Tuesday, March 22, 2011

இல்லை என்ற சொல்லை இல்லாமலாக்கியவர்! MGR

நடிகர்தானே! நாலாங்கிளாஸ் வரை படிக்காதவர்தானே என்று புரட்சித் தலைவரைப் பற்றி சிலர் நாக்கூசாமல் எள்ளி நகையாடிய நேரம் அது. புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக்கழகமாய் தன்னை மாற்றிக்கொண்டவர்.

அதனால்தான் அந்த வள்ளல் பெருந்தகை, சென்னை தியாகராயர் கலைக்கல்லூரியின் சேர்மனாக சிம்மாசனத்தில் அமர முடிந்தது.

பொன்மச் செம்மல் வாரிக்கொடுக்கிற வள்ளல் மட்டுமல்ல. தன் வாசல் தேடி வந்தவன், வானவில்லைக் கேட்டால்கூட, வளைத்துக் கொடுக்கிற வல்லமை பெற்றவர். அன்று ஏ.வி.எம்மில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு கார் வாசலை நெருங்கும்போது, திடீரென்று டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்கிறார். கார் கண்ணாடியை இறக்கி,

“ஹலோ செல்வம்”

அந்தப் பெயருக்குரியவர் திகைத்துப் போய், கார் அருகே வருகிறார்.

“உங்களைத்தான் பார்க்க வந்தேன்” என்கிறார் சினிமா மக்கள் தொடர்பாளர் சினிநியூஸ் செல்வம்.

“என்ன வேண்டும் சொல்லுங்கள்!”

“என் நண்பரின் தம்பிக்கு தியாகராய கல்லூரியில் இடம் வேண்டும். பர்ஸ்ட் லிஸ்ட், செகண்ட் லிஸ்ட்டெல்லாம் போட்டாகிவிட்டது”

பெயர், தகுதியெல்லாம் கேட்கிறார்; வள்ளல் அருகில் இருந்த திருப்பதிசாமி, எல்லாவற்றையும் குறித்துக் கொள்கிறார்.

தன் வாழ்நாளில் “முடியாது” “இல்லை” என்கிற இரண்டு வார்த்தைகளையும், தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள், என்று அப்புறப்படுத்தியவர் பொன்மனச் செம்மல்.

அதனால்தான், அவரால் மட்டுமே ஒரு அவதார புருஷனைப்போல் என்ன வேண்டும்? நானிருக்கிறேன், நான் பார்த்துக்கொள்கிறேன், கலங்காதீர்கள் கவலைப்படாதீர்கள், கண்ணீரை நான் துடைக்கிறேன்” என்றெல்லாம் சொல்லி செயல்பட முடிந்தது.

இரண்டு நாள் கழித்து, சத்யா ஸ்டுடியோவில் புரட்சித் தலைவரை காலேஜ் சீட் விஷயமாக விபரம் கேடக்ச் செல்கிறார் செல்வம்.

தான் யாரென்ற குறிப்புடன் ஸ்லிப், உள்ளே செல்கிறது. ஆனால், புரட்சித் தலைவரைப் பார்க்க இயலாது என்று, அவரின் பார்வைக்கே செல்லாமல் திருப்பதிசாமி என்பவரால், ஸ்லிப் திருப்பி அனுப்பப்படுகிறது.

தான்அவமானப்படுத்தப்பட்டு விட்டதாக, வேதனையுடன் செல்வம் திரும்புகிறபொழுது, சொல்லி வைத்தாற்போல் சூட்டிங்கை முடித்துக் கொண்டு, செட்டை விட்டு வெளியில் வந்த கொண்டிருந்த வள்ளல், செல்வத்தைப் பார்த்து விடுகிறார்.

“ஸ்டுடியோவுக்கு வந்துவிட்டு, என்னை ஏன் பார்க்காமல் செல்கிறீர்கள்?”

நடந்தவைகளைச் சொல்கிறார் செல்வம். திருப்பதிசாமி திருதிருவென்று விழிக்கிறா. மீண்டும் சொல்கிறார்

“நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் தைரியமாக புறப்படுங்கள்”

நாளை கடைசி நாள் நம்பிக்கை இழந்து செல்கிறார் செல்வம்.

மறுநாள் ஏ.வி.எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி அவர்களுடைய மகன் சரவணனின் திருமணம். வாழ்த்த வந்த வள்ளல், மண்டப ஓரமாக இருந்த புல்தரையில் வட்ட வரிசையில் போடப்பட்டிருந்த சேரில், பத்திரிகை நண்பர்களுடனும், திரையுலக பிரமுகர்களுடனும் பேசிக் கொண்டிருக்கிறார். தாமதமாக வந்த செல்வம். உட்காரச் சேர் இல்லாமல், சுற்றி வருகிறார்.. இதைப் பார்த்த வள்ளல்.

“சீட் கிடைக்கலேன்னு டென்ஷன் ஆகாதீங்க செல்வம்.. நான் சீட் தர்றேன்” என்று தான் உட்கார்ந்திருந்த சேரிலேயே நகர்ந்து உட்கார்ந்து, இடமளிக்கிறார் வள்ளல். இரு பொருளில் பேசிய வள்ளலின் போக்கு, அப்பொழுது கூட செல்வம் அவர்களுக்கு புரிந்தும், புரியாமல் இருந்தது.

மறுநாள் காலையில், சீட் கேட்ட நண்பருக்கு போன் செய்து,

“உன் தம்பியின் சீட் விஷயம் என்னாச்சு?” என்று செல்வம் கேட்கிறார்.

“இன்றிலிருந்து தம்பி காலேஜூக்குப் போகிறான். இதைச் சொல்ல இரண்டு நாளா ட்ரை பன்றேன். உங்களை பார்க்க முடியல” என்ற நண்பரிடன் இருந்து பதில் வருகிறது. செல்வம் சிந்தை குளிர்ந்து போகிறார்.

வள்ளல் நிகழ்த்திய அற்புதங்களில் இதுவும் ஒன்றோ! என்று சிலகித்துப்போன சினி நியூஸ் செல்வம், நேற்று இருபொருளில் வள்ளல் பேசியதைப் புரிந்துகொண்டு, ராமாவரம் தோட்டத்தை நோக்கி, நன்றி சொல்லக் கிளம்பினார்.

“பத்துத் திங்கள் சுமந்தாளே – அவள்
பெருமைப்பட வேண்டும் – உன்னை
பெற்றதனால் அவள் மற்றவராலே
போற்றப்பட வேண்டும்
கற்றவர் சபையில் உனக்காக – தனி
இடமும் தரவேண்டும் – உன்
கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும்
உலகம் அழ வேண்டும்”

http://www.puratchithalaivar.org/tamil/special-pages/eighth-gift/

No comments:

Post a Comment