Friday, December 31, 2010

புத்தாண்டு தினமா? போக்கிரி தினமா?

வழக்கம் போல் 2011, ஜனவரி 1 வந்துவிட்டதுதான். ஆனாலும் இந்த வருடப் பிறப்பின் போது நடந்த பல்வேறு அநாகரீகமான செயல்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் வக்கிரத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கின்றன.

250 ஆண்டுகளாக வெள்ளையர்களிடம் நாம் அடிமைப்பட்டுக் கிடந்ததன் விளைவாக ஏற்பட்ட கொடுமைகளைக் கண்ட பாரதி, `என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?' என்று கூறியதோடு நின்றுவிடாமல் நம்மவர்கள் வெள்ளையர்களாக நடை உடை பாவனைகளில் மாற முயலும் இழிநிலையைக் கண்டு மனம் நொந்து, `என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?' என்று கொதித்தார்.

விடுதலையாகி 60 ஆண்டுகள் கழிந்த பின்னரும் நடக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டம், காதலர் தினம் முதலிய செயல்கள், அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததன் அவமானச் சின்னமாகவே தொடர்கின்றன.

ஆங்கிலப் புத்தாண்டு என்பது அந்நியருக்கானது என்பதையும், அதை நாம் கொண்டாடுவது வெட்கக் கேடு என்பதையும் நம்மவர்கள் மறந்து போனார்கள்.

நம் பண்பாட்டிற்கும் நாகரீகத்திற்கும் சிறிதேனும் ஏலாத இந்தப் புத்தாண்டினை நாம் கொண்டாடுவது, அந்நியரின் மோகம் நம்மிடம் அதிகரித்திருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் ஆங்காங்கே நடைபெற்ற இந்தக் கொண்டாட்டங்கள், இப்பொழுது நாடு முழுவதும் பரவி வருகின்றன. இது மிகவும் அபாயகரமானது.

இந்தப் புத்தாண்டு மதிமயக்கத்தில் மக்கள் மூழ்கியிருப்பதைக் கண்டுகொண்ட பல்வேறு வணிக நிறுவனங்கள், `புத்தாண்டு தள்ளுபடி', `புத்தாண்டு விற்பனை', `புத்தாண்டு ஆஃபர்' என விளம்பரம் செய்து புத்தாண்டு கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை மக்கள் மனதில் புகுத்தி பணம் பறிக்க முற்படுகின்றன.

இனி, புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடக்கும் ஓட்டல்கள், விடுதிகள் ஆகியவற்றில் அரங்கேறும் அநாகரீகமான ஆட்டபாட்டங்களைக் காணும் அறிவுள்ள எவனும் அவற்றில் கலந்து கொள்ள போகமாட்டான்.

நமது புராணங்கள் அசுரர்களையும் அரக்கர்களையும் `நிசிசரர்கள்' என்று குறிப்பிடுகின்றன. நிசி என்றால் நடு இரவு; சரன் - சஞ்சரிப்பவன்; உலாவுபவன்; ஓய்வு எடுக்க வேண்டிய நடு இரவில் உலவுவதுதான் அசுரர்களின் இயல்பு. நம் இளைஞர்கள் நிசிசரர்களாய் மாறிவருகின்றனர்.

நம் பண்பாட்டில் நடு இரவில் கொண்டாடுவது என்பது அறவே விலக்கப்பட்ட ஒன்று. உடலும் உள்ளமும் ஓய்வெடுக்க வேண்டிய காலத்தில் உலாவுவது மேற்கத்திய நாட்டவரின் வழக்கம்.

நமக்கென்று உயர்ந்த பண்பாடுகள், உன்னதமான பண்டிகைகள் உள்ளன. சித்திரை வருடப் பிறப்பு நமக்குரியது. நமது பண்டிகைகள் பெரியவர்களை வணங்கி ஆசிபெறுவது, கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது, முடிந்த அளவு பிறருக்கு தானம் செய்வது, சுவையான பண்டங்களைச் செய்து ஆண்டவனுக்கு படைத்து தாமும் உண்டு அண்டை வீட்டாருடனும் பகிர்ந்து கொள்வது போன்ற உயர்ந்த செயல்களை உள்ளடக்கியன.

ஆனால், ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்றவுடன் நம் கண்முன் வருவது, மது அருந்திய வெறியில் மாதுக்களுடன் குத்தாட்டம் போடுவது; பெண்களை மானபங்கப்படுத்துவது; சாலையில் செல்வோரைத் துன்புறுத்துவது; ஒன்றுக்கும் உதவாமல் நிசிசரர்களாய் இரவு முழுவதும் திரிவது; காவல்துறைக்கும் பெற்றோருக்கும் முடிந்த அளவு தொல்லைகள் கொடுப்பது என்பவைதான்.

புத்தாண்டு தினம் கொண்டாடுபவர்களைச் சமாளிக்க அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க, சென்னையில் மட்டும் 5,000 போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள். இதிலிருந்தே தெரிகிறதல்லவா, இது புத்தாண்டு தினமல்ல போக்கிரிகள் தினம் என்று?

டிசம்பர் 31 ஆம் தேதி இரவு நட்சத்திர ஓட்டல்களில் அநாகரீகத்துடன் புத்தாண்டு கொண்டாடப் படுவதிலிருந்தே இது நமக்கு சம்பந்தமில்லாதது என்று புரிந்துவிடும். மேற்கத்திய கலாசார சீரழிவுகள் நாட்டினுள்ளே புகுந்து நமது ஆன்மாவை அரிக்கத் தொடங்கிவிட்டதன் அறிகுறியே இம்மாதிரியான புத்தாண்டு அலங்கோலங்கள்.

ஹிந்து மக்கள் கொண்டாடும் உன்னதமான பண்டிகைகளுக்கெல்லாம் பகுத்தறிவைக் காரணம் காட்டி வாய்திறவாத முதல்வர், இதுபோன்ற கலாசாரச் சீரழிவு தினங்களுக்கெல்லாம் வாழ்த்துச் சொல்லத் தவறுவதில்லை.

http://nellaichokkar.blogspot.com/2009/04/2008-1.html

No comments:

Post a Comment