பக்திப் பரவசமான தலைப்பாக இருக்கிறது என்றுதானே பார்க்கிறீர்கள். இந்தத் தலைப்பின் முதல் பாதியை முணுமுணுத்துக் கொண்டிருப்பது, கருணாநிதியின் குடும்பத்தார். திடீரென்று அத்தனை பேருக்கும் பகுத்தறிவு வேஷத்தைத் தாண்டியும், பக்தி பீறிட்டுக் கொண்டு வருகிறது.
கடந்த வாரம், சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி சிபிஐ உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கும் குற்றப் பத்திரிக்கையில், கனிமொழி, மற்றும் கலைஞர் டிவி மேலாண் இயக்குநர் சரத்குமார் பெயர்கள் இடம் பெறும் என்று, நேற்று ஹெட்லைன்ஸ் டுடே செய்தி வெளியிட்டது.
நேற்றைய நாளேடுகளில் வெளி வந்திருக்கும் செய்தியோ, கலைஞர் டிவி எம்டி சரத்குமார் பெயர் மட்டும் தான் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெறும் என்று தெரிவிக்கின்றது. கலைஞர் டிவியில், சரத் குமார் ஒரு சாதாரண வேலையாள். ஊழியர். 20 சதவிகித பங்கை வைத்திருப்பதாலேயே, கலைஞர் டிவியில் எல்லா முடிவுகளையும் அவர் எடுப்பார் என்று கூற முடியாது. அந்த நிறுவனத்தில் பெரும்பான்மை பங்கு வைத்திருக்கக் கூடிய, தயாளுவுக்கும், கனிமொழிக்கும் இல்லாத பொறுப்பு சரத்குமாருக்கு வந்திருக்க வாய்ப்பில்லை.
சரி இந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்று ஆராய்ந்தால், வரக்கூடிய தகவல்கள் இந்திய ஜனநாயகத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.
தயாளு, சிபிஐ கேள்வி கேட்கும் போது, இதே போல வாயை வைத்திருந்திருப்பாரோ கருணாநிதியின் கண்களாகவும், காதுகளாகவும், இருக்கும், ஜாபர் சேட் கருணாநிதியின் குடும்பத்தினரை பாதுகாக்க பல்வேறு வேலைகளிள் ஈடுபட்டாலும், டெல்லியில் ஜாபர் சேட்டுக்கு அந்த அளவுக்கு செல்வாக்கு இல்லை. ஆனால், காவல்துறையில், யாரை, எப்படி, எப்போது பிடிப்பது என்பது, அரிச்சுவடி. அந்த வகையில், கருணாநிதி குடும்பத்தினரை பாதுகாக்க, ஜாபர் சேட் தேர்ந்தெடுத்த நபர், முகம்மது ஷகீல் அக்தர்.
முகம்மது ஷகீல் அக்தர் யார் இந்த முகம்மது ஷகீல் அக்தர்…. ? இவர் 1989ம் ஆண்டு நேரடியாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஐபிஎஸ் அதிகாரி. அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த இமாம் அலி உள்ளிட்டோரை பெங்களுரில் சுட்டுக் கொன்ற போது இவர் பிரபலமானார். இமாம் அலியை சுட்டுக் கொன்றதால், இவரது உயிருக்கு ஆபத்து என்று வந்த உளவுத் துறையின் தகவலை அடுத்து, மத்திய அரசுப் பணிக்கு டெல்லி செல்கிறார்.
ஷகீல் அக்தர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். பீகார் மாநிலத்தில் லல்லு கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சரோடு மிகுந்த நெருக்கம் உள்ளது, ஷகீல் அக்தரின் குடும்பம். அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, அப்போது மத்திய அமைச்சராக இருந்த சத்ருக்கன் சின்ஹாவிடம், கப்பல் போக்குவரத்து துறையின் சிறப்பு அதிகாரியாக பணியில் சேர்கிறார்.
பிறகு, திமுகவைச் சேர்ந்த ரகுபதி உள்துறையின் மத்திய இணை அமைச்சர் ஆனதும், அவருக்கு செயலாளராக ஆகிறார் அக்தர். மத்திய அமைச்சரின் செயலாளர் என்ற முறையில், ஐபி என்று அழைக்கப் படும் மத்திய உளவுத் துறையின் ரகசிய அறிக்கைகளும், நாகா தீவிரவாதிகளோடு நடத்தப் படும் பேச்சுவார்த்தை குறித்த விபரங்களும், ஷகீல் அக்தருக்கு வரும்.
