Sunday, December 19, 2010

கலைஞர் வீட்டை நெருங்கும் சி.பி.ஐ.!

ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 16:03

‘ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்லை...’ என்ற பாடல் பாண்டியன் அறையில் சி.டி. பிளேயர் மூலம் ஒலித்துக் கொண்டிருந்தது.


‘‘பாட்டை கவனித்தேன். வெளியில இருக்குற நிலைமைக்குத் தோதா பாட்டு இல்லையே...’’ என்று அலெக்ஸ், சொல்ல, சட்டென சி.டி. பிளேயரில் வால்யூமைக் குறைத்தார் அர்ச்சனா.

‘‘தேங்க்ஸ்...’’ என்று சொல்லிவிட்டு, செய்திச் சுரங்கத்தை திறந்தார் அலெக்ஸ்.

‘‘முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது இதோ, அதோ... என்று எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்கைகள் விறுவிறுவென ஆரம்பமாகி விட்டது. டிசம்பர் 8&ம் தேதியன்று காலையில் ராசா தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள் என்று அத்தனை இடங்களிலும் அதிரடியாக புகுந்தார்கள் சி.பி.ஐ. போலீஸார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் முறைகேட்டை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சி.பி.ஐ.யின் சிறப்புப் படை போலீஸார்தான் பெரம்பலூரில் இருக்கும் ராசாவின் வேலூர் கிராமத்து வீட்டில் ஆரம்பித்து டெல்லி துக்ளக் சாலையில் இருக்கும் அவருடைய வீடு வரையில் அதிரடியாக புகுந்து புறப்பட்டார்கள்...’’

‘‘ஆரம்பமே அதிரடியா இருக்கே...’’

‘‘அதே நாள் காலை ஏழரை மணிக்கெல்லாம் பெரம்பலூர் அருகில் இருக்கும் வேலூர் கிராமத்தில் ராசாவின் சொந்த வீட்டுக்கு 8 அதிகாரிகள் நுழைந்தனர். ரெய்டு நடந்து கொண்டிருக்கும்போதே, பெரம்பலூர் எம்.எல்.ஏ., ராஜ்குமாரும் மாவட்டச் செயலாளர் துரைசாமியும் ராசா வீட்டுக்கு ஓடோடி வந்தனர். ஆனால், வீட்டுக்குள் யாரையும் விடவில்லை. பத்தேகால் மணிக்கு ஒரு கை பை, இரண்டு சூட்கேஸை எடுத்துச் சென்றார்கள். அடுத்து, ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா நடத்தும் ‘சாதிக் ரியல் எஸ்டேட்’ அலுவலகத்துக்கு வந்த அதிகாரிகள், சாதிக்கின் தம்பி ஜாபர் அலி முன்பாக அங்கிருந்த கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் ஒன்றை எடுத்து, ஒரு பையில் வைத்து சீல் வைத்தார்கள். பின்பு, பெரம்பலூரில் இருக்கும் வங்கிகளுக்குச் சென்று சாதிக் தொடர்பான வங்கிக் கணக்குகள் குறித்து விசாரித்திருக்கிறார்கள்...’’

‘‘உருப்படியாக ஏதும் கிடைத்ததாமா?’’

‘‘பொறும்... அதெல்லாம் உடனே சொல்லிவிடுவார்களா என்ன? சென்னையிலும் அறிவாலயம் பின்புறம் இருக்கும் சாதிக்கின் வீட்டுக்கும் ஒரு டீம் காலையிலேயே சென்றது. வீடு முழுவதும் சோதனையிட்ட அதிகாரிகள், பதினொன்றரை மணிக்கு சாதிக்கை மட்டும் விசாரணைக்காக அவருடைய காரிலேயே அழைத்துச் சென்றார்கள். எங்கோ ஒரு இடத்தில் வைத்து விசாரித்தார்கள். மாலையில் வீடு திரும்பி மீண்டும் சோதனை நடத்தி, வீட்டிலிருந்து நிறைய ஆவணங்களை சூட்கேஸ்களில் அடைத்து எடுத்துச் சென்றார்கள். அவர்கள் விசாரணையை முடிக்கும் முன்பே வருமான வரித்துறையினரும் அந்த வீட்டுக்குள் புகுந்து அலச ஆரம்பித்தார்கள்...’’

