Tuesday, December 21, 2010

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - இருட்டினில் நீதி மறையட்டுமே

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2010 12:45

எஸ்.எம்.எஸ். படித்தபடியே வந்தார் கழுகார்!

நம் முன்னால் ஆஜ ரான பிறகும் அதைப் படித்தபடியே இருந்தார். நம்மிடம் பேசத் தலையைத் தூக்குவதற்குள் இன்னும் நான்கைந்து எஸ்.எம்.எஸ்-கள் பொலபொலவென குவிந்தன.

''ஒரே மேட்டரை எத்தனை பேர் ஃபார்வர்ட் பண்ணுகிறார்கள் பாரும். எல்லாம் ஆ.ராசா சம்பந்தப்பட்டவைதான்! மீடியாக்காரர்கள், அரசியல் உள்வட்டத்தில் வலம் வருபவர்களுக்கு மட்டுமே இந்த எஸ்.எம்.எஸ்-கள் போய் விழுவதாக நினைக்காதீரும். கல்லூரி இளைஞர்கள் மிக அதிகமாக பரிமாறிக்கொள்ளும் சமாச்சாரம் இதுவேதான். இதை வைத்துப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம் விவகாரம் அத்தனை குடும்பத்துக்கு உள்ளும் நுழைந்துவிட்டது. ஆளும் கட்சியின் வருத்தமே இதுதான்!'' என்றபடி செல்போனை சைலன்ட் மோடில் போட்டார்.

''இருப்பதைக் கொட்டிய பிறகு புதியதைப் பெறுவோம்!'' என்று புன்னகையுடன், ஏலக்காய் டீ கப்பைக் கையில் ஏந்தினார் கழுகார்!

''கருணாநிதியின் வருத்தங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. தினமும் ஏதாவது புதுசு புதுசாகக் கிளம்பி அவரது மனதை அலைக்கழிக்கிறது. அந்த வருத்தங்களில் இருந்து விடுபடு வதற்காகத்தான் ஏலகிரியில் போய் நான்கைந்து நாட்கள் தங்கலாம் என்று திங்கள் கிழமை காலையில் திடீரெனக் கிளம்பினார். அமைச்சர் பூங்கோதையுடன், நீரா ராடியா நடத்திய பேச்சுவார்த்தையில் கோபமான அழகிரியும் ஸ்டாலினும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கச் சொல்லியதையும், அப்படிச் செய்யக் கூடாது என்று ராஜாத்தி அம்மாள் சொல்லி வருவதையும் ஏற்கெனவே உம்மிடம் சொன்னேன். கோபாலபுரம் 'நீக்கு’ என்கிறது. சி.ஐ.டி. காலனி 'கூடாது’ என்று கொடி பிடித்தது. பாவம் கருணாநிதி... இரண்டு இடத்திலும் இருக்க முடியாமல், ஏலகிரிக்கு கார் ஏறினார்!''

''அங்காவது கிடைத்ததா நிம்மதி?''

''மனதில் புழுக்கம் இருந்தால் குளிர் பிரதேசம் இதமாகவா இருக்கும்? நிம்மதியாய் இருக்கத்தான் கருணாநிதி அங்கே போனார். அவருடன் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனும் மாநில அமைச்சர் துரைமுருகனும் மட்டும்தான் போனார்கள். வழக்கமாக வரும் பொன்முடி, எ.வ.வேலு ஆகிய இருவருக்கும்கூட தடை. ஆ.ராசாவுடன் இவர்கள் இருவரும் இணைந்து இருந்துதான் தனக்குப் பல விஷயங்களைச் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள் என்ற கோபம் கருணாநிதிக்கு. அதனால், அவர்களுக்கு அழைப்பு இல்லை.

ஏலகிரி அல்தாப் கெஸ்ட் ஹவுஸில் தங்கிய கருணாநிதி, தன்னுடைய கதை வசனத்தில் வெளியான பழைய படங்களின் சி.டி-க்களைப் பார்த்துக் கொண்டு இருந்தாராம். 'மந்திரி குமாரி’ படத்தின் வசனங்களை அவரே வாய்விட்டுச் சொல்லிப் பார்த்துக்கொண்டாராம். முதல் நாள் திங்கள் கிழமை இப்படிப் போனது!''

''மறுநாள் என்ன நடந்ததாம்?''

