Saturday, March 26, 2011

நாய்கள்,பன்றிகள்,கழுதைகள் இவைகள்தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள். எஸ்.வி.சேகர்

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் கடைசி​யாக ரிலீஸ் ஆவதும் அதில் குளறுபடிகள் குத்தாட்டம் போடுவதும் தேர்தலுக்குத் தேர்தல் அரங்கேறும் சம்பிரதாயம். இருந்தாலும், இந்தத் தேர்தலில் கொஞ்சம் ஓவர்!

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளில் 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட... உடனடி எதிரொலியாக பாடை கட்டுவது, கொடும்பாவி எரிப்பு, கொடிக் கம்பங்கள் சாய்ப்பு, சத்தியமூர்த்தி பவன் சூறை​யாடல் என்று கதர் வேட்டிகள் கபடி ஆடு​கின்றன. 'கூட்டணி சேரவும் தெரியலை... ஸீட் ஒதுக்​கவும் தெரியலை’ என்று கொந்தளிக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.

இந்தப் பட்டியலில், இப்போது இருக்கும் 28 எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. வழக்கம்போலவே பட்டியலில் ஜி.கே.வாசனின் 'கை’யே ஓங்கி இருக்கிறது. அவர் ஆதரவாளர்கள் 22 பேருக்கும், தங்கபாலு ஆதரவாளர்கள் 13 பேருக்கும், ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் 12 பேருக்கும், இளைஞர் காங்கிரஸுக்கு 9 பேருக்கும் பங்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அன்பரசு போன்றவர்களுக்கு ஒன்றிரண்டு தொகுதிகளே!

மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலு​வின் மனைவி ஜெயந்தி தங்கபாலுக்கு ஸீட் கொடுக்கப்​பட்டதற்குதான் உச்சகட்டக் கோபத்தைக் காட்டிவிட்​டனர் காங்கிரஸ்காரர்கள். சில மாதங்கள் முன்பு காங்கிரஸில் சேர்ந்த மயிலாப்பூர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான எஸ்.வி.சேகர், அதே தொகுதியைக் குறிவைத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலைகள் பார்த்து வந்த கராத்தே தியாகராஜன் இருவரும் செம அப்செட்!

வேட்பாளர் குளறுபடிபற்றி காங்கிரஸ் புள்ளிகளிடம் பேசினோம். ''எஸ்.வி.சேகருக்காக ஜி.கே.வாசனும், இளங்கோவனும் பரிந்துரை செய்தனர். பொதுவாக, டெல்லி தலைமை வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு முன்பு, மாநில காங்கிரஸ் கமிட்டியிடம் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேர்கொண்ட பட்டியலைக் கேட்கும். அதில் சம்பந்தப்பட்ட தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. இருந்தால், அவர் பெயர்தான் முதலில் இடம் பெறும். ஆனால், மயிலாப்பூர் தொகுதியில் தன் மனைவி ஜெயந்தி பெயரை முதலில் போட்டிருந்தார் தங்கபாலு. கடைசியாகத்தான் எஸ்.வி.சேகர் பெயர். எப்படியோ, தங்கபாலுவின் ஆசை நிறைவேறிவிட்டது...'' என்கிறார்கள்.

எஸ்.வி.சேகருக்காக வேறு சிலர் வயலார் ரவியிடம் சொல்லி இருக்கின்றனர். 'கவலைப்பட வேண்டாம். அவர் பெயர் பட்டியலில் உள்ளது’ என்று சொன்னாராம். விடியல் சேகர் பெயரைப் பார்த்து அதான் எஸ்.வி.சேகர் என்று வயலார் ரவி புரிந்துகொண்டதாகச் சொல்கிறார்கள். 'புதுசாக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு ஸீட் தரக் கூடாது’ என்று நாமக்கல் ஜெயக்குமார் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தாராம். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ. ஆகி, பிறகு பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போய், அங்கு இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த செல்வப் பெருந்தகைக்கு செங்கம் தொகுதி வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல, பி.ஜே.பி-யில் இருந்து வந்த திருநாவுக்கரசருக்கு, அறந்தாங்கி தொகுதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதை எல்லாம் சொல்லிப் புலம்புகிறது எஸ்.வி.சேகர் கோஷ்டி.