‘‘அப்ப ரெய்டெல்லாம் முடிஞ்சுடுச்சா?’’

‘‘அன்று மாலை வரையில் சோதனைகள் முடிவடையவில்லை. சோதனை என்பது அதிகாரிகளுக்கு இரண்டாம் பட்சம்தான். சாதிக்தான் அதிகாரிகளுக்கு முக்கியமாம்...’’

‘‘அதான் அவரை பிடித்து நிறைய விசாரித்து விட்டார்களே?’’

‘‘ஒரு நாள் விசாரணை போதாதில்லையா? தன்னிடம் இருக்கும் சொத்துக்கள் என்னென்ன... அதெல்லாம் எங்கிருக்கிறது? யார் யார் பெயரில் இருக்கிறது? என்பதையெல்லாம் சொல்ல வேண்டாமா? அதற்காகத்தான் சாதிக்கை கொஞ்சம் விட்டுப் பிடிக்க நினைத்திருக்கிறார்களாம் சி.பி.ஐ. அதிகாரிகள். சாதிக் சி.பி.ஐ. பிடியில் சகஜமாக இருந்ததை நிருபர்கள் பலரும் பார்த்திருக்கிறார்கள்...’’ என்ற அலெக்ஸ், ‘‘ஓவர் டூ பெரம்பலூர்’’ என்றார்.

புரியாமல் அலெக்ஸை மேலிட்டுப் பார்த்தார் பாண்டியன்.

‘‘தொடர்ந்து அதே நேரத்தில் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் இருக்கும் ராசாவின் சகோதரர் கலியபெருமாளின் வீடு, ராஜா தியேட்டர் அருகில் இருக்கும் அவருடைய ஐ.டி.சி. குடோன் ஆகிய இடங்களிலும் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். காலையில் இருந்து மாலை வரை அங்கு நடந்த ரெய்டில் சிக்கிய ஆவணங்களை மூன்று சூட்கேஸ்களில் வைத்து அடுக்கி அதிகாரிகள் அள்ளிச் சென்றதை ஊரே வேடிக்கைப் பார்த்திருக்கிறது...’’

‘‘அச்சச்சோ...’’

‘‘ஊர் கவலைப்பட்டது மாதிரி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். பெரம்பலூரில்தான் ‘நேற்று வரையில் ராசா மாதிரி இருந்தவரு வீட்டுல இன்னைக்கு சர்புர்ருன்னு புகுந்து டாக்குமென்டெல்லாம் அள்ளிக்கிட்டு போகுதே போலீஸுன்னு அதிர்ச்சி விலகாமல் கமென்ட் அடித்தார்களாம்...’’

‘‘நிஜம்தானே?’’

‘‘பெரம்பலூரில் இந்த ரெய்டு விஷயமும் அது தொடர்பான பேச்சுக்களும்தான் மக்களிடையே சுவாரஸ்யமாக அலையடித்துக் கொண்டிருக்கிறது. நிறைய தகவல்களை ஆளாளுக்கு பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு தகவல்தான் இது...’’ என்று சொல்லி நிறுத்தினார் அலெக்ஸ்.

‘‘என்ன சஸ்பென்ஸ் வைத்து நிறுத்துறீங்க..? சொல்லுங்க... கேட்க ஆர்வமா இருக்கு...’’ என்று பாண்டியன், அலெக்ஸை தூண்டினார்.

‘‘ராசாவின் நண்பர் சாதிக்குக்கு பெரம்பலூரில் வலதுகரமாக இருந்து செயல்படும் நான்கெழுத்துப் பிரமுகருக்கு மூன்றெழுத்துப் பெண்மணி ஒருவர் தொடுப்பாக இருக்கிறாராம். பெரம்பலூருக்கு சி.பி.ஐ. ரெய்டு வருவதற்கு முதல்நாள் இரவு பனிரெண்டு மணிக்கு மேல் அந்தப் பெண்மணியின் வீட்டு முன்பாக நான்கைந்து கார்கள் வந்து நின்றதாம். அதில் இருந்து நிறைய சூட்கேஸ்கள் இறக்கப்பட்டதாம். அக்கம் பக்கத்தவர்களெல்லாம் அதிர்ச்சி விலகாமல் பார்த்து, தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்போதே, சி.பி.ஐ. அதிகாரிகள் பெரம்பலூருக்கு வந்து இறங்கி விட்டார்களாம்...’’

