Tuesday, March 22, 2011

MGR என்னும் உத்தமன்


சிங்கம் வளர்த்த சீமான்!

ஆயிரம் யுகங்கள் ஆனாலும் அம்மா என்கிற அமுதச் சொல் அலுத்துப் போய்விடுமோ? அதேபோல் ஆயிரம் கைகள் மறைத்து திரை போட்டாலும் ஆதவனை அப்புறப்படுத்தி விட முடியுமோ! அப்படித்தான் ஒப்புவமையில்லாத, ஈடு இணையற்ற இதிகாச நாயகன் நம் எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். இப்படிப்பட்ட, காலம் வழங்கிய இந்த கற்பக விருட்சத்தை, காணக்கிடைக்காத கனகமணி பெட்டகத்தை அலுப்பில்லாமல் காலம் உள்ளவரை கைவலிக்க எழுதிக்கொண்டே இருக்கலாம். நடிப்பதை தொழிலாகவும், கொடுப்பதை கொள்கையாகவும் கொண்டிருந்தவர் நம் கோமான். எல்லோருக்கும் தசைகளால் மட்டுமே, உடல் இருக்கும். நம் வள்ளலுக்கு மட்டுமே தங்கம் கரைத்து, வார்த்து பிரம்மன் பிரத்யேகமாக இதயத்தால் மேனி செய்தான். எதிரிகளை மட்டுமல்லாமல் எமனைக்கூட ஏழெட்டுத் தடவை பந்தாடி, தன் இழுத்த இழுப்பில் வைத்திருந்த வாகை மலர் எம்மன்னன். எல்லோரும் வீட்டில் பூனைகளையும், புறாக்களையும், வளர்த்தபோது நம் வள்ளல், வீட்டில் சிங்கம் வளர்த்த சீமான், எல்லோரும் பொன்னையும், பொருளையும் மட்டுமே சேமித்துக்கொண்டிருந்த பொழுது, நம் வள்ளல் புகழையும்,புண்ணியத்தையும், சேமித்து வைத்த பூமான். சிலர் கிளைகளுக்கு வெந்நீர் பாய்ச்சியபோது நம் வள்ளல் வேர்களுக்கு வியர்வையைப் பாய்ச்சியவர். உலை பொங்க, உத்தரவாதம் இல்லாதபோது, நம் மன்னன் இலை போட்டு பரிமாறிய பரங்கிமலை பாரி.

பரம்புமலை பாரி மன்னனுக்குகூட, முல்லைக்கு தேர் கொடுத்த தயாள குணம் மட்டுமே வரலாற்றில் பதிவாகி இருந்ததது. ஆனால் நம் வள்ளலோ நாலு கோடி மக்களுக்கு மட்டுமல்ல. அறுபத்தி ஐந்து லட்சம் பிள்ளைகளுக்கு சோறூட்டி மகிழ்ந்த மன்னாதி மன்னன். சாதனைகள் நிகழ்த்தி, சரித்திரம் படைத்தவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அற்புதம் நிகழ்த்தி அவதாரமாக நிகழ்ந்தவர் நம் வள்ளல் மட்டுமே.

ஏசுபிரான் ஏரோது மன்னனை எதிர்க்கும் பொழுது போராளியாகத்தான பேசப்பட்டார். சிலுவையில் அறைந்தபோதுதான் அவர் நிகழ்த்தியதெல்லாம் அற்புதம் என்று உலகம் ஒப்புக் கொண்டது. ஆனால் நம் வள்ளல், நடிகராக இருந்தபொழுது சரி, நாடாளும் மன்னனாக இருந்தபொழுதும் சரி, நம் அண்ணலின் அனைத்து செயல்பாடுகளுமே அவதாரங்கள் நிகழ்த்திய அற்புதங்களாகவே அங்கீகரிக்கப்பட்டது. அரசியலில் கூட சாணக்கியத்தனத்தைவிட, சத்தியத்தை அதிக சதவிகிதத்தில வைத்திருந்தவர். அதனால்தான் இருபதாம் நூற்றாண்டில் மனித நேயத்திற்கும், மாவீரத்துக்கும் உதாரண பிம்பமாக திகழ்ந்து வருகிறார். அதனால்தான் மக்கள் இன்னமும், அநதத் தூயவரை தொடர்ந்து தொழுது மகிழ்கிறார்கள்.