''சென்னையில் இருந்த ராஜாத்தி அம்மாளுக்கு மதுரையில் இருந்து அழகிரி போன் செய்ததாகவும், ஒரு கட்டத்தில் இரண்டு தரப்பிலும் வார்த்தைகள் தடித்துவிட்டதாகவும் தகவல் சொல்கிறார்கள். 'நீங்க கொஞ்சம் உஷாரா இருந்தா, இப்போ வந்திருக்கிற பிரச்னையில பாதியைக் குறைச்சிருக்கலாம்’ என்று சொல்லிய அழகிரி... சில பெயர்களைச் சொல்லி, 'அவங்களை எல்லாம் அடக்கிவெக்காம விட்டுட்டீங்க’ என்று சொல்லிக் கொந்தளிக்க.... அதற்கு ராஜாத்தி அம்மாள் பதில் சொல்ல.... படார் என்று செல்போன் கட் ஆனதாம். இந்தத் தகவல் ஏலகிரியை எட்டாமல் இருக்குமா? அழகிரியே முந்திக்கொண்டு தகவலைச் சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், இன்னொரு தரப்பு தனது வருத்தத்தை கருணாநிதிக்கு சொல்ல நெடுநேரம் லைன் தரப்படவில்லையாம்!''

''இப்படி எல்லாமா இருக்கும்?''

''எனக்குக் கிடைத்த தகவலைச் சொல்கிறேன்! 'நாங்கள் பேசுவதற்குக்கூட அலோ பண்ண மாட்டேங்குறாங்க’ என்று சி.ஐ.டி. காலனி தரப்பு வருத்தப்படும் அளவுக்கு நிலைமை போய்விட்டதாம். இந்த மாதிரி ரசாபாசமான தகவல் ஸ்டாலின் வரைக்கும் சொல்லப்பட்டது. 'நான் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கேன். அண்ணன்தான் அந்த சைடுக்குத் தேவை இல்லாம முக்கியத்துவம் கொடுத்தாரு. இப்ப அவரே உணர்ந்துட்டார்!’ என்று கமென்ட் அடித்தாராம்!''

''பூங்கோதை மேட்டரில் என்ன முடி வானதாம்?''

''கழுத்தறுத்துடுவார் என்று நீரா ராடியாவிடம் பூங்கோதை சொன்னதாகச் சொல்வது அழகிரியைத் தான் என்றுதானே இந்தப் பிரச்னை வந்தது. 'அது அவரைச் சொல்லலை... டெல்லியில் இருக்கிற அரசியல்வாதிகளைத்தான் அவங்க சொன்னாங்க’ என்று புது விளக்கத்தை புலனாய்வு அதிகாரி ஒருவர் கருணாநிதியிடமும் அழகிரியிடமும் சொன்னாராம். 'எனக்கு எல்லாம் தெரியும். சும்மா இரு’ என்று சொல்லிவிட்டாராம் அழகிரி. இதை வைத்துப் பார்த்தால், பூங்கோதை மேட்டர் சூடு குறைந்ததாகத் தெரியவில்லை.''

''நான்கு நாள் பயணம்... இரண்டு நாள் ஆனது ஏன்?''

''இரண்டு விஷயங்களைச் சொல்கிறார்கள்! ஏலகிரியில் கூடுதல் பனியாக இருந்ததாம். எனவே முதல்வருக்கு சிரமம் இருந்ததாம். தவிர, 15-ம் தேதி புதன்கிழமை அன்று காலையில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தப்போகும் தகவல் டெல்லி மந்திரி மூலமாக வந்ததும்... 'உடனே சென்னைக்குப் போயிடலாம்’ என்று முடிவெடுத்தார் கருணாநிதி. 7 மணிக்கு கிளம்பி 10 மணிக்கு சென்னை வந்துவிட்டார். அவர் எதிர்பார்த்தது மாதிரியே புதன்கிழமை சி.பி.ஐ. பல இடங்களுக்கும் புகுந்துவிட்டது. 'கனிமொழியைச் சுற்றி சில சந்தேக வளையங்களை சி.பி.ஐ. போட்டுள்ளது. அதனால் அவரது வீடும் ரெய்டு ஆகலாம்’ என்று சிலர் சொல்ல, கருணாநிதி அதிகம் பதறியதாகவும் சொல்கிறார்கள்.''

''முதலமைச்சர் இல்லத்துக்குள்... அதுவும் கூட்டணிக் கட்சி ஆட்சியின்போது நடக்குமா என்ன?''

