Monday, December 20, 2010

ஆண்டிமுத்து இரவுக் காட்சிக்குப் போயிருந்தால் என்ன ஆயிருக்கும் ?

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=163:2010-11-15-20-03-33&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

ஆண்டிமுத்து இரவுக் காட்சிக்குப் போயிருந்தால் என்ன ஆயிருக்கும் ?

இந்தியாவுக்கு

17,60,00,00,00,000

ரூபாய் மிச்சமாயிருக்கும். புரிகிறதா.. ஆம் ஆண்டிமுத்து, ஆ.ராசாவின் தந்தை. 1962ம் ஆண்டு, அவர் இரவுக் காட்சிக்கு போயிருந்தால், இந்தியா இந்த வரலாறு காணாத ஊழலை சந்தித்திருக்காது.

இந்த ஊழல் குறித்து பேசுவதற்கு முன், ஊழலின் தொகை எப்படி இவ்வளவு பெரிதானது என்ற கேள்வி எழும். சிம்பிளாக பார்க்கலாம். இரண்டு வீடுகளை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. பத்து ஆண்டுகள் கழித்து இரண்டு வீடுகளையும் விற்கிறீர்கள். முதல் வீட்டை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கிறீர்கள். ஆனால் செய்தித் தாளில் விளம்பரம் ஏதும் கொடுக்காமல் முதலில் விலைக்குக் கேட்பவருக்கு கொடுக்கிறீர்கள். அடுத்த வீட்டை விற்பதற்கு செய்தித் தாளில் விளம்பரம் செய்கிறீர்கள். ஐம்பது லட்ச ரூபாய்க்கு போகிறது. இப்போது நீங்கள் முதல் வீட்டை விற்கையில் செய்தித் தாளில் விளம்பரம் தராமல், முதலில் கேட்பவருக்கு விற்றதால், நீங்கள் 49 லட்சம் நஷ்டம் அடைந்தீர்கள் என்றால் அது சரிதானே… raja_2

இதுதான் அலைக்கற்றை விவகாரத்தில் நடந்தது.

இந்த அலைக்கற்றை ஊழல் எப்படி நடந்தது, அதில் ராசாவின் பங்கு என்ன என்பதையெல்லாம் பல்வேறு ஊடகங்களிலும், இணையங்களிலும் படித்திருப்பீர்கள். இப்போது, ராசாவின் ராஜினாமாவின் பின்னணியில் உள்ளவற்றை பார்க்கலாம்.

ராசாவுக்கான செக் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறை பதவி ஏற்றவுடனேயே வைக்கப் பட்டு விட்டது. ராசாவுக்கு தொலைத் தொடர்புத் துறை தருவதில்லை என்று காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவு, கருணாநிதியை கடும் கோபம் அடையச் செய்தது. அதனால்தான், பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் கோபித்துக் கொண்டு திரும்பினார். பிறகு தனது பிடிவாதத்தால் ஆ.ராசாவுக்கே தொலைத் தொடர்புத் துறையை பெற்றார். இந்தப் பிடிவாதம் காங்கிரஸ் கட்சிக்கு சிறிதும் பிடிக்கவில்லை.

இரண்டாவது முறை பதவி ஏற்றவுடனேயே, ராசாவின் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும், தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தை சிபிஐ சோதனையிட்டு ஏராளமான ஆவணங்களை அள்ளிச் சென்றது. ஒரு அமைச்சரின் துறை அலுவலகத்தில், அதுவும் தலைமை அலுவலகத்தில் அவர் பதவி வகிக்கும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை சோதனையிட்டு ஆவணங்களை பறிமுதல் செய்கிறது என்றால், ராசாவுக்கு எந்த அளவுக்கு அதிகாரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஆனால் தொலைத் தொடர்புத் துறைதான் வேண்டும் என்று கருணாநிதியும் ராசாவும் பிடிவாதம் பிடித்ததற்கு காரணம், மீண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல.. ஆஸ்திரேலியாவுக்கு அருகில் சொந்தமாக தீவு வாங்கும் அளவுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிலேயே சம்பாதித்து விட்டார்கள். இரண்டாவது முறை இந்தத் துறைதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது, மாட்டிக் கொள்ளாமல் இருக்க. விசாரணை என்று தொடங்கினால், அது அங்கே போய், இங்கே போய், கடைசியில் கோபாலபுரத்திலும், சிஐடி காலனியிலும் வந்து நிற்கும் என்பது கருணாநிதி அறியாததல்ல.

