நெல்லை கண்ணன்... முன்னாள் காங்கிரஸ் பொதுச்செயலாளர். இலக்கியமாகட்டும் அரசியலாகட்டும் குடும்ப உறவுகளாகட்டும் மேடையிலேறிப் பேச ஆரம்பித்தால் குற்றால அருவியென ஜிலுஜிலு தமிழ் துள்ளி விழும். நடு நடுவே நகைச்சுவைப் பட்டாசுகள்... காங்கிரஸ்காரரான இவர் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அதன்பிறகு, தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. மேடைகளில் ஏறி பிரசாரம் செய்யப் போகிறார். இது பலரையும் இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இவரைச் சந்தித்தபோது, பீரங்கியாய் வெடித்தார்.
"அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்குத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்கிற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அதனால்தான், அவர் தமிழ்நாடு குறித்து எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் ஆலோசனை கேட்கிறார்.
மத்திய அமைச்சராக இருக்கின்ற தமிழகத்தைச் சேர்ந்த ஈ.வி.கே எஸ். இளங்கோவன், ஜி.கே.வாசன், மணி சங்கர் ஐயர் _ இவர்களுக்கெல்லாம் இது குறித்து கொஞ்சம்கூட மானமோ, வெட்கமோ, சூடு சொரணையோ இல்லை. இவர்களுக்கு மந்திரி பதவி மட்டும் இருந்தால் போதும்.
நண்பர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தந்தை பெரியாரின் பேரன் என்று சொல்லுவார். ஆனால், இவர் பெரியாரின் நேரடி பேரன் இல்லை. பெரியாரின் தம்பி பேரன்தான் இவர். இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான உடன் தமிழ்நாடு முழுவதும் அவரோடு நான்தான் சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது சோனியாகாந்தியை கோவைக்கு அழைத்து வந்தோம். கூட்டத்திற்கான அத்தனை செலவையும் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு ஏற்றுக் கொண்டார். இளங்கோவனின் செலவுக்கும் அவரே பணம் தந்தார்.
அந்த நிகழ்ச்சி முடிந்து மறுநாளே, தமிழ்நாடு முழுக்க பயணம் செய்த நான், ஒரு சாலை விபத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். இளங்கோவன் என்னை வந்து பார்க்கவில்லை. ஆனால், பெரியவர் கருணாநிதி உடல் நலம் சரியில்லை என்பதால் அவரைப் போய் பார்த்தார்.
பெரியவர் கருணாநிதியின் தயவு அவருக்குத் தேவையாக இருந்தது. காங்கிரஸில் நாடாளுமன்ற சீட் வாங்குவதற்கும், மத்திய அமைச்சராவதற்கும் அவர் கருணாநிதியை பயன்படுத்திக் கொண்டார். மத்திய அமைச்சரானவுடன், கருணாநிதியை எதிர்க்கிற வீரனாகத் தன்னைக் காட்டிக் கொண்டார். ஆனால், டெல்லி காங்கிரஸ் தலைமை கூப்பிட்டுச் சொன்னவுடன் நேராக கோபாலபுரம் சென்று மன்னிப்பு கேட்டு பல்டியடித்து மத்திய மந்திரி பதவியை காப்பாற்றிக் கொண்டார்.
பெரியார் எதைச் சொன்னாலும் கடைசி வரை அதில் உறுதியாக இருப்பார். ஆனால், தினம் ஒரு கருத்து முடிவெடுக்கும் இவர் எப்படி பெரியாரின் பேரனாக இருக்க முடியும்?
ஜி.கே. வாசன் பெரிய வீட்டுப் பிள்ளை. எந்த உழைப்பும் இல்லாமல் மூப்பனாரின் மகன் என்பதனாலேயே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகி, மாநிலங்களவை உறுப்பினராகி, இன்றைக்கு மத்திய அமைச்சராகியிருக்கிறார்.
என்னைப் போல் அனுபவம் கொண்டவர்களும் கட்சியில், மூத்த சேவை செய்தவர்களும், அவரிடம் போய் கை கட்டி நிற்க வேண்டும் என்ற பண்ணையார் மனோபாவம் இன்னும் இவரிடம் இருக்கிறது.
இன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்குப் பணமே வாங்காமல் விண்ணப்பம் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. ஏனென்றால், இந்த விண்ணப்பங்கள் எதுவுமே டெல்லியில் செல்லாது என்பது அவர்களுக்குத் தெரியும். தலைவர்களுக்கும், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் உள்ளேயே அந்த இடங்கள் பங்கிடப்பட்டு விடும். இலவச விண்ணப்பம் கொடுத்த ஏழை தொண்டர்கள் அத்தனை பேரும் வழக்கம் போல் ஏமாளிகளாகி தெருவில் திரிவார்கள்.
காங்கிரஸ் வேட்பாளராக ஒரே தகுதி இந்தக் கட்சி மாறி தலைவர்களின் எடுபிடியாக இருக்கவேண்டும். அல்லது கோடீஸ்வரர்களின் மகனாக இருக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் டெல்லித் தலைவர்களைக் குளிப்பாட்டுகிற வித்தை தெரிந்திருக்க வேண்டும்.
சோனியாகாந்தி பிரதம மந்திரி பதவியைத் தியாகம் செய்தார் என்று சொல்லுகின்ற இவர்கள் குறைந்த பட்சம் தி.மு.க. போட்டு இருக்கிற பிச்சையான 48 தொகுதிகளிலும் புதிய தொண்டர்களை நிறுத்துவார்களா? கருணாநிதியைவிட மூத்த திராவிட இயக்கத் தலைவர் பேராசிரியர் அன்பழகன் கடைசி காலத்தில் ஒருமுறை முதலமைச்சராகட்டும் என்று, கருணாநிதி முதல்வர் பதவியை விட்டுத் தருவாரா? சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலேயே இன்னும் பத்து வருடம் பயிற்சி வேண்டும் என்கிறார்கள். ஆனால், கருணாநிதியின் பேரன் தயாநிதியும், ராமதாஸின் மகன் அன்பு மணியும், மூப்பனாரின் மகன் வாசனும் எடுத்தவுடனேயே நேரடியாக மத்திய அமைச்சராகி விட்டார்களே...
கருணாநிதி முரசொலியில் எழுதுகிறார். மலை உச்சியில் ஏறவேண்டுமென்றால் முயன்று, முயன்று, ஏற வேண்டுமாம். அது தொண்டர்களுக்குதான். தயாநிதி ஹெலிகாப்டரில் இமயமலையில் இறங்கிவிட்டார்.
கோபால்சாமி பெற்ற தாயின் சொல்லை தட்டிவிட்டதாக கருணாநிதி குற்றம் சாட்டுகிறார். தாய் என்று பேசுகிற பெரியவர் கருணாநிதியின் கட்சிக்காரர்கள், அன்னை இந்திரா காந்தியை என்னவெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்று நினைக்கிறபோது என் நெஞ்சம் பதறுகிறது. விதவைக்கு மறு வாழ்வுத் திட்டம் கொண்டு வந்திருக்கிறார் கலைஞர். இந்திராகாந்தி விண்ணப்பித்தால் உதவுகிறோம் என்று பேசியவர்கள்தானே இந்த தி.மு.க.காரர்கள்.
1967_68_ல் நான் சாமான்யன் என்று சொன்ன கருணாநிதி, இன்று சொல்லவில்லையே... ஏன்? ஆசியாவில் 5வது பணக்கார குடும்பம் அவர் குடும்பம். இன்று 18 தொலைக்காட்சிகளின் வருட வருமானம் பல கோடி. எல்லா தொழிலிலும் தங்கள் குடும்பமே வர வேண்டும் என்று கருணாநிதியும் அவருடைய பேரன்களும் நினைக்கிறார்கள். தமிழின் பேராலும், தமிழ் இனத்தின் பேராலும், தமிழ்நாட்டின் நெடுங்காலமாக நடந்து வருகிற ஒரே குடும்பத்தின் கொள்ளையை நல்ல தமிழனாக, தமிழறிஞனாக, நான் எதிர்க்க வேண்டும் என்று முழுமையாக முடிவு எடுத்திருப்பதால் கருணாநிதியை களத்தில் சந்திப்பேன்." தனது தி.மு.க. கூட்டணி எதிர்ப்புப் பிரசாரத்தின் முன்னோட்டம் போல பேசி முடித்தார் நெல்லை கண்ணன்.
_ திருவேங்கிமலை சரவணன்
படம்: ஆர். சண்முகம்
http://www.kumudam.com/kumudam/mainpage.php
No comments:
Post a Comment