Tuesday, December 21, 2010

பாகிஸ்தானுக்கு விற்ற வெங்காயத்தை, இந்தியா மீண்டும் அங்கிருந்து விலைக்கு வாங்குகிறது!

Posted Image

சண்டிகர்: பாகிஸ்தானுக்கு டன் கணக்கில் வெங்காயத்தை விற்ற இந்தியா, இப்போது உள்நாட்டில் எழுந்துள்ள கடும் பற்றாக்குறை, அச்சுறுத்தும் விலை உயர்வு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு விற்ற வெங்காயத்தை மீண்டும் விலை கொடுத்து வாங்கவுள்ளது.

அரசின் குழப்பமான கொள்கைகளாலும், அப்பாவி மக்கள் குறித்த சிந்தனை சற்றும் இல்லாததாலும் மக்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. காய்கறிக் கடைப் பக்கமே போக முடியவில்லை. அத்தனை காய்களின் விலையும் மிகக் கடுமையாக உள்ளது.

எந்தக் காயை வாங்குவது என்றே தெரியவில்லை. இது தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே நிலைதான். ஒவ்வொரு காயின் விலையும் மிக பயங்கரமாக உள்ளது. ஒவ்வொரு வகையிலும் ஒரே ஒரு காயை மட்டும் வாங்கிச் சாப்பிட வேண்டியதுதான் என்று மக்கள் புலம்பித் தள்ளுகிறார்கள்.

குறிப்பாக வெங்காயத்தின் விலை மிக பயங்கராக உயர்ந்து நிற்கிறது. கிலோ வெங்காயம் (பெரியது) ரூ. 100ஐத் தொட்டுள்ளது. இதனால் சமைப்பது எப்படி என்ற பெரும் கவலையில் இல்லத்தரசிகள் மூழ்கியுள்ளனர்.

வெங்காய பற்றாக்குறையே இதற்குக் காரணம் என்கிறார்கள். ஏன் பற்றாக்குறை என்று பார்த்தால், டன் கணக்கில் வெளிநாடுகளுக்குக் குறிப்பாக பாகிஸ்தானுக்கு மத்திய அரசு வெங்காய ஏற்றுமதியை செய்துள்ளது. இதனால் உள்ளூரில் பற்றாக்குறை ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்து மக்களை விழி பிதுங்க வைத்துள்ளது.

முன்பு உள்ளூரில் விலை குறைவாக இருந்ததால் பெருமளவில் வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து பெருமளவிலான வெங்காயத்தை வர்த்தகர்களும் ஏற்றுமதி செய்து காசு பார்த்து விட்டனர். ஆனால் உள்ளூரில் இப்போது வெங்காயம் பெரும் பிரச்சினையாகியுள்ளது. மார்க்கெட்களில் கிலோ வெங்காயம் ரூ. 75 முதல் ரூ. 100 வரை விற்கிறது.

நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்துள்ள மத்திய அரசு அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி காய்கறி உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. மேலும் வெங்காயத்தை பாகிஸ்தானிலிருந்து மீண்டும் விலை கொடுத்து வாங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.

என்ன காமெடி என்றால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்கு முன்புதான் அட்டாரி-வாகா பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு 12 லாரிகள் நிறைய வெங்காயங்கள் வந்து சேர்ந்தன என்பதுதான். ஒவ்வொரு லாரியிலும் 10 முதல் 15 டன் வெங்காயங்கள் அனுப்பபப்ட்டிருந்தன.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பல ஆயிரம் டன் வெங்காயங்களை பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பி வைத்து வருகின்றனர். அங்கு காய்கறி விலை விண்ணைத் தொட்டிருப்பதால் பெருமளவிலான வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை அனுப்பி வைத்து வருகின்றனர்.

ஆனால் உள்ளூரிலும் காய்கறிகள் விலை விண்ணைத் தொட்டிருப்பதை வர்த்தகர்களும் மறந்து விட்டனர், அரசும் மறந்து விட்டது.

கடந்த காலத்தில் வெங்காய விலை உயர்வால்தான் காங்கிரஸ் ஆட்சியை இழந்து பாஜக ஆட்சியைப் பிடித்தது நினைவிருக்கலாம். எனவே மத்திய அரசு சுதாரிப்புடன் இருந்து வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டு வந்து மக்களின் கண் எரிச்சலைக் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79309

No comments:

Post a Comment