கொடுத்து மாட்டிக் கொண்டுவிட்டார். இது போன்ற மலிவான மோசடிக்கு கருணாநிதி வெட்கித் தலைகுனிய வேண்டும். இது போன்ற அற்ப விஷயங்களில் கூட மோசடி செய்து பொய் சொல்லும் முதலமைச்சர் நமக்கு வாய்த்திருக்கிறாரே என்று நினைத்து தமிழக மக்கள் வெட்கப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

http://www.4tamilmedia.com/ww1/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/5130-2010-01-21-22-00-05

No comments:

Post a Comment