மத நல்லிணக்கம் என்பது மக்களிடையே நட்பை, அன்பை, அமைதியை உருவாக்கக் கூடியது. மத நல்லிணக்கம் என்பது மனிதத்தைக் காக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று.
மத நல்லிணக்கம் என்ற சொல்லைக் கேட்டவுடன் , தங்களுடைய மதத்திற்கு பின்னடைவு ஏற்பட்டு விடுமோ என்று யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. உண்மையான மத நல்லிணக்கம் மதங்களை- எல்லா மதங்களையும் – வளர்க்குமேயல்லாமல் எந்த ஒரு மதத்தையும் அழிக்காது.
SWAMI VIVEKAANDHA- CHAMPION OF RELIGIOUS HARMONY
மத நல்லிணக்கம் என்பது அலங்கார வார்த்தையாக பயன்படுத்தப் படும் ஒரு சொல் அல்ல. அது மனப்பூர்வமாக நடை முறையில் செயல் படுத்தப் பட வேண்டிய விடயம்.
மத நல்லிணக்கம் - இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு எல்லா மனிதர்களுக்கும் உள்ளது.
மத நல்லிணக்கம் என்பது இன்றைய உலகின் அவசியத் தேவை. உலகிலே எந்த ஒரு சமுதாயமும், எந்த ஒரு நாடும் தனித்து இயங்க முடியாது என்கிற அளவிற்கு பொருளாதார, சமூக, கலாச்சார இணைப்புகள் அதிகமாகி வருகின்றன.
இந்த நிலையிலே மத நல்லிணக்கம் தவிர்க்க முடியாதது.
எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, அவற்றைப் பாராட்டி, அவற்றை எல்லா மக்களும் பினபற்ற வூக்குவிப்பவன் இந்த உலகத்துக்கு நன்மை செய்பவன் ஆகிறான்.
எனவே உண்மையான மத நல்லிணக்கம் விரும்புபவன் எந்த மதத்தையும் வெறுக்காமல் எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமான கண்ணோட்டத்திலே அணுகுவான்.
எல்லா மதங்களிலும் மனித சமுதாயத்துக்கு நன்மை தரும் கருத்துக்கள் உள்ளன.
எல்லா உயிர்களின் மீது அன்பு செலுத்தும் கொள்கையைப் போதித்தவர் புத்தர். மக்களின் துன்பங்களைக் கண்டு வருந்தி, மக்களுக்காக பாடுபட்டவர். யாரயுமே வெறுக்கவில்லை. யாரையுமே இகழவோ திட்டவோ இல்லை. இவை எல்லாம் நல்ல கொள்கைகளா இல்லையா? அப்படியானால் ஏன் இவற்றை பாராட்டக் கூடாது? ஏன் கடைப்பிடிக்க கூடாது ?
இயேசு கிறிஸ்து ” நான் பசியாய் இருந்தேன் , எனக்கு உண்ணக் குடுத்தீர்கள் , நான் தாகமாய் இருந்தேன் எனக்கு குடிக்க குடுத்தீர்கள். மிகவும் சிறியவனாகிய என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு கொடுத்தது எனக்கு கொடுத்தது” என்றார். ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்றார் இயேசு கிறிஸ்து- இவை எல்லாம் நல்ல கொள்கைகளா இல்லையா? அப்படியானால் ஏன் இவற்றை பாராட்டக் கூடாது? ஏன் கடைப்பிடிக்க கூடாது ?
இஸ்லாத்திலே வட்டி வாங்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, சூதாடக் கூடாது என்ற கொள்கைகளை சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு முஸ்லீமும் தன்னுடைய சொத்தில் குறிப்பிட்ட பகுதியை ஏழைகளுக்கு தானமாக வழங்க வேண்டும் என இஸலாம் சொல்லுகிறது. இவை எல்லாம் நல்ல கொள்கைகளா இல்லையா? அப்படியானால் ஏன் இவற்றை பாராட்டக் கூடாது?ஏன் கடைப்பிடிக்க கூடாது ?
இந்து மதம் ஒரு மனிதன் எப்படிப்பட்ட மன நிலைக்கு வரவேண்டுமென
அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)
சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)
நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )
ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)
க்ஷமீ (பொறுமை உடையவனாய்)
ஸந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )
யோகி (யோக நெறியில் நிற்பவன்)
யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)
த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)
என்பதை சொல்கிறது. இவை எல்லாம் நல்ல கொள்கைகளா இல்லையா? அப்படியானால் ஏன் இவற்றை பாராட்டக் கூடாது? ஏன் கடைப்பிடிக்க கூடாது ?
