Tuesday, March 22, 2011

MGR சில நினைவுகள்


என்ன வேண்டும் என்னால் உனக்கு என்ன ஆக வேண்டும்?

முப்பது ஆண்டுகளுக்கு முன்…

சத்யா ஸ்டுடியோ வாசல்…….

பளபளக்கும் சிவப்பு நிற சில்க் சட்டை,பழுப்பேறிய வெள்ளை வேஷ்டி சகிதமாய், எண்ணெயும் தண்ணீரும் கலந்து சீவிய தலை, தான் அணிந்திருந்த சில்க் சட்டைக் காலருக்குள் எண்ணெயும் தண்ணீரும் கலந்த கசடு இறங்கி விடாமல் இருக்க கழுத்தைச்சுற்றிக் கைக்குட்டைத் தூவாளை இப்படி சுத்தமான கிராமத்து மண்வாசணை மணக்க நின்ற அந்த இருபது வயது இளைஞன் திருவிழா கூட்டத்தில் காணாமல் போன குழந்தையைத் தேடும் ஒரு தகப்பனைப் போலவும், ஆபரேஷன் தியேட்டருக்குள் ஆசை மனைவியை அனுப்பி வைத்து விட்டு, வராந்தாவில் காத்துக் கிடக்கும் அன்புக் கணவனைப் போலவும், ஸ்ரீரங்க சொர்க்கவாசலில் ரங்கநாத பெருமாளின் தரிசனத்துக்காக காத்து நிற்கும் பக்தனைப் போலவும், ஸ்டுடியோ வாசலுக்குள் நுழையும் கார்களுக்குள் கண்களை நுழைத்துத் துருவிப் பார்ப்பதும், துழாவிப் பார்ப்பதும் பிறகு தலைகவிழ்ந்து சோகப்பட்டும், அந்த இளைஞன் நின்று கொண்டிருந்தான்.

கோடி மின்னலை குழைத்தெடுத்த அந்த குளிர் நிலவு, கோமேதகப் பெட்டகம், பெட்டகம். குற்றால அருவி, குறிவஞ்சிப்பாட்டு, அகம்கொண்ட எதிரிகளை புறம் கண்ட எரிமலை, வாரிக் கொடுக்கிற கார்மேகம், கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு வந்தகடைசி வள்ளலான எம் மன்னன் எந்த காரில் வருவார். என்று எதிரில் தென்பட்டவர்களிடமெல்லாம் ஒரு பிச்சைக்காரனைப்போல் யாசித்து, விசாரித்து, எல்லோருக்கும் அவன் வேடிக்கைப் பொருளானான்.

அதில் ஒரு இரக்கவான் மட்டும், நீ நேசிக்கற நினைத்ததை முடிக்கும் நீதியின் நாயகன், பச்சை நிற அம்பாசிடரில்தான் வருவார் என்று, சீதைக்கு அனுமன், ராமனின் கணையாழியைக் காட்டி அடையாளம் சொன்னதைப் போல் கூறியவுடன், அந்தச் சீதையை விட, ஆயிரம் மடங்கு ஆனந்தம் அடைந்தான்; அந்த இளைஞன்.

இனி பச்சை நிறத்தில் எது வந்தாலும் ஒரு கை பார்த்து விடுவதென்ற தீர்மானத்துடன், அந்த இளைஞன் நின்றான். நீண்ட நேர பதட்டத்துக்குப் பிறகு, தொலை தூரத்தில் ஒருபசுமை தென்பட்டது. ஆம் அது நம் கலியுக கர்ண்னின் தேர்தான். நம் காவிய நாயகனின் பச்சைநிறக் கார்தான். பச்சை நிறத்தில் மின்னலா? ஓ.. காருக்குள் இருப்பது ஒளிவீசும் பகலவனாயிற்றே! பரவசம் தாளவில்லை. அந்தப் பச்சை நிறக் கார் சர்ரென்று வாசலை கிழித்து நுழைய, அனும் குறுக்கேபாய, கார் கன அடி பிசகி நின்று, பிறகு பின்னோக்கி வருகிறது. எப்படிப் பயமில்லாமல் விழுந்தானோ, அதே வேகத்தில் எழுந்து காரின் கண்ணாடிப் பக்கம் ஓடிவந்து நின்று கொண்டான் அந்த இளைஞன்.