Raja_4

முதல் முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி பதவி ஏற்ற போது, திமுக எம்பிக்களின் தயவை பெரிதும் நம்பி இருந்தது. அப்போது, இந்தத் துறைகள் தான் வேண்டும் என்று கருணாநிதி கொடுத்த நெருக்கடியையும், அந்த கோரிக்கைகளில் மாற்றம் வந்த போது, ஜனார்த்தன் ரெட்டி எழுத்து பூர்வமாக தந்த இலாக்கா குறித்த விபரங்களை பத்திரிக்கையாளர்களை அழைத்து காண்பித்ததையும், கப்பல் போக்குவரத்துத் துறை, தொலைத் தொடர்புத் துறை ஆகியவற்றில் பணத்தை அள்ளியதையும், சேது சமுத்திரத் திட்டத்தில் தொடக்கம் முதலே கொள்ளையை துவக்கியதையும் காங்கிரஸ் கட்சி அமைதியாக கவனித்தே வந்தது.

ராசா ராஜினாமா செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கருணாநிதி அளித்த பேட்டியை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ராசா ராஜினாமா செய்யத் தேவையில்லை. அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை. இதற்கு முன்பிருந்தவர்கள் கடைபிடித்த கொள்கையைத் தானே அவர் கடைபிடித்தார் என்றார். இவர் கோபாலபுரம் வீட்டை பல ஆண்டுகளுக்கு முன் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கியிருந்தார் என்றால் இன்று அதே விலைக்கு கொடுப்பாரா ?

இப்படி பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த கருணாநிதியும் ராசாவும் மண்ணைக் கவ்வியது எப்படி…. ?

ஒவ்வொன்றாகப் பார்ப்போம். காங்கிரஸ் கட்சி, திமுகவை ஒரு வழி பண்ண வேண்டும் என்று எப்போதோ முடிவெடுத்து விட்டது. அதன் முதல் நடவடிக்கை தான் ராசாவின் அமைச்சக அலுலவகத்தில் சிபிஐ சோதனையிட்டது. இதைத் தொடர்ந்து மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் வேலையை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செய்து வந்தது. கருணாநிதியை ஒரு மூலைக்குத் தள்ளி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்த போதுதான், முதன் முறையாக, ஸ்பெக்ட்ரம் தொடர்பான ஆவணங்கள் பத்திரிக்கையாளர்களின் கைக்கு கிடைக்கின்றன. இந்த ஆவணங்கள் மிக மிக ரகசியமானவை. இப்படிப் பட்ட ரகசிய ஆவணஙகள், மத்திய அரசின் உளவுத் துறையின் உதவியில்லாமல் வெளி வருவதற்கான சாத்தியமே இல்லை. முதலில் இந்த ஆவணங்கள் வெளி வந்தன. அடுத்து, ராசாவுக்கும் நீரா ராடியா என்ற பவர் ப்ரோக்கருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் ஊடகங்களில் வந்தன. இதையெல்லாம் வெளியிட்டு, கருணாநிதிக்கு நெருக்கடியை அதிகரித்துக் கொண்டே வந்தது காங்கிரஸ்.

இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்ந்து செய்திகளில் இருக்குமாறு காங்கிரஸ் பார்த்துக் கொண்டே வந்தது.

சசி தரூர் ஊழல் புகார் காரணமாக ராஜினாமா செய்த போது, இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் மீண்டும் கிளம்புவது போல ஏற்பாடுகள் செய்யப் பட்டன. அப்போது தேசிய ஊடகங்களில், இந்த சிறிய ஊழலுக்கே ஒரு அமைச்சர் ராஜினாமா செய்யும் போது, இவ்வளவு பெரிய ஊழல் (அப்போது இந்தத் தொகை 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் கோடி வரை) புரிந்த ஒரு நபர் இன்னும் ராஜினாமா செய்யவில்லையே என்று கேள்விகள் எழுப்பப் பட்டன.

