Tuesday, March 22, 2011

எட்டாவது வள்ளல் MGR


அவன் மயிலுக்குப் போர்வை! இவன் மனுஷிக்குப் போர்வை!

10-10-1972 ல் நம் வள்ளல் தி.மு.க. வில் இருந்து நீக்கப்படுகிறார். 16-10-1972 ல் நம் வள்ளல் அ.தி.மு.க. என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்குகிறார். 22-5-1973ல் தமிழகத்தின்தலையெழுத்தையே மாற்றி அமைத்த திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தல்! முப்பிறவி கண்ட வள்ளல், மூன்றாவது கட்டப் பிரச்சாரத்திற்குச் செல்கிறார். வள்ளல் இயக்கி, நடித்து தயாரித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற ஒப்பற்ற காவியத்தை ஓட விடாமல் செய்த விடலாம் என்று சவால் விடுகிறார்கள். சட்டம்கூட தீட்டுகிறார்கள். ஏன் வள்ளலின் மூச்சை நிறுத்தி விடலாம் என்றெல்லாம்; எதிரிகள் திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் நம் முடி சூடா மன்னன் அத்தனைபேரையும் முறியடித்துக் காட்டுகிறார்.

சென்னையிலிருந்து புறப்பட்ட வள்ளல், ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்குப் பிறகும் செல்லும் வழியை மாற்றி, வாகனத்தை மாற்றி, மாற்றி பயணம் செய்கிறார். காலத்தை வென்ற அந்தக் காவிய நாயகன், காரில் செல்கிறாரா, வேனில் செல்கிறாரா, லாரியில் செல்கிறாரா என்று எதிரிகள், திக்குமுக்காடிப் போகிறார்கள்.

மணப்பாறையைத் தாண்டும் பொழுது யாரும் எதிர்பார்க்காத வகையில், மாட்டு வண்டியில் தர்மத்தின் தலைவன் தலைப்பாகை சகிதமாய்ச் சென்றதை எதிரிகள் தெரிந்துகொள்கிறார்கள். புத்தாந்ததம் என்ற ஊரைத் தாண்டியவுடன் போட்டுத் தள்ளி விடலாம் என்று தீர்மானம் போடுகிறார்கள்.

புத்தாந்த்தத்தை வண்டி தாண்டுகிறது. எதிரிகள் மாட்டுவண்டியைச் சூழ்ந்து ஆயுதங்களுடன் வழிமறிக்கின்றனர். ஆனால் வள்ளல் மாட்டு வண்டியில் இல்லை. எதிரிகள் ஏமாந்து நிற்பதை புன்முறுவல் பூக்க வேனில் சென்ற பொன்மனச் செம்மல், மாட்டு வண்டியைக் கடந்து செல்கிறார். இப்படி வள்ளல் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து பயணத்தைத் தொடர்கிறார். மணி நள்ளிரவு பன்னிரெண்டாகிவிட்டது. விடிந்து பயணத்தைத் தொடரலாம் என்று புரட்சித்தலைவர் முடிவெடுக்கிறார்.

வேனை ரோட்டோரப் புதரில் நிற்கவைத்துவிட்டு, இரண்டு கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காட்டுக்குள், அந்தப் பொற்பாதம் நடக்கிறது. நடுக்காட்டில் பாய்விரித்துப் படுக்கிறார். பரங்கிமலை மன்னன் எத்தனை பேருக்குப் பட்டுமெத்தை விரித்த, நம் எட்டாவது வள்ளல் கட்டாந்தரையிலா?

உடன் சென்ற தொண்ர்கள் சுற்றி நின்று, காவல் காக்கிறோம் என்பதை மறந்து அந்த அவதாரக் குழந்தை உறங்கும் அழகை, உற்றுப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சூரியன் ஒருநாளும் பொன்மனச் செம்மலைத் தொட்டு எழுப்பியதில்லை. அவர் எழுந்த பிறகுதான் சூரியன் எழும் என்பதுதான் வரலாறு. அன்றும் அதிகாலை ஐந்து மணிக்கு வள்ளல் கண்விழித்துப்பார்க்கிறார்.

எதிரில் ஒரு வயதான மூதாட்டி இரண்டு அலுமினிய சட்டியுடன் தன் கால்மாட்டில், காத்துக் கிடப்பதைப்பார்த்த வள்ளல் திகைக்கிறார்! யார் இந்த மூதாட்டி? எப்படி இந்த அடர்ந்த காட்டுக்குள் இவ்வளவு அதிகாலையில் வர முடிந்தது? ஏன் வந்தார்? எதற்கு வந்தார்? வள்ளலுக்கு ஒன்றும் புரியவில்லை. வள்ளவே வாய் மலர்கிறார்.

“தாயே உங்களுக்கு என்ன வேண்டும்? எங்கிருந்து வருகிறீர்கள்!”