அன்று சென்னை அண்ணாநகரில் உயர்ந்து ஓங்கி நிற்கும் டவர் திறப்பு விழா. விழாவுக்குச் சென்ற வள்ளல் விண்ணைத் தொடும், உயரத்தில் இருந்த டவர் மேலே நின்று சென்னை மாநகரத்தை கேமிரா கோணத்தில் நாலாப்புறமும் பார்க்கிறார். தரையில் இருந்து பார்க்கும்பொழுது,மாடி வீடுகளும், மண் குடிசைகளும் பசுமையான மரங்களால்…குறிப்பாக தென்னை மரங்களால் மறைக்கப்பட்டு, பச்சைக்கம்பளம் விரித்தது போல் காட்சியளித்தது. நம் சென்னை மாநகரத்தைக் கூட “தென்னை மாநகரம்” என்று அழைக்கும் அளவுக்கு திட்டம் தீட்டினால் என்ன?” என்று வள்ளல் ஆலோசனை கேட்க அமைச்சரும் ‘அருமையான திட்டம்’ என்று ஆமோதிக்கிறார்.

அடுத்த நாளே சென்னை ‘மாநகர சென்னை புனரமைப்பு திட்டம்’ என்ற தனிப்பிரிவு ஒன்றை உருவாக்கி முதல் கட்டமாக இருபத்தி ஐந்து பேரை அரசுப்பணியில் அமர்த்துகிறார் நம் வள்ளல். அனைறைய தினம் சென்னை நகரில் மட்டும் 65 லட்சம் மக்களும், 11 லட்சம் வீடுகளும், இதில் தெருவோர பிளாட்பார குடிசைகள் இரண்டரை லட்சமும், இவர்களுக்கு வாரத்துக்கு சராசரி இரண்டு தேங்காய்கள் தேவைப்படுகின்றன என்ற, புள்ளி விபரமும் வள்ளலுக்குத் தரப்படுகிறது.

ஏற்கனவே தனது ராமாவரம் இல்லத்து எட்டு ஏக்கர் தோட்டத்தில், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, ஆட்டுப் பண்ணை, மாட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, மீன் பண்ணை, பூந்தோட்டம், புள்ளிமான் கூட்டம், கீரைத்தோட்டம், நெல், வயல், நீச்சல் குளம், பறவைகள் வளர குட்டி வேடந்தாங்கல், மன்னர் காலத்து அரண்மனையைச் சுற்றி அகழி இருப்பது போல நம் பொன்மனச் செம்மலின் மாளிகை இயற்கையாகவே அகழி அமைந்திருக்கும் எழில்மிகு தோற்றம் கொண்டது. இந்த அழகிய பிருந்தாவனத்திலேயே சென்னை மாநகர தென்னை புனரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திப் பார்க்க, அந்த ஊழியர்களில் சிலரை ஈடுபடுத்துகிறார், நம் வள்ளல்.

ஒருநாள், இன்றும் சோழவரத்தில் வேளாண்மை வளர்ச்சித் துறை அலுவலராக பணியாற்றி வரும் ப.ஜெயபால், அன்றைய தினம், ராமாவரம் தோட்டத்தில் தினம் ஒரு கீரை சாப்பிட்டு, மற்றவர்களையும் சாப்பிடவைக்கும் சத்துணவு தந்த நாயகன் வளர்த்த பதினான்கு வகை கீரைகளுக்கு தண்ணீர் பாயச்சிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது வாக்கிங் வந்து கொண்டிருந்த நம வள்ளல் என்றைக்கும் இல்லாத அளவுக்கு ஜெயபாலை உற்று உற்றுக் கவனிக்கிறார்.