இந்நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக திமுகவுக்கு ஒரு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து செயலிலும் இறங்குகிறது. முதல் வேலையாக ஈவிகேஎஸ் இளங்கோவனை களத்தில் இறக்கி, திமுக அரசை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்யச் சொல்கிறது. இளங்கோவனின் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, அவரோடு நல்ல உறவு வைத்துள்ள தங்கபாலுவிடம் தனது மனக்குறையை வெளிப்படுத்துவார். தங்கபாலுவும், பெயருக்கு யாரும் கட்சியின் மேலிட அனுமதி இன்றி, பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுப்பார். ஆனால், கட்சியின் கண்ணசைவு இன்றி இளங்கோவன் இது போல பேசமாட்டார் என்பது பச்சைக் குழந்தைக்குக் கூட தெரியும்.

spectrum_1

சோனியாவின் திருச்சிக் கூட்டத்தில் இளங்கோவனை அருகில் அமர வைத்ததும் எல்லா விஷயங்களும் தெள்ளத் தெளிவாகின. சோனியா சென்னை வந்த போது, மரியாதை நிமித்தமாகக் கூட கருணாநிதியை சந்திக்காமல், ஒப்புக்கு ஒரு ஐந்து நிமிடம் விமான நிலையத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போதே சோனியாவின் மன நிலையையும், திமுகவை நடத்தும் விதத்தையும் நன்றாக உணர்ந்தார் கருணாநிதி. ஆனால், காங்கிரஸ் கட்சியை பகைத்துக் கொள்ளும் எந்த வேலையையும் செய்ய முடியாது என்ற யதார்த்தத்தை உணர்ந்தார். ஆனாலும் ஆத்திரத்தை அடக்க முடியவில்லையே…. அதனால், திமுகவின் தலித் பிரிவு தலைவர் திருமாவளவனை விட்டு காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கச் சொன்னார். திருமாவளவனும் ஆப்பசைத்த குரங்கின் கதையாக காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து, ஈழத் தமிழர் அவல நிலைக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று பக்கம் பக்கமாக பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். காங்கிரஸ் கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் நின்று ஜெயிக்கும் வரையிலும் இவருக்கு தெரியவில்லையாம்.

திருமாவளவனின் பேட்டிக்கு எதிர்வினையாக, கார்த்தி சிதம்பரம், இளங்கோவன், தங்கபாலு என்று ஒரு படையே இறங்கியது. இந்த மோதல் ராஜீவ் காந்தியின் சிலை உடைப்பு வரை போனது. விஷயம் கை மீறி போவதை உணர்ந்த கருணாநிதி, சோனியா காலில் விழச் சொல்லி உத்தரவு போட்டார். காலில் விழுவதற்காக டெல்லி சென்ற திருமாவளவனை சோனியா சட்டை கூட செய்யவில்லை.

சந்திக்க நேரம் ஒதுக்காததால், திருமாவளவன் சோனியாவிற்கு கடிதம் எழுதுகிறார். கடிதத்தை படிக்கும் முன், “அடங்க மறு.. அத்து மீறு… திருப்பி அடி“ என்ற வாசகத்தை நினைவில் வைத்துக் கொண்டு படியுங்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் கட்சி ஆகும். நாங்கள் மதச்சார்பின்மையை கடைபிடிக்கிறோம். அதன் அடிப்படையில் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி காங்கிரஸ் கட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம். (எப்பூடி…..)

2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். உங்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நாங்களும் ஒரு உறுப்பினர்.