‘‘என்ன சொல்றீங்க?’’

‘‘நான் என்ன சொல்றது... ஆனால், இந்த விஷயங்கள் சி.பி.ஐ.யின் கவனத்துக்கு முன்கூட்டியே போயிருந்தா, அங்கும் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியிருக்கலாம் என்பதுதான் கூடுதல் தகவல்... ’’

‘‘ஓ, புரியுது... புரியுது! சரி, திடுமென சி.பி.ஐ. அதிகாரிகள் ராசா தொடர்பான இடங்களில் புகுந்து புறப்படுகிறார்களே... அதற்கு பிரதமர் அனுமதி கொடுத்துவிட்டாரா என்ன?’’

‘‘அவரோட அனுமதி இல்லாம அரசியல் ரீதியா செல்வாக்கோட இருக்கும் ஒரு நபர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. நுழையுமா என்ன? ஸ்பெக்ட்ரம் தொடர்புடைய வழக்கு விசாரணை டிசம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வருகிறது என்றதும், முன்னதாக ஏதாவது நடவடிக்கை எடுத்து அதனை கோர்ட்டுக்கு தெரியப்படுத்திவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார் சி.பி.ஐ.யின் புதிய இயக்குநர் ஏ.பி.சிங். இதற்காக டிசம்பர் 7-ம் தேதி இரவு எட்டரை மணிக்கு பிரதமரை சந்தித்தாராம். அப்போது கூடவே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் இருந்தாராம்.’’

‘‘மேலிட அனுமதியோடுதான் எல்லாம் நடக்கிறதா?’’

‘‘பின்னே... ‘கோர்ட் ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ரொம்பவும் சீரியஸாக இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணையில் சி.பி.ஐ.யை உச்ச நீதிமன்றம் கண்காணிப்பதற்கு தடையில்லை என்பது போல கோர்ட்டில் தெரிவித்துவிடலாம். குஜராத் அமித் ஷா வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்காணிப்பை செலுத்தியது போல இந்த வழக்கிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. நாம் அதற்கு தடை போட முடியாது...’ என்று ஏ.பி.சிங் சொன்னதை ஆமோதித்தாராம் மன்மோகன் சிங்...’’

‘‘சரிதான்... தி.மு.க. தரப்பு ரியாக்ஷன் குறித்து யோசிக்கவில்லையா?’’

‘‘அதெல்லாம் யோசிக்காமலா செய்வார்கள்? கோர்ட் உத்தரவிட்டால் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி சி.பி.ஐ. பயணப்பட்டாக வேண்டும் என்பதையும் ஏ.பி.சிங், பிரதமரிடம் தெளிவாகவே சொல்லி விட்டாராம்...’’

‘‘அடுத்த கட்டம் என்றால்...’’

‘‘சி.ஐ.டி. காலனிதான். இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி, ராசாத்தியம்மாள் ஆகியோர் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை சி.பி.ஐ. கண்டறிந்து விட்டது. விசாரணையைத் தொடரும்போது கனிமொழி மீதும் நடவடிக்கை வரலாம் என்பதைத்தான், நேரடியாகவே சொல்லி பிரதமரிடம் அனுமதி வாங்கி விட்டாராம் ஏ.பி.சிங்...’’

‘‘சரி, இதற்கெல்லாம் ப.சிதம்பரம் ரியாக்ஷன் என்ன?’’

‘‘அவர் என்ன செய்ய முடியும்? சி.பி.ஐ. எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு முதல்வர் கலைஞரிடம் சொல்லச் சொல்லி ப.சிதம்பரத்திடம்தான் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாராம் பிரதமர். நடந்து கொண்டிருக்கும் எல்லா விஷயங்களும் சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் முறையாகத் தெரிவிக்கப்பட்டே நடப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிகிறது...’’

‘‘இதற்கெல்லாம் கலைஞர் ரியாக்ஷன் என்னவாம்?’’

‘‘அதிர்ச்சிதான். சி.ஐ.டி. காலனி நோக்கி எக்காரணம் கொண்டும் சி.பி.ஐ. அதிகாரிகளோ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகளோ வந்துவிடக் கூடாது என்பதுதான் அவருடைய கவலை. இருந்தாலும், ‘இதே நிலையை மத்திய அரசு தரப்பில் தொடர்ந்தால், காங்கிரஸுடனான கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். பொங்கல் நாள் வரையில் பொறுத்திருந்து பார்க்கலாம். அதற்குள் நடவடிக்கைகளில் காட்டும் தீவிரத்தைக் குறைக்கிறார்களா என்று பார்க்கலாம். இல்லையென்றால், மாத்தி யோசிக்க வேண்டி வரும்...’’ என்று தனக்கு இணக்கமான அமைச்சர்களிடம் கவலையை பகிர்ந்து கொள்கிறாராம் முதல்வர்.’’

‘‘சி.ஐ.டி. காலனி பக்கம் சி.பி.ஐ. அதிகாரிகள் அவ்வளவு எளிதாக வந்துவிட முடியுமா?’’

‘‘முடியாதுதான். இருந்தாலும் அவசியம் என்றால் யாராக இருந்தால் என்ன? அதற்காகத்தானே சி.பி.ஐ. இயக்குநர் பிரதமரின் அனுமதி பெற்று ஒவ்வொரு காரியத்தையும் கவனமாக செய்து கொண்டிருக்கிறார்...’’

‘‘உஷாரான ஆசாமிதான் போல...’’

‘‘யெஸ். நடக்கும் எல்லா விவரங்களையும் பார்த்த பிறகு, கலைஞர் கட்சிக்காரர்களிடம் சொல்லும் ஒரே வார்த்தை என்ன தெரியுமா?’’

‘‘ப்ளீஸ்...’’

‘‘ ‘தி.மு.க.வுக்கு எதிராக டெல்லியில் மிகப் பெரிய சதி நடக்கிறது...’ என்பதுதானாம். அனேகமாக இரண்டொரு நாளில் இதையே மையக் கருவாக வைத்து ஒரு அறிக்கை வரலாம்... பேச்சு சுவாரஸ்யத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன்...’’ என்றார் அலெக்ஸ்.

‘‘என்ன அது?’’

‘‘ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கிடைத்த பலனை அனுபவித்தவர்கள் என்று சி.பி.ஐ. மொத்தமாக 683 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றை கையில் வைத்திருக்கிறதாம். அதில் பெரம்பலூர் பகுதி தி.மு.க. கிளைச் செயலாளர்களில் ஆரம்பித்து, டெல்லி வரையில் ராசாவுக்கு துணையாக இருந்து செயல்பட்ட சாதிக் முதல்கொண்டு வி.வி.ஐ.பி.க்கள் பலருடைய பெயரும் இருக்கிறதாம். அவ்வளவு பேரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்பது சி.பி.ஐ. யோசனையாம். என்ன நடக்கும் என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும்...’’ என்ற அலெக்ஸிடம்,

‘‘நெக்ஸ்ட் ப்ளீஸ்...’’ என்றோம்.

‘‘தமிழகத்தை சுழற்றி அடித்த மழை-வெள்ளத்துக்கு நிவாரணம் கொடுப்பது தொடர்பாக டிசம்பர் 8&ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைய பேசியிருக்கிறார்கள். அப்போது ஆலோசனை சொன்ன வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ‘வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் ஐந்தாயிரம் கோடியை மத்திய அரசிடம் இருந்து கோரிப் பெற வேண்டும்...’ என்று சொன்னாராம். குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், ‘புரியாமல் பேசாதீர்கள். நிவாரணம் நம் இஷ்டத்துக்குக் கேட்க முடியாது. மத்தியிலிருந்து ஒரு குழு வந்து வெள்ள சேதத்தை மதிப்பிடும். அந்தந்த மாவட்டக் கலெக்டர்களும் சேதத்தை மதிப்பிட்டு அறிக்கை கொடுப்பார்கள். அதை வைத்துத்தான் நாம் நிதி கேட்க முடியும். அவர்கள் போடும் கணக்கிலிருந்து பத்து சதவீதமோ இருபது சதவீதமோ கூட்டி கேட்கலாம். அதைவிட்டுவிட்டு ஐந்தாயிரம், பத்தாயிரம் கோடி என்றால், பிரச்னையாகிவிடும்...’ என்று சொல்ல, வீரபாண்டியார் முகம் கறுத்துவிட்டதாம்...’’