வள்ளலின் இந்த பார்வைக்கு அர்த்தம் புரியாத ஜெயபாலுக்கு கூச்சமும் பயமும் ஏற்படுகிறது. எப்படியோ வேலையை ஒரு வழியாய் முடித்துக்கொண்டு ஜெயபால் கிளம்பும்பொழுது, அங்கிருந்த அப்பு அவர்கள் ஓடிவந்து, ‘காலை டிபன் சாப்பிட்டுவிட்டு உங்களை ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்குப் போகச் சொன்னார் தலைவரு’ என்று ஜெயபாலிடம் சொல்கிறார். ஏற்கனவே பயத்தில் இருந்த ஜெயபாலுக்கு இன்னும் பயம் கூடுதலாகிறது. ‘ஏன் அப்படி வள்ளல், வைத்த கண் வாங்காமல் நம்மையே பார்த்துக் கொண்டிருந்தார்? இப்பொழுது எதற்காக ஒரு மணி நேரம் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார். அந்த ஒரு மணி நேரத்துக்குள் என்ன நடக்கப்போகிறதோ?’ என்ற படபடப்புடன் சாப்பிட்டு முடித்தவுடன் ஜெயபால், தோட்டத்தைச்சுற்றி, நடந்து கொண்டே மண்டையை குழப்பிக் கொண்டிருக்கிறார். ஒரு மணி நேரம் வரை ஒரு அழைப்பும் வராததால், அதே பீதியுடன் தி.நகரில் உள்ள தன் வீட்டிற்கு வந்து சேருகிறார்.

ஆனால் ஜெயப்பாலின் மனைவியோ அன்று என்றும் இல்லாத அளவுக்கு அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள் சூழ்ந்திருக்க மகிழ்ச்சியோடு தன் கணவரை வரவேற்கிறார். தோட்டத்தில் நடந்ததுக்கும், வீட்டில் நடந்து கொண்டிருப்பதற்கும் அரத்தம்விளங்காத ஜெயப்பாலிடம், அவரது துணைவியார், மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆறு ஜோடி புது பேண்ட், சர்ட்டுகளை காண்பித்து ‘தோட்டத்திலிருந்து அய்யா கொடுத்தனுப்பி இருக்காங்க’ என்று சொல்கிறார். ஆனாலும் ஜெயபாலுக்கு சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும், குழப்பம் தீரவில்லை. உடனே அப்பு அவர்களிடம் போனில் தொடர்பு கொண்டு, “அண்ணே காலையில் இருந்து, ‘நடக்கிறது என்னவென்றே தெரியவில்லை?’ என்று நடந்ததைக் கூறுகிறார். அதற்கு அப்பு, நீங்கள் காலையில் கீரைப் பாத்தியில் வேலை செய்து கொண்டிருந்தபொழுது நீங்கள் அணிந்திருந்த சட்டையில் இரண்டு கம்கட்டிலும் கிழிந்துபோய் இருந்தது. நம் வள்ளலின் கண்ணில் பட்டுவிட்டிருக்கிறது. பிறகுதான் என்னைக் கூப்பிட்டு ‘ஒரு மணி நேரத்துக்குள்ள ஜெயபால் வீட்டுக்கு ஆறு ஜோடி பேண்ட் சர்ட் போய் சேரணும்’னு சொல்லிட்டார். அப்புறம் நான்தான் போய் வாங்கி வந்து உங்க வீட்ல கொடுத்துட்டு வந்தேன்’, என்கிறார். இப்பொழுதுதான் ஜெயபால் அதிர்ச்சியில் இருந்து மீண்டு இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப் போகிறார்.

இன்னும் அந்த இனிய நினைவிலிருந்து மீள முடியாத ஜெயபால், ‘வேலைக்கார நாய்க்கு டிப்டாப் டிரஸ் கேட்குதோ’ என்று கோவணத்தை கொடுக்க நினைக்கும் இந்த உலகத்தில், உழைப்பவனை உண்ண வைத்து, உடுக்க வைத்து அழகு பார்க்கும், அதிசயப்பிறவி நம் பொன்மனச் செம்மல் ஒருவர்தான். அதனால்தான் “திருமணத்திற்கு நான் அணிந்த பட்டு வேஷ்டியை, பட்டு சட்டையைக் கூட நான் பாதுகாத்து வைக்கவில்லை. ஆனால் வள்ளல் வாங்கிக் கொடுத்த உடைகளை நைந்து போன நிலையில் கூட இன்னமும் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன்” என்று சிலிர்த்து சொல்கிறார் ஜெயபால்.

பஞ்சுக்குள் நூலை எடுத்து
பட்டாடை கொடுத்து-
தன்மானத்தைக் காத்து நிற்க!
மண்ணுக்குள் வெட்டியெடுத்து
பொன்கட்டி எடுத்து
தன் தேவைக்கு சேர்த்திருக்க
பாடுபட்ட கை அது பாட்டாளி கை!

http://www.puratchithalaivar.org/tamil/special-pages/eighth-gift/

No comments:

Post a Comment