Saturday, March 26, 2011

சமூக அவலங்களை வெளிப்படுத்த கலைஞர் பராசக்தி எடுக்கலாம்,நான் சட்டப்படி குற்றம் எடுக்கக்கூடாதா? எஸ்.ஏ.சந்திரசேகர்

மழைவிட்டாலும் தூவானம்விடாத குறை​யாக 'காவலன்’ படப்பஞ்சாயத்துகள் முடிந்து, 'ஸ்ஸ்ஸ்... அப்பாடா’ என்று ரிலாக்ஸ்டாக இருந்த நேரத்தில், விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு அடுத்த டார்ச்சர் ஆரம்பம்!

அவர் தயாரித்து இயக்கிய 'சட்டப்படி குற்றம்’, மார்ச்-25 ரிலீஸ் என்று அறிவிப்புகள் வந்தன. 'ஆளும் கட்சி சார்ந்த சில விஷயங்களை படம் அம்பலப்படுத்தும்’ என்ற பேச்சு இருந்தது. இப்போது, ''அந்தப் படத்தை வெளியிடவிடாமல் தடுக்கிறார்கள்...'' என்று குற்றம் சாட்டுகிறார் எஸ்.ஏ.சி. அவரை சந்தித்ததுமே பொங்கி எழுந்து​விட்டார்.

''நான் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசையும் அமைச்சர்களையும் கடுமை​யாகத் தாக்கித்தான், 'நீதிக்குத் தண்டனை’ என்ற படம் எடுத்தேன். எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால், தடுத்து இருக்கலாம். ஆனால், அவர் என்னை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்தார். 'படத்தை அஞ்சு தடவை பார்த்தேன்... சமூக அக்கறையோட எடுத்திருக்கே, சபாஷ்!’ என தோளில் தட்டிப் பாராட்டி, 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்ல படம் எடுத்து நாளாச்சு... நீ ஒரு படம் பண்றியா?’ என்று பாசமாகக் கேட்டார்.

ஆனால் இப்போது, 'சட்டப்படி குற்றம்’ படத்தை யாரும் இன்னும் பார்க்கவே இல்லை. அதற்குள் தேர்தல் கமிஷனிடம் தடை கோரிக் கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். ஏன் இந்தப் புத்தி? எந்த நோக்கத்துக்காக கலைஞர் 'பராசக்தி’ படம் எடுத்​தாரோ, அதே நோக்கத்தில்தான் நானும் 'சட்டப்படி குற்றம்’ எடுத்து இருக்கிறேன். தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுவதைச் சுட்டிக்காட்டி, எப்படி சரிசெய்யலாம் என தீர்வையும் சொல்லி இருக்கி​றேன். அதற்கு ஏன் தடை?'' என்றவர் மேலும் தொடர்ந்தார்.

''நான் படத்தைப் போட்டுக் காட்​டிய​போது, விநியோ​கஸ்தர்​கள் உடனே வாங்க ஆசைப்பட்டார்கள். ஆனால், அதற்கு அடுத்த சில நாட்களில் என்ன உள் குத்து நடந்ததோ? சொல்லி​வைத்தமாதிரி திடீரென்று பின்வாங்கிவிட்டார்கள்! அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அதேபோல, அந்தப் படத்தைத் திரையிட விரும்பிய தியேட்டர் அதிபர்களை மிரட்டியது யார்? இந்தப் படம் எடுக்க நான் பட்ட கஷ்டங்களை தயாரிப்பாளர் சங்கத்தில் சொல்லி முறையிடுவேன். அந்தச் சங்கத்தில் துணைத் தலைவர் பதவியில் இருக்கும் எனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். அவர்களும் அலட்சியம் செய்தால், எனக்கு சாவதைத் தவிர, வேறு வழி இல்லை! அதையாவது செய்யவிடுங்கள்!'' என்று கோபமும் ஆவேசமுமாகக் கொந்தளித்து அடங்கினார் எஸ்.ஏ.சி.!

http://www.thedipaar.com/news/news.php?id=25996

No comments:

Post a Comment