இவ்வாறு பணியாற்றிக் கொண்டிருக்கையில், ஷகீல் அக்தருக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணோடு நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது. அந்தப் பெண்ணோடு ஷகீல் அக்தர் “நெருங்கிப்” பழகுகிறார். அந்த நெருக்கமான பழக்கத்தில், ஷகீல் அக்தர் தனது பாஸ்போர்ட்டைதொலைத்து விடுகிறார். புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது, பழைய பாஸ்போர்ட் எங்கே என்று கேட்டால் தொலைந்து போய் விட்டது என்கிறார். உடனடியாக இவர் மீது மத்திய உளவுத் துறையும், ‘ரா’ வும், கண்காணிப்பைத் தீவிரப் படுத்தின. கண்காணித்த போது, அந்த ஆங்கில அணங்கோடு, ஷகீல் அக்தர், டெல்லியின் பிரபல நட்சத்திர ஓட்டல்களிலும், கெஸ்ட் ஹவுஸ்களிலும் நடத்திய ‘சட்டம் ஒழுங்கு’ விவாதத்தைப் பற்யிய தகவல்களை உளவுத்துறை புகைப்பட ஆதாரங்களோடு கண்டுபிடித்தது. கண்டு பிடித்ததும், ஷகீல் அக்தர் கைது செய்யப்படும் நிலைக்கு ஆளானார்.
அரசியல் வாதிகளோடு தொடர்பு இருக்கும் அதிகாரிகளை யார்தான் என்ன செய்ய முடியும் ?
உடனே லாலு பிரசாத் யாதவ், கருணாநிதியிடம் பேசி, இரவோடு இரவாக, ஷகீல் அக்தர், தமிழ்நாட்டுக்கு மாற்றப்படுகிறார். இது குறித்து அப்போது ஜெயலலிதா, இரவோடு இரவாக மாற்றப் பட்ட மர்மம் என்ன என்று அறிக்கை வெளியிட்டார். அதற்கு, கருணாநிதியின் பதில் என்ன தெரியுமா ?
“ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஷகீல் அக்தருக்கு மெடல் குடுத்திருக்கிறார்” அதனால், அந்த அம்மையாரின் குற்றச் சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று. (கருமம், கருமம்) இதற்கு ஜெயலலிதா வெளியிட்ட பதில் அறிக்கையில்
“உளவுத்துறைக்கு ஷகீல் அக்தர் மீது ஏன் சந்தேகம் வந்தது?. அவர் இரவோடு இரவாக ஏன் தமிழக பணிக்கு மாற்றப்பட்டார் என்பதுதான்இப்போதைய பிரச்சினை. இதற்கு ரகுபதியும், மத்திய அரசும்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் அமைதியாக இருக்க கருணாநிதிஅவசரப்பட்டு பதிலளித்து முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் அவர்கள் மீது சந்தேகம் மேலும் வலுக்கிறது.
அவருக்கு நான் வீரப் பதத்தகம் வழங்கியதாக கருணாநிதி கூறுகிறார். குடியரசுத் தலைவரின் வீரப் பதக்கத்தை பெறுபவர்களை தேர்வு செய்யதனியாக ஒரு குழு இருக்கிறது.
அந்த குழுவின் பரிந்துரையின் பேரில்தான் பதக்கம் பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் அவர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரித்து,அதன் பின்னர் சம்பிரதாய முறையில் பதக்கம் அளிக்கப்படுகிறது. அப்படித்தான் ஷகீல் அக்தருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. ஆனால் ஏதோ, நான்தான் தேர்வு செய்தது போல கருணாநிதி பேசியுள்ளார்.
மத்திய அரசுப் பணியிலிருந்து மாநிலங்களுக்குத் திரும்பும் அதிகாரிகளை குறைந்தது சில வாரங்களாவது காத்திருப்போர் பட்டியலில்வைத்திருப்பார்கள். ஆனால் இரவோடு இரவாக, மின்னல் வேகத்தில் ஷகீல் அக்தர் பதவிக்கு வருகிறார் என்றால், அதற்கான பின்னணி என்ன?எத்தனை அதிகாரிகளுக்கு இவ்வாறு சில மணித் துளிகளில் மாநிலத்திற்கு வரவழைத்து கருணாநிதி பதவி கொடுத்திருக்கிறார் என்பதை அவர்பட்டியலிட வேண்டும்.
