Tuesday, December 21, 2010

இந்திய ஊழலின் இதயத்தில் பொறுத்தமற்ற மனிதர்

இப்படித்தான் நியூயார்க் டைம்ஸ் ஆண்டிமுத்து ராசாவை வர்ணிக்கிறது. இன்று நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் வெளிவந்த கட்டுரையை சவுக்கு தனது வாசகர்களுக்காக உடனுக்குடன் மொழி பெயர்த்து வழங்குகிறது.

ஒரு சாதாரண ஊரில் உள்ள ஒரு தென்னிந்திய மாநிலத்தின் பிராந்தியக் கட்சியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர். எப்படிப் பார்த்தாலும் தொலைத் தொடர்புத் துறையிலோ தொழில் வணிகத்திலோ சிறிதும் அனுபவம் இல்லாத ஒரு நபர் மிக வேகமாக வளர்ந்து வரும் செல் பேசி சந்தையை நிர்வகிக்கும் அமைச்சராவார் என்பதை யாரும் எதிர்ப்பார்க்க வில்லை.

a.raja_5

ஆனால் அவரிடம் என்ன தேவையோ அது இருந்தது. காங்கிரசின் மிக முக்கிய கூட்டணிக் கட்சித் தலைவரின் எக்கு போன்ற பின்புலம் அவருக்கு இருந்தது. இவருடைய 16 உறுப்பினர்களின் ஆதரவு இல்லையென்றால், அலைபாயும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு அமைக்கப் பட்டிருக்கும் அரசு நிலைகுலையும்.

இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல் என்று வர்ணிக்கப் படும் ஊழலின் மையப் புள்ளியாக ராசா உள்ளார். அவர் தனது பதவியை பயன்படுத்தி விலை மதிப்புள்ள செல்பேசியின் ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை 2008ம் ஆண்டில் அடி மாட்டு விலைக்கு விற்றார் என்பதுதான் அவர் குற்றச் சாட்டு. இது தொடர்பாக அவர் எடுத்த முடிவுகள் ஏறக்குறைய இந்திய கஜானாவுக்கு 40 பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்தியிருக்கும் என்று கடந்த வாரம் இந்தியாவில் வெளியான ஒரு புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்பாக வெளியான இரண்டு முக்கிய அரசியல் ஊழல்களை அடுத்து இந்த ஊழல் வெளியாகியிருப்பது இந்திய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை அரித்துவிட்டிருக்கிறது. பரவலாக மிக நேர்மையான மனிதர் என்று அறியப்படும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மீது இந்த விஷயத்தை துரிதமாக புலனாய்வு செய்யாததற்காக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்தின் அடித்தளத்தை இந்த ஊழல் ஆட்டம் காண செய்யும்.

ஒரு சாதாரண சிற்றூர் அரசியல்வாதியாக இருந்த ராசா இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆக முடிந்தது உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ள உதவும். சாதி அடிப்படையிலோ, குடும்ப அடிப்படையிலோ உருவாகும் சிறிய பிராந்திய கட்சிகள் இந்தியாவில் மிகப் பெரிய சக்தியாக விளங்கி அரசு இயந்திரத்தின் வலுவான பாகங்களை ஆக்ரமித்து தங்கள் கட்சி மற்றும் சொந்த கஜானாக்களை நிரப்பிக் கொள்கின்றன.

பல கட்சி கூட்டணி ஆட்சி என்றாலே, கொள்கைப் பிடிப்பு இல்லாத சிறிய கட்சிகளின் நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருக்க வேண்டியதுதான் என்கிறார், அரசியல் நோக்கர் ப்ரேம் ஷங்கர் ஜா.

1989ம் ஆண்டு ராணுவ பேரங்கள் தொடர்பாக நடைபெற்ற ஊழல் காரணமாக தோல்வியை சந்தித்த ராஜிவ் காந்தி அரசாங்கத்துக்குப் பிறகு பாராளுமன்றத்தில் முழுப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதன் விளைவாக சிறிய, பிராந்திய கட்சிகளின் துணையோடு அரசு அமைப்பது என்பது, ஒரு சிக்கலான விவகாரமாகவே அமைகிறது. இது போன்ற பிராந்தியக் கட்சிகளுக்கு தேசிய அளவில் கொள்கை ஏதும் இல்லாமல் மத்தியில் கிடைக்கும் அதிகாரத்தை கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பாகவே பார்க்கின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ஊழல்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனாலும் அரசின் முக்கிய துறைகளான உள்நாட்டு பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித் துறை போன்ற துறைகளை நீண்ட அனுபவம் மற்றும் சிறந்த தலைவர்களிடம் கொடுத்துள்ளது. ஆனால் கூட்டணி அரசாங்கத்தின் யதார்த்தம் பெரிய துறைகளை சிறிய கூட்டணிக் கட்சிகளிடம் கொடுத்து, அது கேள்விக்குள்ளாகும் அரசியல்வாதிகளை முக்கிய பதவிகளில் அமர்த்துவதில் போய் முடிகிறது.

இந்த கூட்டணி அரசியல் மிக தர்மசங்கடமான ஊழல்களுக்கும், நிர்வாக சீர்கேடுகளுக்கும் கடந்த காலத்தில் வழி வகுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சி தலைவராகவும், மத்திய நிலக்கரித் துறை அமைச்சராகவும் இருந்த கிழக்கு மாநிலம் ஜார்கண்டைச் சேர்ந்த ஷிபு சோரேன் என்பவர் 2006ல் ஒரு கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டதற்காக பதவி விலக நேரிட்டது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளை தோற்கடித்து தனது கட்சியான திரிணாமூல் காங்கிரசை பதவியில் அமர்த்துவதையே ஒரே லட்சியமாகக் கொண்ட மம்தா பானர்ஜியின் கையில் தான் இந்தியாவின் மிகப் பெரிய வேலை வழங்கும் நிறுவனமான இந்தியன் ரயில்வே இருக்கிறது.