இந்த சமயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு எங்கள் கட்சிக்கும் அழைப்பு விடுத்ததற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். காஷ்மீருக்கு சென்ற அனைத்து கட்சிகள் குழுவில் என்னையும் ஒரு உறுப்பினராக நியமனம் செய்ததற்கும், சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து வரும் விரும்பத்தகாத சம்பவம் பற்றி உங்களுக்கு சில விளக்கங்கள் அளித்து இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

சென்னை அசோக்நகரில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலையை அவமானம் செய்த சம்பவத்தை கண்டித்து, அந்த மனித தன்மையற்ற நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று எங்கள் சார்பில் கேட்டிருக்கிறோம். ஆனால், சில காங்கிரசார் அங்கு கூடி நின்று நடத்திய போராட்டத்தில் எங்கள் கட்சியினரையும் உள்நோக்கத்தோடு அதில் சம்பந்தப்படுத்தி பேசியதோடு என்னை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அந்த சம்பவத்தில் எங்களுக்கு துளியளவும் தொடர்பு இல்லை என்பதை

ஆணித்தரமாக் தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி செல்வதில் மட்டுமல்ல இந்த முழு இந்தியாவையும் வழிநடத்தி செல்லும் உங்களுக்கு எங்கள் முழு ஆதரவு எப்போதும் உண்டு. (முழு இந்தியாவையும் வழி நடத்தித் தான் ஈழத் தமிழர்களை கொன்று குவித்தார்)

தேசத்தின் நலனுக்காக உங்களது குடும்பம் அளித்துள்ள பங்களிப்பை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். தமிழகத்தில் தலித் மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நல்லுறவு நீண்டகாலமாக இருந்து வருகிறது.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியால் தலித் மக்களின் நிலை பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் எல்.இளையபெருமாள் மற்றும் தமிழகத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கன் ஆகியோரை பெருமையுடனும், அன்புடனும் நினைவுகூறுகிறோம்.

மீண்டும் ஒருமுறை உங்கள் குடும்பத்திற்கு, குறிப்பாக ராஜீவ்காந்திக்கு

எனது மரியாதையையும், வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு விவகாரத்தில் எங்களுக்கு சம்பந்தம் உண்டு என்று கூறப்படுவதை நாங்கள் வன்மையாக மறுக்கிறோம்.

எப்படி இருக்கிறது கடிதம். (இப்படி ஒரு பொழப்பு பொழைக்கறதுக்கு திருமாவளவன் நாண்டுகிட்டு சாகலாம்)

3-11-10_thiruma_cine_1

இத்தோடு இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க, காங்கிரஸ் கட்சி, குறைந்தது 100 சீட்டுகளும், துணை முதல்வர், உள்ளாட்சித் துறை, வணிக வரித் துறை, போக்குவரத்துத் துறை போன்ற முக்கியத் துறைகளை தேர்தலுக்கு முன்பே கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே முடிவு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தது. ஆனால், கருணாநிதிக்கு இது போன்ற எந்த சலுகையையும் காங்கிரஸ் கட்சிக்கு தருவதற்கு விருப்பமில்லை. மைனாரிட்டி அரசை நடத்திக் கொண்டு, ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் பங்கு கொடுக்காமல் ஓட்டிய பனங்காட்டு நரியல்லவா ?

இந்த நேரத்தில் இது தொடர்பான பொது நல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வருகிறது. ராசாவின் நல்ல நேரம், நீதிபதிகள், சராமாரியான கேள்விகளால், சிபிஐ நிறுவனத்தை வறுத்து எடுக்கிறார்கள். நேரடியாக ராசாவைப் பற்றியே நீதிபதிகள் கருத்து தெரிவித்ததால், ஆண்டி முத்துவின் மகனின் இறுதிக் காட்சி தொடங்குகிறது. இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் கட்டாயம் எதிரொலிக்கும் என்று காங்கிரஸ் கட்சி அனுமானிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 15க்கு ஒத்தி வைக்கப் படுகிறது.