ஷகீல் அக்தரின் பழைய புகைப்படத்தைக் காட்டி அப்போது நல்லவர் என்று சொல்வதும் எந்த விதத்தில் நியாயம்? அவரை அவசர அவசரமாக பணிஅமர்த்த வேண்டிய அவசியம் என்ன? அதற்கான நிர்ப்பந்தம் என்ன?
சந்தேகம் என்றால் ரகுபதி ஓடி ஒளிய வேண்டிய அவசியமோ, கருணநிதி இரவோடு இரவாக பதவி கொடுக்க வேண்டிய அவசியமோ என்ன?
ஷகீல் அக்தரை கருணாநிதி விழுந்தடித்துப் பாதுகாக்கிறார் என்றால், அதில், ஆழமான, பயங்கரமான, கற்பனைக்கும் எட்டாத, கண்ணுக்குப்புலப்படாத பல மர்மங்கள் இருக்கும் என்பது அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் கருத்தாகும்.
இத்தனை பேரும் கருணாநிதியும், ரகுபதியும் நான் அனுப்பி வைக்கும் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பத்திரிக்கையாளர்கள், டிவி நிருபர்கள்முன்னிலையில், முன் பதில் சொல்லத் தயாரா ?”
என்று கேட்டார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு, இந்தச் சம்பவங்கள் மறக்கப் பட்டு, ஷகீல் அக்தர், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக வேடமிட்டு இன்று வரை நடமாடி வருகிறார்.
பேக்ரவுண்ட் போதுமா ? இந்த ஷகீல் அக்தரிடம் தான், கனிமொழியையும், தயாளுவையும் காப்பாற்றும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அதற்கான காரணம், டெல்லியில் நீண்ட காலம் பணியாற்றியதனால், அவருக்கு உள்ள டெல்லி தொடர்புகள்.
அதற்காக நேரடியாக ஷகீல் யாரையும் தொடர்பு கொண்டு விட முடியாதல்லவா ? இதற்கு ஜாபர் சேட் வழி செய்து கொடுத்தார். இந்த ஆண்டு காவல் அதிகாரிகளுக்கான பதக்கங்கள் வழங்கும் பட்டியலில், ஜாபருக்கு, சர்வதேச சட்ட விருது ஒன்று வழங்கப் பட்டது. இந்த விருதை வழங்கியது, சர்வதேச சட்ட வல்லுனர்கள் அமைப்பு என்ற ஒரு அமைப்பு. இந்த அமைப்பு, ஒரு டுபாக்கூர் அமைப்பு. சட்ட வல்லுநர்கள் என்ற பெயரை வைத்துக் கொண்டு, நீதிபதிகளுக்கு ப்ரோக்கர்களாக செயல்படுவதுதான். இதன் தலைவர், டாக்டர் (?????) ஆதிஷ் அகர்வாலா. இவர் வகிக்கும் பதவிகளை பட்டியலிடுகிறேன் பாருங்கள். இவர் ஒரு நாள் கூட கோட் போட்டு, நீதிமன்றத்தில் வாதாடியதே இல்லை என்பது கூடுதல் தகவல்.
மகாநதி படத்தில், ஹனீபா, விசிட்டிங் கார்டுகளை எடுத்து கமலிடம் காண்பிப்பது நினைவுக்கு வருகிறதா ? இந்த டுபாக்கூர் அமைப்பின் தமிழ்நாட்டுப் பிரதிநிதி, ஒரு டுபாக்கூர் வழக்கறிஞர் சங்கத்தை நடத்தி வரும், பிரபாகரன் என்ற வழக்கறிஞர். இந்த பிரபாகரன், பல உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ப்ரோக்கராக செயல்பட்டு வருகிறார் என்பது உயர்நீதிமன்ற வட்டார தகவல்.