பால்! நிலவை மூடியிருந்த, மேகப் பனி மூட்டம் துளித்துளியாய்க் கரைவது போலவும், பளிங்கு மாளிகையின் மணிமண்டப பட்டுத் திரைச் சேலை மெல்ல, மெல்ல இறங்குவது போலவும், காரின் கண்ணாடிக் கதவுகள் மெதுவாக இறங்குகிறது. அவனுடைய முகமெல்லாம் வியர்வைத்துளிகள்.முதலில் நம் வெற்றித் திருமகனின் நெற்றி மட்டும் தெரிகிறது. பிறகு ஈரமும், வீரமும கலந்த இருவிழிகள் தெரிகிறது. பிறகு வடிவான மூக்குத் தெரிகிறது. பிறகு, தாமரை மலரின் இரண்டு இதழ்களை பிய்த்து பதித்தது போன்ற செம்பவள வாய் தெரிகிறது. இப்பொழுது வட்ட வடிவமான முழு சந்திர பிம்ப முகத்தைப் பார்க்கிறான்.

இப்படி ஒரு பிறைநிலவு மெல்ல, மெல்ல முழு நிலவாய் மாறுகிற அதிசயத்தை ஒருமொட்டு முழு மலராக மலர்ந்து விரிகின்ற, அதிசயத்தை தன் வாழ்நாளில் முதன் முதலாக பார்த்து அனுபவிக்கிறான். ஒரு தாயின் மணி வயிற்றில் உருவான கரு, அழகிய சிசுவாக மாறுகிற அதிசயத்தை அப்படியே அவன் மட்டும் பார்த்ததாக ஆனந்தப்படுகிறான். இப்படி பார்த்து, பார்த்து, அப்படியே அவன் மூர்ச்சையாகிப் போனான். அவனுக்குப்பேச்சு வரவில்லை. இப்பொழுது பொன்மனச் செம்மலின் பொற்கரம் சன்னலுக்கு வெளியே வந்து, அவனது புழுதி மண் தோளை தொட்டு மட்டும் உலக்கிற்றது. சிலிர்க்கிறான்.

தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தும், தனக்கு நினைவே தெரியாமல் நோய்வாய்ப்பட்ட போதும், அந்த வீரத் திருமகனை! வாரிக்கொடுக்கிற அந்த வள்ளலை! வந்து சந்தித்தாலும், வேதமொழியாக முதலில் அவர்களிடம் கேட்கும் விசாரிப்பை, அந்த இளைஞனிடமும் அவதாரத் திருமகனான நம் வள்ளல், கேட்கிறார்-

“உனக்கு என்ன வேண்டும்? என்னால் உனக்கு என்ன ஆக வேண்டும்?-பக்தன் பதறிப்போனான்.

“ஒன்றும் வேண்டாம்”

“ஆபத்து காலத்தில் என்னிடம் வா. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொன்ன ஏசுபிரானுக்குப்பிறகு,

“எல்லாம் நானே” “நான் பார்த்துக்கொள்கிறே” என்று கீதை சொன்ன கண்ணனுக்குப் பிறகு, நபிகள் நாயகத்துக்குப் பிறகு- இந்த வேத வார்த்தையை வள்ளல் சொன்னவுடன், இளைஞனின் இதயம் கனத்து, கண்களில் நீர் மட்டும் வழிகிறது. வள்ளலன் வலதுகரம் அந்த வியர்வை ஜாதியின் முகம் தொட்டு துடைத்து விடுகிறது. அந்த வித்தக விரல்களின் ஸ்பரிசத்தில், அந்த இளைஞனுக்கு தைரியம் பிறக்கிறது.

“எனக்குத் திருமணம் செய்து வைக்க, இரண்டு வருடங்களாக என் பெற்றோர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். செய்தால் உங்கள் தலைமையில்தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று சொல்லி இரண்டு வருடங்களாக உங்களைச் சந்திக்க முயற்சி செய்து வருகிறேன். ஆனால் இன்றுதான் எனக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது.

“எந்தத் தேதியில் உன் திருமணம்?”

“நீங்க சொல்ற தேதியில தான்”

“இல்லே…இல்லே…திருமணங்கறது பெரியவங்க பார்த்து வைக்கிற தேதி, அவுங்க நிச்சயத்த தேதியோட வா!”

இரண்டு கால்களில் நடந்து வந்த அந்த இளைஞன், இப்பொழுது, இரண்டு இறக்கைகளோடு போரூருக்கு அருகில் உள்ள தன் கிராமத்திறகுப் பறந்து செல்கிறான்.