இந்த சூழலில்தான் வருகிறது சிஏஜி அறிக்கை எனப்படும் மத்திய கணக்காயரின் அறிக்கை. இந்த அறிக்கை முதன் முறையாக ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்ற தொகையை கூறுகிறது. சிஏஜி அறிக்கை என்பது, ஒரு ரகசிய ஆவணம். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன்பு அதை வெளியிட்டால் தண்டனைக்குரிய குற்றம். மேலும் சிஏஜி அறிக்கை என்றால் ஏதோ நாலு பக்கம் ஐந்து பக்கம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். பல நூற்றுக் கணக்கான பக்கங்களைக் கொண்ட புத்தகம்.

spectrum_2

இந்த சிஏஜி அறிக்கை, யாருக்கும் தெரியாமல், ஏறக்குறைய அனைத்து ஊடகங்களின் அலுவலகத்துக்கும் சென்றடைகிறது. திட்டமிட்டு இந்த அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் திமுகவுக்கு தரும் நெருக்கடியை அதிகப் படுத்தியது. அனைத்து ஊடகங்களும், இந்த அறிக்கையை வைத்து ராசாவை உரித்து தொங்க விட்டன. தேசிய ஊடகங்களில் 24 மணி நேரமும் ராசாவைப் பற்றியே விவாதங்கள்.

ஊடகங்களின் இந்த விவாதங்களிலும், ராசாவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்திலும், கேடி சகோதரர்களின் பங்கு மிகப் பெரியது.

ராசாவின் கதையில் இறுதி அத்தியாயத்தை எழுதியது ஜெயலலிதா. ஊடகங்களில் பெரிதாக ராசா விவகாரம் விவாதிக்கப் பட்டு வரும் நேரத்தில், காங்கிரஸ் கட்சி ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அதனால் திமுக வாபஸ் வாங்குமானால், தனது கட்சி எம்பிக்களின் எண்ணிக்கையோடு சேர்த்து, 18 எம்பிக்களின் ஆதரவை பெற்றுத் தர நான் தயார் என்ற அணுகுண்டைத் தூக்கிப் போடுகிறார்.

கருணாநிதியும் திமுகவும் அதிர்ந்து போனது. ஆனால், அடுத்த இரண்டு மணி நேரத்தில் குலாம் நபி ஆசாத், அதிமுகவுக்கு இடமில்லை என்று பேட்டியளித்ததும், கருணாநிதி மீண்டும் குஷியானார். அதற்குப் பிறகுதான், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தொலைத் தொடர்புத் துறை சார்பாக சிபிஐ விசாரணை கோரும் பொது நல வழக்கில் பதில் மனு தாக்கல் செய்கிறது. அந்த மனுவில், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் தவறே நடக்கவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது.

ராசாவும், கருணாநிதியும் குஷியாகிறார்கள். மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையே அடிப்படையாக கொண்டு, முரசொலியில் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள்.

இந்த நீதிமன்ற வழக்கு தொடர்பாக இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டியுள்ளது. சிபிஐ விசாரணை வேண்டும் என்ற பொது நல வழக்கில் ஆஜராவதற்காக சிபிஐ ஒரு வழக்கறிஞரை நியமித்திருந்தது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பெயர் கோபால் சுப்ரமணியம். இந்த கோபால் சுப்ரமணியம் என்ன சிபிஐ இடம், நானே உங்களுக்கும் சேர்த்து வாதாடுகிறேன் என்று கூறுகிறார். இவரை வழக்கறிஞராக நியமித்தால், வழக்கு விபரங்களை ராசாவிடம் சொல்லி விடுவார் என்று உணர்ந்த சிபிஐ, முடியாது என்று கூறி விட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சிபிஐ ன் வழக்கறிஞரும் தொலைத் தொடர்புத் துறை சார்பாக கோபால் சுப்ரமணியமும் இருந்தார்கள். விசாரணை தொடங்கியவுடன், கோபால் சுப்ரமணியம், சிபிஐக்கும் சேர்த்து நான்தான் ஆஜராகிறேன் என்று கூறினார். இதையடுத்து வெளியேறிய சிபிஐ வழக்கறிஞர் சிபிஐ இயக்குநரிடம் இது பற்றி கூறவும், எழுத்துப் பூர்வமாக சிபிஐ கோபால் சுப்ரமணியத்திடம் நீங்கள் ஆஜராக வேண்டாம் என்று எழுதுவதில் போய் முடிந்தது.