டாக்டர் ஆதிஷ் அகர்வாலா சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்கு ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி வந்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நேர்மையான வழக்கறிஞர்கள் அவரை சந்தித்து, “நீங்கள் இப்படிப்பட்ட ஒரு டுபாக்கூர் சங்கம் நடத்தும் விழாக்களில் பங்கெடுத்து, அந்த சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது” என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு அந்த உச்ச நீதிமன்ற நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா ? “பிரபாகரன் நேர்மையற்றவர் என்றால், நீங்கள் மட்டும் நேர்மையானவர்களா ? ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியைச் சந்தித்து இப்படிப் பேச உங்களுக்கு என்ன துணிச்சல் ? நான் அந்த விழாவில் கலந்து கொள்ளத்தான் செய்வேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது” என்று கூறினார். எதற்கு மூடி மறைப்பானேன்… அந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வேறு யாருமல்ல…. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ள சதாசிவம் தான் அது.
இந்த பிரபாகரன், சமீபத்தில் சீனாவில் நடந்த சர்வதேச சட்ட வல்லுனர்களின் (???????) சென்னையைச் சேர்ந்த, டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் பணியாற்றி சமீபத்தில் ராஜினாமா செய்த சுப்ரமணி என்ற பத்திரிக்கையாளரை மட்டும், செலவு செய்து சீனா அழைத்துச் சென்றார் என்பது கூடுதல் தகவல்.
சரி விஷயத்திற்கு வருவோம். இந்த ஆதிஷ் அகர்வாலா, ஜாபர் சேட்டுக்கு, சர்வதேச சட்ட வல்லுனர்கள் குழுமம் அளிக்கும் விருது ஒன்றை வழங்குகிறார். அந்த விருதில், அச்சமில்லாமல் பணியாற்றி, தீவிரவாதத்தையும், குற்றங்களையும், ஒழித்து தேசிய அளவில், மிகச் சிறப்பான பெயரை பெற்று, காவல் துறையில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்தார் என்பதுதான் அந்த விருது. இந்த விருதை ஆதிஷ் அகர்வாலா வழங்குகிறார்.
இதற்கு ஜாபர் கைமாறு செய்ய வேண்டாமா ? செய்தார். அது என்னவென்றால், ஆதிஷ் அகர்வாலாவை தமிழகத்தின் கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்தது. (Additional Advocate General). இந்த பதவியை ஆதிஷ் அகர்வாலாவின் பதவிப் பட்டியலோடு சேர்த்து படியுங்கள். இந்த நியமனம் எப்போது வழங்கப் பட்டது தெரியுமா ? தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை வெளியிட்ட அன்று. அறிவிப்பு வெளி வந்த பிறகு. முன் தேதியிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டது. இதற்கான அரசாணை வெளிப்படையாக வழங்கப் படாமல், மறைத்து வைக்கப் பட்டது கூடுதல் தகவல்.
இந்த ஆதிஷ் அகர்வாலாவைத் தான் ஷகீல் அக்தரை தொடர்பு கொள்ள வைத்திருக்கிறார். ஆதிஷ் அகர்வாலா மூலமாக, மற்றொரு டெல்லி வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டு, சிபிஐ தாக்கல் செய்யும் குற்றப் பத்திரிக்கையில், கனிமொழியின் பெயரையும், தயாளுவின் பெயரையும் சேர்க்காமல் இருக்க ஏற்பாடு செய்யும் பொறுப்பு ஷகீல் அக்தரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
முதலில் சவுக்குக்கு இந்த தகவல் வந்த போது, இதை நம்பவில்லை. உச்சநீதிமன்றம் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒரு வழக்கில் எப்படி இவ்வளவு தைரியமாக இதைச் செய்வார்கள் என்று நம்பவே முடியவில்லை. மேலும் உச்ச நீதிமன்றம் குற்றப் பத்திரிக்கையை ஆய்வு செய்த பிறகுதான், சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும். அப்படி இருக்கும் போது, இவ்வளவு தைரியமாக எப்படிச் செய்வார்கள் என்று சந்தேகமாக இருந்தது.
ஆனால், தினமணியிலும், மற்ற நாளேடுகளிலும் வரும் செய்தி, சரத்குமார் மீது மட்டும் குற்றப் பத்திரிக்கை என்பது. மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் உருவாக்கும், செய்தி. ஆனால் மனம் தளரலாமா ? இந்தத் தகவலை, சுப்ரமணியன் சுவாமிக்கும், உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கை நடத்தி வரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கும் சவுக்கு அனுப்பியுள்ளது. (நாங்களும் விடமாட்டோமுல்ல…) |
Saturday, March 26, 2011
காக்க காக்க கனிமொழியை காக்க….. நோக்க நோக்க திஹாரை நோக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment