நம் காவிய நாயகன், கல்வெட்டு என்று தெரியாமலேயே, தன்னுடைய காகித அம்புகளால் தகர்த்து விடலாம் என்று நினைத்து, தாங்களே தகர்ந்து போனார்கள். மக்களின் இதய சிம்மாசனத்தில் மட்டுமே வீற்றிருந்த வள்ளல், அரசு சிம்மாசனத்தில் அமராத நேரமது. புதுக் கட்சித் தொடங்கி, புறப்பட்டு புயலாய் புறப்பட்ட நேரம் அது.
அன்று மேலும் எம்.எல்.ஏ. இல்லத்திருமணம். இரவு எட்டு மணி வாக்கில் ராமாவரம் தோட்டத்தில் இருபது கார்கள் பின்தொடர நம் வள்ளல் காரில் ஏறிப் புறப்படுகிற நேரத்தில், கசங்கிய சட்டையுடனும், கலங்கிய மனதுடனும் வள்ளலுக்கு அருகில் ஒருவர் வருகிறார்.
“வள்ளலே, உங்களின் பாதம், அந்தப் பாவியின் வாசலை மிதித்து, களங்கப்ப்ட வேண்டாம். கட்சியின் பெயரால் காலித்தனம் செய்து வரும் அந்த எம்.எல்.ஏ. பல குடும்பங்களை பரிதவிக்கவிட்டவன்.. அங்கு நீங்கள் போகாதீர்கள்.
ஊரை ஏய்க்கும் அந்த ஊதாறி வீட்டுக்கு உத்தமத் தலைவன் நீ சென்றால், ஊர் உன்னை பழிக்கும்” என்று அந்த சாமான்யத் தொண்டர், சரித்திர நாயகனிடம் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார். எல்லாவற்றையும் கேட்டுக்கொள்கிறார் வள்ளல். அந்தத் தொண்டனின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வதா, நிராகரிப்பதா? அதே நேரத்தில் தீர விசாரிக்காமல், நீதி வழங்குவதும் நியாயமாகாது. என்பதை உணர்ந்த வள்ளல், “நீ தோட்டத்திலேயே இரு. திருமணத்திற்குப் போய்விட்டு வந்த பிறகு, இது பற்றி பரிசீலிக்கிறேன்” என்று வள்ளல் புறப்படுகிறார்.
இரவு நேரத்தில் கார் சென்று கொண்டிருந்தாலும், அந்தத் தொண்டனின் குமுறலே வள்ளலின் நினைவிலே வந்து போய்க் கொண்டிருக்கிறது. தன் அருகில் அமர்ந்திருந்த, அழைக்க வந்த, வேலூர் கட்சிக்காரரிடம், எம்.எல்.ஏ. வின் செயல்பாடுகள் பற்றி, விசாரணை நடத்துகிறார்; வள்ளல்.
“அந்தத் தொண்டன் சொன்னதெல்லாம் உண்மைதான். தங்களின் பெயரை வைத்துக்கொண்டும், கட்சியின் பெயரை வைத்துக்கொண்டும், கண்ணியக் குறைவாக நடந்து கொள்வது பொய்யில்லை” என்று ஊர்ஜிதப்படுத்துகிறார் கட்சிக்காரர். எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்ட வள்ளல், எந்தவித சலனமும் இல்லாமல், மீண்டும் மௌனமாக பயணத்தைத் தொடர்கிறார்.
கார் ஆற்காட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. காரின் இடது பக்கம் கண்களை படரவிடுகிறார் வள்ளல், அந்த அர்த்த ராத்திரி இருட்டில் தார் ரோட்டிற்கு அப்பால், இடது புறத்தில் வயல் வெளியைத் தாண்டிய பொட்டல்காடு, அதற்கும் அப்பால் தொலை தூரத்தில், ஒரு குடிசையின் முகட்டில் இரட்டை இலை சீரியல் பல்பு ஜோடனையுடன், ஜொலிக்கும் ஒளி மட்டும் திருவண்ணாமலை தீபமாய் தெரிந்தது.
“பூ மழை தூவி, வசந்தங்கள் வாழ, ஊர்வலம் நடக்கிறது”
நினைத்ததை முடிக்கும் நம் நீதியின் நாயகன் பாடல் அது. அந்த நிசப்த இரவில், அந்தக் குக்கிராமத்தில் இருந்து வயல் வரப்பைத் தாண்டி தோப்பு துரவு தாண்டி, வந்து, வள்ளலின் காதுகளில் அந்த பாடல் தென்றலாய், திகட்டாத தேனாய் விழுகிறது. நம்மை பூஜித்து மகிழ்கிற சாதாரணத் தொண்டன் வீட்டுத் திருமணம் என்பதை, அந்தச் சீரியல் பல்பும், ஒலித்த பாடல்களும் உறுதி செய்கிறது.
சட்டென காரை நிறுத்தச் சொல்கிறார் வள்ளல், அப்படியே பின்னோக்கி வரச் சொல்கிறார். ஏன், எதற்கு என்று கேள்வி ஏதும் கேட்காமலேயே, கார் பின்னோக்கி வருகிறது. இந்த அனிச்சைச் செயல், கலியுகக் கர்ணனின் காரோட்டிக்குப் புதிதல்ல.
அப்படியே இடதுபுறம் இருக்கும் கற்றாழை முட்கள் மண்டிக்கிடக்கும் கரடு முரடான வண்டிப் பாதையைக் காட்டி, அதில் காரை, செலுத்து என்கிறார். வள்ளல் சொன்ன வண்டிப்பாதையில், இருபது கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக புழுதியைக் கிளப்பிக்கொண்டு செல்கிறது. பகல் வேளையில் ஊருக்குள் ஒரு கார் நுழைந்தாலே ஊரே கூடி வேடிக்கை பார்க்கும் அந்தக் கிராமத்தில், அந்த ராத்திரி நேரத்தில், ஒரே நேரத்தில் இருபது கார்கள் ஒளி வெள்ளத்தில் வரிசையாய் வருவதை, மக்கள் பீதியுடன் பார்க்கிறார்கள். அந்த ஓலைக் குடிசையின் வாசலில், வயலில் இருபது கார்களும் நிற்கின்றன.
கார் மேகத்தைக் கிழித்துக்கொண்டு பால் நிலவு வெளிக் கிளம்புவது போல, கார் கதவைத் திறந்துகொண்டு, உறையில் இருந்து கழற்றப்பட்ட தங்க வாளாய், நம் தங்கத் தலைவன் காரை விட்டு திருமண வீட்டு வாசலில் ஜோதி மயமாய் இறங்குகிறார்.
வள்ளல் வந்த செய்தி, காட்டுத் தீயாய் சுற்றியுள்ள கிராமம் முழுவதும் பரவுகிறது. கேட்டவர்களும் இதை நம்பவில்லை. நேரில் பார்த்தவர்களும், இதை நம்பவில்லை. வானத்து தேவர்கள் வாசல் தேடி வருவது, எப்படி சாத்தியம்! தேவதூதன் நம் தெருவுக்கு வந்திருக்கிறாரா?. தனக்குத்தானே தங்களைக் கிள்ளிக்கொள்கிறார்கள். எப்படி இந்த அவதார புருஷன், இங்கு வந்தான். யார் இந்த தேவமைந்தனை அழைத்து வந்தது. நெஞ்சில் மட்டுமே நினைத்து நினைத்து நெகிழ்ந்த இந்தத் தொண்டன் வீட்டு வாசலுக்கு, வட்ட நிலா வழிய வந்த நிற்கிறதே. இப்படிக் கணப்பொழுதில் நடந்த அற்புத்ததில் இருந்து , அவர்கள் மீள இயலவில்லை. காரை விட்டு இறங்கிய வள்ளல், உள்ளூர்க்காரர்களே போட்ட பனை ஓலை பந்தலின் ஓரத்தில் கிடந்த , துருப்பிடித்த ஸ்டீல் சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு சம்பந்தி வீட்டுக்காரரைப் போல், சட்டமாக உட்காருகிறார்.