''சில தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, தி.மு.க-வினருக்கே பயம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னால், இந்துக் கடவுளின் பெயரைக்கொண்டவரது தொடர்புகள் மலைக்கவைக்கின்றன என்று சொன்னேனே... அந்த 'சரவணன்’ என்ற பெயரை வெளிப்படையாகவே சொல்லி ராஜாத்தி அம்மாள் அறிக்கை வெளியிட வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. இந்த சரவணன், சி.ஐ.டி. காலனி வீட்டில் முக்கியஸ்தராக வலம் வந்து... செய்து வரும் காரியங்களையும் அரசல் புரசலாக அவ்வப்போது சொல்லியது உண்டு. கருணாநிதி கையில் சி.டி. ஆதாரமாகத் தரப்பட்ட ஒரு டெலிபோன் டேப்பில் ஒலிப்பது இவரது குரல்தான் என்றும் சொல்வார்கள். ராஜாத்தி அம்மாளின் ராயல் ஃபர்னிச்சருக்கு வெளிநாட்டில் சென்று ஃபர்னிச்சர் பொருட்களை வாங்கி வருவதில் நெருக்கமாகி இருக்கிறார் அவர். உமது நிருபர் தொடர்ச்சியாக எழுதி வந்தாரே, வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுகள் பற்றிய நிலநடுக்கத்தை. அதில், சமூக சேவகர் என்ற அடிப்படையில் சென்னை திருவான்மியூரில் 58 லட்சம் மதிப்பிலான மனையைப் பெற்றிருக்கிறார் இந்த சரவணன். ராஜாத்தி அம்மாளுடன் நீரா ராடியா உரையாடுவதற்கு முன் லைன் வாங்கித் தருவதும் இவர்தானாம். இவரைப்போல இன்னும் ஐந்து நபர்கள் சி.ஐ.டி. காலனி வீட்டில் தொடர்ந்து வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்காக, சி.பி.ஐ. தனி ஃபோல்டர் போட்டுவிட்டது. எனவே, நிச்சயம் ராஜாத்தி அம்மாளை சிக்கல்கள் சூழும் என்ற கவலை கருணாநிதிக்கு.''

''நீர் சொல்வதைப் பார்த்தால், இந்த சுழல் அவ்வளவு சீக்கிரம் அடங்காதா?''

''அடங்காது என்றே டெல்லி தகவல்கள் சொல்கின்றன! இந்த விவகாரத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும், சுப்ரீம் கோர்ட் சுரீர் என்று கிளம்பும். அதனால் ஆறப்போட்டு அல்வா கொடுக்கும் காரியம் இதில் நடக்காது என்று டெல்லி அதிகாரி ஒருவர் சொல்கிறார். அடுத்த ரெய்டு.. கோவை, ஊட்டி வட்டாரத்தில் இருக்கலாம்!'' என்றபடி செல்போனை ஜெனரல் மோடுக்கு மாற்றி கிளம்பப் போன கழுகார்,

''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கரன்ஸி கஜானவாக இருந்த ஒருவரை வியாழன் காலை முதல் 7 மணி நேரமாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அநேகமாக அவர் அப்ரூவர் ஆகலாம் என்று ஒரு பட்சி சொல்கிறது!'' என்ற தகவலையும் உதிர்த்துவிட்டு தனது ஜாகையை மாற்றினார் கழுகார்!

ஹவாலா சகோதரர்கள்!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் இரண்டாவது கட்ட சோதனையை முடித்திருக்கிறது சி.பி.ஐ. டெல்லியில் நீரா ராடியாவின் பண்ணை வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட ஏழு இடங்களில் ரெய்டு நடத்தினார்கள். முன்னாள் தொலைத் தொடர்புத் துறை ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவரான பிரதீப் பைஜால் வீடும் அலுவலகமும் சோதனை செய்யப்பட்டது. இவர் இப்போது நீரா ராடியாவின் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இதுதவிர ஆ.ராசாவுக்கு நெருக்கமானவர்களாகக் கருதப்படும் இரண்டு ஹவாலாப் புள்ளிகளையும் சி.பி.ஐ. வளைத்திருக்கிறது.

டெல்லியில் பிரபல ஹவாலா மார்க்கெட்டான ஜாவுரி பஜார் பகுதியில் முக்கியமானவர்களாகக் கருதப்படும் மகேஷ் ஜெயின் மற்றும் பேபி என்கிற அலோக் ஜெயின்தான் அவர்கள். இவர்களது பெயர் ஆ.ராசா வீட்டில் சிக்கிய டைரியில் இருந்தது என்கிறார்கள். இவர்களின் ஜாவுரி பஜார் அலுவலகத்திலும் மகேஷ் ஜெயினின் நியூ ஃபிரண்டஸ் காலனி வீட்டிலும், அலோக் ஜெயினின் பட்பர்கன்ஞ்ச் வீட்டிலும் சோதனை நடந்தது. இவர்கள் ஜே.ஜி.எக்ஸ்போர்ட் என்ற பெயரில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தை நடத்துகின்றனர். இவர்களுக்கு டெல்லியில் மட்டுமல்லாது சென்னை கீழ்ப்பாக்கம், சௌகார்பேட்டையிலும் அலுவலகங்கள் இருக்கிறது.

இந்த செய்தியைச் சேகரிக்க வந்த தமிழ்ப் பத்திரிகையாளரிடம் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர், ''இனி ராசாவை ஹவாலா ராஜா என்று எழுதுங்கள்!'' என்று கமென்ட் அடித்தாராம்!

நன்றி ஜுனியர் விகடன்

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=255:2010-12-19-07-16-57&catid=10:2010-10-16-14-42-56&Itemid=14

No comments:

Post a Comment