இந்தக் கூட்டத்தில் பேசிய முக்கியப் பேச்சாளர்கள் மற்றும் கட்சியின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் பொறுப்பில் உள்ளவர்களான கட்சித் தலைவி சோனியா காந்தி, பொதுச்செயலர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் மூவருமே சமீபகாலமாக மக்கள் மன்றத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் போன்ற மகா ஊழல்கள் பற்றியே பேசாமல், எளிய மக்கள் (ஆம்ஆத்மி) பற்றியும் ஏழைகளுக்கான நலஉதவித் திட்டங்கள் பற்றியும்தான் பேசினார்கள். ஊழலை ஒரு பிரச்னையாகவே இவர்கள் கருதவில்லை என்பதைத்தானே அது காட்டுகிறது.
இந்தியாவில் அறிவுஜீவிகள் முதல் டீக்கடையில் அமர்ந்திருக்கும் சாதாரண மக்கள் உள்பட பேசுகிற மூன்று முக்கிய ஊழல்கள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், மும்பையில் நடைபெற்றுள்ள வீடுகட்டும் நிறுவனங்களுக்கும் மகாராஷ்டிர அமைச்சர்களுக்கும் தொடர்புடைய நிலஒதுக்கீடு முறைகேடுகள். இந்த மூன்றிலும் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்பு இல்லாமல் இல்லை. ஆனால் இவை எதுவுமே நடக்கவில்லை என்பதுபோல அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.
காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற ஊழலுக்கு முக்கிய காரணம் கல்மாதி என்றாலும் அவர் வெறும் பினாமிதான்.மகாராஷ்டிர மாநில ஊழலிலும்கூட தற்போது அம்மாநில முதலமைச்சர் சவாணுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இரண்டு அமைச்சர்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சவானை பதவி விலக செய்து நியாயமான முறையில் விசாரணை நடத்த படவேண்டும் என்பது குறித்து காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கவில்லை .
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில், கூட்டணிக் கட்சியான திமுகவின் அமைச்சர் ஆ. ராசா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தன்னை கறைபடியாத கையாகக் காட்டிக் கொண்டாலும், அமைச்சர் ராசா ஒரு பேட்டியின் போது ஆத்திரத்துடன் குறிப்பிட்டதைப் போல, பிரதமருக்கு எல்லாம் தெரியும் என்பதில் பல அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன.
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங்காங்கிரஸ் என்பது வெறும் சாதாரணக் கட்சி அல்ல. காங்கிரஸ் கட்சிதான் நவீன இந்தியாவை உருவாக்கியது. காங்கிரஸ் போன்ற சிறந்த கட்சி இந்தியாவுக்குத் தேவையாக இருக்கிறது. காங்கிரஸ் எந்த அளவுக்கு வலிமை பெறுகிறதோ அந்த அளவுக்கு தேசம் வலிமை பெறும்.
இதன் அர்த்தம் எப்படி கொள்வது, காங்கிரஸ் எவளவு ஊழல் செய்கிறதோ அந்த அளவு வலிமை பெறும்? தேசம் எங்கு வலிமை பெறபோகிறது?110 கோடி மக்கள் தொகையில் 45 .10 கோடி மக்கள் வறுமை கோட்டின் கீழ் உள்ளார்கள் .35 வருடங்களுக்கு மேல் காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது .அப்படி என்றால் இந்த நிலைமைக்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி தானே ?இதற்க்கு முன்னால் நடந்துள்ள ஊழல்கள் மற்றும் இப்போது நடந்துள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் , காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் மற்றும் மும்பை அடுக்கு மாடி ஊழல் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் தானே நடந்துள்ளது .
இந்த மூன்று பெரும் ஊழல்களிலும் காங்கிரஸ் தன் கருத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இது யாருடைய தவறு, இதனால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள களங்கம் என்ன, இதை எப்படிப் போக்குவது, கூட்டணிக் கட்சிகளால் தாங்கள் சுமக்க நேரும் சிலுவைகள் உண்டென்றால் அதற்குத் தீர்வு என்ன, இதற்காக ஆட்சியை இழக்கவும் காங்கிரஸ் தயாராக இருக்கிறதா இல்லையா என்பதைச் செயற்குழுவில் பேசி, கொள்கை முடிவுகள் காணப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் எதை பற்றியும் சிந்திக்காமல் மக்களை ஏமாற்றும் விதமாக வெற்று கோசங்களை எழுப்பியே தனது கடைமையை முடித்து இருக்கிறது ....காரிய கமிட்டி கூட்டம்......
http://karuthusuthanthiram.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D
No comments:
Post a Comment