ஊர்க்காரர்களும், உறவுக்காரர்களும் நல்ல சந்தர்ப்பத்தை நழுவ்விடாமல், அப்படியே வள்ளலை அள்ளி விழுங்கி விடலாமா? என்று அருகில் ஓடிவந்து, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
விடிந்தால் திருமணம். நலுங்கு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும், வள்ளலின் வரவு அதிர்ச்சியையும், சித்த பிரமை பிடித்தவர்கள் போல், சிலையாக மணமக்கள் இருவரும் வந்து நிற்கிறார்கள்.
வள்ளல் ஜிப்பாவை மேலே தூக்கி, வேஷ்டி மடிப்பில் சொருகி இருந்த இரண்டு ஐந்து பவுன் சங்கிலியை எடுத்து, (இந்த இரண்டு சங்கிலிகளும் எம்.எல்.ஏ இல்ல மணமக்களுக்காக வாங்கி வந்தது) மணமகன் கழுத்தில் ஒன்றையும், மணப்பெண் கழுத்தில் ஒன்றையும் அணிவிக்கிறார்; வள்ளல்.
தேவரும், மூவரும் சேர்ந்து வந்து வாழ்த்தினால் கூட அவ்வளவு மகிழ்ச்சி இருந்திருக்காது. ஆனால் காலமெல்லாம், கனவிலும் நினைவிலும் சுமந்து வணங்கப்பட்ட தன் தலைவனே, தன்னைத் தேடி வந்து வாழ்த்தியபோது, அந்த மணமகன் மனதெல்லாம், மத்தாப்பாய் மகிழ்கிறான்.
சுதாரித்துக்கொண்ட அந்த மணமகன், வள்ளலை இரண்டு நிமிடம் இருக்கச் சொல்லிவிட்டு, இரண்டு மாலைகளுடனும் தாலியுடனும் வந்து,
“வள்ளலே, விடிந்தால்தான் மூகூர்த்த நேரம் என்று பஞ்சாங்கம் கணித்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் வந்த நேரமே எங்களுக்கு முகூர்த்த நேரம்; என்று, மாலையையும் தாலியையும் ஆசீர்வதித்துக் கொடுங்கள். உங்கள் முன்னிலையிலேயே திருமணத்தை முடித்துக் கொள்கிறோம்” என்று நிற்கிறார், மணமகன்.
“பெரியவர்கள் பார்த்து நிச்சயித்த முகூர்த்த நேரத்தில் மணம் முடிப்பதுதான் முறை. உணர்ச்சி வசப்பட்டு, மரபை மாற்றக்கூடாது” என்று வள்ளல் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்டுக்கொள்ளாத மாப்பிள்ளை,
“நீங்கள் மறுத்தால் நான் தற்கொலை செய்து கொள்ளக்கூடத் தயங்க மாட்டேன்” என்று அடம் பிடிக்கவே, வள்ளல் தாலி எடுத்துக்கொடுக்கிறார்.
எமனைக கூட ஏழெட்டுத் தடவை எட்டி உதைத்து பந்தாடிய வள்ளலின் முன்பு ராகுகாலம், எமகண்டமெல்லாம் எம்மாத்திரம்!
மணம் முடித்து வைத்த வள்ளல், வேலூர் செல்லவில்லை. மீண்டும் ராமாவரம் தோட்டத்திற்கே வந்து விடுகிறார்.,
ஏழையின் சிரிப்பில் அல்ல! ஏழையின் வாசலுக்கே அல்லவா, இறைவன் இறங்கி வந்திருக்கிறான்.
“பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர இல்லையா- பிறர்
தேவையறிந்து கொண்டு வாரி கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை யல்லவா!”
No comments:
Post a Comment