BCI-Gopal-Subramanium-1

கோபால் சுப்ரமணியம்

ராசாவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் பேட்டி கொடுக்கிறார். முரசொலியின் ஆங்கிலப் பதிப்பான இந்து நாளேட்டில் ஞாயிறன்று ராசா பேட்டி கொடுக்கிறார். கோபாலபுரத்தின் நிலைய வித்வானான ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பேட்டியை அவரே தயாரித்து, கோபாலபுரத்தில் ஒப்புதல் பெற்றபின் வெளியிடுகிறார்.

இதற்கு நடுவே ராசாவை ஆதரித்து, பெரியார் மடத்தின் அறங்காவலர் அருட்திரு வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிடுகிறார். திருமாவளவன் அறிக்கை வெளியிடுகிறார். ஆனால், எதுவுமே ராசாவை காப்பாற்றவில்லை என்பதுதான் சோகம்.

ஞாயிறன்று காலை முதல், கருணாநிதி சோனியாவை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். அவரது அழைப்பை சோனியா ஏற்கவில்லை. This is pay back time. கருணாநிதி சோனியா லைனில் வந்தால், அவரிடம் “உங்கள் தனிப்பட்ட பழி வாங்கும் உணர்ச்சிக்காக ஒரு வருடத்திற்கும் மேலாக ஈழத் தமிழர்கள் கொல்லப் படும் போது நான் எனது இனத்தையே காட்டிக் கொடுத்து உங்களுக்கு ஆதரவு தந்தேனே. அது போல இந்த ராசா விவகாரத்தில் எனக்கு ஆதரவு கொடுங்கள்“ என்று கேட்கப் போகிறேன் என்று புலம்பியிருக்கிறார். ஆனால் சோனியா தரப்பில், எதுவாக இருந்தாலும் பிரணாப் முகர்ஜியிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று கூறப் பட்டு விட்டது. பிரணாப் கருணாநிதியிடம் தயவு செய்து ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். வேறு வழியே இல்லை. நாளை எதிர்க்கட்சிகள், பாராளுமன்றத்திற்குள் தர்ணா செய்யவும், ஜனாதிபதியை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார். இதற்கு கருணாநிதி சரி ராசாவிடம் இருந்து அந்த இலாக்காவை பறித்தால், அதை பிரதமரையே வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள், வேறு யாரிடமும் தர வேண்டாம் என்பதை வேண்டுகோளாக வைத்துள்ளார். அப்படியே ஆகட்டும் என்றார் பிரணாப்.

கருணாநிதி ராசாவை அழைத்து, பாராளுமன்றம் மறுநாள் கூடியவுடன், இத்தனை நாள் தொலைத் தொடர்புத் துறையில் செய்த சாதனைகளையெல்லாம் விளக்கி ஒரு அறிக்கை படித்து விட்டு, நான் எந்தக் குற்றமும் செய்யாவிட்டாலும், பாராளுமன்றம் நடக்க வேண்டும் என்பதற்காக ராஜினாமா செய்கிறேன் என்று கூறி விட்டு ராஜினாமா செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளார்கள்.

ஆனால், காலையில் மனசு மாறினால் என்ன செய்வது என்று காங்கிரசார், ஞாயிறன்று இரவே, ராசாவிடம் இருந்து வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதத்தை பெற்றனர்.

raja_3

சரி. இலாக்காவையாவது பிரதமரே வைத்துக் கொள்வார் என்று பார்த்தால், அதையும் கபில் சிபலிடம் கொடுத்ததன் மூலம், யார் பெரியவர் என்பதை காங்கிரஸ் கட்சி கருணாநிதிக்கு தெளிவாக உணர்த்தியுள்ளது.

இந்த ராசாவின் ராஜினாமா, கருணாநிதியை மிக மிக பலவீனமாக நிலையில் தள்ளியுள்ளது. எவ்வளவோ இயன்றும், ராசாவை காப்பாற்ற முடியவில்லையே என்று மனம் வெதும்பித்தான் இன்று கருணாநிதி ராசாவை பாராட்டி தகத்தகாய கதிரவன் என்றும், தலித் இனத்தின் தங்கம் என்றும் பாராட்டியுள்ளார். இந்த ஏழை தகத்தகாய கதிரவன், ஊட்டியில் 300 ஏக்கருக்கு டீ எஸ்டேட் வாங்கியுள்ளார். இவர் தலித்தாம்……. இவர், நீதிபதி பி.டி.தினகரனெல்லாம் தலித் என்றால் அப்போ தலித் என்பவர் யார் ?