''தமிழக காங்கிரஸில் ப.சிதம்பரத்தின் செல்வாக்கு அதிகரிக்கக் கூடாது என்று, அவரைக் கவிழ்ப்பதற்காக எதிர் எதிர் கோஷ்டிகளைச் சேர்ந்த தங்கபாலுவும், ஜி.கே.வாசனும் கரம் கோத்துக்கொண்டு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஸீட் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்கள்!'' என்கிறார்கள்.

''சத்தியமூர்த்தி பவன் பக்கம் தலை வைத்துக்கூட படுக்காதவர்களுக்கும் ஸீட். கிரிமினல் வழக்கில் பேசப்பட்ட ஒருவர் ஸீட் வாங்க 1.50 கோடி 'கை’ மாறியதாம். வேட்பாளர் தேர்வில் நடந்த முயற்சியில் ஒரு செல்போன் உரையாடல் ஒன்று பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு வேட்பாளரின் அழகைப்பற்றி வர்ணிக்கிறார்கள். 'நைஸ் லுக்கிங் லேடி’ என்று போகும் அந்த உரையாடல் ஆபாச ரகம். இதை எல்லாம் டெல்லியில் சொல்லி ஸீட் வாங்கி இருக்கிறார்கள். அந்த அளவுக்கு காங்கிரஸ் தரம் தாழ்ந்துவிட்டதுதான் கொடுமை. இப்போது ஸீட் வாங்கியவர்களில் முக்கியமான சிலர்தான் ஜெயிப்பார்கள். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, 'கருணாநிதி காங்கிரஸ்’ கோஷ்டி ஒன்று செயல்படுகிறது. அவர்களை எப்படியும் வெற்றி பெறச் செய்துவிட வேண்டும் என்று தி.மு.க. தலைமை உத்தரவு போட்டு இருக்கிறது. மெஜாரிட்டிக்கு நெருக்கத்தில் போட்டியிடும் தி.மு.க. எப்படியும் அறுதிப்பெரும்பான்மை பெறாது என்று அவர்களுக்குத் தெரியும். அதனால், கருணாநிதி காங்கிரஸ் கோஷ்டியினர் மட்டும் வெற்றி பெற்றுவிட்டால், அவர்களைவைத்து ஆட்சி அமைக்க வசதியாக இருக்கும் என்று தி.மு.க. நினைக்கிறது!'' என்று சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் கூட்டமாக நின்று பேசுகிறார்கள்.

காங்கிரஸின் சீனியர்கள் சிலர், ''பெருந்​தலைவர் காமராஜ், 'கட்சிப் பணிக்கு மூத்தவர்கள் வர வேண்டும். அரசியல் பதவிகள் புதியவர்​களுக்குத் தர வேண்டும்’ என்று அறிவித்து முதல்வர் பதவியை துறந்தார். இதுதான் காமராஜரின் 'கே பிளான்.’ ஆனால், அதை எல்லாம் மறந்துவிட்டு, தொடர்ந்து எம்.எல்.ஏ-க்களாக இருப்பவர்களுக்குதான் ஸீட்களை வாரி வழங்குகிறார்கள். யசோதா நான்கு ஐந்து முறை எம்.எல்.ஏ. அதோடு, சில தேர்தல்களில் போட்டி​யிட்டு தோல்வியும் அடைந்தார். கே.ஆர்.ராமசாமி 1989 முதல் தொடர்ந்து ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். வேலூர் ஞானசேகரன், 1991-ல் இருந்து தொடர்ந்து எம்.எல்.ஏ. இவர்களுக்கு இப்போதும் ஸீட் கொடுத்து இருக்கிறார்கள். ஜெயந்தி தங்கபாலு, அருள் அன்பரசு, விஷ்ணு பிரசாத் என்று வாரிசுகளுக்கு ஸீட்களை வாரி வழங்கி இருப்பதைவைத்தே காங்கிரஸ் கட்சி சல்லடையாகப் போய்க்கொண்டு இருக்கிறது!'' என்று சலிப்போடு சொன்னார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களைப்பற்றியும், அவர்களின் பின்னணிபற்றியும் நிலவும் அதிருப்தியை வி.ஐ.பி. புள்ளிகள் என்ன சொல்கிறார்கள்?