மூன்று நாள் கழித்து திருமணப் பத்திரிக்கையுடன் சத்யா ஸ்டுடியோ வாசலில் அந்த இளைஞன் நிற்கிறான்.

இப்பொழுது வாட்சுமேனே வரவேற்று வாஞ்சையுடன், அந்த இளைஞனை, “உழைத்து வாழ வேண்டும்” படப்பிடிப்பில் வாள் வீச்சில் இருந்த வள்ளலிடம் அழைத்துச் செல்கிறார். அடையாளம் கண்டு கொண்ட வள்ளல், அருகில் வரச் சொல்கிறார்.

இளைஞன் மெல்லியதான குரலில், “வருகிற ஒன்பதாம் தேதி, ஒன்பதரை மணிக்குக் கல்யாணம்”

பத்திரிகையை வாங்கிய வள்ளல் தன்னுடைய மேக்கப் பெட்டிக்குள் சொருகிக்கொண்டே, பக்கத்தில் நின்ற உதவியாளரிடன், ஒன்பதாம் தேதியை ஞாபகப்படுத்தச்சொல்கிறார்.

ஒன்பதாம் தேதி மணி ஒன்பதேகால். அந்தத் திருமணப் பந்தலில் ‘குய்யோ முறையோ’ என்று ஒரே கூச்சல்.

“நான் அப்பவே சொன்னேன் கேட்டியா நீ அவருக்குச் சொந்தமா பந்தமா? இல்லை நீ வட்டமா? மாவட்டமா? இல்லை நீ எம்.எல்.ஏவா, எம்.பி.யா? உன்னை மாதிரி சாதாரண ரசிகன் வீட்டுத் திருமணத்துக்கெல்லாம் அவர் வர்றதுக்கு” என்று பெற்றோர்கள் பேசித் தீர்த்தார்கள்.

மூகூர்த்தம் நெருங்கி விட்டதால், உறவுக்காரர்கள் மாப்பிள்ளையை மணவறையில் அமர்ந்து தாலி கட்டச் சொல்கிறார்கள். ஆனால் இளைஞன், வள்ளல் வந்தால்தான் தாலி கட்டுவேன் என்று மறுக்கிறான். ஆனால் ஊர்க்காரர்கள் மாப்பிள்ளையை குண்டுகட்டாகத் தூக்கி, மணவறையில் உட்கார வைக்கிறார்கள் ஆனால் எகிறிப் பாய்ந்து , அந்த இளைஞன் தாலி கட்டமாட்டேன். நானே நேரில் போய் தலைவரைப் பார்க்கிறேன்” என்று ஓட்டமும் நடையுமாய் பஸ் பிடித்து, சத்யா ஸ்டுடியோ நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறான்.!

அதே நேரத்தில்,சத்யா ஸ்டுடியோ உழைக்கும் கரங்கள் படப்பிடிப்பில் மேக்கப்பை சரி செய்ய, பொன்மனச் செம்மல் மேக்கப் அறைக்கு வருகிறார். அப்பொழுதுதான் மேக்கப் பெட்டியில் துருத்திக்கொண்டு தெரிந்த கல்யாணப் பத்திரிக்கை வள்ளலின் கண்களில் படுகிறது. பிரித்துப் பார்க்கிறார். பதறிப்போய்விடுகிறார் வள்ளல்! அருகில் இருந்த உதவியாளரிடம், “ஏன் ஞாபகப்படுத்தவில்லை; என்று ஏசுகிறார். டிரைவரை கூப்பிட்டு காரை எடு” என்கிறார். தார்பாச்சி ஸ்டைலில் கட்டிய வேஷ்டி , ஜிப்பா சகிதமாய் மேக்கப்பைக்கூட கலைக்காமல் காரில் ஏறுகிறார். கார் பறக்கிறது. போரூரைத் தாண்டி, அந்த இளைஞனின் கிராமத்தை விசாரிக்க்கிறார். வள்ளல். அந்த ஊருக்கு கார் போக வழியில்லை என்கிறார்கள்.

காரை விட்டு இறங்குகிறார்; வள்ளல். அந்த உச்சி வெய்யிலில் கால் முளைத்த சூரிய பிம்பமாய் உடன் வந்தவர்கள் எல்லாம் ஓடி வர, ஒரு கிலோமீட்டர் தூரம் வீர நடை போடுகிறார்; வள்ளல்.

