Tuesday, December 28, 2010

தமிழகத்தில் 1000 தியேட்டர்கள் மூடல்!

Thousand  theaters closed in tamilnadu









தமிழகத்தில் சுமார் 1000 தியேட்டர்கள் நஷ்டத்தால் மூடப்பட்டுள்ளன. இதனால் இருக்கிற தியேட்டர்களை காப்பாற்றுவதற்காக முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி டைரக்டர்களுக்கு விநியோகஸ்தர்கள் திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்களின் சிறப்பு கூட்டம் சென்னையில் நடந்தது. தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.பாலாஜி தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். சென்னை - காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், கோவை மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க பொதுச்செயலாளர் திருப்பூர் சுப்பிரமணியம், நாகராஜராஜா உள்பட அனைத்து மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் சமீபகாலமாக மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். தமிழகத்தில் இருந்த 2 ஆயிரம் திரையரங்குகளில் பாதிக்கு மேல் சுமார் 1,000 திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன, என்று வேதனை தெரிவித்தனர். இதனால் இருக்கிற தியேட்டர்களையும், விநியோகஸ்தர்களையும், தயாரிப்பாளர்களையும் காப்பாற்றி, சினிமா தொழிலை காப்பாற்றுவதற்காக முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி டைரக்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்திருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதன்படி, இனிவரும் காலங்களில் எந்த ஒரு பெரிய பட்ஜெட் படம் (ரூ.10 கோடிக்கு மேல் எடுக்கப்படும் படம்) நஷ்டத்தை சந்திக்குமானால், அந்த படத்தில் பணியாற்றிய முன்னணி நடிகர்கள் மற்றும் டைரக்டர்கள், இசையமைப்பாளர்கள் அடுத்த `கால்ஷீட்' அதே தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து, அந்த நஷ்டத்தை ஈடுகட்டித்தர ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், மேற்படி தயாரிப்பாளர் மேற்படி படத்தை அதே விநியோகஸ்தர்களுக்கும், அதே திரையரங்கு உரிமையாளர்களுக்கும் கொடுத்து, அவர்களது நஷ்டத்தை ஈடுகட்டித் தரவேண்டும் என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



No comments:

Post a Comment