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கேட்டோம். ''உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் நிச்சயமாக ஓரம் கட்டப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கெனவே, எம்.எல்.ஏ-வாக இருந்த ராணி வெங்கடேசனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நான் பரிந்துரை செய்த யாருக்கும் ஸீட் கிடைக்கவில்லை. எனது வருத்தம், உண்மையான காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஸீட் கிடைக்கவில்லை என்பதுதான். தங்கபாலு தன் குடும்பத்தினரும் எடுபிடிகளும் போட்டியிட வழி செய்திருக்கிறார். ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்றவர்கள் ஏன் இவற்றைத் தட்டிக் கேட்கவில்லை என்று தெரியவில்லை?'' என்றார் காட்டத்துடன்.

''அகில இந்திய காங்கிரஸ் போராடி 63 தொகுதிகளை வாங்கியிருக்​கிறது. ஆனால், தமிழக காங்கிரஸ் தங்களுக்குள் ஒரு பங்கீட்டை வைத்துக்கொண்டு ஸீட்களைக் கூறு போட்டு இருக்கிறார்கள். 12 நாய்கள், 18 கழுதைகள், 16 பன்றிகள் என்று பிரித்துக்கொள்வதா உள் கட்சித் தொகுதிப் பங்கீடு? சில மாதங்களுக்கு முன்பே, 234 தொகுதி​களுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டு, காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை அறிவித்தால் பிரச்னை ஏற்படாது. கடைசி நேரத்தில் நடக்கிற குதிரை பேரமாக வேட்பாளர் பட்டியல் மாறிவிட்டது. வேட்பாளர் தேர்வில் நடந்த பிரச்னைகளால், 12-ல் இருந்து 18 தொகுதிகள் வரையில்தான் காங்கிரஸ் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஜெயித்தால், தி.மு.க. அமைச்சரவையில் மனைவிக்கு மந்திரி பதவி வாங்கிவிட வேண்டும் என்பது தங்கபாலுவின் திட்டம். எது எப்படியோ, மயிலாப்பூரில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜலெட்சுமிதான் ஜெயிப்பார்!'' என்கிறார் எஸ்.வி.சேகர்.

கராத்தே தியாகராஜனை சந்தித்தோம். ''மயிலாப்பூரில் மட்டும் இளைஞர் காங்கிரஸுக்காக 5,000 பேரை சேர்த்தோம். ஓர் உறுப்பினரைக்கூட சேர்க்காத ஜெயந்திக்கு ஸீட் கொடுத்து இருக்கிறார்கள். இந்த ஐந்து ஆண்டுகளில் ப.சிதம்பரத்தை வைத்து பட்ஜெட் விளக்கக் கூட்டம், இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பான கூட்டம், கடந்த எம்.பி. தேர்தலில் தீவுத் திடலில் கூட்ட ஏற்பாடு, சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த ராகுலுக்கு வரவேற்பு என்று கட்சியை வளர்ப்பதற்காக எத்தனையோ வேலைகளைச் செய்திருக்கிறோம். கொடி கட்டவும், போஸ்டர் ஒட்டவும், மேடை போடவும் மட்டும் நாங்களா? எங்கள் உழைப்பைச் சுரண்டி, அதில் அவர் மனைவிக்கு ஸீட் வாங்கிக் கொடுத்திருக்கும் உழைப்புத் திருடர்தான் தங்கபாலு. அவரது செல்போனைத் தூக்கிக்கொண்டு வரும் தாமோதரனும், அவருக்கு கார் கதவைத் திறந்துவிடும் சிவலிங்கமும் வேட்பாளர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள்...'' என்றார் சீற்றத்துடன்.

இதில் எத்தனை பேர் தேறுவார்​களோ?

http://www.thedipaar.com/news/news.php?id=26078



No comments:

Post a Comment