Tuesday, December 28, 2010

‘‘பொங்கல் வரை விலை குறையாது..!’’ வெங்காய விலையேற்றப் பின்னணி


வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும். ஆனால், இப்போது வெங்காய விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது. அந்தளவுக்கு வெங்காய விலை எகிறி நிற்கிறது.

சில நாட்களுக்கு முன்பாக 20 ரூபாய் விற்றுக் கொண்டிருந்த கிலோ வெங்காயத்தின் விலை இன்றைக்கு 100 ரூபாயை தொட்டு நிற்கிறது. ‘‘ஐநூறு ரூபாய்க்கு காய்கறி வாங்கினால், இரண்டு வெங்காயம் ஃப்ரீ...’’ என்று சொல்லும் அளவுக்கு நிலைமை விபரீதமாகி இருக்கிறது.

‘‘ஏற்கனவே காய்கறி விலை இருமடங்கு அதிகரித்துவிட்ட நிலையில், சாதாரண மக்கள் குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் வெங்காயத்தின் விலையும் கிலோ 100 ரூபாய் என்றால், என்ன செய்வது?’’ என்று வெங்காய விலையைச் சொல்லிப் புலம்பினார் சாந்தோம் கிருஷ்ணகுமாரி.

‘‘பெட்ரோல் விலை எகிறிவிட்டது. கேஸ் சிலிண்டர் விலையையும் தொடர்ந்து ஏத்தறாங்க. இப்ப காய்கறி விலையும். சம்பளம் ஏறாம விலைவாசி மட்டும் ஏறினா நாங்க எப்படிங்க வாழ முடியும்?’’ என்று நடுத்தர குடும்பத்துப் பெண்மணியான மைலாப்பூர் சீதாலட்சுமியும் விலைவாசி உயர்வைச் சொல்லி கவலைப்பட்டார்.

வெங்காயத்தின் திடீர் விலை ஏற்றம் ஏன் என்பது குறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் வெங்காய வியாபாரிகள் சிலரிடம் கேட்டோம்.

சேகர் என்பவர், ‘‘ கோயம்-பேட்டிலுள்ள 50 வெங்காய மண்டிகளுக்கு வழக்கமாக 70 லாரிகளில் வெங்காயம் வரும். தற்போது இந்தியாவில் பரவலாக பெய்து வரும் மழையால் வெறும் 20 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வருகிறது. கடும் மழைதான் வெங்காயத்தின் இந்த விலை ஏற்றத்துக்குக் காரணம்’’ என்றார்.

அடுத்து பேசிய மொத்த வியாபாரி-யான ராபின்சன், ‘‘ஆறுமாதத்திற்கு முன் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை வெங்காயத்தின் விலை 500 ரூபாய்தான். டிசம்பர் துவக்கத்தில் அது 2 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போதோ 3 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 4 ஆயிரமாகிவிட்டது. இந்த வாரம் மட்டும் ஒரு நாளைக்கு 500 ரூபாய் வீதம் விலை ஏறிக்கொண்டே போகிறது. கடந்த 13 ஆண்டுகளாக 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரைதான் இருந்தது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மழை மாதங்களில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரைதான் விலை உயரும். ஆனால் இந்த முறை அது மூவாயிரம் ரூபாயாக மாறிவிட்டது’’ என்று சொல்லி வருத்தப்பட்டார்.

‘‘கோயம்புத்தூர் சீசனான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஒரு மூட்டை வெங்காயம் ஆயிரம் ரூபாய்தான். அந்த சீசன் தற்போது இல்லாததாலும், ஆந்திர வெங்காய வரவு குறைவாகிவிட்டதும், இந்த சீசனில் பெங்களூருவில் இருந்து மட்டுமே வெங்காயம் வருவதால்தான் இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. எப்போதும் பெங்களூரு சீசனில் விலை அதிகரிக்கும். இந்த முறை அது பலமடங்கு உயர்ந்துவிட்டது. நாசிக், சோலாப்பூர், பூனா சீசன் இன்னும் 15 நாட்களில் துவங்கிவிடும். அப்போது விலை குறைந்துவிடும்’’என்றார் வெங்காய கமிஷன் மண்டி ஒன்றின் மேனேஜரான முகம்மது ரபீக்.