வானத்து தேவகுமாரனே தரை இறங்கி வந்தது போல், நம் கருணை வள்ளலின் கால் மலர்கள், அந்தக் கிராமத்துக்குள் பட்டவுடன் , அந்தக் கிராம மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தம்மை மறந்து திகைத்து நின்றார்கள்.

பொன்மனச் செம்மல் மண மேடைக்குச் செல்கிறார். அங்கே மணப்பெண் இருக்கிறாள் ஆனால் மணமகனைக் காணவில்லை. எங்கே? என்று கேட்கிறார் வள்ளல்.

உங்களைத் தான் தேடி ஓடி விட்டான்” என்று ஊரார் சொல்கிறார்கள்.

உடனே வள்ளல் அந்த இளைஞனை அழைத்து வர காரை அனுப்புகிறார். சத்யா ஸ்டுடியோ வாசலை நெருங்கிக் கொண்டிருந்த இளைஞனை காரில் தூக்கிப் போடுகிறார்கள்.

மாப்பிள்ளை மணவறைக்கு வந்தாகிவிட்டது. மக்கள் திலகம் மாங்கல்யம் எடுத்துத் தருகிறார். திருமணம் இனிதாக முடிந்த பிறகு, தன் ஜிப்பா பாக்கெட்டுக்களில் இருந்து இரண்டு நோட்டுக் கட்டுக்களை கையில் கொடுத்து, மாப்பிள்ளையின் காதில் ஏதோ சொல்லிவிட்டு, வள்ளல் கைகூப்பி விடைபெற்றுச் செல்கிறார்.

மறுநாள் அதே சத்யா ஸ்டுடியோ! அதே படப்பிடிப்பு. அங்கு பணியாற்றிய அத்தனை பேரிடமும், மதியம் என் செலவில் விருந்து என்கறார், நம் வள்ளல்.

மதியம் ஒரு மணியாகிவிட்டது. ஷாமியானா பந்தலில் மூன்று சிம்மாசனம் போன்ற சேர். மூன்று சேர் யாருக்காக? எதற்காக இந்த விருந்து? என்று எவருக்குமே புரியவில்லை.

சரியாக ஒரு மணிக்கு ஷாமியானா பந்தலை ஒட்டி ஒரு கார் வந்து நிற்கிறது. நேற்று திருமணமான அதே தம்பதியர், காரில் இருந்து இறங்குகிறார்கள். நடுவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் தான் உட்கார்ந்து கொண்டு, இடதுபுறம் மணமகளையும், வலதுபுறம் மணமகனையும், உட்கார வைத்து, உண்ண வைத்து அழகு பார்க்கிறார் சத்துணவு தந்த நாயகன் நம் வள்ளல். விருந்து முடிகிறது. ஒரு வேன் வந்து நிறகிறது. அதில் கட்டில்,பீரோ, பாத்திரங்கள், இப்பொழுதான் யூனிட்டில் இருந்தவர்களுக்குப் புரிந்தது. வள்ளல் நேற்று மணமேடையில் மாப்பிள்ளையின் காதில் விருந்துக்கு, வரச்சொன்ன விஷயம்.

பொன்மனச் செம்மல் சம்பந்தி விருந்துண்ட அந்த இளைஞன் யார்?

அந்த இளைஞன்தான, வள்ளல் நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போது, வள்ளல் மீண்டும் உயிர் பெற தீ மிதித்து, தன்னுடை ஒரு கையை வெட்டிக்கொண்டான் என்று பத்திரிகையில், பரப்பரப்பாகப் பேசப்பட்டவன்!

வள்ளலே! இன்றைக்கு மக்களின் மனதில் இடம் பிடிக்க, மார்க்கம் தெரியாமல் அகநானூறு, புறநானூற்றில் இருந்து அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ் வரை கரைத்துக் குடித்துவிட்டேன் என்கிற தகுதியோடு, மேடைகளில் பேசிக் கைதட்டல் மட்டும் வாங்கியவர்களெல்லாம், இன்று உனது திசை நோக்கி வாழ்கிறார்கள். அதனால் தான் கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு வந்த கடைசி வள்ளலாய், எட்டாவது வள்ளல் என்று இன்று வரலாறு உன்னை இணைத்துக்கொண்டது.

அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம்
ஆனந்தப் பூந்தோப்பு – வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை – இது
நான்குமறைத் தீர்ப்பு.

http://www.puratchithalaivar.org/tamil/special-pages/eighth-gift/


No comments:

Post a Comment