“எனக்கு ஒண்ணும் வேணாம். நான் வாங்க வரவில்லை. மகனே! நான் உனக்கு கொடுக வந்திருக்கிறேன்.”

கொடுத்துச் சிவந்த கரத்துக்கு, கொடுக்க வந்த மூதாட்டியைப்பார்த்து,

“எனக்கு என்ன கொடுக்கப் போறீங்க?”

“இதுல சோறு இருக்கு. இதுல உனக்குப் பிடிச்ச வெடக்கோழி கொழம்பு இருக்கு. சாப்பிடு மகராசா என்றார்.

குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த அந்த மூதாட்டியை வாரி அணைத்து,

“இங்கே நான் இருக்கிறது உங்களுக்கு எப்படித்தெரியும்?”

“என் பேரன்தான், நீ இங்கே தங்கி இருக்கிறதை இட்டறைப்பாதையில் நின்னு பார்த்திட்டு வந்து பயந்து போய் சொன்னான். அப்புறம்தான் ஒரு கோழியைப் பிடிச்சு நசுக்கி, என் பேரனை வாட்டித் தரச்சொல்லி கோழம்பு வச்சு, சோறாக்கி கொண்டு வந்தேன். நீ எதுக்காகய்யா பதுங்கி இருக்கணும். உன்னை தொட்டு மீள இந்த உலகத்துல, எவன் பொறந்திருக்கான். ஏன்ய்யா, எங்காச்சும் நெருப்பை கரையான் அரிச்ச அதிசயம் உண்டாய்யா? உன் நிழலை நெருங்க, எவனுக்குயா தைரியம் இருக்கு?”

புரட்சித் தலைவர் இரண்டு பாத்திரத்தையும் வேனில் ஏற்றச் சொல்கிறார். புறப்படுவதற்கு முன் அந்த மூதாட்டியிடம், வீடு எங்கே இருக்கிறது? என்று கேட்கிறார்.

“அதோ தெரியுதே! அதுதான் என் வீடு. எப்பவும் அந்த ஓட்டுத் திண்ணையிலேதான் படுத்திருப்பேன். நீ இந்தப்பக்கம் எப்ப வந்தாலும் ஒரு குரல் குடுத்தா போதும், ஓடி வந்துடுவேன். என்கிறார். வாழ்த்திய மூதாட்டியை வள்ளல் வணங்கிப்புறப்படுகிறார்.

திண்டுக்கல்லில் இரவு ஒரு மணி வரை பிரச்சாரம் செய்துவிட்டு ணசென்னை திரும்புகிறார் வள்ளல். காரில் வந்தவர்களெல்லாம் உறங்குகிறார்கள். வள்ளல் மட்டும் விழித்துக்கொண்டே வருகிறார். நேற்று இரவு தங்கிய இடம் வந்தவுடன் காரை நிறுத்தச்சொல்கிறார். ஒருவரைத்தட்டி எழுப்பி “மதியம் நான் வாங்கிட்டு வரச்சொன்ன போர்வையை எடு” என்கிறார்.

தூக்கக் கலக்கத்தில் ஒன்றும் புரியாமல் அவர், போர்வை உள்ள பார்சலை வள்ளலிடம் கொடுக்க, வள்ளல் டார்ச் லைட் வெளிச்சத்தில் நடக்கிறார். ஒன்றும் புரியாமல், உடன் அவர்களும் நடக்கிறார்கள்.

நேராக பாட்டி சொன்ன அந்தக் கூரைவிட்டு ஒட்டுத் திண்ணக்கு செல்கிறார். குளிரில் வாடிக்கொண்டிருந்த மூதாட்டியின் உடலில் அந்தக்ககம்பளிப் போர்வையைப்போர்த்துகிறார். தட்டி எழுப்பி கையில் ஆயிரம் ரூபாயை சாதாரணமாக கொடுக்கவில்லை. அன்பால், திணிக்கிறார். திகைத்துப்போன மூதாட்டியால் பேசமுடியவில்லை. விடை பெறுகிறார் வள்ளல். மழையால் வாடிய மயிலுக்குப் போர்வை கொடுத்தான் கடையேழு வள்ளல்களில் ஒருவனான பேகன் என்ற மன்னன். பொன்மனச் செம்மலே நீ ஒரு மனுஷிக்கு போர்வை கொடுத்து கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு வந்த கடைசி வள்ளலாக மட்டுமல்லாமல், வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக அல்லவா அன்னை வரலாறு குறித்துக்கொண்டது.

தோட்டம் காக்க போட்டவேலி
பயிரைத்தின்பதா! – அதை
கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதா?
நானொரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன்.
பூனையல்ல புலிதானென்று
போகப்போக காட்டுகிறேன்!

http://www.puratchithalaivar.org/tamil/special-pages/eighth-gift/

No comments:

Post a Comment