Tuesday, December 28, 2010

எல்லாம் இலவசம் - போகிற போக்கில்...

திராவிடக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் வேலைவாய்ப்புத் திட்டங்கள், உணவு உற்பத்தியில் தன்னிறைவு , காசுக்கு கல்வி என்ற நிலை அகர்ர்ர்ரிஎல்லூருக்கும் தரமான கல்வி போன்ற அறிவிப்புகள் இருக்காது. மக்களுக்கு அடுத்து என்ன இலவசம் தரலாம் என்று தான் இருக்கும். இப்போதே அடுத்த தேர்தலில் இலவச கம்ப்யூட்டர், குடும்ப அட்டைக்கு இருபது கிலோ இலவச அரிசி என்று யோசித்து வருகின்றன.

இலவசங்கள் தான் திராவிடக் கட்சிகளின் ஓட்டு வங்கிக்கான வைப்புத் தொகை ,தமிழ்நாடு பணக்கார மாநிலம் அல்ல .இங்கு வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர் கிராமங்கள் , சிறு நகரம் , பெரு நகரம், என்று எங்கும் நிறைந்து இருக்கிறார்கள். இப்படிபட்ட வறியவர்களை தி.மு.க , அ.தி.மு.க இரண்டும் தங்கள் வாக்கு வங்கியாக மாற்றப் பயன் படுத்தும் அஸ்திரம் இலவச திட்டம் .

இலவசச் சீருடை , இலவச மதிய உணவு, இலவச முட்டை, இலவசப் புத்தகம் , இலவச மின்சாரம் , இலவச சைக்கிள் , இலவச டி.வி, இப்போது இலவச மின்மோட்டார் என்று இத்தனை இலவசங்கள் கிடைப்பது ம் இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான், இதைத்தவிர வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள பெண்களுக்கு திருமணம் நடத்த உதவித்தொகை தவிர முதியோர் பென்ஷன், சென்ற தேர்தலில் தி.மு.க வின் கதாநாயகன் அதன் தேர்தல் அறிக்கையே என்று பொருளாதார மேதை என்று சொல்லப்படும் ப.சிதம்பரம் வெளிப்படையாகப் பாராட்டினார். அந்தத் தேர்தல் அறிக்கையில் பல இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

சரி இந்த இலவசத் திட்டங்களின் பயன் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு போய்ச் சேர்கிறதா என்ற கேள்விக்கு , கட்சி அனுதாபிகளுக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் தவறாமல் போய்ச் சேர்கிறது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

உண்மையாக இருக்கலாம் , ஆளும் கட்சி அனுதாபிகள், கட்சி உறுப்பினர்கள் , அமைச்சர்கள், கட்சித் தலைமையின் சினிமா தயாரிப்பாளர்களான சொந்தங்கள் , விமான நிறுவன அதிபர் அல்ல , எல்லொரும் ஏழைகள்தானே, , ஏதோ அவர்களின் தேவையாவது பூர்த்தியாகிறதே என்று சந்தோஷப்பட வேண்டியதுதான்.

இது போன்ற இலவச திட்டங்களுக்கு பல கோடிகளை ஒதுக்குவதால் பற்றாக்குறை பட்ஜெட்தான் சமர்ப்பிக்கப்படுகிறது. அரசு கஜானாவில் இருந்து கணிசமான தொகை இந்த இலவச திட்டங்களுக்கு போய்விடுகிறது.

இலவசங்கள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் முதலில் வந்தன. மக்களை உழைக்காமல் சோம்பேறிகள் ஆக்கிவிடும் என்ற குற்றச்சாட்டு சொல்லபட்டது, ஆனால் பொருளாதார நிபுணர்கள் இலவசத் திட்டங்கள் அவசியம் தான் என்கிறார்கள், தொலை நோக்கு பார்வையில் சமூகம் மேம்பட இந்த இலவச திட்டங்கள் தேவை என்பது பொருளாதார நிபுணர்கள் கருத்து. இதை அரசியல்கண்ணாடி அணிந்து பாக்ககூடாது என்பது இவர்கள் வாதம். சத்துணவு , இலவச முட்டை ஆகியவை குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. இலவச எரிவாயுத் திட்டம் பெண்களின் வேலைப் பளுவைக் குறைக்க உதவுகிறது.

வாக்கு வங்கியை மனதில் வைத்து தீட்டபட்ட திட்டங்கள் இவை என்பது எவ்வளவு உண்மையோ அதே போல் வறியவர்கள் வாழ்க்கை மேம்பட உதவுகின்றன என்பதும் உண்மை என்ற கருத்தும் வரத் துவங்கிவிட்டது.


அதே சமயம் தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னேறி வரும் மாநிலம் என்று ஆளும் கட்சி பெருமை பீற்றி கொள்ளும் போது மக்களை சோம்பேறிகள் ஆக்கத்தான் இந்த இலவசத் திட்டங்கள், இலவச கலர் டி.வி மூலம் கலாச்சார சீரழிவு நிகழ்ச்சிகளைத் தரும் தனியார் டி.வி சேனல்கள் பணம் பண்ணுகின்றன, தமிழன் சீரழிய தான் இலவச கலர் டி.வி என்ற எதிர்க் குரலும் கேட்கிறது. இலவசத் திட்டங்களால் தமிழகத்தின் கடன் சுமை கோடிக் கணக்கில் உயர்ந்து கொண்டே போகிறது, இதற்கான வட்டிக்காக வரி ஏற்றம் என்ற சுமையை மறைமுகமாக மக்கள் மீது அரசு சுமத்துகிறது. இலவசங்கள் இந்த சுமையின் வலியை
மறக்கடிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் இலவசங்களை நியாயப்படுத்தும் குரல்தான் ஓங்கி ஒலிக்கிறது, தி.மு.க போய் அ.தி.மு.க வந்தாலும் இலவசங்களை தொடரத்தான் வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அதே சமயம் இலவசமாகப் பெறும் எந்தப் பொருளும் அதற்கு உரிய மதிப்புப் பெறாது, இலவசமாக வந்ததுதானே என்ற அலட்சிய மனோபாவம் தான் இதற்கு காரணம். இலவசக் கலர் டி.வி கேரளாவிற்கு கடத்தி செல்லபட்டு வருகிறது என்று ஊடகங்கள் ஆதாரத்துடன் நிருபித்துள்ளன. காரணம் டி.வி நமது அன்றாட வாழ்க்கையின் அங்கம் என்று எப்போதோ ஆகிவிட்டது. ஏற்கனவே டி.வி வைத்திருந்தவர்களுக்கு டி.வி தந்தால் என்ன செய்வார்கள் அதை விற்க தான் செய்வார்கள். நிறைய இலவச திட்டங்களால் தமிழக மக்கள் எல்லாவற்றையும் இலவசமாக எதிர்பார்க்கும் மனோபாவம் என்ற ஆபத்து இருக்கிறது.

எனவே யாருக்கு எது தேவையோ அது மட்டும் இலவசம் என்று யோசித்து அதை மட்டும் வழங்கினால் அரசு கஜானாவிற்கு செல்லும் பணம் கணிசமாக மிஞ்சும். திராவிடக் கட்சிகள் இலவசத் திட்டங்களை அறிவிக்கும் முன்பு யோசிக்க வேண்டும்.

இந்த இலவச யோசனை அவர்கள் காதில் விழுமா?

http://www.andhimazhai.com/news/viewmore.php?id=12356

No comments:

Post a Comment