‘‘வீரபாண்டியார் சும்மா இருக்க மாட்டாரே...’’

‘‘கூட்டம் முடிந்து வெளியே வந்ததும், ‘ரொம்ப அறிவாளிதான்யா நீ...’ என்று துரைமுருகனை பொரிந்துவிட்டாராம் வீரபாண்டியார்.’’

‘‘சரிதான்...’’

‘‘அடுத்தாண்டு மார்ச் மாதம் 20-லிருந்து 24-ம் தேதிக்குள் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தைத் துவக்கலாம் என்று ஜோதிடர் ஒருவர் நாள் குறித்துக் கொடுத்திருக்கிறாராம். அதன்படி, பிரசாரப் பயணத்தை அமைக்குமாறு செங்கோட்டையனை பணித்திருக்கிறாராம் ஜெயலலிதா. அந்தப் பணியில் தற்போது தீவிரமாகி இருக்கிறாராம் செங்கோட்டையன்.’’

‘‘அட...’’

‘‘ம.தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களில் எஞ்சி இருந்த தயாரிப்பாளர் தாணுவும் வைகோ மீது குற்றச்சாட்டுகளை அள்ளிவிட்டுவிட்டு கட்சியில் இருந்து விலகி விட்டார். தன்னுடைய மகன் திருமணத்துக்கு வைகோ வரவில்லை என்று வருத்தப்பட்டு கட்சியில் இருந்து விலகி இருக்கும் அவர், இது தொடர்பாக வைகோவுக்கு எழுதிய கடிதம் அவர் கைக்குச் செல்வதற்கு முன்பாக பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டது வைகோவுக்கு வருத்தமாம்...’’

‘‘அதற்காக என்ன செய்ய முடியும்? வேகமான உலகம். அதற்கெல்லாம் தடைபோட முடியுமா?’’

‘‘வைகோ இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, கட்சிக்காரர்களோ, தாணுவும் கட்சியில் இருந்து விலகி விட்டதை நினைத்து ரொம்பவும் வருந்துகிறார்களாம். வைகோவுக்கும் இந்த விஷயம் போக, தாணு விஷயத்தில் என்ன நடந்தது என்பதை கட்சிக்காரர்களுக்கு சொல்ல வேண்டும் என்று விரும்புகிறாராம்...’’

‘‘என்ன செய்யப் போகிறாராம்?’’

‘‘வரும் 24&ம் தேதி கட்சியின் உயர் மட்டக் குழுவைக் கூட்டி தாணு மகன் திருமண விஷயத்தில் நடந்தது என்ன என்பது பற்றி நீண்ட உரை நிகழ்த்தப் போகிறாராம். கட்சிக்காரர்களுக்கு அதன்மூலம் தன்நிலையைப் புரிய வைப்பாராம் வைகோ...’’

‘‘தன்னிலை விளக்கமா?’’

‘‘கடந்த டிசம்பர் 7&ம் தேதி ராசாத்தியம்மாள் திடுமென சென்னை, அடையாறு மலர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். காலில் ஒரு கட்டி வந்து வெகுநாட்களாக அவதிப்பட்டுக் கொண்டிருந்தாராம். அதனை சிறுஆபரேஷன் மூலம் அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த ஆபரேஷனுக்காகத்தான் அவர் மலர் மருத்துவமனைக்குச் சென்றாராம். சின்ன அறுவை சிகிச்சை என்பதால், அன்று மாலையே அவர் வீடு திரும்பிவிட்டார்...’’ என்ற அலெக்ஸ், அருகில் இருந்த சி.டி. பிளேயர் வால்யூமை கூட்ட, ‘‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’’ என்ற பாடல் வேகமாக ஒலித்தது.

‘‘டைமிங்கான பாட்டு...’’ என்று சொல்லி புன்முறுவல் பூத்து, பாண்டியனுக்கு பை சொல்லி புறப்பட்டார் அலெக்ஸ்.

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=238:2010-12-12-10-35-00&catid=10:2010-10-16-14-42-56&Itemid=14


No comments:

Post a Comment