திமுக என்கிற ராசாவின் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு காலத்தில் தமிழ் தேசியம் பேசுகிற விடுதலை இயக்கமாக இருந்து வந்தது. ஆனால், தனது கொள்கைகளை ஏறக்குறைய அந்த கட்சி கைவிட்டு விட்டது. எண்பதுகளில் உள்ள, சக்கர நாற்காலையை நம்பியுள்ள மு.கருணாநிதி மற்றும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அவரது வாரிசுகள் திமுகவை ஒரு அரசியல் கட்சியாக இல்லாமல் குடும்ப தொழில் சாம்ராஜ்யமாக நடத்துவதாகவே தெரிகிறது.

2004ல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, அதன் எதிரியான பிஜேபியின் கூட்டணிக் கட்சியாக இருந்த திமுக காங்கிரஸ் அணிக்கு வந்தது. இதற்கு பலனாக திமுகவுக்கு தொலைத் தொடர்புத் துறை போன்ற பல்வேறு துறைகள் வழங்கப் பட்டன.

கருணாநிதியின் கொள்ளுப் பேரனும் மீடியா ஜாம்பவானுமான தயாநிதி மாறனை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகுமாறு டெல்லிக்கு அனுப்பினார் கருணாநிதி. ஆனால் மாறனுக்கும் கருணாநிதியின் மூத்த மகனுக்கும் முட்டிக் கொண்டது.

குடும்பச் சண்டையை சரிக் கட்டுவதற்காக மாறனுக்கு பதிலாக அவ்வளவாக பிரபலமாக இல்லாத ஆனால் கட்சியில் மிகப் பெரிய அதிகார மையமாக உள்ள தனது மகள் கனிமொழியோடு நெருக்கமான உறவு கொண்டுள்ள ராசாவை தேர்ந்தெடுத்தார்.

ராசா கல்லூரி நாட்களிலேயே அரசிசியலில் ஈடுபட்டவர். இவர் இதற்கு முந்தைய அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார். தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படும் தலித் சமூகத்தை சேர்ந்த முக்கியமான அரசியல்வாதியாக டெல்லி வட்டாரத்தில் அறியப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவருக்கு பெரிய பதவி கொடுப்பதால் தலித் வாக்குகளை பெற முடியும் என்றும் நம்பப் பட்டது.

“அவர் யாருக்கும் அச்சுறுத்தல் அல்ல, அதுவே அவருடைய பலம் மற்றும் பதவிக்கான தகுதி“ என்கிறார் தமிழ்நாடு அரசியலை பற்றி ஏராளமாக எழுதியவருமான வாசந்தி.

கட்சியை கவனமாக பொறாமை உணர்வோடு பரம்பரைச் சொத்து போல பாதுகாத்து வரும் கருணாநிதியின் பிள்ளைகளுக்கு வேண்டுமானால் ராசா அச்சுறுத்தல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஸ்பெட்ரம் விற்பனையை கையாண்ட விதம், இந்தியாவின் சிறந்த அரசாங்கம் என்று கருதப்பட்ட ஒரு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை குலைத்து விட்டது.

இந்த ஊழல், இந்தியாவின் சிறந்த அரசியல்வாதிகளுள் ஒருவர் என்று கருதப்படும் மன்மோகன் சிங் மீது கூட கரி பூசி விட்டது. யாருமே சிங் ஊழலில் சம்பந்தப்பட்டவர் என்று குறை சொல்லாவிட்டாலும் கூட, கடந்த வாரம் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ராசா கையாண்ட விதம் குறித்து விசாரணை கோரிய ஒரு மனுவை தாமதப் படுத்தியதற்காக குறை கூறியது.

யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம் என்று மன்மோகன் சிங் உறுதி கூறியிருந்தாலும், உடனடியாக ராசாவை பதவி நீக்கம் செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி, காங்கிரஸ் கட்சி பதவியையும் கூட்டணியையும் காப்பாற்றுவதற்காக எந்த கொள்கையை வேண்டுமானாலும் தியாகம் செய்ய தயாராக இருக்கும் என்ற முடிவை எடுக்க வைக்கிறது.

நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ராசா கூறினாலும் நவம்பர் 14 அன்று ராஜினாமா செய்தார். இந்தியாவின் சிபிஐ புலனாய்வை மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில வாரங்களில் காங்கிரஸ் கட்சியே ஊழல்களை சந்தித்தது. மோசமான தயாரிப்பு ஏற்பாடுகளை செய்திருந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பொறுப்பாளராக இருந்த மூத்த அரசியல்வாதி அவர் வகித்த ஒரு சாதாரண கட்சிப் பதவியைக் கூட ஊழல் புகார் காரணமாக ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. மும்பையை தலைநகராகக் கொண்ட மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் அவருக்கும் அவர் குடும்ப உறுப்பினர்களுக்கும், போரில் கணவனை இழந்த கைம்பெண்களுக்காக ஒதுக்கப் பட்ட வீடுகளை அபகரித்த குற்றத்திற்காக ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப் பட்டார்.

இது போன்ற ஊழல்கள், 2014 தேர்தலில் வெற்றி பெற்று முழுப் பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா மற்றும் ராகுலின் கனவை தகர்த்து விடும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=173:2010-11-22-16-47-04&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

No comments:

Post a Comment