1989 பாராளுமன்றத் தேர்தலை கவனித்தவர்கள் ஒரு விஷயத்தை மறந்திருக்க இயலாது. அந்தத் தேர்தலில் ஒரே பிரச்சினை போபர்ஸ் ஊழல் மட்டும் தான். அப்போதெல்லாம் இந்த ப்ளெக்ஸ் போர்டுகள் கிடையாது. தூரிகை கொண்டு வரைவதுதான். தெருவுக்குத் தெரு போபர்ஸ் ஊழல், போபர்ஸ் திருடன் ராஜீவ் காந்தி, பீரங்கித் திருடன் என்று பேனர்கள், கட் அவுட்டுகள். போபர்ஸ் என்ற ஒரே விஷயத்தில் தான் அந்தத் தேர்தலில் வி.பி.சிங் பிரதமராக முடிந்தது. அந்த போபர்ஸ் ஊழலின் மொத்தத் தொகை வெறும் 66 கோடி ரூபாய்கள். அப்போது இது பெரிய தொகையாக இருந்தாலும், இப்போது ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி பெரிய தொகை தானே. 66 கோடி ரூபாய் ஊழலைப் பற்றிப் பேசியே மருமகனை மத்திய மந்திரி ஆக்கிய கருணாநிதி வரலாறு காணாத இந்த ஊழலைப் பற்றி பேசுகிறாரா ?

dinamani_cartoon

இந்தத் தொகை குறித்து, மத்திய கணக்காயரின் அறிக்கை பத்திரிக்கைகளில் வெளி வந்த போது, ஆ.ராசாவும், கருணாநிதியும் அது பற்றிக் கூறியது, “இந்த அறிக்கை இறுதியானது அல்ல. 1999 முதல் அலைக்கற்றை ஒதுக்கீடு இப்படித் தான் நடந்தது. அப்போது சிஏஜி ஏன் வாயைத் திறக்கவில்லை. “ என்று பேசினர்.

இப்போது ராசா ராஜினாமாவிற்கு பிறகு, பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மேலும், ஜெயலலிதாவும் இந்தக் கோரிகிகையை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாகவும், இதற்கு முந்தைய பத்தியில் கருணாநிதி சொன்ன சிஏஜி அறிக்கை தொடர்பாகவும், கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை பாருங்கள். அத்தோடு இந்தக் கட்டுரையை நிறைவு செய்யலாம்.

’பார்லிமென்ட் கூட்டுக்குழுவை விட பொது கணக்கு குழு அதிகாரமிக்கது. இந்த குழு எதிர்கட்சியை சேர்ந்தவர் தலைமையில் இயங்குகிறது.

எதிர்கட்சிகளின் கோரிக்கை பாஜகவின் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் இயங்கும் பொது கணக்கு குழு மீது நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது.

பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டால், அது ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர் தலைமையில் அமைக்கப்படும்.

மேலும் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் முன்பு உள்ளதால் முடிவு எடுக்கப்பட முடியாது.

ஆங்கில அச்சு ஊடகங்களில் ராசாவைப் பற்றி வந்த செய்திகள்.

Hindustan_Times

15_11_2010_001_011

311951

1 comment:

  1. இந்த கூட்டம் எந்திரிச்சி போகும்போது எத மிச்சம் வச்சிட்டு போக போறாங்க? ஒன்னு செய்யலாம் ... வருஷம் ஒன்றுக்கு கருணாவுக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ராயல்டி தந்து இனிமே அரசியல் பக்கமா வர கூடாதுன்னு எழுதி வாங்கிக்கலாம். வருஷத்துக்கு சுமார் 25 கோடின்னு வச்சிக்கிட்டு தலைவர் குடும்ப உறுபினர்கள் எல்லோருக்கும் தலைக்கு ரூ 25 கோடி கொடுத்திடலாம். எதோ கொஞ்சமாவது நமக்கு பணம் மிச்சமாகும்...

    ReplyDelete