சில்லறை வியாபாரி பாஸ்கரின் கருத்தோ வேறு மாதிரியாக இருக்கிறது. அவர், ‘‘நான் காலை 5 மணிக்கு லோடு வந்தவுடன் ஒரு மூட்டை வெங்காயத்தை 4 ஆயிரத்து 300 ரூபாய்க்கு வாங்கினேன். இந்த விலை உயர்வுக்கு காரணம் மழை காரணமாக வெங்காய லாரிகள் வரத்து குறைவு என்று சொல்வது எல்லாம் பொய். சுனாமியின்போதெல்லாம் வெங்காயம் விலையேறாமல் இப்போது ஏறுவதற்கு முக்கிய காரணம் மொத்த வியாபாரிகள் சென்னைக்கு வழக்கமாக வரும் 70 லாரிகளை தாமதப்படுத்தி, 20, 20 லாரிகளாக வர வைப்பதும், பெட்ரோல், டீஸல் விலை ஏற்றத்தால் லாரி முதலாளிகள் வாடகையை ஏற்றிவிட்டதும்தான். பொங்கல் திருநாள் வரைக்கும் வெங்காய வரத்து குறைவு என்று சொல்லியே தற்போதுள்ள விலையை நீட்டிப்பதுதான் மொத்த வியாபாரிகளின் நோக்கம்’’ என்று அதிர்ச்சிக் குண்டை வீசினார்.

கோயம்பேடு மார்க்கெட் வெங்காய மொத்த வியா-பாரிகள் சங்கத் தலைவர் ஜான்வல்தாரிஷிடம் பேசினோம்.

‘‘ வெங்காய விலை உயர்வுக்கு காரணம் எந்த விதமான பதுக்கலோ, ஆன்லைன் விற்பனையோ கிடையாது. தேவைக்கேற்ற விளைச்சல் இல்லாததும், அந்த குறைந்த விளைச்சலில் கணிசமான அளவை இயற்கை சீற்றமான மழை அழித்துவிட்டதும்தான் திடீர் வெங்காய விலை உயர்வுக்கு காரணம்’’ என்று உறுதிபடச் சொன்னார்.

கோயம்பேடு மார்க்கெட் சங்கங்களின் ஆலோசகரான வி.ஆர். சௌந்தரராஜன் நம்மிடம் பேசும்போது, ‘‘இந்தியா முழுவதுமான வெங்காயத் தேவையை மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் விளையும் வெங்காயமே பூர்த்தி செய்கிறது. ஆனால் தற்போது கர்நாடகா, மகாராஷ்டிராவிலிருந்து மட்டுமே வெங்காயம் வருகிறது. இப்போது பெய்து வரும் மழை ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா என பரவலாக பெய்து வருவதால் விளைந்த வெங்காயங்கள் அழுகிவிட்டன. இவையே விலையேற்றத்துக்கு முக்கிய காரணம்.

மழைக்காலம் முடிந்தவுடன் விலை கணிசமாக குறையும் என்றாலும், கடந்த சில வருடங்களில் கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலை இனி வராது. வால்மார்ட், ரிலையன்ஸ், மோர், திரினேத்ரா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக வெங்காயத்தின் விலையை விவசாயிகளிடம் ஏற்றிவிட்டன. அதனால் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பிருந்த விலையான ரூபாய் நாற்பதே நீடிக்கும். ஆகவே நம் தேவைக்கு குறைவாக இருக்கும் வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.

வெங்காய விலை உயர்வால் ஆட்சியே கவிழ்ந்த வரலாறு இந்தியாவுக்கு உண்டு. மக்கள் நலத்தைக் காட்டிலும் தங்கள் நலத்துக்காகவாவது வெங்காய விலை குறைய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும்.

டெய்ல் பீஸ்: வெங்காய விலையேற்றத்தின் விபரீதத்தை உணர்ந்துள்ள மத்திய அரசு வரும் ஜனவரி 15 வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதி அளித்துள்ளார்.

படங்கள்: த.சங்கரன்

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2160&rid=98

No comments:

Post a Comment