என் மதத்தை மட்டுமே ஆதரிப்பேன், மற்ற மதங்களை வெறுப்பேன் என்று சொல்பவன் மோதலை உருவாக்குபவனாக, வன்முறையை தன்னை அறியாமலேயே தூண்டுபவனாக, பயங்கர வாதத்தை வூக்குவிப்பனாக அமைந்து விடுகிறான்.
மத நல்லிணக்கத்தை கட்டாயப் படுத்தி உருவாக்க முடியாது. அது மனித இதயங்களின் அன்பால் உருவாக்கப் பட வேண்டியது. மத நல்லிணக்கத்தை பல நிலைகளில் அனுசரிக்கலாம்.
பிற மதங்களின் மீதுள்ள ஒருவருக்குள்ள மன வெறுப்பை நீக்குவதே மத நல்லிணக்கத்தின் முதல் படியும், முக்கிய படியும் ஆகும்.
அடுத்தவர் கடவுளாக வணங்கும் தெய்வங்களை எந்த விதமான ஆதாரமுமும் இல்லாமல் இகழ்ந்து பேய் , பிசாசு என்று திட்டி, சமூகங்களுக்கு இடையில் மோதலை உண்டாக்க இரத்த ஆறு ஓட விடுவது இரக்கமற்ற வெறிச் செயலே. எனவே வெறுப்புக் கருத்துக்களை, பகைமை உணர்வை தூண்டும் கருத்துக்களை கை விட வேண்டும.
அதற்கு அடுத்த படியாக பிற மதத்தவரின் விழாக்களில் கலந்து கொள்வது நட்பை வளர்க்கும். நல்லிணக்கத்தை உருவாக்கும். பிற மதத்தவரின் விழாக்களில் கலந்து கொள்வது சமரசத்தை, நட்பைக் காட்டுவது.
இதற்கும் அடுத்த கட்டம் மனப் பூர்வமாக மரியாதை செய்வது. புத்தரின் அன்பையும், இராமரின் தியாகத்தையும், இயேசுவின் தியாகத்தையும், இஸ்லாத்தின் சமத்துவத்தையும் புரிந்து கொண்டவர்கள், மத இன மொழி, வர்க்க, ஜீவ வேறுபாடுகளை மறந்து தியாகத்துக்காக , நல்ல கொள்கைகளுக்காக அவர்களை மனப் பூர்வமாக வணங்குவார்கள். இது சிந்தனை முதிர்ச்சி அடைந்த மனநிலை உள்ளவர்களால் செய்யப் படக் கூடியதே.
காந்தி பிறந்த தினத்தன்று காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பது போல, பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது போல, சர்ச்சுக்கு சென்று இயேசு கிறிஸ்துவுக்கு மெழுகி வர்த்தி ஏற்றி வைக்கலாம், மசூதிக்கு சென்று தொழுகையில் கலந்து கொள்ளலாம், கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றலாம்.
ஒரு இந்து மசூதிக்கு சென்று தொழுதால், இசலாத்தின் மீது வெறுப்பு வராது, மசூதியை இடிக்க மாட்டான். ஒரு முஸ்லீம் புத்த விஹாரத்துக்கு சென்று வந்தால் நல்லிணக்கம் ஏற்படும் , பின்னொரு நாள் யாராவது புத்தர் சிலையை உடைப்பதைப் பார்த்தால் அதைத் தடுப்பான்.
மத நல்லிணக்கம் என்பது அவரவர் மதச் சின்னங்களை அணிந்து கொண்டு போது மேடைகளில் கையைக் கோர்த்துக் கொண்டு போஸ் குடுப்பது அல்ல. ஓட்டுக்காக காஞ்சி குடிப்பது போன்ற போலி மத நல்லிணக்க செயல்களை நம்பி உண்மையான மத நல்லிணக்கத்தை நாம் மறந்து விடக் கூடாது.
மத நல்லிணக்கம் மிக முக்கியமானது. இன்றியமையாதது. உங்கள் வருங்கால சந்ததியினர் உங்களிடம் பெற விரும்பும் மிக முக்கியமான சொத்து ஏதாவது இருந்தால், அதில் மத நல்லிணக்கமும் முக்கியமான ஒன்றாக இருக்கும்.
எந்த ஒரு அரசியல் அல்லது பொருளாதார லாபத்தையும் எதிர்பார்க்காமல் பேரையோ , புகழையோ எதிர்பார்க்காமல் சாதாரண மக்கள் முன்னெடுத்து செல்லும் உண்மையான மத நல்லிணக்கம் உறுதியான அமைதியை தரும்.
http://thiruchchikkaaran.wordpress.com/2010/09/29/religious-harmony-3/
No comments:
Post a Comment